மழை ரிஹ்லா – வேணுவனத்தில் ஒரு பகல்

திருநெல்வேலி மாவட்டத்தை மூன்றாக வகிர்ந்த பிறகும் இன்னும் திருநெல்வேலி மாவட்டக்காரராகவே நீடிப்பவர் ஏர்வாடி காஜா காதர்மீறான் பந்தே நவாஸ்.

வருவாய் நிர்வாக அடிப்படையில் நான் தூத்துக்குடி மாவட்டத்துக்காரன் என்றாலும் பிறந்ததோ பிரிக்கப்படாத அகன்ற தாம்பாளத் திருநெல்வேலிச் சீமையில்தான். நிர்வாகப் பிரிவினைக்கு அப்பால் உணர்வாலும் நிலத்தாலும் தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்துக்காரர்கள் நெல்லையர்கள்தான்.

காயல்பட்டினம்/ஏர்வாடி வாசிகளுக்கு மருத்துவத் தேவைகளுக்கான தலமாகவும் அல்லது நெடும்பயணங்களுக்கான இடைவழி நகரமாகவே இருந்து வந்த திருநெல்வேலி நகரத்தை குறுக்கும் நெடுக்குமாகக் காலாற வேண்டும் என்ற அவா திடுமெனத் தோன்ற எப்போதும் பயணத்திற்குப் பின் நிற்காத ஏர்வாடி காஜா காதர்மீறான் பந்தே நவாஸைத் தொடர்புகொண்டேன். இரண்டு நாட்களுக்கு முன்னதாக தகவல் சொல்லுங்கள் காக்கா என்றார். இப்படியான திடீர்ப் பயணங்கள் செய்யும் திட்டம் ரிஹ்லாவின் கையிலிருப்பதால் இங்கிருந்து தொடங்குவோம் எனப் பேசிக்கொண்டோம்.

பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி வளாக நாட்டார் வழக்காற்றியல் துறைக்குப் போவது உட்பட நான்கைந்து சந்திப்புகள் கைவசமிருந்தன.

ஒற்றை நாள் ரிஹ்லா எனப் பெயர் வைக்கலாமா? என ஏர்வாடியாரிடம் கேட்டபோது 12/12/2024 வியாழனன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால் மழை ரிஹ்லா என்றழைப்போம் என அவர் பகர அவ்வாறே முடிவெடுக்கப்பட்டது.

வியாழன் காலை வீட்டிலிருந்து கிளம்பும்போதே மழை முன்னுரை கூறத் தொடங்கியிருந்தது. கடையில் காலை பசியாறை வாங்கிக்கொண்டிருக்கும்போது இரண்டாம் கியருக்கு (கியரை பல்லிணை எனத் தமிழாக்கி அடிவாங்க அணியமாக இல்லை) மாறியிருந்தது. தயக்கம் உள்ளில் கீற்றடித்தது. முன்வைத்த தலையைப் பின் வைப்பதில்லை. மழைக்கு ஏன்அஞ்ச? அதுவும் நம்மை மாதிரி இன்னொரு படைப்பு. அதன் கடிவாளத்தைப் பிடிக்குமாறு அதையும் என்னையும் படைத்தவனிடமே கேட்போம். ஈற்றில் அது அவ்வாறே ஆகியது.

திருநெல்வேலி சந்திப்பிற்குச் செல்லும் காலை ஏழரை மணி பனங்காட்டு எக்ஸ்பிரஸ்ஸிலும் இதுதான் நிலை. உள்ளும் வெளியிலுமாக மழை. ஏர்வாடியார் எந்ந நிலையில் இருக்கிறார் என்றறிய விளித்தபோது தலைவர் பாதி தொலைவு வந்துவிட்டார். நிலையத்தின் தகரத்தலையில் மழையின் பெருந்தாளம். வீறாப்புக்குப் புறப்பட்டு வந்துவிட்டாலும் எப்படி வெளியே போவது என்ற சிறிய கேள்வி. குடையும் மழையங்கியும் கையிலில்லை.

