சென்னை புத்தகக் காட்சி 2024இன் வேலைகளுக்கு நடுவேதான் அவ்வழைப்பு வந்தது. அழைத்தவர் தொல்லியல் துறை மாணவரும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் (எஸ் ஐ ஓ) மாநிலக் கல்வி வளாகப் பொறுப்பாளருமான ரஹ்மத்துல்லாஹ்.
திருச்சிராப்பள்ளி இனாம்குளத்தூரில் உள்ள அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரியில் ‘களம்’ வாசிப்பு வட்டம் ஒருங்கிணைக்கும் மாதாந்திரக் கருத்தரங்கின் ஜனவரி மாத அரங்கில் பயண இலக்கியம் குறித்து ஒரு மணி நேரம் உரையாடவியலுமா? எனக் கேட்டார்.
பிடித்தவற்றைச் செய்வதற்கு நிபந்தனைகள் ஒன்றும் தேவையில்லைதானே. இராத்தூக்கம் கெடாமலிருப்பதற்காக ஒருநாள் முற்கூட்டியே தொடர்வண்டியில் திருச்சிராப்பள்ளி சென்றேன். நண்பரும் செயற்பாட்டாளருமான ஃபக்கீரும் “நீங்கள் முன்கூட்டியே வந்தால் பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது” என்றார்.
ஃபக்கீர் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் மேனாள் தலைவரும் தற்சமயம் இலக்கியப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருபவருமாவார். பயணங்களின் தீராவிரும்பி. நான் அவரை அழைத்தபோது “நான் உங்களுடன்தான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்” என்றார். ‘தோந்நிய யாத்ரா’ பயண நூலை வாசித்திருந்திருக்கிறார்.
திருச்சிராப்பள்ளி ஒன்றும் எனக்குப் புதிய நகரமில்லைதான். தொழில் நிமித்தமாக மூன்று பத்தாண்டுகள் தொடர்புள்ள இடம். சேருமிடம், புறப்படுமிடத்தைத் தவிர அத்தம் அறியாத ஓட்டம்.
நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்னதாகவே எவ்வித இறுக்க அட்டவணையுமில்லாமல் திருச்சிராப்பள்ளிக்குக் கொண்டு வந்துவிட்டது நண்பர் ஃபக்கீரின் இருப்புதான். நகரமயமாக்கலில் தன் கிராமியத்தை இழந்துவிடாமல் பரபரப்புக்கும் ஆளாகாமலிருக்கும் மைய நகரம். தெளிவான தமிழ் உச்சரிப்பு. தென் மாவட்டங்களுக்கே உரிய தனித்தன்மையான மொழிகளின் இழுப்பும் பிடிப்பும் இங்கில்லை.
சிறிய ஓய்விற்குப் பிறகு நத்ஹர் வலீ தர்ஹாவிற்குக் கிளம்பினோம். தமிழகத்தின் மூத்த இறைநேசரும் ஆயிரத்து நூறு வருடங்களுக்கு முற்பட்டவருமான நத்ஹர் வலீ அவர்கள் மிஸ்ரு எனப்படும் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர். இறைப்பணிக்காக கலந்தர் எனப்படும் அலைகுடியினர் தொள்ளாயிரம் பேரை தன்னுடன் அழைத்துக்கொண்டு பல இடங்களுக்கு சென்ற பின் இறுதியில் திருச்சிராப்பள்ளியில் வந்து நிறைந்துள்ளார்கள். கறாமாத்துகள் பல நிகழ்த்தியவர். காவிரியில் வெள்ளம் புரண்டு ஓடி அழிவு உண்டாகவே கரை மீதிருந்த கற்பாறையில் குச்சியால் ஓங்கி அடித்துள்ளார். அது பறை முழக்கமாகி, பின் பேரொலியாகப் பெருகி ஆற்று வெள்ளம் மட்டுப்பட்டிருக்கிறது என்றதொரு தொன்மம் வழங்கப்படுகிறது.
