காலி மாவட்டத்தில் பார்க்க வேண்டிய தலையாய இடங்களில் இலங்கையின் புகழ் வாய்ந்த தலையாய சிங்கள எழுத்தாளர்களில் ஒருவரான மாடின் விக்கிரமசிங்கே (1890-1976)வின் வீடும், அதையொட்டிய அவரின் நினைவு / நாட்டாரியல் அருங்காட்சியகமும் ஒன்று என சிராஜ் மஷ்ஹூர் சொன்னார்.
ஒரு வழியாக தேடிப்பிடித்துச் சென்றோம். இலங்கையிலும் இந்தியாவைப்போலவே சுற்றுலாத்தலங்களில் வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் கட்டணம் பெறப்படுகிறது. வெளிநாட்டுக்காரர்கள் ஏன் இங்கு வர வேண்டும்?என்பதைப்போலிருக்கிறது இக்கூடுதல் கட்டண வாங்கல்கள்.எனது முந்தைய இலங்கைப் பயணங்களில் இதற்காகவே பல தலங்களை தவிர்க்க வேண்டி வந்திருக்கிறது.
ஒரு கிராமத்தையே அருங்காட்சியகமாக்கி இருக்கிறார்கள். இந்தியாவில் இது போன்று எழுத்தாளர்களுக்கென இவ்வளவு பெரிய அருங்காட்சியகம் இருக்கும் எனத் தோன்றவில்லை.
நிலபுலன்கள் உள்ள பண்ணையார் குடும்பத்தில் பிறந்திருக்கிறார் மாடின் விக்கிரமசிங்கே. இருநூறு வருடங்களுக்கும் மேல் பழமையான அவரது முன்னோர் வீடு. தாவரப் பன்மயத்திற்கு சான்றாக நிற்கும் விதம் விதமான பெரு மரங்கள்.
சிங்கள சமூகத்தின் கலை பண்பாட்டு வாழ்வியலுக்கான பெரிய அருங்காட்சியகம்தான் இது. மாடின் விக்கிரமசிங்கவும் தனக்குப் பிறகு ஒரு வலுவும் செறிவுமான அருங்காட்சியகம் தனக்காக இருக்க வேண்டும் என நினைத்திருப்பதற்கு இவ்வருங்காட்சியகமே சாட்சி. அவரின் பிறப்பையும் வாழ்வின் அந்தரங்க தருணங்களையும் தவிர மற்ற அனைத்து அம்சங்களுடன் புகைப்படங்கள்,பயன்படுத்திய பொருட்கள்,கட்டிடங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இப்படி ஒரு தலையாய இடத்தை தான் வாழும்போதே அவர் உறுதிப்படுத்திக் கொண்டாலும் அவர் இறந்து அரை நூற்றாண்டு ஆகியிருக்கிறது. ஆனாலும் அருங்காட்சியகம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாடின் அருங்காட்சியக அறக்கட்டளைக்கு சமூகம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது.
சிறார் இலக்கியம்,உயிரியல்,நாவல்,சிறுகதை,நாடகம்,இலக்கிய விமர்சனம்,மானிடவியல்,திரிவாக்கம்,தத்துவவியல்,வரலாறு, தன் வரலாறு,படைப்பாளிகளின் வரலாறு,பயணம்,பிற தலைப்புக்கள் என கிட்டத்தட்ட நூறு புத்தகங்களை படைத்தளித்துள்ளார் மாடின் விக்கிரமசிங்கே.இவரின் புனைவுகள் தொலைக்காட்சி தொடர்களாகவும் திரைப்படங்களாகவும் சிங்களத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் மாடின் விக்கிரமசிங்கேவுடன் என்னை தொடர்புபடுத்தியது’மடோல் தூவ’ (அலையாத்தித் தீவு) என்ற சிங்கள திரைப்படம்தான்.வீட்டை விட்டு வெளியேறிய ஒரு குழப்படிச் சிறுவன் தீவுக்கு செல்லும் சாகசக்கதை.
நேர நெருக்கடியால் அருங்காட்சியகத்தை நின்று நிதானித்து உட்கொள்ள முடியாமல் பிறிதொரு தடவை வருவோம் என பேசிக் கொண்டோம். அப்படியானதொரு வாய்ப்புக் கிட்டும்போது போனவிடத்திற்கே திரும்ப செல்வதா? என நண்பரின் ஆட்சேபத்தால் மீள செல்வது கைவிடப்பட்டது.கூட்டுப்பயணங்களில் சில பயன்களும் நல் விளைவுகளும் இருந்தாலும் இது போன்ற இடர்களும் நம் சொந்த விருப்பங்களின் பலியிடுதலும் நடக்கின்றன.அடுத்து இலங்கை வரக் கிடைக்கும்போது தனியாக போக நேர்ந்தாலும் சிக்கலில்லை தேவையான நேரம் இருந்து விட்டு அங்குள்ள ஏகாந்தத்திலும் திளைத்து விட்டுத்தான் திரும்ப வேண்டும் இன்ஷா அல்லாஹ்.
