சரந்தீபில் மலையாளக் கதைகள்…

நூற்றாண்டுகள் பழமையான சிறீலங்காவில் மலையாள மரபின் வரலாற்றுத் தடயங்கள் தேடி ஒரு பயணம்.

ஆக்கம்: அப்துல் மஜீத் நத்வி

{2024 நவம்பர் 24ஞாயிற்றுக் கிழமை  நாளிட்ட சுப்ரபாதம் மலையாள நாளிதழ் ஞாயர் பிரபாதத்தில் வெளிவந்ததின் தமிழாக்கம்}

மொழியாக்கம்: மிடாலம் அன்சார்


“ஏறி கப்பல் பாயுசர்த்தி ராப்பகல்களோடி

எத்திடை ஷஹர் முகல்ல பஸ்தி தன்னில் ஓடி”

(மலப்புரம் கிஸ்ஸா, மொயின் குட்டி வைத்தியர்)

முழு நிலவு வெள்ளி வெளிச்சம் பரப்பிய அந்த இரவில் அரண்மனை மாடியில் வழக்கம் போல சேரமான் பெருமாள் உலாவிக் கொண்டிருந்தார்.அப்போது சந்திரன் இரண்டாக பிளந்து நிற்கும் காட்சி மன்னரின் பார்வையில் பட்டது.நம்பமுடியாத இந்த அற்புதத்தை  நீண்ட நேரம் கண்டார். இந்நிகழ்ச்சி அவரை மிகுந்த குழப்பத்திலும் ஆழ்த்தியது.இதன் விளக்கத்தை அறிந்து கொள்ள அரண்மனை பண்டிதர்களையும் ஜோதிடர்களையும் கூட்டினார்.

தான் கண்ட அசாதாரண நிகழ்வை அவர்களிடம் விவரித்தார். அதன் காரண காரியங்களை விளக்குமாறு பணித்தார்.இயற்கைக்கு மாற்றமான இந்நிகழ்வின் விளக்கம் கூற முடியாமல் அவர்கள் தவித்தனர்.அக்கால கட்டத்தில் அறபியாவிலிருந்து ஒரு வணிகக் குழு கடல்தீரத்தில் இறங்கிய செய்தியை மன்னர் அறிந்தார்.அவர்களை அரண்மனைக்கு அழைத்தார்.

.அரச மரியாதையும் விருந்தும் கொடுத்த பின்னர் மன்னர் தான் கண்ட அரிய வானியல் நிகழ்வை அவர்களிடம் விவரித்தார் முஹம்மது ( ஸல்)  அவர்கள் இறைத்தூதராக வந்தது குறித்தும் அதற்கு  சான்று பகரும் இறை அத்தாட்சிகளில் ஒன்றாக சந்திரனை பிளந்து காட்டிய அரிய நிகழ்வையும் அவர்கள் வர்ணித்தனர்.

தன்னுடைய சந்தேகத்தை போக்கிய  அவர்களின் விளக்கம் கேட்ட மன்னர் அத்தகைய  அத்தாட்சிகள் நிகழ்த்தும் தகுதியுள்ள அந்த மாமனிதரைக் காணும் ஆவல் கொண்டார்.இலங்கையின் ஆதம் மலையை தரிசித்த பின்னர் திரும்பும் போது அறபியா செல்லும் பயணத்தில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று அவஎகளிடம் வேண்டினார்.இவ்வாறுதான் சேரமான் பெருமாள் பாய்மரக்கப்பலில் மக்கா சென்றார்.இஸ்லாம் கடல் கடந்து  கேரளத்தை அடைந்த இவ்வரலாற்றில் அறபிய பயணிகள் ஆதம் மலையை   காணச் சென்ற  இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது.

.சிறுவயது முதல் நாம் கேட்டு வளர்ந்த இச்சம்பவத்தில் வரும்  ஆதம் மலையானது இந்திய வரைபடத்தின்  சுவட்டை  பிரிக்க முடியாத  தொடர்போல் ஒட்டிக் கிடக்கும்  இலங்கையில் உள்ளது.

