திருவிதாங்கூர் — தென்னெல்லையா? தென் தொல்லையா?

திருவிதாங்கூர் — தென்னெல்லையா? தென் தொல்லையா?

தனக்கானதை மீட்ட பெருமித உணர்வாக தமிழ் நாட்டிற்கும் தனது பறிக்கப்பட்ட கரமாக கேரளத்திற்கும் தோன்றும் நிலப்பரப்பு குமரி மாவட்டம்.

 அய்ந்திணைகளில் பாலையைத் தவிர்த்து நான்கு திணைகளையும் தன்னுள் கொண்டுள்ள நிலம். மொழிப்பிரிவு,சாதிப் பிளவு,மன்னராட்சிக் கொடுமை என வேறுபட்ட சுடு திரவக்கலவை கொண்ட நிலம்.தமிழக கேரள முஸ்லிம்களுக்கோ அவர்களுடைய இணைப்பின் முந்நீர்க்கபாடம் அமைந்துள்ள மண்.


 ஒரு தலைமுறை காலத்திற்கும் மேலாக இம்மண்ணில் உலா வருபவன் என்ற முறையில் இம்மாவட்டத்துடன் எனக்கு அணுக்கமுண்டு.எனது ஊரின் வரலாற்றைப் பின் தொடரத் தொடங்கிய நாட்களிலிருந்து  உள்ளூர் வரலாற்றாய்வாளர்களும் நண்பர்களுமான கோட்டாறு அஹ்மது கபீர் காக்கா,மிடாலம் அன்சார்  ஆகியோரின் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் தொடர்பாக  கிடைத்துக் கொண்டிருக்கும் தரவுகளும் தகவல்களும் இந்த அணுக்கத்தினை இன்னும் அணு நெருக்கமாக்குகின்றன.

 ஆதாய நோக்கற்ற ரிஹ்லா பயண முகமையை தொடங்கிய நாட்களிலிருந்து உடன் பயணித்து வருபவர் நண்பர் மிடாலம் அன்சார். அவரும் நானும் பல தடவை குமரி மாவட்டத்தின் பழம் வரலாற்றை அது திருவிதாங்கூராக இருந்த காலத்திலிருந்தே அறிவதற்கான ரிஹ்லா ஒன்றை நடத்துவதைப் பற்றி பேசியிருக்கிறோம்.

அவ்விருப்பம் நான்கு ரிஹ்லாக்கள் நடந்த பிறகே சாத்தியமாக வேண்டும் என விதித்திருக்கிறது போலும். சில கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு ரிஹ்லா திருவிதாங்கூருக்கான அறிவிப்பை வெளியிட்டோம்.

 அறிவிப்பு வெளியிட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் ஒருவரும் முன்பதிவு செய்யவுமில்லை. விசாரிக்கவுமில்லை.இதுவரைக்கும் நடந்த ரிஹ்லாக்களில் கண்டிராத பட்டறிவு இது. எட்டாம் நாளில் தமிழகத்திலிருந்து மூன்று வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் இணைந்தனர்.

 இந்த ரிஹ்லா தமிழ் நிலம் போல சேரள நிலத்திற்கும் தலையாய ஒன்று என்பதால் மலையாளத்தில் ரிஹ்லா பதாகையை விளம்பரம் செய்தோம். அங்கிருந்து கேரளத்திலிருந்து கல்வி&கலைத் துறையைச் சேர்ந்த நால்வர் இணைந்தனர். அத்துடன் நான்கு தமிழக&கேரள நண்பர்களும் இணைந்தனர்.

 ஆக பத்து பேர்கள். ஒரு ரிஹ்லாவை நடத்துவதற்கு குறைந்தபட்சம் பதினைந்து பேர்கள் இணைந்தால்தான் அப்பயணம் கையில் பிடிக்காமல் தற்சார்பாக நடக்கும். ஆள் குறைந்தால் அடையாள ரீதியாகவாவது நடத்துவது என்பது கொள்கை முடிவு.ஆனால் அதற்கும் சல்லி வேண்டுமே! கொஞ்சம் திகைப்புதான்.

 இந்த சிரமங்களை அஹ்மது கபீர்,மிடாலம் அன்சாருடன் கலந்தாலோசித்த பிறகு முடியாதபட்சத்தில் இதை குறைந்த பட்ச எண்ணிக்கை பயணிகளை வைத்தாவது நடத்திடுவோம்.பணப்பற்றாக்குறைக்கு அனுசரணையாளர்களைக் கண்டு பிடிப்போம் என உறுதியளித்தனர்.