வெளியேறும் வாயிலினருகே மாடின் விக்கிரமசிங்கேவின் புத்தகங்களில் பெரும்பாலானவற்றை சிங்களத்திலும் கொஞ்சத்தை தமிழிலும் ஆங்கிலத்திலுமாக விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.தமிழ் பேச முயன்றுக் கொண்டிருந்த அங்கிருந்த விற்பனையாளரான சிங்கள இளைஞியிடமிருந்து மாடினின் நாவல்களான கிராமப்பிறழ்வு(கம்பெரலிய, ம.மு.உவைஸின் மொழியாக்கம்), மடொல் தீவு(மடோல் தூவ, தமிழில் சுந்தரம் சௌமியன்) ஆகியவற்ரை வாங்கினேன். இவையிரண்டைத் தவிர தமிழில் மற்றவைக் கிட்டவில்லை.
ஆசையும் அவசரமுமாக ம.மு.உவைசினால் மொழியாக்கப்பட்ட ‘கிராமப்பிறழ்வு’ ஐ வாசிக்க எடுத்தேன். இன்று மாடினும் இல்லை.உவைசுமில்லை. பனுவல்கள்தான் எச்சம். மாடின் மேல் ஏதேனும் கோபதாபங்கள் இருந்தால் ம.மு.உவைசு அதை வேறு எப்படியாவது தீர்த்திருக்கலாம். மிகக் கொடூரமான மொழியாக்கம். இராணுவ சங்கேதம் போன்ற நடை. இதற்காக ரொம்பவும் மெனக் கெட்டிருப்பார் போல. யாரும் வாசித்து விடக்கூடாது என்ற முடிவில்தான் ம.மு. இதை மொழியாக்கியிருக்கிறார் என்று குற்றஞ்சாட்டினால் அதை மறுப்பதற்கு ம.முவும் இன்றில்லையே.
ஆன்மாவிற்கு அழிவில்லை என்பதைப்போல ஒரு பனுவலையும் அழிக்க இயலாது. அதனால் இந்த சங்கேத புத்தகத்தை இன்னொருவருக்கு கொடையளிப்பதன் மூலம் இத்துயரத்திலிருந்து விடுபட்டேன். விலை கொடுத்து வாங்கிய துயரம் ஈதலில் தீர்ந்தது.
சுந்தர சௌமியனின் மொழியாக்கத்தில் வந்த மடொல் தீவை மேலிட்டாற் போல புரட்டினேன். அஞ்சுவதற்கு அதில் ஒன்றுமில்லை எனத் தோன்றியது.வாசித்தால்தான் உண்மை நிலவரம் புரியும்.இதிலும் அதே சிக்கல் வந்தால் தீர்வு கைவசம் இருக்கிறது.இலங்கையைச் சேர்ந்த கோதுடைக்கும் கவிஞர் ஒருவருக்கு அப்படியேக் கைமாற்றி விட வேண்டியதுதான்.
மாடின் விக்கிரமசிங்கேவிற்கு ஆய்போவான் சொல்லி விட்டு காலி கோட்டையை நோக்கி கிளம்பினோம். போகிற வழியில் ‘குச்சி மீன்பிடிப்பு’க்கு போக வேண்டும் என்பதை ஒரு ஜென் தியானம் போல சொல்லத் தொடங்கி விட்டார் நவ்ஷாத். குச்சி மீன்பிடிப்பு நடக்கும் கடற்கரையோரம் ஊர்தியை ஒதுக்கினோம்.
அலைவாய்க்கரையில் நடப்பட்ட குச்சிகளில் அமர்ந்து மீன் பிடிப்பதற்காக அவற்றின் குறுக்கே முக்கோண வடிவில் குச்சிகளைக் கட்டியிருந்தார்கள். செஞ்சாயங்கொண்ட மீனவரிடம் பேரம் பேசி ஒரு வழியாக அவரும் கட்டணத்தைக்குறைத்தார்.ஆனாலும் அது கூடுதல்தான் என்பது முடிவில் விளங்கியது.