இந்தியாவுடன் மிக நெருக்கமான வரலாறும் பண்பாடும் கொண்ட து இலங்கை. மக்களின் வரலாற்றிலும் பண்பாட்டு மரபிலும் வேறுபாடுகள் இருந்தாலும் தென்னிந்தியாவுடன் இலங்கை கொண்டிருக்கும் தொடர்பு ஆழ வேருன்றியதும் தொன்மையானதும் ஆகும்.

நீண்ட அரசியல் காரணங்களுக்கு  பிறகு இந்தியாவிற்கும்  இலங்கைக்கும் இடையிலான இரயில்- சாலை போக்குவரத்தை சாத்தியமாக்குவது குறித்த ஆலோசனைகள் தொடர்ந்து கொண்டிருக்கினறன.இது  தனுஷ்கோடிக்கும்  தலைமன்னாருக்கும் இடையிலான கடல் இடைவெளியை இணைப்பது  மட்டுமன்றி காலங் காலமாக கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வளர்ந்து வியாபித்த இரு பிரதேச மக்களின் இருதயங்களையும் இணைக்க வல்லது. மேலும் வணிகமும் கலையும் கலாச்சாரமும் கூடிய  விலைமதிப்பற்ற பண்பாட்டையும் இணைக்க   வல்லது ஆகும்.

.சேரமான் பெருமாளின் கேள்விக்கு விடையளித்த அறபியர்கள் மட்டுமன்றி அறபியாவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் கடல் கடந்து வந்த ஏராளமான பயணிகளும் யாத்திரீகர்களும் புண்ணியவான்களும் ஆவலுடன் தரிசித்த அக்கால உலக பிரசித்தி பெற்ற ஆதம் மலையைப் பற்றி சுலைமான் தாஜிர் போன்ற வணிகர்களும் இப்னு பதூதா போன்ற உலகப் பயணிகளும் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் போன்ற சூஃபி பிரச்சாரகர்களும் இம்மலையை தரிசித்த வரலாறு பிரசித்தி பெற்றது.

.இலங்கையின் மத்திய பகுதியான கண்டி மாநிலத்தில்  ஆதம் மலை உள்ளது.நாட்டின் தலைநகரான கொழும்புவிலிருந்து 180 கி.மீ. தொலைவு கொண்டது ஆதம் கொடுமுடி. புராதன காலம் முதல் பயணிகளுக்கும்  யாத்திரீகர்களுக்கும் மிகவும்   விருப்பமான ஆதம் மலை உச்சியில் காணப்படும் கால் அடையாளம் குறித்து எல்லா மதத்தினரும் உரிமை கோரும் செவிவழி செய்திகள் பல உண்டு. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஆதம்( அலை) அவர்களின் கால்த்தடம் என்று உரிமை கொள்கின்றனர். சிங்களர்கள் புத்தரின் கால்த்தடம் என்றும் இந்துக்கள் சிவனடி பாதம் என்றும் கருதுகின்றனர்.

7359 அடி (2.243 மீ) உயரத்தில் மலைமுகட்டில் பாறையில் பதித்த இந்த கால் அடையாளத்தை இவர்கள் தங்களின் புண்ணியவான்களின் கால்த்தடம் என்று உரிமை கோருகின்றனர் என்றாலும் பிரிட்டிஷ், அறபிய பதிவுகளில் Adams peak என்றே அதிகாரப்பூர்வமாக பதியப்பட்டுள்ளது

.ண்டியைச் சுற்றியுள்ள எழில் கொஞ்சும் நிலப்பரப்பும்  கடல் பரப்பும் கொண்ட கண்ணீர்த் துளி போன்ற தீவாக  இலங்கை உள்ளது.கண்டி மாவட்டத்தின் உயர்வான  மலைத்தொடரில் ஆதம் மலை உள்ளது.சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆதம் நபி பல வருடங்கள்  பாவமன்னிப்புக் கோரி சுஜூதில் இருந்ததாக தபரி போன்ற தஃப்ஸீரில் உள்ளது.

