கசாக்கின் இதிகாசம் – எழுத்து கிராமம்

கசாக்கின் இதிகாசம் – எழுத்து கிராமம்

விடுமுறைக்குப் பள்ளியைப் பூட்டுவதற்கு முன்பு ஒரு உல்லாசப் பயணம் செல்லலாம் என்று ரவி குழந்தைகளிடம் சொல்லியிருந்தான். செவ்வாய்க்கிழமை பள்ளி விடும்போது, எங்கே போக வேண்டும் என்று அவர்களிடம் கேட்டான்.

“பாலக்காட்டிய்க்கி, ஸார்,” யாரோ சொன்னார்கள்.

“பாலக்காட்டுல என்ன இருக்கு?” ரவி கேட்டான்.

“கோட்ட.”

“கோர்ட்டு.”

“ஆஸ்பத்திரி.”

“அஞ்சுவௌக்கு.”

பலரும் அப்படிச் சொல்லிச் சென்றார்கள்.

“சரி,” ரவி சொன்னான், “வேறங்க போகறதுக்கு இஷ்டம்னு சொல்லுங்க.”

குஞ்ஞாமினா சிரித்தாள்.

“செதலி மலைக்கிப் போலாம், ஸார்,” அவள் சொன்னாள்.

“செதலிக்கா?” ரவி கேட்டான்.

“செய்க் எஜமாவோட அடக்கஸ்தலத்தப் பாக்குறதுக்கு,” அவள் சொன்னாள்.

“சரி,” ரவி சொன்னான், “நாளைக்கிக் காலயில எல்லாரும் சீக்கிரம் வரணும்.”

மறு நாள், பனியில் நனைந்த புல்லில் மிதித்து அவர்கள் மலையேறினார்கள். பாடலில் விருப்பமுள்ள மங்குஸ்தான் பாடினான்:

 “பிஸ்மியும் ஹம்தும் ஸலாத்தும் ஸலாமாலும்-

பிண்டெ பிறகே துடங்ஙுன்னன் யா அல்லாஹ்

அஷ்ரஃப தானே ஸஹாபுல் பதர்மால

ஆடுவான் என்னில் உதக்கம் வழங்ஙல்லாஹ்

தஷ்ரீஃப் அதாணோர் அஸ்மாக்களொக்கயும் –

தீர்த்து மொழியுவான் ஏகணம் நீ அல்லாஹ்

பஷரிலும் ஜின்னிலும் ஆகே முர்ஸலாயி-

பாணே நபின்றே தணியும் அருளல்லாஹ்.”

குஞ்ஞாமினாவின் முகம் மங்கி துயரார்ந்தது.

“ஸார்,” அவள் சொன்னாள், “மொல்லாக்காவோட பாட்டு ஸார்.”

மங்குஸ்தான் பாடினான். அந்தத் துதிப் பாடலின் திரிபுகள் மர அடர்வுகள் கடந்து கசாக்கை அடைந்தன. கசாக்கின் பனங்காடுகளில் பத்ரீன்கள் போரிட்டார்கள்.

குழந்தைகள் கூட்டமாகச் சேர்ந்து முன்னால் நடந்தார்கள். குஞ்ஞாமினாவும் ரவியும் பின்னால் நடந்து வந்தார்கள். கூட்டம் தவறிச் சில சமயம் அப்புக்கிளி மட்டும் பின்தங்கினான். ரவியையும் குஞ்ஞாமினாவையும் பின்னால் விட்டு குழந்தைகள் வெகு தூரம் சென்றிருந்தார்கள்.

“மொல்லாக்காவோட பாட்ட நெனக்கிறப்போ,”

குஞ்ஞாமினா சொன்னாள், “அழுக வருது.”

—- ஓ.வி. விஜயனின் ‘கசாக்கின் இதிகாசம்’ நாவலிலிருந்து

 1969-ம் ஆண்டு வெளிவந்த ஓ.வி. விஜயனின் ‘கசாக்கின்ட இதிகாசம்’(கசாக்கின் இதிகாசம்)மலையாளத்தின் செவ்வியல் நாவல்களில் ஒன்று. தெற்கு ஆசியாவில் கூடுதல்  விற்பனையான நவீன நாவலிது. இதுவரைக்கும்  ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகளை கண்டுள்ளதுடன் உலகின் பல மொழிகளில் மொழியாக்கப்பட்டிருக்கிறது யூமா வாசுகியின் தமிழாக்கத்தில் காலச்சுவடு இந்நாவலை வெளியிட்டுள்ளது.