அந்நிகழ்விற்குப் பிறகு நத்ஹர் வலீயின் முன்னொட்டாக தப்லே ஆலம் (உலகப் பறை) என்ற பட்டம் வந்து சேர்ந்தது. அன்னாரின் பெயரால் நத்ஹர் பாஹட் (நத்ஹர் குன்று) எனப்படும் கடல் தீவு குன்றொன்று கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்திலுள்ள கடற்கரை நகரமான பட்கல் கடலில் (அறபிக்கடல்) கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர் தொலைவில் கடலின் மரு போல தோற்றமளிக்கிறது. இக்குன்றில் நத்ஹர் வலீயும் அவரது கலந்தர் சீடர்களும் கல்வத்தில் இருந்திருக்கின்றனர். சிறிதுகாலமாக இந்துக்கள் இங்குப் பூஜை கொண்டாட்டங்கள் செய்வதுடன் இதை நேத்ரானித் தீவு எனப் புதிய பெயரிட்டு அழைக்கின்றனர்.
நத்ஹர் வலீ தர்ஹாவிற்கு நாங்கள் போன சமயத்தில் அன்னாரின் மண்ணறை இருக்கும் அறையை மூடி வைத்திருந்தனர். மஃரிபிற்குப் பிறகுதான் திறப்பு. கேரளத்து மத்ரசா மாணவர்களும் ஆசிரியர்களுமாய் நிறைய பேர் வந்திருந்தனர். ஆற அமர இருந்து காண இன்னொரு சமயம் வர வேண்டும்.
மாலை நேரமானாலும் திருச்சிராப்பள்ளியின் நடுப்பகுதியில் அத்தனை போக்குவரத்து நெரிசலில்லை. மெயின் கார்டுகேட் அருகிலுள்ள கிறித்தவ ஆலயமொன்றின் கட்டிடக்கலை ஈர்க்க உள்ளே சென்றோம். லூர்து மாதா தேவாலயம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரெஞ்சு கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டது.
அழகிய கண்ணாடி ஓவியங்கள் அரை வெளிச்சத்தில் துலங்கின. தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்கப்படும் ஆலயத்தின் வெளி முற்றத்தில் நல்ல காற்று. சிறிதுநேரம் அமர்ந்துவிட்டுப் போகலாம் எனத் தோன்றியது. நேர அவகாசமில்லை என்பதால் சாத்தியப்படவில்லை. பக்தர்கள் அமர்ந்தும் மண்டியிட்டும் பிரார்த்தனைகளில் ஆழ்ந்திருந்தனர். ஆலயத்திலிருந்து நீண்டு கிடக்கும் புனித ஜோஸஃப் கல்லூரி வளாகம். கல்லூரி விடுதி தொகுதிகளுக்கு நடுவே இழுப்பறை போல முஸ்லிம் மகான் ஒருவரின் நினைவிடம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் உள்ளூர் முஸ்லிம் செல்வக் குடும்பமொன்றின் பெருஞ்சொத்தை தனியொருவர் வெள்ளையர்களிடம் அற்பப் பணத்திற்கு விற்றிருக்கிறார். அந்த மலிவான கைமாறலின் நீங்கா சாட்சிதான் இத்தர்கா. வெள்ளையர்கள் இதனை இடித்து நிரவ முனைந்தபோது அடக்கத்தலத்திலிருந்து இரத்தம் பீறிட்டிருக்கிறது. தங்கடங்களில் அருவ கரங்கள் எல்லா வடிவத்திலும் எழத்தான் செய்யும். இதுபோன்ற தொன்மங்களை நாடு முழுக்க கேட்கவியலும். வரலாற்றின் காவல் விலங்காக நிற்கும் தொன்மங்கள்.