மலையளவு பச்சாதாபம் கொண்டதன் காரணமாக அந்நாடு கண்ணீர்த் துளி போன்ற நில அமைப்பை பெற்றுள்ளதாக கருத இடமுண்டு.ஆதம் மலையை தரிசிக்கவும் கடல் வணிகம் செய்யவும் செல்லும் அயல் நாட்டவர்களின் முக்கிய வழித்தங்கல் பகுதியாக பண்டைய கேரளம் விளங்கியது. மலபார்- சோழமண்டலக் கடற்கரையுடன் இலங்கைக்குள்ள நெருக்கமும்  தொடர்ச்சியும் வரலாற்றில் நீங்கா இடம் கொண்டது.மலையாளக் கரையின் அயல் நாட்டு வரலாற்று ஏடுகளில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

.குஞ்ஞாலி மரைக்காயரின் இறுதி ஓய்விடம்

குஞ்ஞாலி மரைல்க்காயர்

சிலாபம் பகுதியில் முதலாம் குஞ்ஞாலி மரைக்காயரின் அடக்கஸ்தலம் உள்ளது.இலங்கையில் வடமேற்கு மாநிலத்தில் பண்டைய கடற்கரை ஊரான புத்தளத்திற்கு அருகாமையில் இது உள்ளது. போர்ச்சுக்கீசிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக போர் செய்ய கப்பல் படைத் தலைவராக இலங்கைக்கு சென்று அப்போரில் வீர மரணம் அடைந்த முதலாம் . குஞ்ஞாலி மரைக்காயரின் கபர் இங்கு உள்ளது.

கி.பி.1524 ல் கோழிக்கோடு சாமூதிரி மன்னரின் முக்கிய கடற்படை தளபதியான குஞஞாலி மரைக்காயர்களில் முதலாம் நபரான குட்டியாலி மரைக்காயர் கப்பல் படையுடன் இலங்கைக்கு சென்றார். போர்ச்சுக்கீசியர்களுக்கு எதிராக போர் செய்ய சித்தாவாக்க மன்னரான மாயதுன்னாவின் வேண்டுகோளின்படி    சாமூதிரி மரைக்காயர் படையை இலங்கைக்கு அனுப்பினார்.

.போர்ச்சுக்கீசியர்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு முக்கியமான கட்டத்தில் நயவஞ்சகத்துடன் செயல்பட்ட சீதாவக்க அரசர், போர்ச்சுக்கீசியர்களுடன் இணக்கமாக நடந்து கொண்டார்.  . இந்த சதியை அறிந்து கொண்ட  குஞ்ஞாலி மரைக்காயர்  விடாமல் தொடர்ந்து போரிட்டு ஐம்பதிற்கும் மேற்பட்ட பரங்கியரின் கப்பல்களைத் தாக்கி   தகர்த்தார். பின்னர் கோழிக்கோடு முதல் இலங்கை வரையிலான பிரதான  கடல் பாதையை  கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததோடு இலங்கையில் கோழிக்கோட்டின் கப்பற்படை மையத்தை அமைத்தார்.

சிறிய படகுகள் மூலம் அதிவேகத்தில் பயணித்து மின்னல் வேக தாக்குதல்கள் தொடுத்த குஞ்ஞாலி மரைக்காயரின் முன்  பரங்கிப்படையினர் பலதடவை நிலைகுலைந்த போதிலும் கிபி1539 ல் போர்ச்சுக்சிய படைத்தலைவன் மெகல் பெரேராவுடன் நடந்த மோதலில் முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர் வீர மரணமடைந்தார். புத்தளம் கடலோரத்தில் வீரமரணம் அடைந்ததாக கருதப்படும் குஞ்ஞாலி மரைக்காயரின் உடல் அருகாமையிலுள்ள சிலாபம் மலே பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.குஞ்ஞாலி மரைக்காயரின் மக்பராவில் நிறுவப்பட்டுள்ள மீஸான் கல்லில் அவருடைய பெயர் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது.

.பன்முகத்தனமை கொண்ட இலங்கை வானொலி

இலங்கையில் இப்பொழுதும் மக்கள் விரும்பும் செய்தி ஊடகமாக வானொலி உள்ளது. 1970 கால கட்டங்களில் இலங்கை  வானொலி நிகழ்ச்சிகளை கேட்டிராத மலையாளிகள் மிகக் குறைவாகும்.அந்நாட்களில் மலையாளப் பாடல்களுக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கினர். கொழும்பு நகரத்தின் புராதன வரலாற்று நினைவுக் களஞ்சியமாக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன நிலையம் (SLBC) உள்ளது. சிங்களம், தமிழ் மட்டுமன்றி ஆங்கில நிகழ்ச்சிகளுமாக உலக ஒலிபரப்பு ஊடகங்களுடன் நடைபோட்டு வருகிறது. உலகின் மற்ற அரசு ஒலிபரப்பு நிலையஙகளும் உரிமை கொண்டாட முடியாத பலவித  கவரும் காட்சிகளை வானொலி நிலையமெங்கும் காண முடிந்தது..