 இதற்கிடையில் கனமழை எச்சரிக்கை வேறு அச்சுறுத்தியது. அல்லாஹ் நாடியதே நடக்கும் என அவன் மேல் பாரத்தை போட்டு உறுதி பூண்டோம். நம்பினோர் கைவிடப்படுவதில்லை.வாசமும் மணமுமாக எல்லாம் முழுமையாக நடந்தேறியது.

 அஹ்மது கபீர் காக்காவும் மிடாலம் அன்சாரும் சிறப்பாக பயண ஏற்பாடுகளை அணியம் செய்த நிலையில் பயண ஊர்தி நாகர்கோவிலிலிருந்து தக்கலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முன்னேறியது. பாதையின் முன்பு தென்பட்ட வேளிமலைக் குறித்து உடன் வந்த ஆசிரியர் குலாம் முஹம்மது கேட்டறிந்தார். குமரி மாவட்டத்தின் அணியும் அரணுமான மலைகளுக்கு இன்று பிளவை,செதில் சொறி நோய் வந்திருக்கின்றன.நான் மூன்று பத்தாண்டுகளாக கண்டு வந்த கவினுறு மலை முடிகள் இன்றில்லை.

 திருவனந்தபுர மாவட்டம் விழிஞ்ஞத்தில் கட்டப்பட்டு வரும் அதானிக்கான துறைமுகத்திற்காக ஆள்வோர்கள் இம்மலைகளின் சதை வெட்டித் தின்கின்றனர். பாரத மாத்தாவின் பயபக்தர்கள் நிறைந்த மாவட்டமிது.இதில் ஒருவரும் வாயையும் குதத்தையும் திறக்கவில்லை.வாயில் போட வேண்டியதை போட்டால் வெள்ளியார்,எம்மார் கோட்சே என எல்லா சங்கி தலைவர்களின் ஒன்பது துளைகளும் அடைத்துக் கொள்ளும்தானே.

 மூன்று நாட்களும் நாங்கள் போன ஊர்களில் நல்ல வரவேற்பு.ஜமாஅத்தார்கள்,ஊர் ஆளுமைகள் நல்லபடி வரவேற்றனர்.வட்டச்சட்டி போலிருக்கும் தமிழகத்தின் இக்குட்டி மாவட்டத்தில் ஒவ்வொரு சில கிலோ மீட்டர்களில் உள்ள முஸ்லிம் ஊர்களில் வேறுபட்ட உணவுவகைகள்.அவை தேங்காய் பாலாகவும் நெய்யாகவும் உணவுக்குள் மணக்கின்றன. கிண்ணத்தப்பமும் கலந்தப்பமும் இன்னமும் பின் தொடர்கின்றன.

 திருவிதாங்கோடு,குளச்சல்,தேங்காய்ப்பட்டினம் போல ஆளுரில் உள்ள பழமையான கல் பள்ளிவாயில்களை இடிக்கமால் புது பள்ளிவாயில்களை எழுப்புங்கள் என வற்புறுத்தக் கிடைத்தது ஓர் ஆறுதல். ஆளுரின்பழமை காக்கப்படும் என நம்புவோமாக!

 முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையினராக இருந்த போதிலும் கடந்த கால மன்னராட்சிகளிலும் இந்தியா உருவான பின்னரும் அமைதியுடனும் நிம்மதியுடனும் முஸ்லிம்,கிறித்தவர் வாழ்ந்து வந்தனர். வெள்ளைச்சட்டையில் சேறு அப்பியது இவ்வமைதியும் குலைக்கப்படும் ஒரு காலம் வந்தது.

 வடமொழி பெயரைக் கொண்ட ஆர் எஸ் எஸ் தன்னை உள்ளூர் சமூக பண்பாட்டு மொழி அசைவுகளுக்கேற்ற மாதிரி இந்து முன்னணி என பெயர் மாற்றிக் கொண்டு தாங்கள் ஷாகாக்களிலும் சிவிர்களிலும் எடுத்த கொலைப்பயிற்சியை ஒத்திகை பார்த்த மண்டைக்காடு கடற்கரைக்கும் முன்னிரவில் போனோம். பயண அவசரங்களில் இது பற்றி பேசவோ காணவோ இயலவில்லை.இனிமேல்தான் வேணுகோபால் விசாரணை ஆணைய அறிக்கை, இதுகுறித்து பொன்னீலன் எழுதிய ‘மறுபக்கம்’ நாவல் இவற்றை பெற்று வாசிக்க வேண்டும்.