தேநீருக்கான விழைவு உந்த ‘மணியடித்தான்’ கடைக்குள் நுழைந்தோம். சுடு, குளிர்க் குடிப்புகள், நொறுவை வகைகள். சேவையில் நிறைவென்றால் மணி ஒலித்துத் தெரிவிக்க வசதியாக உலோக மணியொன்று தொங்குகிறது. அதனருகிலேயே இக்கடை பற்றிச் செய்தித்தாள்களில் வந்தவற்றை பெரிதாக்கி ஒட்டி வைத்துள்ளார் உரிமையாளர். வாய் வழி மவுசே சிறந்த வணிக ஈர்ப்பாளன். புதிய புதிய ஆட்களை மணி இழுத்து வருகிறது. மணி, தேநீர் எல்லாம் சரிதான். முதலாளியின் குணம் போதாது. வணிக உத்தியில் தேர்ந்த உரத்த கிழவன். ஒன்றுக்கு மூன்றாக மணியடித்துவிட்டுப் பழைமையான கல் பள்ளிவாசலைப் பார்க்கக் கிளம்பினோம்.
திருச்சிராப்பள்ளி கோட்டைத் தொடர்வண்டி நிலையத்தினருகில் எட்டாம் நூற்றாண்டினுடையது எனச் சொல்லப்படும் கல் பள்ளிவாசல் நிற்கிறது. நாங்கள் போயிருந்தபோது அஸர் தொழுகைக்கான நேரம். ஆறு தூண்களுடைய பள்ளிவாசலின் கீழ் பகுதியைக் கொஞ்சம் விரிவுபடுத்தியுள்ளனர். மற்றபடி பள்ளிவாயில் பழைய கருங்கல் அமைப்பில் வலுவாக உள்ளது. இதன் காலம் எட்டாம் நூற்றாண்டு என்பதற்கு சாட்சியாக மிஹ்ராபிற்கு மேல் அறபெழுத்துகளைக்கொண்ட கல்வெட்டைக் காட்டுகின்றனர். எனினும் இதில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இந்தக் கல்வெட்டில் உள்ளது எட்டாம் நூற்றாண்டின் அறபி எழுத்துரு என உரிமைக் கோரப்பட்டாலும் அதில் இருப்பது நவீன அறபு எழுத்துரு என்பதால் இதனைத் தமிழ்நாட்டின் முதல் பள்ளிவாயில் எனக் கூறவியலாது என ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். அத்துடன் இங்குக் காணப்படும் பாரசீக வளைவுகளின் வயதும் ஐந்நூறு வருடங்கள்தான் எனவும் கருத்துண்டு. முழுமையான ஆய்வில்தான் உண்மை துலங்கும்.
நாங்கள் இப்பள்ளியைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நபித்தோழர்கள் இங்கு வந்துள்ளார்கள் அது இது என நிறைய சரக்குகளை அவிழ்த்துவிட்டார் அங்கிருந்த ஒருவர். ஒவ்வொரு ஊரும் தனக்குள்ள கதைகளைச் சொல்லலாம். சான்றிருக்கும் தர்க்கப் பொருத்தமுள்ள கதைகளை சொல்லும்வரைக்கும் சரி. ஊர்ப்பெருமையை நிலை நாட்ட இல்லாத கதைகளையும் அவிழ்த்துவிட்டால் என்ன செய்வது? வரலாற்றின் உரைக்கல்லில் உரைக்கும்போது பானை சிதறியல்லவா போகும்?
தமிழ்நாட்டின் முஸ்லிம் பெரும்பான்மை ஊர்கள் சிலவற்றில் தங்களுடையதுதான் முதல் பள்ளிவாசல் என்ற கோரிக்கைகள் எழுந்தபடி இருக்கின்றன. ஏதாவது ஒன்று மட்டுமேதான் முதலாவதாக இருக்க முடியும் என்பதை இவர்களுக்கு யார் புரிய வைப்பது?
மலைக்கோட்டை தெருக்கள் குறுகலானவை என்பதால் போக்குவரத்து நெரிசல். நெருக்கமான வீடுகளுடைய சந்துக்குள் நெளிந்து நுழைந்த ஃபக்கீரின் பைக், வெட்டென இடப்பக்கம் திரும்பி நின்றது. நம் முகத்திற்கு நேரே செவ்வெளியொன்று திறக்கிறது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த மலைக்கோட்டை கீழ்க்குடைவரைக்கோயிலும் அதன் திடலும். பல்லவர் அல்லது பாண்டியர் காலத்தியது என்ற தகவல் மயக்கமும் உள்ளது.