.பி.பி.சி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 1925 இல் நிறுவப்பட்ட இலங்கை வானொலி நிலையம் ஆசியாவின் முதல் நிலையமாகவும் உலகின் இரண்டாவது நிலையமாகவும் உள்ளது. 2012 ஆம் ஆண்டு வரை இங்கிருந்து மலையாள நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன. வானொலி பிரியர்களான மலையாளிகளில் பெரும்பாலானோர் இலங்கை நிகழ்ச்சிக்காக  வானொலிகளை டியூன் செய்து காத்திருந்த காலம் ஒன்றிருந்தது. எல்லைகளுக்கு அப்பால் பிற மொழிகளில் தங்களள் நாட்டின் அடையாளங்களை கொண்டுசேர்ப்பது என்ற பொறுப்பு நீண்ட காலமாக இடைவிடாது நிறைவேற்றி வந்தனர்.

.அக்காலத்தில் உலகின் செய்திகளை கொண்டு சேர்க்க ஊட்கங்களோ அல்லது சமூக  ஊடகங்களோ இல்லாத காலகட்டத்தில் வானொலியின் கண்டுபிடிப்பு செய்தி ஊடகத்தின் புரட்சியாக இருந்தது. ஆங்கிலேய  காலனியாக இருந்த இலஙகையில்  1925 ஆம் ஆண்டு  கொழும்பு வானொலி நிலையம் நிறுவப்பட்டது. இவ்வாறு இலங்கையின்  செய்திகளும் விதவித  நிகழ்ச்சிகளும் வானொலி பெட்டிகளின் வழியாக வெளி உலகிற்கு பரவத் தொடங்கியது.

1948 பிப்ரவரி நான்காம் நாள் இலங்கை, சிலோன் காமன்வெல்த் என்ற பெயரில் பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து விடுதலையான  போது நாட்டின் வெகுஜன ஊடகம் என்ற நிலையில் “ரேடியோ சிலோன்” என்ற பெயரில் கொழும்பு வானொலியாகவும் பிரபலம் அடைந்தது.பின்னுள்ள காலஙகளில் இலங்கை வானொலி இந்த மரகத தீவின் துடிப்புகளை அறிவிக்கும் தனித்துவ அடையாளமாக மாறியது. இரண்டாம் உலகப் போர், 17 வருடங்கள்  நீண்ட உள்நாட்டுப் போர், இனப்போர், இந்தியாவுடனான பிணக்கம் போன்ற கட்டங்களிளை நாடு கடந்து விட்டாலும் இலங்கையின் சக்திவய்ந்த இந்த அதிகாரப்பூர்வ ஊடகம் இந்நாட்டின் அடையாளமாக உள்ளது.

.1956 முதல் எஸ்.எல்.பி.ஸி தமிழ் தேசிய வானொலி தினமும் காலை எட்டு மணி முதல் பத்து மணி வரை முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலுமுள்ள தமிழ் முஸ்லிம்களுக்கு மத்தியில்,, குறிப்பாக தமிழகத்தின்  கிழக்கு கடற்கரை முஸ்லிம்  சமூக மக்களுக்கு மத்தியில் இலங்கை வானொலி செலுத்திய ஆதிக்கம் மேலானது.

அரபு இசை நயமுள்ள சலவாத் குரலில் இந்த நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.ஜாமிஆ நளீமிய்யாவில் கௌரவ விரிவிரையாளராக பணியாற்றிய எகிப்து காரி அஷ்ஷைய்க் இப்றாஹீம் அப்துர் ரஹீம் அல்மலீஹி அவர்களின் 1978 ஆகஸ்டு 17 இல் நேரடியாக பதிவு செய்த சலவாத்தின் குரலானது இப்போதும் ஒலிபரப்பாகிறது என்று அவ்வொலியை எங்களுக்கு கேட்கச் செய்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தாஜ் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தார். உலக பண்பாட்டு வரிசையில் தனித்துவ இடமுள்ள இலஙகை வானொலி நிலையத்தை பார்வையிட்டது இலங்கைப் பயணத்தில் மறக்க முடியாத அனுபவமாகும்.