 திணிக்கப்பட்ட இந்த இருண்ட காலகட்டத்திற்கு பிறகு  இங்கு வாழும் எல்லா சாதி,மதத்தவர்களும் ஓர் உண்மையை மீட்டுக் கொண்டனர். வாழ்வின் ஒரு நாள் அல்லது அன்றாடமென்பது எல்லா மனிதர்களின் உந்து விசையால் மட்டுமே சுழலும் ஒரு பெரும் சக்கரம் என்பதுதான் அது.

 இரு மாநிலங்களின் உராய்வுப் பகுதியாக இம்மாவட்டம் விளங்கினாலும் தன் மொழிப் பன்மயத்தன்மை மிக இயல்பாகப் பேணி வருகிறது.பெரும்பான்மையாக தமிழும் ஓரங்களில் மலையாளமும் மலை முகடுகளில் காணி மொழியும் மட்டுமே கொண்ட நிலம் குமரி மாவட்டம் என இது நாள் வரையில் நினைத்திருந்ததை மாற்றும் வகையில் வீட்டில் உர்தூ பேசும் தக்னிகளும் வாழ்ந்திருக்கின்றனர் என்றனர் அன்சாரும் கபீர் காக்காவும். தக்னிகள் இந்நிலம் காக்க மார்த்தாண்ட வர்மாவிற்காக போரிட்டு உயிர் நீத்தவர்களின் பின் தோன்றல்கள் என அறிய நேர்ந்தது.

 கோட்டாறும்,திட்டுவிளையும்,ஆளூரும்,தக்கலையும்,திருவிதாங்கோடும்,தேங்காய்ப்பட்டினமும் ஆன்மிகச் செல்வர்களை தன்னகத்தே பொதிந்துள்ள ஊர்கள்.காயல்பட்டினத்து ஆன்மீகத் தொடர்புகளை கோட்டாற்றிலும்,திருவிதாங்கோட்டிலும்,தக்கலையிலும்.,ஆளுரிலும் அறிந்தது மகிழ்வளித்தாலும் மொழியினடிப்படையில் இம்மாவட்டம் பிரிக்கப்பட்டது குறித்த பச்சை உண்மைகளை சந்திக்க நேர்ந்தபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

 இப்பிரிவினைக்கு மூல வித்தாக வெளியில் தமிழ்ப்பற்று எனச் சொல்லிக் கொண்டாலும் உள்ளில் தாணுலிங்க நாடார் x நேசமணி ஆளுமை மோதல்கள், அதிகாரக்கட்டிலுக்காக நாயர் x நாடார் சாதி மேலாதிக்கப் போட்டி ஆகியவைகளும் தலையாயக் காரணிகளாகியிருக்கின்றன.

 இந்த பிரிவினையில் முஸ்லிம்கள்தான் கூடுதல் இழந்திருக்கின்றனர். குமரி மாவட்ட எல்லையோரத்தில் உள்ள மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் கல்வி,பண்பாட்டுத்துறையில் அவர்கள் முன்னர் பெற்று வந்தவற்றை இழந்திருக்கின்றனர். மக்கள் தொகை விகிதாச்சார சதமானம் குறைந்திருக்கிறதுஅது போக இவர்களின் தாய்மொழி உரிமையை பறிக்கும் விதத்தில் தமிழக அரசு கொண்டு வந்த அரசாணையையும் சுட்டிக்காட்டினர்.

 பெரு மத தெய்வங்களைப்போலவே  பெரு மொழி தெய்வங்களும்  மொழி ரீதியான விளிம்பு நிலை சிறுபான்மையினரை பலிகேட்கத்தான் செய்கின்றனர்.

 தோப்பில் முஹம்மது மீறானின் நிலம், திருவிதாங்கூர் அரசாட்சியில் குமரிமக்கள் பெற்ற துயரங்கள், மதத்தைத் தின்ற சாதி, சங்கி சூழ்ச்சிகள்,அர்வி மொழி வாழ்வனுபவங்கள்,கராமாத்துக்கள் என கேட்க பார்க்க எவ்வளவோ இருக்கின்றன குமரி/திருவிதாங்கூர் மண்ணில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Latest Travel Blog
  • மழை ரிஹ்லா –வேணுவனத்தில் ஒரு பகல்

  • மலைக்கடவை-செங்கோட்டை புனலூர் குகை தொடர்வண்டித்தடம்

  • சரந்தீபில் மலையாளக் கதைகள்…நூற்றாண்டுகள் பழமையான சிறீலங்காவில் மலையாள மரபின் வரலாற்றுத் தடயங்கள் தேடி ஒரு பயணம்.

Close
© Copyright 2024. All rights reserved.
Website by Dynamisigns.
Close