மேலே உள்ள குடைவரைக்கோயில் சைவ மதப் போதகரான திருநாவுக்கரசர் என்ற அப்பரினால் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமண மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு மாற்றப்பட்டதின் சாட்சி.
தொல்லியல் துறையின் மும்மொழி அறிவிப்புப் பலகையுடன் காவலாளியின் வீடும் தனியேதான் நின்றன. பள்ளி மாணவனொருவன் மட்டும் அமர்ந்திருந்தான். எங்களின் வரவு அவனின் ஏகாந்தத்தைக் கலைத்திருக்க வேண்டும், கிளம்பிவிட்டான். யாரும் யாரையும் உள்ளே விடாத, அவரவர்களுக்கு மட்டுமே உரித்தான அந்தரங்கத் திடல் அல்லவா ஏகாந்தம்? பெண் தெய்வம் கொற்றவைக்குத் தன் கழுத்தை வாளால் அறுத்துத் தலையைப் படைக்கும் பக்தனின் அரிகண்டச் சிற்பம். வாழும் இலக்கிய அரிகண்டமொருவர் எவ்வித மெனக்கெடலுமில்லாமல் தன்னில் தானே வந்து போனார்.

எதிரும் புதிருமாக ஆறடிச் சிற்பங்கள் நிரந்தரப் பாவனைகளுடன் உறைந்திருக்கின்றன. பூத கணங்களுடன் மலையையும் தாங்கி நிற்கும் வடித்தெடுத்த கீழ்க்குடைவரைக் கோயிலின் எண்கோண தூண்கள் நான்கும் கல் மக்ரூன்கள்.
இதன் மீது ஆயிரத்தி ஐந்நூறு வருடங்கள் நத்தையாகி ஊர்ந்திருக்கின்றன. தண்மை,வெம்மை, மறைவு, உதிப்பு, அல், பகல் என எத்தனை காலங்கள் எத்தனை பருவங்கள், எத்தனை வயதுகள், எத்தனை மனங்கள் எத்தனை மணிமுடிகள்? இதன் வெளியில் ஒடுங்கிக் கிடக்கின்றன. சிற்ப அழகியலின் உள் ஒலிப்பாய் கொற்றம், அதிகாரப் பகட்டு, உழைப்புச் சுரண்டல்களின் நெடி. எதனின் தொடர்ச்சியாக எது? ஒன்றின் சாட்சியாக மற்றொன்று. விடைகளின் இன்மையில் தவித்தலையும் வினாக்களின் வெளி.
மஃரிப்வேளை வரவும் சவுக் பள்ளி எனப்படும் நவாப் கட்டிய பள்ளிவாசலுக்குச் சென்றோம். திருச்சிராப்பள்ளியை ஆண்ட ஏழு ஆட்சியாளர்களில் ஆற்காடு நவாபுகளும் அடங்குவர். பதினேழாம் நூற்றாண்டின் சில வருடங்கள் அவர்களின் ஆட்சி நடந்திருக்கின்றது. அப்போது கட்டப்பட்ட பள்ளிவாயில். குளத்திற்கும் தடாகத்திற்கும் இடைப்பட்ட ஹவ்ழ். அதன் கருத்த பரப்பின் மேல் இருளின் வரவு. அத்திரையில் மனிதத்தலைகள் அலைந்துகொண்டிருந்தன. திடலையொத்த வெளிப்பள்ளி கருங்கற்களிலான உள் பள்ளிவாசலின் தோரண முகப்பாகி கிடந்தது. முப்பூதங்களின் இணைவு.
இரவுணவிற்குத் திருவரங்கம் சென்றோம். நூற்றியெட்டு வைணவத்தலங்களில் தலையாயத் தலம். திருவரங்கம் என்றவுடன் நினைவிற்கு வருவன இரு நிகழ்வுகள். ஒன்று 1993ஆம் ஆண்டு மக்கள் கலை இலக்கிய கழகம் நடத்திய கருவறை நுழைவுப் போராட்டம். பிறிதொன்று 1987ஆம் ஆண்டு நடந்த இராஜகோபுர சம்ப்ரோக்ஷண நிகழ்வு.