இது எப்படியிருந்தாலும் நம்ம ஊரு இது.  புரிந்துகொண்ட கூட்டாளனாய் மழை சற்று நகர்ந்து இடந்தரும். அப்படியே போக முடியலேன்னா காரமும் மதுரமும் காஃபியுமாக அடித்துவிட்டு அடுத்த பனங்காட்டு வண்டியில் ஊர் திரும்பலாம் என்ற நினைப்பும் நிதானத்தைத் தந்தது.

ஒன்பதரை மணியளவில் ஏர்வாடியார் நிலையம் வந்துவிட்டார். மழையங்கி இருந்தால் போகலாம் எனக் கடையில் போய் விலை கேட்டால் கழுமரமாகி ஆயிரத்தைத் தொட்டு நிற்கிறது. என்னருமை மழையை ஆயிரங்கொடுத்தா தொலைவில் நிறுத்துவது?

தாமிரபரணியில் குளிப்பதற்கென எடுத்து வந்திருந்த துவாலையை தலையில் சுற்றிக்கொண்டு பைக்கில் புறப்பட்டோம். ஏர்வாடியார் மழைக்கான மேலங்கி மட்டும் அணிந்திருந்தார்.

எங்கள் உலா பட்டியலின்படி கட்டுமானத்துறை தொழிலதிபரும் பிரமிள் நூலகத்தின் நிறுவனருமான மயன் ரமேஷ் அவர்களைச் சந்திக்கச் சென்றோம். பெருநிறுவனமொன்றைக் கட்டி எழுப்பி வெற்றிகரமாக இயங்கி வரும் தன்னைப் போன்ற மனிதர்களில் மயன் ரமேஷ் தனித்துவமிக்கவர். இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் தொடர் வாசிப்பும் சமூக நல்லிணக்க கண்ணோட்டமும் ஒருங்கே அமையப்பெற்ற மனிதர். நீண்டகால நண்பர் ஆர்.ஆர். சீனிவாசன் வழியாக இவர் எனக்கு அறிமுகமானார்.

மயன் ரமேஷை சந்தித்துவிட்டு வெளியேறும்போது ஏர்வாடியாரின் குடும்ப மருத்துவரான அக்யூஹீலர் ஒருவரின் மருத்துவகம் தென்பட்டது. மருத்துவர் கெட்டிக்காரர் என்றும், தான் இவரிடம் எதிர்பார்க்காவிதத்தில் நல்ல குணமடைந்திருப்பதாகவும் ஏர்வாடியார் நம்பிக்கையூட்டினார். என் நண்பர்கள் அக்யூஹீலர்களாக உள்ளனர். அவர்கள் மூலம் நடந்த பல வெற்றிக்கதைகளைக் கேட்டுள்ளேன். எனவே துணிவை உண்டாக்கிக் கொண்டு எனது நீண்டநாள் சிக்கலொன்றிற்காக அவரிடம் காட்டியுள்ளேன். தினசரி மருந்துகளை விடச் சொல்லியிருக்கிறார். சில வாழ்வியல் மாற்றங்களையும் பரிந்துரைத்திருக்கிறார். பார்ப்போம். வல்லோனை துணையாக்கி முயல்கிறேன். பயணங்கள் இதுபோல புதிய வாயில்களை எதிர்பாராவிதமாகத் திறந்திடும்.

பட்டியலில் உள்ள தலையாய இடங்களில் ஒன்றான பிரமிள் நூலகத்திற்குச் செல்லலாம் எனப் பார்த்தால் அது சற்றுத் தொலைவிருக்கிறது. அத்தொலைவிற்கு மழை தடையாக வந்து நின்றது. எனவே அடுத்த இலக்குகளை நோக்கி நகரத் தீர்மானித்தோம்.

தமிழகத்தில் அறியப்பட்ட கவிஞர்களில் ஒரு சிலரைத் தவிர்த்து பெரும்பாலானவர்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்கள். சிவராமலிங்கம், தருமு சிவராம் என்ற பிரமிள், இலங்கையின் திருகோணமலையில் பிறந்திருந்தாலும் தமிழக அரசியல் போக்குகளில் அவருடைய கருத்துகளைத் துணிவாக கவிதைக்கு வெளியே பேசியவர். கவிதையை, கலையை மொத்த மானுடத்திற்குமானது என ஆழ்ந்து நம்பியவர்.