பண்பாட்டு நினைவிடங்கள்

இல்ங்கையின் மேற்கு மாகாணமான களுத்துறை மாவட்டத்தில் கடலோர சுற்றுலாத் தலமாக பேருவளை உள்ளது. அறபியாவிலிருந்து முதலாவதாக வந்த முஸ்லிம்கள் இங்கு நிரந்தரமாக குடியேறினர் என்பதும் கி.பி. 1024 இல் கெச்சிமலை பள்ளிவாசலை நிறுவினர் என்பதும் வரலாறு.கி.பி எட்டாம் நூற்றாண்டில் அறபு வணிகர்களின் வருகையைத் தொடர்ந்து அவர்கள் குடியேற்றம்   இப்பகுதியில் முதன்முதலில் நடந்தேறியது என்றும் நம்பப்படுகிறது.கி.பி 920 இல் கட்டப்பட்டதாக கருதப்படும் இலங்கையின் முதல் பள்ளிவாசலான அப்ரார் ஜுமுஆ பள்ளிவாசல் இங்குதான் உள்ளது.

.ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்டதாக கருதப்படும் கெச்சிமலை பள்ளிவாசல் பேருவளை துறைமுகப்பகுதியில் உள்ளது. தென்னைமரங்களால் சூழப்பட்ட பாறைமீது இப்பள்ளிவாசல் அமைந்துள்ளது.

.இலங்கையின் மிகப்பழமையான முஸ்லிம் பண்பாட்டு மையமாக   கெச்சிமலை  தர்காவும் பள்ளிவாசலும் உள்ளன. ஹள்ரமி சாதாத்துமார்களின் பாரம்பரியமும் மலபார் பண்பாடும் ஒத்திசையும் புண்னியத் தலமாகவும் இப்பகுதி மாறியுள்ளது.

கடல்பரப்பில் இருந்து உயர்ந்து நிற்கும் குன்றின் மீதுள்ள  வளாகத்தில் சுல்தான் அஸ்ஸெய்யித் அஷ்ரஃப் தங்ஙளின் இறுதி ஓய்விடத்துடன் கூடிய ஆன்மீகக் கேந்திரமாகவும் இருக்கிறது.பன்னிரண்டாம் நூற்றாண்டில் யமனின் ஹளரமவ்த்திலுள்ள அரச  குடும்பத்திலிருந்து ஏழு உறுப்பினர்களஅடங்கிய கப்பலில் வந்தனர்.இவர்கள்  சுல்தான் அஷ்ரஃப் தங்ஙளும் அவர்களின் சகோதரர்களும் ஆவர்.சுல்தான் அஸ்ஸெய்யித் அஷ்ரஃப் தங்ஙளும் அவர்களின் இறுதி அமைவிடமும் பள்ளிவாசலும்  இலங்கையின் அனைத்து தரப்பினராலும் போற்றப்படுகிறது. இங்கு நடைபெறும் உரூஸ் விழாவிற்கான  பொது விடுமுறையும் மக்களுக்கு தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது.இலங்கையின் முக்கிய  பாரம்பரிய பவள வணிக கேந்திரமான சைனா ஃபோர்ட் இங்குள்ளது.

.சிறீ நாராயண சமூகம்

இலங்கையின் கேரள பாரம்பரியத்தை சுட்டிக் காட்டும் இன்னொரு காட்சியாக இருப்பது கொழும்பு நகரில் சிறீ நாராயண குரு மந்திரமும் சிறீ நாராயண சமுதாயமும் ஆகும்.கொழும்பில் பிராட்வே லயார்ட்ஸ் ரோட்டில் சிறீ நாராயண சொசைட்டி செயலகம் அமைந்துள்ளது. பரபரப்பான சாலைகளின் நடுவில் முக்கோண வடிவில் குருதேவ சிலையின் ஊடாக அமைந்துள்ள பழமையான செயலகம் கவரும் விதமாக உள்ளது..

.சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய மலையாளியான சிறீ நாராயண குரு அவர்கள் 1918 இல் முதல் இலங்கை பயணத்தின்போது “அறிவார்ந்த கூட்டமைப்பு” என்ற இயக்கத்திற்கு வடிவம் கொடுத்தார். கொழும்பில் மலையாளிகள் கல்வி பெறவும் அவர்களின் வளர்ச்சிக்கும் கல்விநிலையங்களை நிறுவவேண்டும் என்பதே குருதேவனின் அறிவுரையாக இருந்தது. கூட்டமைப்பினர் இலங்கை பாராளுமன்றத்தில்  சட்டரீதியான சிறப்பு பதவியுடன் தனியாகப்பதிவு செய்தனர்.சிறீ நாராயண சொசைட்டியின் தலைமைப் பதவியில் இருக்கும் இலங்கை தலைமை நிலைய   தொடர்பாளராக இருந்த எம்.கெ. ராகுல் அவர்களின் மேலாண்மையின் கீழ் தனித்துவமான பதிவு வேலைகள் நடைபெற்றன. ராகுலின் குடும்ப வேர்  திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலக்குடாவுடன் தொடர்புடையது.

சிறீ நாராயண குரு இரணடு தடவை இலங்கை சென்றுள்ளார். மீண்டும் அங்கு செல்ல விரும்பியிருந்தார்.1918 இன் முதலாவது பயணத்தின்போது சுவாமிகளான அமிர்தானந்தா,போதானந்தா, சத்யவிரதன் ஆகியோரும் செறுவாரி கோவிந்தன், குமார பிரம்மச்சாரி ஆகியோரும் அடங்கிய குழுவினர் குருவுடன் இருந்தனர்.

1918 செப்டம்பர் 16 இல் ஆலுவாயிலிருந்து புறப்பட்ட குரு ஒரு வாரத்துக்குப் பிறகு  கொழும்பை அடைந்தார்.மண்டபத்திலிருந்து  தனுஷ்கோடி சென்று கப்பல் வழியாக இலங்கையின் தலைமன்னாரை அடைந்து பின்னர் கொழும்பு சென்றார்.கொழும்பு மருதானை நிலையத்தை குரு  அடைந்தபோது பெருந்திரளான மக்கள் அவர்களை வரவேற்றனர். கொழும்பை வாழ்விடமாகக் கொண்ட மலையாளிகளும் குருவின் மேன்மையை உணர்ந்த இலங்கையரும் அடங்கிய பெருங்கூட்டம் இவர்களில் அடங்கும்.

சின்னமண் கார்டனில் விசாலமான தூய்மையான  பெரிய மாளிகையில் அவர்கள் குருவை தங்க வைத்தனர்.புத்த துறவிகளும் பிராமணர்களும் பிரம்ம வித்யா சங்கத்தின் தலைவி மேடம் ஹிக்கின்ஸும் குருவை தரிசித்தனர்.சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் உரை நிகழ்த்தினர். புத்த துறவிகளும் கலந்துரையாடினர். அவர்களில் சிலர் சிறீ நாராயாண குருவை புத்த தேவனின் மறுபிறப்பு என்று பாராட்டினர். தன்னுடைய  அறிவுரைகளை முன்னெடுக்க சத்யவிரத சுவாமியை இலங்கையின் பொறுப்பாளராக குரு நியமித்தார்..

1918 அக்டோபர் 7 ஆம் நாள் குரு இந்தியா திரும்பினார். இரயில்வே நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குருவை  வழியனுப்பினர். நிலையம் செல்ல கார் வசதி செய்யப்பட்டிருந்தும் மக்கள் அவரை ரிக்‌ஷாவில் இழுத்து சென்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சுற்றுப்பயனத்தின் நூற்றாண்டு 2028 இல் கொழும்பில் நடக்க உள்ளது.அதன் பகுதியாக இலங்கை அரசு சிறீநாராயண குருவின் தபால் தலையை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. குருவின் இரண்டாம் பயணம் 1926 நிகழ்ந்ததும் 1936 இல் நிறுவப்பட்ட சிறீ நாராயண குரு நினைவு மலையாளி   செயலகம்  இலங்கையுடனான மலையாள சமூகத்தின் பழமையான உறவின்  வரலாற்று நினைவகமாக தலை உயர்த்தி நிற்கிறது.இன்று மலையாள சமூகத்தை ஒருங்கிணைக்கும் மையமாக இந்நினைவிடம் மாறியுள்ளது.

