மலைக்கடவை-செங்கோட்டை புனலூர் குகை தொடர்வண்டித்தடம்

சென்று திரும்பிய தொலைவு:370 கிலோ மீட்டர்கள்.

காலம்: 17 மணி நேரம்

செலவு 2080/=₹

ஊர்தி: ஆட்டோ,தொடர்வண்டி,பேருந்து

சென்று திரும்பிய தொலைவு:370 கிலோ மீட்டர்கள்.

காலம்: 17 மணி நேரம்

செலவு 2080/=₹

ஊர்திகள்: ஆட்டோ, தொடர்வண்டி, பேருந்து

ஆள்கள்: 02

ஒரு பயணத்தை இப்படி எண்களாக குறுக்கவியலாதுதான். மாறுபட்ட சுவைக்காக இப்படியொரு பகிர்தல்.

செங்கோட்டை – புனலூர் தொடர்வண்டிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்ற நீண்டநாள் விருப்பம், 02/11/2024 திங்களன்று நிறைவேறியது.

சென்னை – புது தில்லி, தாணே — கல்யாண் பார்சிக், கொங்கண் என நீண்ட குகை இருப்புப்பாதைகளில் பல்லாண்டுகளாகப் பயணித்தவன். அவற்றின் பேருருக்கும், நீளத்திற்கும் பழமைக்கும் குதூகலிக்க வைக்கும் இயற்கை எழிலுக்கும் அருகில் செங்கோட்டை புனலூர் குகைத்தடம் வராதுதான் என்றாலும் நமது கையெட்டும் பகுதியிலிருக்கும் குகைக்கடவையை பார்க்காமலிருப்பது கணக்கில் குறைதான்.

இங்குக் கூட்டாளிகளுடன் போவோம் எனத் தோன்றி தொடர்வண்டி நேர அட்டவணை குறித்து வினவிக்கொண்டிருக்கும்போது அதைக் கேட்டுக்கொண்டிருந்த என் இணையர் நானும் வருகிறேன் என முதல் பதிவு செய்து விட்டாள். மொத்த பட்டாளமே ஒற்றையாள் இராணுவமாக இருக்கும்போது கூட்டாளிகளுக்கும் குழுவாளிகளுக்கும் தேவையில்லை.

செலவைக் குறைப்பதற்காக மதியத்திற்கு ஏதாவது கட்டமுது எடுத்துக்கொள்வோமே என்றவுடன் அவளுக்கு வேறொரு கணக்கு இருந்திருக்கிறது. ஒரு வேளையை சுமையைத் தவிர்க்க எண்ணியவள் கடையில் அமுதுண்ணுவோமே என்றாள். அதுவும் சரிதான். அல்லும் பகலும் சமையல்கட்டுக் கதியாளர்களுக்கு இந்த ஆறுதலாவது இல்லாவிட்டால் எப்படி?

காலை ஏழு மணிக்கு குளிக்காத நாற்றத்துடன் ஆட்டோவைக் கொண்டு வந்தான் நண்பன். வேர்வையுடன் சிகரட் புகை நெடியும் சேர்ந்துகொண்டால் அதொரு வீரிய நச்சுக்கலவை.

பேயன் விளையில் இட்டிலி, உளுந்து வடை என பசியாறைப் பொட்டலங்கட்டிக் கொண்டோம். புனலூரில் இறங்கி அடுத்த வண்டியில் ஏறி ஊர் திரும்புவதாகத் திட்டம். குகைப்பாதையை காண்பது மட்டுமே கொண்ட குட்டி ஒற்றை இலக்குப் பயணம்.

திருநெல்வேலி செல்லும் பனங்காட்டு எக்ஸ்பிரஸ் அள்ளிப் போட்டுக்கொண்டு வந்து சேர்ந்தது. எட்டரை மணிக்குத் திருநெல்வேலி சந்திப்பிற்கு வந்தடைந்தோம். செங்கோட்டைக்கான பயணியர் தொடர்வண்டி ஒன்பதே முக்காலுக்குத்தான் என்பதால் வெளியில் சென்று தேநீரருந்திவிட்டு பலகாரக்கடையில் உப்பேறியும் நான்கு கத்லி துண்டங்களும் வாங்கிக்கொண்டோம்.