குலவணிகர்புரத்திலுள்ள காதர் அவுலியா ஜுமுஆ பள்ளிவாயிலில் தொழுதோம். அப்பள்ளி வளாகத்தில்தான் சதக்கத்துல்லாஹ் அப்பா என்ற சதக்கத்துல்லாஹில் காஹிரி வலியுல்லாஹ்வின் மகனார் முஹம்மது லெப்பை அடங்கப் பெற்றுள்ளார்கள்.

உணவருந்திவிட்டு பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி வளாகத்திற்குச் சென்றோம். தொடர் அலுவல்களுக்கு நடுவிலும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் பேராசிரியர் கார்மேகம் எங்களுக்காகக் காத்திருந்தார். மையம் உண்மையிலேயே நாட்டாராகத்தான் இருந்தது. கல்லூரி துறையொன்றிற்குள் நுழைந்த மாதிரி இல்லாமல் சிறிய கலைக்கூடத்திற்குள் நுழைந்த உணர்வு. மூங்கில், உலோகம், மண் போன்றவற்றினால் செய்யப்பட்ட பதுமைகளுடன் கோட்டோவியங்களும் பொருள்களும் இடம்பெற்றிருந்தன.

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும் வாசிப்பும் தேடலும் கொண்ட நண்பர் சாகுல் ஹமீது மூலமாகப் பேராசிரியர் கார்மேகம் அறிமுகம். இனிய மனிதர். நல்லவர்கள் மேலும் நலவுகளையே கொண்டு வந்து இணைப்பார்கள்.

சில மணித்துளிகள் மட்டுமே உரையாடக் கிடைத்தது. அங்குள்ள விற்பனையகத்தில் பண்பாட்டு வேர்களைத் தேடி, ஈர்ப்பு விசை — பயன்பாட்டு நாட்டுப்புறவியல் ஆய்வுகள், வழக்காறுகள் காட்டும் வாழ்வியல் முதலிய நூல்களை வாங்கிக்கொண்டோம். திருநெல்வேலிச் சீமையின் நாட்டாரியல் வழக்காற்றுத் தொகுப்பிற்காகவும் அங்குச் சென்றோம். ஆனால் இதுவரை அப்படி தொகுக்கப்படவில்லை எனச் சொன்னார்கள்.

பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியின் நாட்டாரியல் வழக்காற்றியல் துறை புகழும் தனித்துவமும் பெற்ற துறை. இத்துறையிலிருந்து நெல்லைச்சீமையின் வழக்காறுகள், தொன்மங்கள், வாய்மொழி மரபுகள் தொகுக்கப்பட்டால் தேடுபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

அடுத்ததாக எங்கள் நகர்வு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் அருகிலுள்ள செயின்ட் மார்க் சாலையில் அமைந்திருக்கும் திருநெல்வேலி மாவட்ட அருங்காட்சியகம். ஆதிச்சநல்லூரின் விடயங்கள் கொஞ்சமிருந்தன. பாண்டியர்களின் வணிகத் தலைநகரமான கொற்கையில் கிடைத்தவை எதுவுமில்லை. கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையைச் சிறைப்பிடித்து ஆங்கிலேயர் அடைத்து வைத்திருந்த இடம் என ஓர் அறை உள்ளது. காணொளிக்காட்சி காண்பிக்கப்படும் என்ற அறிவிப்புப்பலகை வேறு. உள்ளே விளக்கவோ வழிகாட்டவோ ஒருவருமில்லை. காணிப்பழங்குடிகளின் பண்பாட்டு மாதிரிகள் மனங்கவருகின்றன. நுழைவுச்சீட்டு வழங்குமிடத்தில் மட்டும் மூவர் அமர்ந்து கதைத்துக்கொண்டிருந்தனர். இந்த அருங்காட்சியகம் தெருவில் வெளிப்பார்வைக்கு உள்ளொடுங்கி கிடக்கிறது. ஆர்வலர்கள் மட்டுமே தேடி வரவியலக்கூடிய அமைப்பு.