கசாக் என்ற கிராமத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பள்ளிக்கு ஆசிரியராக  ரவி என்பவர்  நியமிக்கப்படுகிறார். ரவியின் வழியாக தேடல்கள், அலைக்கழிப்புகள் என கசாக்கினுடைய மனித மனங்களின் தனித்த, கூட்டு அசைவுகளினூடே கவித்துவமும் ஆன்மீகமுமாக நகர்கிறது கதை.

ஓ.வி.விஜயனுக்கு எழுத்தாளர் என்ற அடையாளத்துடன் அச்சு ஊடகவியலாளர் உள்ளிட்ட பல பட்டடைகள் உண்டு. பிரபல தேசிய ஆங்கில நாளிதழில் கேலிச்சித்திரக்காரராக பணியாற்றியவர். இடதுசாரி சித்தாந்தத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தாலும்  அரச மறுப்பு வாதத்தின் தலையாயக் கேரளக் குரல் அவர். கசாக்கின் இதிகாசம் நாவல் என்பது  ஒரு வகையில்  ஓ.வி.விஜயனின் கரையற்ற இருத்தலியல் அலைச்சலும்தான்.

வேதாந்தத்தின் தாக்கத்தில்  ‘குரு சாகரம்’ என்ற  நாவலையும் அவர் எழுதினார். ஒரு முறை ஓ.வி. விஜயனிடம், “ உங்களின் குரு யார்?” எனக் கேட்கப்பட்டபோது அவர் சொன்னது, ‘அநாதையான பிள்ளைக்கு முன்னால் உனது பிள்ளையை நீ கொஞ்சாதே என்று சொன்ன நபிகளாரை விட சிறந்த குரு யார் இருக்க முடியும்?”. 

 கேரளம் என்பது கடவுளின் நிலம் மட்டுமல்ல மாய மந்திர பூத கணங்களின் உலகும்தான்.  நனவிலும் மாயத்திலும் மனிதர்களையும்அரூபிகளையும் அவர்களின் உள் வெளி உலகையும்  எழுத்தின் மந்திர உச்சாடனத்தில் படைத்து ஆட விட்டவர் ஓ.வி. விஜயன்.

 இன்று ஓ.வி. விஜயன்  இல்லை (1930 – 2005) . ஆனால் அவரின் விரல்களிலிருந்து ஒழுகிய எழுத்துக்கள் தங்களுக்கு தாங்களே வசீகரத்தை கிளர்த்திக் கொண்டேயிருக்கின்றன. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது இணைய தளத்தில் கசாக்கின் இதிகாசம் ஒரு கிராமமாக உருவெடுத்திருப்பதைப்பற்றி பதிந்திருந்தார்.

 தசரக் கிராமம் உருவாக்கப்படும் முன்பே  இருந்து வரும் இந்நாற்றுப்புரையில்தான் ஓ.வி.விஜயன் கசாக்கின் இதிகாசத்தை எழுதியுள்ளார். ஈசா நபி உருட்டிய களிமண்ணிலிருந்து பறவை உருப்பெற்றதைப்போல எழுத்து ஒரு நிலப்பரப்பாக மலர்ந்த செய்தி என்பது கசாக்கின் இதிகாசம் அளிக்கும் இன்னொரு அற்புத கணம்தான். அந்த பத்தியை வாசித்து முடிக்கும் முன்னரே பயணம் தீர்மானமாகி விட்டது.

 ஒரு புலரியில் பாலக்காடு டவுண் தொடர்வண்டி நிலையத்தில் போய் இறங்கினேன். பழம்பொறி, வடை, தேநீர், பொதுமக்கள், அன்றாட உழைப்பாளிகள் என பரபரப்பை அரையிருள் வேலையிலும் சூடிக்கொண்டிருந்தன கடை வீதிகள். இரயில் நிலையத்திற்கு அருகிலேயே மலிவான விடுதியொன்றில் வாசம். அறைக்கதவை திறந்தால் நிலையத்தின் உள்ளே பாதி வரை தரிசனம்.

 காலை எட்டரை மணிக்கு ஓ.வி. விஜயன் நினைவகம் செல்வதாக திட்டம். வழி கேட்பதற்காக நினைவக செயலாளர் அஜயனை தொடர்பு கொண்ட போது காலை பத்து மணிக்கு பாலக்காடு மாவட்ட மைய நூலகத்திற்கு வரச் சொன்னார். 