வண்டியும் நேரத்திற்கு புறப்பட கொஞ்ச நேரத்திலேயே குற்றாலம் சென்னை/கொங்கு மண்டல குடும்பத்தினர் இடிதடியாய் வந்து இருக்கைகளை நிரப்பினர். தெலுங்கும் தமிழும் கலந்த பேச்சில் பொழுது கரைந்தது.

தென்காசி வரைக்கும் காலநிலை இதம் எனச் சொல்ல முடியாது. குன்றிய பசுமையும் வெளிச்சமும் கரடுமாக புறம் காட்சியளித்தது. செங்கோட்டையை நெருங்க நெருங்க மேற்குத்தொடர்ச்சி மலையின் தண்மை தன் சாளரங்களைத் திறக்கத் தொடங்கியது. பூவாக இறங்கிய மழைத்துளிகள்.

செங்கோட்டை நகருக்குள் போய் சாப்பிட்டுவிட்டு புனலூருக்கான பயணச்சீட்டையும் எடுத்து இரண்டாம் நடைமேடைக்கு வந்து சேர்ந்தோம். ஆலமர வேர் போல அகன்று ஊன்றிய தொடர்வண்டி நிலையத்தின் அமைவிடம். நல்ல வடிவுப்பொருத்தம். நாங்கள் போக வேண்டிய மதுரை – குருவாயூர் தொடர்வண்டி பிற்பகல் மூன்று பத்துக்குத்தான். ஒன்றாம் நடைமேடையில் மதியம் இரண்டரை மணியளவில் மதுரைக்குச் செல்ல வேண்டிய வண்டித்தொடர் நின்றுகொண்டிருந்தது.

மொத்த நிலையத்திலும் எங்களிருவருடன் துப்புரவுப்பணியாளர் மூவர், மேலாளர் ஒருவர், கொல்லம் செல்லக் காத்திருந்த ஒரு பெண் பயணி, நடைமேடைக்கூரையின் சட்டகத்தில் அலகை தேய்த்துக்கொண்டிருந்த காக்கை. இவ்வளவுதான்.

சென்னை, மதுரை, குருவாயூருக்கு எனத் தினமும் மூன்று தொடர்வண்டிகளும் வாரத்தில் இரு நாட்கள் வேளாங்கண்ணி- எர்ணாகுளத்துக்குக் கூடுதலாக ஒரு வண்டி எனத் தொடர்வண்டிப் போக்குவரத்து மிகச் சுருக்கம். அதனால் பயணியர் நடமாட்டமில்லை.

நிலையத்திலுள்ள மற்றவர்கள் ஒவ்வொரு திசையில் இருந்ததினால் மொத்த நிலையத்திலுமே நாங்களிருவர் மட்டும்தான் என்ற தோற்ற மயக்கம். மங்கிய கதிரொளியும் மழைத்தூறலும் மென் காற்றும் முற்பகல் நேரத்துச் சொக்கலை உண்டு பண்ணின. வெளிக்கும் நமக்குமான மௌன உரையாடலின் முற்றமானது தொடர்வண்டி நிலையம். அதுவும் எங்களுடன் சேர்ந்து சொல்லிழந்து கிடந்தது. கொஞ்சங்கொஞ்சமாக ஓரிரு மலையாளப் பயணிகள் வந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்புக்கு நோகாமல் இருந்தனர்.