எட்டாம் நூற்றாண்டு பாண்டியரின் அற்புத கருங்கல் கோட்டையின் கிழக்கு வாயிலைத்தான் மாவட்ட அருங்காட்சியகமாக்கியுள்ளனர். கூரைகளில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. திறந்தவெளி அரங்கொன்று அருங்காட்சியக வளாகத்திலேயே இருக்கிறது. அதற்கான பயன்பாட்டுக்கட்டணம் எனத் தனியாகக் கிடையாது. அலுவலக நேரங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

சிற்பத்தோட்டத்தை உள்ளடக்கிய செப்பு போன்ற இடம் செம்மையைப் பூசிக்கொண்டு நிற்கிறது. மாவட்டத்தின் சிறப்புக்கேற்ப அருங்காட்சியகமில்லை. ஒருவேளை புதியதாக உருவாக்கப்படும் பொருநை அருங்காட்சியகத்தில் நாம் எதிர்பார்க்கக்கூடியவை இடம்பெறலாம் என நம்புவோமாக.

மாவட்ட தொல்லியல் துறை அலுவலகம் பாளையங்கோட்டையிலேயே இருக்கிறது. அதைக் காண இன்னொரு நேரமெடுத்து வர வேண்டும்; இன்ஷா அல்லாஹ்.

பயண காலத்தை இரண்டு மணிநேரத்திற்கு முன்னரே முடித்துக்கொள்வோம் எனத் தீர்மானித்து இறுதிச்சுற்றாக திருநெல்வேலி நகரத்தின் முன்னொட்டான ஹலுவாவைத் தேடிச் சென்றோம். இருட்டுக்கடை அலுவா. அலுஆ என்ற அறபிச்சொல்லின் மரூஉதான் அல்வா, அல்வாவாகியிருக்கிறது.

திருநெல்வேலி சந்திப்பிலும், நகரத்திலும் அலுவா விற்காதவன் பாவி என்னும் அளவிற்கு ‘சாந்தி, நியூ சாந்தி, நெல்லை சாந்தி’ ஹலுவாக்கடைகள். முதல் ‘சாந்தி’ இன்றுவரைக்கும் சாந்தியடைந்திருக்க மாட்டாள் போலிருக்கிறது. ஆனால் சந்திப்பில் முதல் சாந்திக்கடையை வாடிக்கையாளர்கள் சரியாகத் தேடிப்போய் தங்களுக்குப் பிடித்த இனிப்பு, கார வகைகளையும் வாங்கிக்கொள்கிறார்கள்.

திருநெல்வேலி நகரத்திலுள்ள ‘இருட்டுக்கடை அலுவா’தான் திருநெல்வேலி அலுவாவிற்கு தொடக்கமாம்.1930களில் இராஜஸ்தானிலிருந்து வந்தவர்கள்தான் இதைத் தொடங்கியிருக்கின்றனர்.

உண்மையான இருட்டுக்கடை அலுவாவின் சுவைக்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள். முதலாவது அலுவாவிற்கான மூலப்பொருளான கோதுமை மாவை இவர்கள் கைத்திருகையில் திரிப்பதோடு அலுவாவையும் கையால்தான் சமைக்கிறார்கள்.பொறிகளைப் பயன்படுத்துவதில்லை. இரண்டாவது காரணம், இதன் உருவாக்கத்துக்குத் தாமிரபரணி நீரைப் பயன்படுத்துவது.

மேற்சொன்ன இரு காரணங்களுமே உண்மையாகவிருக்க வாய்ப்புகள் கூடுதல். திருநெல்வேலி அலுவாவின் சுவையில் தமிழகத்தின் வேறெந்த மாவட்டத்திலும் எனக்குச் சாப்பிடக் கிடைத்ததில்லை. நாங்கள் போன சமயம் பிற்பகல் மூன்றரையளவில் இருக்கும். எங்களுக்கு உண்மையான இருட்டுக்கடை அல்வாவை உள்ளூர்க்காரரொருவர் உடன் வந்து அடையாளங்காட்டினார். கிருஷ்ணாசிங் சுவீட் ஸ்டால் (இருட்டுக்கடை) மூடியிருந்தது. அதிலுள்ள அறிவிப்புப் பலகையில் “கடை மாலை ஐந்தரை மணிக்குத் திறக்கப்படும். அதுவரை அருகிலுள்ள எங்கள் சார்பு நிறுவனமான விசாகம் சுவீட்சில் எங்கள் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்’ என்றிருந்தது.