சிராஜ் மஷ்ஹூரும் ஆசிரும் ஏர்வாடி காதர் மீறான் பாதுஷா நாயகமும் குச்சிக்குள் தூண்டில் கோலுடன் ஏறிக் கொண்டாடினர். தியானித்த நவ்ஷாத் வேடிக்கை மட்டுமே பார்த்தார். மூவரும் ஏறும் சமயத்தில் அம்மீனவர் “இப்பருவத்தில் மீனெல்லாம் கிடைக்காது. ” என ஓடுகிற நீரில் ஒரு நீராய் சொல்லவிழ்த்தார். கண நேர ஏற்றத்துக்கு அதுவும் மீனுமில்லை அதற்கு இவ்வளவு காசா? என மீண்டும் உறுத்தியது.
ஏற்றம் முடிந்து தூண்டில் குச்சியுடன் இறங்கி வந்த ஆசிரைக் கூப்பிட்டு காதுக்குள் பறைந்தேன். குச்சியுடன் ஆசிர் சிறிது தொலைவு ஓட பதறிப்போன மீனவர் பாய்ந்தோடி ஆசிரை மடக்கி அக்குச்சியைக் கைப்பற்றினார். காசு கணக்கு நேராகி விட்டது. கார் பொழிவில் வானம் மங்கியது.எல்லாம் இதமானது.
அன்றைய பகலின் கடைசி செல்லுகை காலியிலுள்ள டச்சுக் கோட்டை. இலங்கையின் மீதான காலனியாதிக்க நினைவுகள்,தடங்களின் பளபள எச்சம் எனலாம். கோட்டையின் வீதிகளில் நடப்பதும் கொச்சியின் கோட்டைப்பகுதிகளில் நடப்பதும் அய்ரோப்பிய நிலத்துக்குள் நாம் நழுவி விழுந்து விட்டோமோ? எனத் தோன்றும். கொச்சியும் காலியும் வேறில்லை எனத்தோன்றிக் கொண்டேயிருந்தது.
காலி தேசிய நூதனசாலையும், காலி தேசிய சமுத்திர நூதனசாலையும்(அருங்காட்சியகத்தை இங்கு நூதனசாலை என்றே அழைக்கின்றனர்) தவற விடக்கூடாத இடங்கள் என்பேன். மாடின் விக்கிரமசிங்க நூதனசாலை,கொழும்பு தேசிய நூதனசாலைகளும் இப்பட்டியலில் அடக்கம். அருங்காட்சியக விடயத்தில் இலங்கை இந்தியாவை விட பல படிகள் மேல்தான்.இந்திய அருங்காட்சியகங்களுக்குள் செல்லும்போது ஒரு பாழ் மணத்தை உணர்வதை தவிர்க்கவே இயலுவதில்லை.
இலங்கையின் அருங்காட்சியகங்களில் தொல் இந்திய உறவுகளை,வட மொழி தாக்கங்களை விரிவாகவே இடம் பெறச் செய்துள்ளனர்.இன மத மொழி பன்மயத்துக்கும் இடமளித்துள்ளது வரவேற்பிற்கும் பாராட்டிற்குமுரியது.
காலி கோட்டைக்குள் முஸ்லிம்கள் கணிசமான அளவு வசிக்கின்றனர். ஷாதுலிய்யா தரீக்காவினுடைய பெண்கள் ஜாவியாவைக் கண்டது வியப்பாகவும் மகிழ்வளிப்பதாகவும் இருந்தது.நாங்கள் போன சமயம் அங்கு ஹல்கா நடைபெற்றுக் கொண்டிருந்தது. எங்களுக்கும் சில வெளியீடுகளைத் தந்தனர். நடுத்தர வயதைக் கடந்தவர்களே கூடுதல். எல்லோரும் நல்ல ஆங்கிலத்தில் பேசினர்.
வெண்ணிறத்துடன் கச்சிதமான தோற்றமும் அழகிய வேலைப்பாடுகளுங் கொண்ட மீறான் ஜுமுஆ மஸ்ஜிதில் மஃரிப் இஷா தொழுகைகளை ஜம்உ கஸ்ரு செய்து விட்டு உணவகங்களைத் தேடினோம். எல்லா இடங்களிலும் கடும் விலை. ஒரு இந்திய உணவகத்திற்குள் நுழைந்தோம். நாங்கள் போன சமயம் வார இறுதி நாட்கள் என்பதால் வாடிக்கையாளர்களின் கடுங்கூட்டம். குறைவான பணியாளர்கள். வேலைப்பளுவில் தடுமாறுகின்றனர். மோசமான ஊழியத்துடன்அரை குறை வயிறும் கசந்த நினைவுமாக கோட்டைக்கு வெளியிலுள்ள கடையொன்றுக்குப் போய் தேநீரும் சிறுகடியுமாக வயிற்றை ஆற்றிக் கொண்டோம்.