பண்டாரநாயக்காவில் இம்பிச்சி தெரு

இம்பிச்சி ஹாஜி

.இலங்கையின் தலைநகருக்கு பறந்து செல்வதும் திரும்புவதும் பண்டாரநாயக்கா விமான நிலையமாகும். உலகத்தரம் வாய்ந்த இந்த விமான நிலையத்திற்கு நிலம்  கொடுத்தவர்களில் கோழிக்கோடு சாலியம் பகுதியைச் சார்ந்த இம்பிச்சி ஹாஜியும் அடங்குவார் என்ற வரலாறை அநேகர் அறிய மாட்டார்.

.இப்போதும் கொழும்பின் இருதயப் பகுதியாக இம்பிச்சி தெரு என்ற பெயரில் ஒரு தெரு உள்ளது. மலையாளியான இம்பிச்சி ஹாஜி பெயரில் பிரபல வணிக கேந்திரமாக இத்தெரு உள்ளது.கோழிக்கோட்டை அடுத்த சாலியம் என்ற பகுதியிலிருந்து கடல் கடந்து வந்த புத்தன் வீட்டில் இம்பிச்சி என்ற ஏழை மகன் கருவாடு வியாபாரத்தின் மூலம்  கோடீஸ்வரனாக மாறிய வரலாற்றை இந்த தெருவும் அதில் அமைந்திருக்கும் பள்ளிவாசலும் எடுத்தியம்புகிறது.இங்கு பல நிறுவனங்களை நிறுவி வணிகப்புரட்சியை ஏற்படுத்திய வரலாற்று நாயகனாக இம்பிச்சி ஹாஜி விளங்குகிறார். கொழும்பின் புறக்கோட்டை முதல் ஆட்டுப்பெட்டி வரை நீண்டு கிடக்கும் தெருவின் அதிக கட்டிடங்களும் இம்பிச்சி ஹாஜிக்கு உரியதாக இருந்த்து.

.மலையாளிகள் உட்பட ஏராளமானவர்களுக்கு தொழில்வாய்ப்புகள் கொடுத்து அடைக்கலம் கொடுத்த இம்பிச்சி ஹாஜி 1936 இல் 82 ஆம் வயதில் கொழும்பில் வைத்து மரணமடைந்தார். இலங்கையிலும் கேரளத்திலும் மட்டுமன்றி சவூதி அறபியாவிலும் ஏழைகளுக்கு சமூகக  கல்விக்கும் தொழில்  உற்பத்திக்கும் இம்பிச்சி ஹாஜி வழங்கிய கொடைகள் போற்றுதலுக்குரியது.

இலங்கையின் வணிகச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த இம்பிச்சி ஹாஜியின் மறைவை இலங்கை நாளிதழ்கள் மூன்று தினஙகள் செய்தியாக்கின. பிரிட்டன் பாராளுமன்றம்  இம்பிச்சி ஹாஜிக்கு இரங்கல் செலுத்தியது. “சாந்தி நீதிமான்” என்று பொருள்படும் “ஜஸ்டிஸ் ஆப் பீஸ்” என்ற விருதை வழங்கி பிரிட்டன் அரசு இந்த மலையாளியை கவுரவித்தது.

இம்பிச்சி ஹாஜி அவர்கள்  பனம் கொடுத்து வாங்கிய இடத்தில் எழுப்பப்பட்ட மஸ்ஜிதுல் லாஃபிர் வளாகத்தில் அவர் அடக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Latest Travel Blog
  • மழை ரிஹ்லா –வேணுவனத்தில் ஒரு பகல்

  • மலைக்கடவை-செங்கோட்டை புனலூர் குகை தொடர்வண்டித்தடம்

  • சரந்தீபில் மலையாளக் கதைகள்…நூற்றாண்டுகள் பழமையான சிறீலங்காவில் மலையாள மரபின் வரலாற்றுத் தடயங்கள் தேடி ஒரு பயணம்.

Close
© Copyright 2024. All rights reserved.
Website by Dynamisigns.
Close