சம்ப்ரோக்ஷண நிகழ்விற்கு அன்றைய முதல்வர் எம்ஜிஆரும் பங்கேற்பதாக இருந்தது. குறித்த நேரத்திற்குள் முதல்வர் வராத கோபத்தில் அச்சமயம் ஜீயராக இருந்த கோபுர ஜீயர் என்ற அழகிய சிங்கர், முதல்வருக்கு அணிவிக்க வைக்கப்பட்டிருந்த மாலையை அருகில் நின்ற காவலருக்கு ‘இப்போ நீதான் எம்ஜியார்‘ எனக் கூறி அணிவித்திருக்கிறார். எம்ஜிஆர் இதுபோன்ற அவமதிப்புகளில் எப்படி எதிர்வினையாற்றுவார் என்பது அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும். ஜீயரும் தீண்ட முடியாத இடத்தில் உள்ளவர் என்பதால் வினையும் எதிர்வினையும் சமனாகிவிட்டன. இப்பொழுதும் உள்ளில் அது ஒரு காட்சியாக விரிகிறது.
மேலங்கியில்லாத பட்டர்கள் அங்குமிங்கும் உலவித்திரிய கோயிலின் பிரகாரங்கள் அந்நேரத்திலும் ஆள் நெரிசலாகத்தான் இருந்தன. மணீஸ் கஃபேயில் உணவு சிறப்பு என ஃபக்கீர் கைகாட்டவும் அங்குச் சென்றோம். கழுவி துடைத்து மூடிக்கொண்டிருந்தனர். 1983, 2007களில் உள்ள விலைப்பட்டியலை சமையற்கூடத்தில் மாட்டியிருந்தனர். மற்ற கடைகளை ஒப்பிடுகையில் இங்குள்ள பலகாரங்கள் விலை கூடுதல்தான். 1987இல் இருபத்தைந்து காசுகள் என விற்கப்பட்ட இட்லி 2007இல் ஐந்து ரூபாய்க்கு விற்றிருக்கிறது. இருபத்து நான்கு வருடங்களில் இருபது மடங்கு விலை உயர்வு.
காவிரிப் பாலம் கடந்து திருச்சிராப்பள்ளி நகரத்திற்குள் மீண்டோம். நதியின் தழுவலினால் காற்றுக்குள் தண்மை ஏறியிருந்தது. பாலத்தின் மருங்குகளில் ஆட்கள் பேசித் தீர்த்தபடி சாவகாசமாக அமர்ந்திருந்தனர். ஆயில் பராத்தாவுடன் அன்றைய இராப்போசனம் கழிந்தது.
கனவுகளின் குறுக்கீடு இல்லாத நல்லதோர் உறக்கம். பயண அலுப்பும் ஒரு துணை. சுபஹ் தொழுகைக்குப் பிறகு பள்ளியில் நடத்திய குர்ஆன் தர்ஸில் படைப்புகளுக்கு அஞ்சாமை குறித்த பாடம் அருமை. படைத்தவனோடு ஆழ்ந்த உறவைப் பேணுபவன் படைப்புகளுக்கு அஞ்ச வேண்டியதில்லை என்பதுதான் கரு. ஆன்மச் சோர்வை நீக்கும் நல்லுரை.