அன்றைய நாளின் நிறைவாக காலி நகருக்கருகிலுள்ள கிந்தொட்ட பள்ளிவாசலில் இரவு தங்கல். சில மீட்டர்கள் தொலைவில் இருல் திரைக்குள் இந்தியப் பெருங்கடல். இரவு முழுக்க காற்றுடன் தூறிக் கொண்டிருந்த மழையுடன் கூண்டிலிட்ட சிங்கம் போல ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பெருங்கடலுமாக நிறைந்திருந்தது இரவு. பெருமிருப்பை ஓசையின் மூலமே அறிய முடியுமான பரவசம்.
அடுத்த நாள் விடிகாலையில் சுபஹ் தொழுகையை ஜமாஅத்துடன் தொழச்சென்றோம். அனைவருக்கும் வெறுந்தேயிலை என்ற பிளைன் ரீயை ஊற்றித் தந்தனர் ஜமாஅத்தினர். சுபஹ் தொழுகையாளிகளை கண்ணியப்படுத்தும் நடைமுறை.
கொழும்பு புறக்கோட்டையின் பங்சல் வீதியிலுள்ள நிஜாமிய்யா உணவகத்திலும் இந்த சுபஹ் தேநீர் உபசரிப்பு வேறு முறையில் உண்டு.அருகிலுள்ள சம்மாங்கோட்டு பள்ளிவாசலில் சுபஹ் ஜமாஅத் முடிந்த பிறகுதான் இவர்கள் கடையையே திறப்பர்.அதிலிருந்து கதிரவன் உதிக்கும் வரை தேநீரருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு முழுக் குவளை தேநீரளிக்கப்படும். நான் இப்படிக் கண்டது பத்து வருடங்களுக்கு முன்னர். இன்றும் அந்நடைமுறை உண்டா? என்பதை அறிந்தவர்கள் சொல்லலாம்.
தல்பே கடற்கரையில் குளியலைப் போடப் போகும் வழியில் கிந்தொட்டையிலுள்ள மாப்பிள்ளை லெப்பை ஆலிமின் சீடரொருவர் ஏற்படுத்திய கான்காஹ்வை பார்வையிட்டு விட்டு பசியாறலாம் எனத் திட்டம்.
ஹுஸைன் வலிய்யுல்லாஹ் என்றழைக்கப்படும் மாப்பிள்ளை லெப்பை ஆலிமின் அணுக்க சீடர்களில் ஒருவரால் நிறுவப்பட்ட கான்காஹ் அல்லது தைக்காதான் இது.
நாங்கள் உள்ளே நுழைந்தபோது அங்கு அனைவரும் விருந்துண்டுக் கொண்டிருந்தனர்.எங்களனைவரையும் வற்புறுத்தி உண்ண வைத்தனர். இடியாப்பம்,புட்டு,ரொட்டி,இறைச்சி,இனிப்பு சவ்வரிசிக் கஞ்சி எனஅடிபொழி சாப்பாடு.
நிர்வாகிகளிடம் பேசியபோது தற்சமயம் இத்தைக்காவானது மறைந்த கீழக்கரை தைக்கா சுஐப் ஆலிமின் குடும்பத்தாரின் பராமரிப்பில் இருப்பதாகக் கூறினர்.தைக்கா சுஐப் ஆலிம் அவர்கள் மாப்பிள்ளை லெப்பை ஆலிமின் ஆண் தலைமுறையில் வருபவர்.நெடும் மரபின் தொடர்ச்சி.
ஹூஸைன் வலிய்யுல்லாஹ்வின் அடக்கத்தலமுள்ள அறையின் சுவற்றில் “2004 ஆழிப்பேரலையில் கடல் நீர் நின்ற மட்டம்” என பொருள்படும்படி எழுதியிருந்தார்கள். கிட்டத்தட்ட பன்னிரண்டு அடி உயரமிருக்கும். தலைக்கு மேல் நீரினாலான கனசதுரமொன்று திரண்டது.உப்பின் கரிப்பும் சாம்பல் நிறமுமாக மூச்சு முட்டியது.இலங்கையை ஆழிப்பேரலை தாக்கிய நேரத்தில் தென்னிலங்கையின் கடற்கரையோர சாலையில்தான் பயணித்துக் கொண்டிருந்தேன்.பேரலைகளுக்கு அஞ்சி கிராமம் கிராமமாக ஓடிய வாழ்வின் இறுதிக்கணங்களோ என நினைக்க வைத்த மணித்துளிகள் மீளவும் தலைக்குள் குமிழிட்டன.