போட்டித்தேர்வுகளுக்கு அணியமாகிக் கொண்டிருந்த நிற மாயங்களிலான இளைய பட்டாளத்தினரால் நூலகம் நிரம்பியிருந்தது.கொஞ்ச நேரத்தில் மனிதர் வந்து சேர்ந்தார். நட்பும் உற்சாகமும் விரவிய ஆளுமை. ‘எழுதுபவன்’ என்றவுடன் மனந்திறந்து உரையாடினார். கவிஞர் கலாப்பிரியா அவருக்கு நண்பராம்.

 நினைவகம் அமைந்துள்ள தஸரக் கிராமத்திற்கு தன்னுடைய சொந்த ஊர்தியில் என்னை ஏற்றி அனுப்பியதோடு மூன்று மணி நேரங்கழித்து வந்தால் போதும் என்று ஓட்டுனரிடம் சொல்லி விட்டார்.

அஜயன் மாநில அரசின் பொதுப்பணித்துறையில் பொறியாளராக முப்பதாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவரின்  தந்தை டி.கே.ராமன்  நாட்டு விடுதலைப்போராளி, தெற்கு மலபாரில் பொதுவுடைமை கட்சியை நிறுவிய முன்னோடிகளில் ஒருவர்.

 ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள், தாங்கள் ஏற்கனவே போட்டு வைத்திருக்கும் வட்ட வளைய வாழ்க்கைக்குள் தங்களைத்தாங்களே பூட்டிக் கொண்டவர்கள். ஓய்வு பெற்ற பின் அவர்களின் விலகல் வாழ்க்கையில் தனிமை என்ற சங்கிலி மேலும் விழுந்து இறுக்கும். மொத்த வாழ்க்கையும் தீயில் பட்ட புல்லாகி சுருண்டு ஒடுங்கி விடும்.

 எழுபத்தெட்டுஆண்டுகள் நிரம்பிய அஜயன் இந்த வாழ்நாள் சிறையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர். தந்தையைப்போலவே இடதுசாரி கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்.கைரளி மலையாளத் தொலைக்காட்சியின் சந்தைப்படுத்துதல் குழுவின் துணைத்தலைவர், ஓ.வி விஜயன் ஸ்மாரக சமிதியின் செயலர், பாலக்காடு மாவட்ட மைய நூலகத்தின் செயலர், பாலக்காடு ஸ்வராலயா கலை பண்பாட்டு அறக்கட்டளையின் செயலர் என அவரின் முதுமை செயலூக்கத்தால் ததும்புகிறது.

 முக்கால் மணி நேர ஓட்டத்தில் தஸரக்கை அடைந்தோம்.கொடும்பு பஞ்சாயத்தைச் சார்ந்த தஸரக் கிராமம், பாலக்காட்டிலிருந்து பன்னிரண்டு கிலோ மீற்றர் தொலைவில் இருக்கிறது.  தஸரக்கைத்தான் ஓ.வி.விஜயன், ‘கசாக்’ என்று தனது நாவலில் பெயரிட்டிருக்கிறார். தஸரக் கிராமத்தின் அருகமையிலுள்ள இரு கிராமங்களின் பெயர்கள்: கண்ணாடி,  கினாஸ்ஸேரி.

 கினாஸ்ஸேரி என்றால் கனவுக் கிராமம் எனப்பொருள்படும்.கண்ணாடியில்  எதிரொளிக்கும்  நடப்பு உலகிலிருந்து கனவிற்குள் இறங்கி ஊறி எழும் எல்லைகளொழிந்த உலகை பொதிந்துள்ள  கசாக்கின் இதிகாசத்தின் முன்னுரை போல இருக்கின்றது இந்த இரு கிராமங்களின் பெயர்களும்.

 தஸரக்கின் சூழவுள்ள கிராமங்களுக்கு அச்சடியான தமிழ்ப்பெயர்கள். கசாக்கின் இதிகாசத்திலும் தமிழில் நனைந்த  மலையாள நடையில்தான் கதை படர்கிறது.

 தண்ணீர்பந்தல் சந்தியைத் தாண்டியவுடன்   கசாக்கின் இதிகாச புதினத்தில், ரவி பேருந்தில் வந்திறங்கிய கூமன்காவு அமைந்துள்ளது. இதன் தற்போதைய பெயர் கால்வாய் பாலம் அந்த இடத்தை வழியம்பலம் ( சத்திரம்) என்ற பெயரில் தோரணம், வேலிக்குள்ளே  குறடுகளும் கல் இருக்கைகளுமாக உருவாக்கி வைத்துள்ளனர்.