தொழுகைக்குப் பின்னரான தேநீர் கடை செல்லல். சூடான இனிப்பு போண்டாவும் திகைந்த தேயிலையும் நல்ல மனிதர்களைக் கொண்டு வரும் போல. இளைஞர்கள் தொடங்கி முதியோர் வரை பலதரப்பட்ட வாழ்க்கை வாய்த்த மனிதர்கள். எண்பது வருடங்களுக்கும் மேல் பழமையான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் உறுப்பினர்கள். விதைத்துணுக்குகளைச் சுமந்து செல்லும் காற்றைப் போல வாழ்வின் இலக்கைப் பாரமின்றி இயல்பாகக் கொண்டு செல்லும் மனிதர்களுடனான கண்டுமூட்டல்கள், அளவளாவல்கள் எனக் காலைப்பொழுது இனிமையாகியது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மீது எனக்கு நேரான விமர்சனங்கள் உண்டு. ஜமாஅத் தனது பணியின் வீச்சை ஆழ அகலப்படுத்தியிருந்தால் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் ஆன்மிக சமூக அரசியல் வாழ்வில் நடந்தேறிய சில பல அபத்தங்கள் நிகழ்ந்திருக்காது. காலத்தைத் திருப்பியா கொண்டு வர இயலும்?
விமர்சனங்களுக்கு அப்பால் எல்லா வயது ஆண், பெண்டிர் இடையே கல்லின் மீது ஊரும் நீரொழுக்கு போல ஊர்ந்து ஊர்ந்து நல்ல பல மனிதர்களை உருவாக்கிக்கொண்டேயிருக்கிறது ஜமாஅத். விண்மீன்களை கைவிளக்காக்கி நடக்கும் எளிய அரிய மனிதர்கள்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தை கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக அறிபவன் என்ற முறையில் அவர்களின் பணி தமிழகத்தில் வெற்றிகரமாக மக்கள்மயப்பட்ட இடமாக திருச்சிராப்பள்ளியைக் காண்கிறேன். கேரளத்தில் அவர்கள் அடைந்த வெற்றி கண்கூடானது. பாரியது. தமிழகத்தில் அவர்கள் கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கலாம். அதை நான் நேரில் கண்டதில்லை. திருச்சிராப்பள்ளியில்தான் எனது முதல் தரிசனம்.
அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரியில் எனக்கான அமர்வின் நேரத்தை காலையிலிருந்து மதியம் இரண்டு மணிக்கு என மாற்றிவிட்டதால் அதற்குள் ஐந்து விடயங்களைச் செய்து முடிப்பது எனத் தீர்மானித்து சுற்றத் தொடங்கினோம். பாலக்கரை சாலையில் உள்ள கஞ்ஜே ஷஹூத் மைய்யித்துக்காட்டிற்கு பழைய மீஸான்களைத் தேடிச் சென்றோம். எங்கள் வேலையை ஒற்றை வரியில் எளிதாக்கிவிட்டார் அதன் காவலாளி. “பழசெல்லாத்தயும் எடுத்தாச்சு.’’ எனினும் வந்த நடை வீணாகவில்லை. இறப்பின் மடியில் உறைந்து வாழும் காதல் வரலாறொன்றைச் சொன்னார் ஃபக்கீர். குறித்துக்கொண்டேன். வாய்ப்பு கிட்டினால் அவற்றைப் புனைவுகளுக்குள் எழுப்ப வேண்டும். இன்ஷா அல்லாஹ்!
காவிரியில் நனையாத சதுரத்தினால் திருச்சிராப்பள்ளியை அறிந்துணரவியலாது. திருவரங்கத்தில் உள்ள காவிரிக்கரையின் தடுப்பணை மதகிலிருந்து சமமட்டத்தில் நீர் வெளியேறிக்கொண்டிருக்க பாசி மண்டிய தரைகளில் சாதனை நடை நடந்து மதகை எட்டினோம். நீர்வரத்துக் கூடுதலான காலங்களில் படித்துறைகளில்கூட இறங்க முடியாது. மதகினருகில் நின்று தலையை நிமிர்த்தி பார்த்தால் அகண்ட காவிரியின் பரப்பு மனத்தில் கொஞ்சம் சிலிர்ப்புடன் மிரட்சியையும் கிளப்பியது. கண்களுக்குள்ளும் தலைக்குள்ளும் அடங்க மறுக்கும் காட்சி. காட்டு யானையின் புள்ளிகளேற்ற மடல் காது நிழலில் நிற்பதைப்போலத் தோன்றல்.