தல்பே கடலில் குளித்து மீளும் வரைக்கும் ஆழிப்பேரலை நினைவுகளை அங்குள்ள உப்பு நுரைக்கும் அலைகள் நினைவூட்டிக் கொண்டேயிருந்தன.
மதியத்தில் பேருவளையில் விருந்து உபசரித்தார் ஏ.ஜே.எம்.ஸனீர் சேர் எனப்படும் அப்தல் ஜப்பார் முஹம்மத் ஸனீர். இலங்கையின் காந்தி என நான் செல்லமாக அழைக்கும் ஸனீர் சேர் கலைத்துறையில் பட்டம் பெற்று உள்நாட்டு வங்கியில் பணியாற்றத் தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே தன் ஆன்மா அதில் நிலையடையாததை உண்ர்ந்து வெளியேறினார்.
அல்-அக்கில் புலமைப்பரிசில் நிதியம், ஸய்யித் இப்ராஹீம் நினைவு புலமைப்பரிசில், ஹனீமா அக்கடமியா நிறுவனங்களின் வழியாக முஸ்லிம்களுக்கும் அல்லாதவர்களுக்கும் கல்வி நிதி நல்கும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டே சமகால அறபு இஸ்லாமிய உலகின் சிந்தனைகளை தனது ஃப்யூஜின் டெக்ஸ்ட் பதிப்பகத்தின் வழியாக தமிழுக்கு அளித்து வருவதிலும் முந்துபவர் ஸனீர் சேர். இதுதான் இவரது வாழ்நாள் பணி. ஸனீர் சேர் கண்டி மாவட்டம் கம்பளையை பிறப்பிடமாகக் கொண்டு தென்னிலங்கை நகரான தர்கா நகரில் வாசம்.இளம் பருவத்திலேயே மனைவியை இழந்தாலும் அத்துயரத்தை தன் சொந்த,பொது வாழ்வில் நிழலிட விடாதவர்.
இஸ்லாமியசட்டவியல்,குடும்பவியல்,பொருளாதாரம்,சமுகவியல்,ஆன்மீகம் என இதுவரை51 தலைப்புகளில் மொழியாக்கப்புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார். இதில் சிலவற்றை அவரும் ஏனையவற்றை தேர்ந்த மொழியாக்குவோர்களின் வழியாகவும் பதிப்பித்திருக்கிறார்.அவரின் மொழியாக்கப் படைப்புக்களில் தலையாயது எது என என்னிடம் கேட்டால் மார்டின் லிங்ஸின் மூலாதார நூல்களின் அடிப்படையில் முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்வு, யூஸுப் அல் கர்ளாவியின் நிராகரிப்புக்கும் தீவிரவாதத்துக்கும் மத்தியில் இஸ்லாமிய எழுச்சிஆகிய நூல்களை சொல்வேன். மொத்த ஆக்கங்களுமே தமிழ் கூறும் இஸ்லாமிய உலகு இதுவரை கண்டிராதவை.தெளித்தெடுக்கப்பட்டவை.
ஸனீர் சேர் பிறந்ததுதான் இலங்கை.ஜெயகாந்தன் உள்ளிட்ட தமிழ்நாட்டு தமிழ்,தமிழ் இஸ்லாமிய இலக்கிய முன்னோடிகளுடனும் ஆளுமைகளுடனும் நெருங்கிய உறவு கொண்டவர். இந்த வரலாற்றை ஆவணப்படுத்த தமிழ்நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவர்.
இரு பத்தாண்டுகளாக அவருடன் நட்பு. நட்பென்றால் சம வயதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையில்லைதானே. எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்நாள் இளைஞருக்கு நட்பின் வட்டத்திற்கு வயதின் வரம்புகள் இல்லை.அவருடைய வாழ்க்கை முறையை குண நலன்களை தனியாகவே எழுத வேண்டும்.அதனால்தான் இந்த வயதிலும் இயலுமையையும் சீரான வாழ்க்கையயும் அல்லாஹ் அவருக்கு கொடையளித்திருக்கிறான் போலும்.நான் ஒருவரைப்பார்த்து பொறாமையில் கண்ணீர் சிந்தியதென்றால் அது இவரினால்தான்.
இரு வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் இணைந்து அவரின் விரிவான நேர்காணலொன்றை ஒளிப்பதிவு செய்தோம். நண்பரின் கவனமின்மையால் அது காற்றில் கரைந்து விட்டது. அந்த குற்றவுணர்ச்சியில்தான் அன்னாரைப்பற்றி கொஞ்சம் விரிவாக இங்கு எழுத நேர்ந்தது.