கொஞ்சம் அலுவாவும் மிளகு காராபூந்தியும் மிளகு காரச்சேவும் வாங்கிக்கொண்டோம். இவற்றில் கரித்துத் திகட்டும் / இனிப்பும், நெய் சேர்க்கையும் (எண்ணெய்) இல்லை. கணக்காக மென்மையான வாசனையுடன் தரமாக உள்ளன. நல்ல நினைவை உண்டாக்குவன. திருநெல்வேலியின் தனித்துவங்களின் ஒன்றினைப் பெற்ற நிறைவில் ஊருக்குக் கிளம்பினோம்.

எழுத்தை நிறைவுக்கு கொண்டுவர வேண்டுமே என்பதால் ‘கிளம்பினோம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டி வந்தது. உள்ளபடி இங்கிருந்து கிளம்புவது என்ற சொல்லுக்கு வேலையில்லை. காரணம் இது சொந்த திணை அல்லவா?

மழைக்குள் இருக்கும் ஒரு பயணத்திற்காக விருப்பப்பட்டது 2015 சென்னை வெள்ளப்பேரழிவு ஏற்படும் வரைக்கும்தான். பிறந்ததிலிருந்து வாழ்வு இனிமையின் ஓரங்கமாக இருந்த விண்மழை இன்றுவரை அச்சமூட்டுகிறது.

திருநெல்வேலி சுற்றலுக்குக் கிளம்பும்போது தொடங்கிய மழை ஊருக்கு வண்டியேறும் வரைக்கும் ஊர் வந்த பின்னரும் பொழிந்துகொண்டுதானிருந்தது. பதினோரு மணிநேரம் மழைக்குள்ளும் ஈரத்துக்குள்ளும்தான் இருந்துள்ளோம். உள்ளங்கி,வெளியங்கி எல்லாம் ஈரமயம். கைகளிலும் கால்களிலும் வெள்ளை பூத்த ஒரு சடலக்களை. என் வாழ்வில் இவ்வளவு நேரம் மழை ஈரத்துக்குள் இருந்ததில்லை. விரும்பியது நடப்பதற்கும் ஒரு விலை இல்லாமல் இல்லையே. காய்ச்சலும் நீர் ஒவ்வாமையும் இருமலும் உறுதி எனத் தோன்றியது. இருக்கவே இருக்கிறது இறை வேட்டல், அன்றிரவு முழுமையாகக் கழிந்து வைகறை அதன் முழுமையுடன் புலர்ந்தது. உடல் முழு நலம். இணக்கத்தைக்கொண்டு மழை ஏவப்பட்டிருக்கும்போது ஏவலை மீறும் துணிவு அடியானுக்கு வராதல்லவா?

இப்பதிவை எழுதிகொண்டிருக்கும் சமயம் தாமிரபரணியில் 94,000 கன அடி அளவிற்கு தண்ணீர் அணைகளிலிருந்து திறக்கப்பட்டுள்ளது. ஆயிரம் மதயானைகளின் அணிவகுப்பைப் போல தாமிரபரணி இரு மருங்குகளையும் தொட்டுக்கொண்டுப் புரள்கிறது. கலியாவூர் முதல் புன்னக்காயல் வரையிலான ஆற்றின் கரையோர ஊரார்களை வீடுகளிலிருந்து பாதுகாப்பு கருதி வெளியேற்றிக்கொண்டிருக்கிறது மாவட்ட நிர்வாகம். இழப்பையும் சேதத்தையும் அச்சத்தையும் விட்டு இறைவன் நம்மனைவரையும் காக்கட்டும்.

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Latest Travel Blog
  • புத்தகக் கிராமம்

  • ரிஹ்லா துளுநாடு — மொழிகளின் நிலம் – 1

  • அருஞ்சுனை-கால் நாள் ரிஹ்லா #5

Close
© Copyright 2024. All rights reserved.
Website by Dynamisigns.
Close