இரண்டரை மணிக்குப் புறப்பட வேண்டிய தொடர்வண்டியின் ஓட்டுநர்கள் இங்குமங்கும் ஓடி பொறியை அணியமாக்கிக்கொண்டிருந்தார்கள். புலரியில் குழந்தையை எழுப்பி பல்துலக்கி குளிப்பாட்டி, உடுத்து, உண்ணவைத்துக் கிளப்பும் பாவனை. மொத்த நிலையத்தின் சுற்றுப்புறத்தில் அது புறப்பட்டுச் செல்லும்வரைக்கும் கேட்டுக்கொண்டிருந்த ஒலிதான் மிகப்பெரிதாக இருந்தது. ஒருவழியாகப் பல தயக்கங்களுடன் அதுவும் புறப்பட்டுச் சென்றது.

நாங்கள் போக வேண்டிய வண்டி மதுரையிலிருந்து பத்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து உரிய நேரத்தில் கிளம்பியும்விட்டது. வண்டி கிளம்பிய அரைமணி நேரத்திற்குள் ஆரியங்காவு குகை வரும் எனச் செங்கோட்டையில் ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்திருந்தார்.

ஆனால் முதல் குகை வரக் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாகியது. எங்களின் வண்டி முப்பதிலிருந்து நாற்பது கிலோமீட்டர் வேகத்தில்தான் புனலூர் வரைக்கும் சென்றது. தொடர்வண்டியின் பின்புறமும் பொறியைப் பூட்டியிருந்தார்கள். நாட்டிலேயே இதுதான் மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்படும் தொடர்வண்டி எனக் கூறிக்கொள்கிறார்கள்.

குகைகள், மலைகளில் செல்லும் தொடர்வண்டிகளில் இவ்வாறு இரண்டு பொறிகளைப் பூட்டுவது வழமைதான். குகைக்குள் செல்லும்போது பொறி பழுதாகி தொடர்வண்டி நின்றுவிடக்கூடாது. அப்படி நின்றால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் சாத்தியமுண்டு போலும், அதனால்தான் அப்படிச் செய்கிறார்கள் என இதுநாள்வரை நினைத்திருந்தேன். ஆனால் உண்மையோ வேறு.

பாதையானது கூடுதல் வளைவுகள் கொண்டதாகவும், ஏற்ற இறக்கமாகவும் இருப்பதால் கூடுதல் வேகத்தில் சென்றால் தொடர்வண்டியை நிறுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால் தொடர்வண்டியின் தொடக்கத்திலும் இறுதியிலும் இரு பொறிகளை இணைத்து, மணிக்கு முப்பது கிலோ மீட்டர் வேகத்துக்குள் தொடர்வண்டி இயக்கப்படுகிறது. பின்னால் உள்ள பொறி, மேடான பகுதிகளில் செல்லும் வண்டியின் வேகத்தைக் கூட்டவும், தாழ்வான பகுதிகளில் செல்லும்போது வேகத்தைக் குறைக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகிறது. இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து இரயில்களும் இரு பொறிகளுடன் சேர்த்துப் பதினான்கு வண்டிக்கூண்டுகளும் முப்பதிலிருந்து நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டப்படுகின்றன.

மொத்தம் ஐம்பது கிலோமீட்டர் தொலைவுள்ள இத்தடத்தைக் கடக்க இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் எடுக்கிறது. இந்த இருப்புப்பாதையில் ஆறு குகைகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட வளைவுகள் உள்ளன. பதின்மூன்று கண்களுடைய கழுத்துருட்டிப் பாலம் உட்பட சிறிய பெரிய அளவிலான இருநூறு பாலங்கள் இவ்வழித்தடத்தில் உள்ளன.

நீரோடைகளும் மலைச்சாரலும் மனத்தை ஆற்றுகின்றன. முதற்குகை வழியைக் கடந்தவுடன் வருகிற நிலையம் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் ஆரியங்காவு நிலையம். ஆனால் கேரள எல்லை, குகையின் பாதியிலேயே தொடங்கிவிடுகிறது. தொடர்ந்து குட்டிக் குட்டியான மலையூர்கள். மாஞ்சோலை, கண்டித் தேயிலைத் தோட்டக் குடியிருப்புகளைப் போலவே காட்சியளிக்கின்றன.