எங்கள் தாமிரபரணியைப் போல காவிரியில்லை. இதன் நீரில் இளமையும் சுவையுமில்லை. துளி கடினம் என நாக்கு பட்டறிந்தது. குளித்துக் கரையேறிக்கொண்டிருந்த சந்நியாசத் தோற்றங்கொண்ட ஒருவர் அங்குச் சிதறிக்கிடந்த மனிதச் சாம்பலிருந்த மண்குட உடைவுகளையும் பிய்ந்த மாலைகளையும் பார்த்து “இவனுங்க ஒரு இடமும் விடுறதில்ல” எனச் சலித்துக்கொண்டார்.
குளித்துக் கரையேறி இரவில் தவறவிட்ட மணீஸ் கஃபேக்குச் சென்றோம். காத்திருப்போர் அமர்ந்திருப்போர் எனப் பெருங்கூட்டம். ‘பொறுமை உடையவர்களுக்கு மட்டும் அனுமதி’ என்ற அறிவிப்பை விலைப்பட்டியலின் மேல் எழுதி வைத்திருந்தார்கள். உண்டு முடித்துவிட்டு அக்கார அடிசில் கேட்டோம். இப்போதைக்கு இல்லை எனக் கையாட்டினார்கள்.
முந்திய இரவு இங்குள்ள இனிப்பு கடையில் இப்பெயர் கேட்டதிலிருந்து தலைக்குள் ஏறிவிட்டது. கருப்பட்டி சவ்வரிசிக்கஞ்சி, பாயசம், பிரதமன், கீர் இவற்றின் உபாசகன் நான். தினை அரிசி, பாசிப் பருப்புப் பால், வெல்லம், நெய், முந்திரிப்பருப்பு, உலர்த்திராட்சை, ஏலக்காயின் கலவையில் மணக்கும் அக்கார அடிசிலை இப்பட்டியலில் சேர்க்காமல் இருப்பது சரியில்லை. திருச்சிராப்பள்ளி நகரத்தின் பிரபல இனிப்புக்கடைகளில் எங்கும் அக்கார அடிசில் இல்லை. ஓர் ஆன்மக்குறைவுடன்தான் திருச்சிராப்பள்ளியைவிட்டுப் புறப்பட வேண்டி வந்தது.
ஆன்ம பாரம் பொல்லாதபடியால் இணையத்தில் அக்கார அடிசிலின் செய்முறையைப் பார்த்து வீட்டிலேயே செய்து உள்ளே தள்ளிவிட்டுத்தான் இவ்வரிகள் எழுதப்படுகின்றன. வெல்லப்பாயசத்திற்கும் சர்க்கரைப் பொங்கலிற்கும் இடைப்பட்ட பருவம். கூடுதல் தித்திப்பு. சுருக்கமாகச் சொன்னால் வைணவர்களின் பொங்கல் இது. மார்கழி மாதத்தில் பெருமாளுக்கான நைவேத்தியச் சிற்றுண்டி. வீட்டில் செய்த அக்கார அடிசில் திருச்சிராப்பள்ளி அடிசிலைப் போலச் செய்யப்பட்டிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. மூல அடிசிலை உண்டுவிட்டுத்தான் முரணைத் தீர்க்க வேண்டும்.