ஆறு மணிக்கு வரவேண்டிய புனலூர் நிலையத்தை ஐந்தரை மணிக்கே வந்தடைந்து விட்டோம். நிலையத்தில் இறங்கவும் மழைப்பொழிவு. உடனே ஆட்டோ பிடித்துக் கேரளச் சாலைப்போக்குவரத்து பேருந்து நிலையத்தில் போய் தென்காசிக்கானப் பேருந்தில் ஏறினோம். மழையின் பொதுநிறத்தை உடுத்திருந்தது புனலூர். இரண்டு மணிநேர ஓட்டத்தில் ஒன்றரை மணிநேரமும் மழை பெய்துகொண்டேயிருந்தது.

இரவு ஏழரை மணிக்குத் தென்காசிக்கு வந்து சேர்ந்தோம். புதிய மாவட்டத்தின் தலைநகராதலால் பேருந்து நிலையம் பரந்து விரிந்து கிடந்தது. அங்குள்ள கடைகள் பிரபஞ்சத் தொங்கலில் மின்னும் தாரகைக்கூட்டத்தைப் போல பேருந்து நிலையத்தின் விளிம்பில் ஒட்டி வைக்கப்பட்டிருந்தன.

திருநெல்வேலிக்குச் செல்லும் இடைநில்லாப் பேருந்து வருவதற்கு நேரமிருந்ததால் அடுத்துத் தென்பட்ட புத்தகக் கடைக்குப் போனேன், திருநெல்வேலியில் தேடியும் கிடைக்காத இலக்கிய மாத இதழ் அங்குதான் கிடைத்தது. பெயரைச் சொன்னவுடன் இன்றுதான் வந்தது என எடுத்து நீட்டினார் கடைக்காரர். ஏராளமான பருவ இதழ்களைக் கொண்டிருந்த கடை, அனைத்து மங்கலங்களுடன் காட்டை நிறைத்த ஒற்றைப்பூ போல மலர்ந்திருந்தது. அவரை மனதார வாழ்த்தினேன்.

மின்னியல் சமூக ஊடகங்கள், திறன்பேசிகளின் வருகையோடு இறந்துகொண்டிருக்கும் அச்சிதழ் வாசிப்பினால் முன்னர் போல விரிவான பருவ இதழ்களுக்கான கடைகளை நகரங்களிலும் போக்குவரத்து நிலையங்களிலும் காண முடிவதில்லை. நாளிதழ் விற்கும் கடைகள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்படுகின்றன. சென்னையிலும் இதுதான் நிலை.

பேருந்து வந்தது; திருநெல்வேலிக்கு சென்று ஊருக்கான கடைசிப் பேருந்தைப் பிடித்து அமர்ந்து செலவுக்கணக்கைக் கூட்டினேன். செங்கோட்டையில் இறங்கி அங்குள்ள குற்றாலக் குளியல் காலை உணவகத்தில் உண்டதும் அதற்காக ஆட்டோ பிடித்ததும்தான் ஏறக்குறைய பாதி செலவை எட்டப் பார்த்தது. புனலூர் நகரத்தை அதன் இயல்பான வண்ணத்தில் முழுவதுமாகப் பார்க்க இன்னொரு தடவை வரும்போது இந்தத் தவறை செய்யக்கூடாது என்ற புத்தறிவு கிட்டியது.

புனலூரில் என்னென்ன புதிய தவறுகள் காத்திருக்குமோ? காத்திருந்தால்தான் என்ன! அந்தத் தவறைச் செய்தபிறகு அது பழையதாகி விடும்தானே!!

May be an image of train and railroad

See insights and ads

Boost post

All reactions:

11You and 10 others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Latest Travel Blog
  • புத்தகக் கிராமம்

  • ரிஹ்லா துளுநாடு — மொழிகளின் நிலம் – 1

  • அருஞ்சுனை-கால் நாள் ரிஹ்லா #5

Close
© Copyright 2024. All rights reserved.
Website by Dynamisigns.
Close