திருவரங்கப் பெருமாள் கோயில் பிரகாரத்தில் உள்ள காளி கோயில் ஒன்றில் கலிமா பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்று இருப்பதாகவும் தானே அதைப் பார்த்திருப்பதாகவும் சொன்னார் ஃபக்கீர். அதையும் தேடிப் போனோம். செட்டியார் சாதியினருக்குச் சொந்தமான கோயில் போலத் தோன்றியது. அக்கோயிலில் சீரமைப்புப்பணி நடைபெற்றுக்கொண்டிருப்பதால் கல்வெட்டைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
காணும் பட்டியலில் நான்காவதாக இருந்த காதி கடையைத் தேடினோம். எவ்வூருக்குச் சென்றாலும் புதிய கைத்தறித்துணி வகைகளுக்காக அங்குள்ள காதி சர்வோதயக் கடைகளைத் தேடிப்போவது வழமை. தைத்த ஆலை உடை வகைகள் போல கைத்தறியில் அவ்வளவாக பல இரகங்கள் கிடைப்பதில்லை. இப்படியான தேடலில் பல புதிய இரக உடுப்புக்களை வாங்கியிருக்கிறேன். திருச்சிராப்பள்ளி மையப் பேருந்து நிலையமருகில் உள்ள கடைக்குச் சென்றபோது சிறந்த பொருட்கள் நிறைய இருந்தன. விலையடக்கமான உதிரித்தேன் விற்பனைக்கிருந்தது. ஆனால் கொள்வார்தான் இல்லை. அன்று முழுவதும் அக்கடைக்கு யாரும் பெரிதாக வந்தது போலத் தோன்றவில்லை. எனக்கான பொருள் கிடைக்காததினால் பற்பொடி மட்டும் வாங்கிக்கொண்டேன். எங்களின் வரவை கடைக்காரர் பெரும் ஆறுதலாக உணர்ந்தார். வரவேற்றார். உபசரித்தார். கிடைத்த சிறிய நிமிடங்களில் அவருடன் அளவளாவிப் பார்த்ததில் வணிகத்திற்கு அப்பால் நேசத்தாலும் நன்றியுணர்வாலும் நிறைந்த மனிதர் அவர்.
புவி வெப்ப மயத்தை குறைத்தல், உள்ளூர்ப் பண்பாடு காத்தல், பெரு நிறுவன கொள்ளை எதிர்ப்பு , இயற்கை வளங்காத்தல், நுகர்வு வெறி தணிப்பு, கிராமிய குடிசை கைத் தொழில் மேம்பாடு போன்ற துறைகளில் குடிமக்களாகிய நாம் ஆற்ற வேண்டிய தலையாய பங்களிப்புகளில் ஒன்று காதி கதர் சர்வோதய உள்ளூர் குடிசை உருவாக்கங்களை ஆதரிப்பது. இதுபோன்ற சர்வோதய நிறுவனங்களில் மொத்த நாட்டிலேயே தமிழ்நாடுதான் முன்னணி வகிக்கும் மாநிலம். ஆனால் இந்நிலையும் தற்சமயம் மாறி வருவது வருந்துதற்குரியது.
திருச்சிராப்பள்ளி வருகையின் மைய நோக்கமும் அதே நேரத்தில் பயணத்தின் இறுதி நிகழ்வாகவும் அமைந்த அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரியின் பயண இலக்கிய உரையாடல் நடந்து முடியும் வரைக்கும் எனக்குப் பெரிதாக மாணவர்களின் மீது நம்பிக்கை தோன்றவில்லை. அது பிழை என்பதை நிரூபிக்கும் வகையில் கேள்வி விடை அமர்வு ஆழமாகவும் ஈடுபாட்டுடனும் அமைந்தது பெரு நிறைவு.
மாலையில் புறப்பட்டு நள்ளிரவில் வீடடைந்தேன். மணீஸ் கஃபேயில் எழுதப்பட்டிருந்த “நாம் அனைவரும் யாரோ ஒருவரின் கதையில் நல்லவராகவும் கெட்டவராகவும்தான் இருக்கிறோம்.” என்ற சொற்றொடர் பின்னாலேயே வந்து கொண்டிருக்கிறது.
சொல்முதலி
வலீ —இறை நேசர்
கறாமாத் — அற்புதங்கள், சித்துகள்
கல்வத் —ஊழ்கத்தனிமை
மிஹ்ராப் — பள்ளிவாயில்களில் மக்காவைச் சுட்ட அமைக்கப்பட்டிருக்கும் அரைவட்டத் தனி மாடம்.
ஹவ்ழ் — தடாகம்
கலிமா — லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதர்ரசூலுல்லாஹ் — வணக்கத்திற்குரிய நாயகன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். இதை ஏற்று மொழிந்தால் மட்டுமே ஒருவர் முஸ்லிமாக முடியும்.
மீஸான்— மண்ணறை அடையாளக்கல்