 அதையொட்டி  ‘கசாக்’   என ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதப்பட்ட தாமிர  நிற தோரண முகப்பு வாயிலானது உலோக காலத்திற்குள் நம்மை கொண்டு செல்கிறது.  உள் சாலையில் நிறைந்திருக்கும் வயல்களை தழுவியெழும் மென்காற்று பனைமர ஓலைகளிடையே புகுந்து வேக கிலுக்கடித்துக் கொண்டிருந்தது. கொஞ்ச தொலைவு பயணத்திற்குப்பிறகு நினைவகம் வருகிறது. நினைவகத்தின் நுழைவு தோரண வாயிலானது தொங்கும் பூந்தொட்டிகளும் கற்சிற்பங்களுமாக விரிகிறது.

 மியான் ஷேக், தங்ஙள் பக்கீரி, புளியங்கொம்பத்து போத்தியில் குடி கொண்டிருக்கும் மாரியம்மா, செதலி மலை என்ற கசாக்கின் நிலத்தில் கவிழ்ந்திறங்கும்  காவலரண்கள்.

 காவலரணின் ஒளித்திரியிலிருந்து விளம்பப்படும் சுடரின் கீற்றில் ஓ.வி.விஜயனின் மொழியில் சொல்வதானால் விரிவின் திளைப்பில், ஆசிரியர் ரவி, சிவராமன் நாயர், மாதவன் நாயர், அப்புக்கிளி, அல்லாப்பிச்ச முல்லாக்கா, குங்காமினா, குப்பு வச்சன், நைஜாமலி, நீலி, தித்திபியும்மா, மைமுனா, ஆபிதா, நாரயணியம்மா, முங்ஙங்கோழி, ரவியை தீண்டி முடிக்கும் பாம்பு உள்ளிட்ட கதையின்  அனைத்து   அய்யறிவு உயிரிகளும் தனித்தனியாகவும் கூட்டாகவும் எண்ணற்ற உலகங்களை படைக்கின்றனர்.

 மாயமும் நிசமுமான உலகங்கள் அவை. அவற்றில் சில உலகங்கள் படைத்தவர்களுக்குள்ளேயே முடிந்து போகின்றன. சில அவர்களைக் கடந்தும் நிற்கின்றன. இரு பாத்திரங்களின் உலகும் ஒன்றையொன்று தழுவியும் முயங்கியும் முடிந்ததுமான முடிவற்றதுமான நிலையை எட்டுகின்றன. சில உலகங்களோ தன்னை படைத்தவனை விட்டும் முற்றிலும் விலகி அந்தரத்தின் சுழல் பாதையில் தங்களை எதிர்காலத்தில் வாசிப்பவர்களுக்கான வசிப்பிடமாவதற்காக காத்து நிற்கின்றன.

 கசாக்கின் இதிகாசம் குறித்து ஓ.வி.விஜயன் கூறுகையில் “ இது எந்தவொரு கிராமத்தின் கதையுமில்லை” என்றார். ஆம். இது எல்லா கிராமத்தின் கதையும்தான்.  மனிதர்களின் பேய் ஓட்டத்தில் எல்லா கிராமத்தின் வேர்களும் ஆதி மனிதர்களும் தொல் நினைவுகளும் மறக்கப்பட்டு ஒற்றை வண்ணம் பூசப்பட்ட உள்ளீடற்ற வெற்றுக்கூடாகியிருக்கிறது வாழ்க்கை. செயற்கை ஒளியூட்டல்கள் ஒழிந்த ஓரிரவின் வானில் தெளிந்து இலங்கிடும் தாரகைகள் போல கசாக்கின் இதிகாச உலகும் அதன் பாத்திரங்களும் கால வெளிச்சத்தின் திரைகளுக்கப்பாலும் மின்னிக் கொண்டே இருக்கின்றனர். விஜயனின் சின்னஞ்சிறு சித்தரிப்புகளுக்குள் எளிய வரிகளுக்குள் விரிவடைந்து கொண்டிருக்கும் உலகங்கள் தீராத்தன்மை கொண்டவை.

 கசாக்கின் கருங்கல் தூண் வேலிகள்,முதிர்ந்து சுருங்கிய கால வெளியின் கடைவாய் பற்களாகி நிற்கின்றன. “கண்ணாடி கண்களையுடைய பெரியதொரு பச்சைத் தும்பி. மங்கிய  நினைவுகளைப்போல கண்கள் ஒளிர்ந்தன. யாருடையவோ முன் பிறப்பு நினைவு அது” என்று கதைக்குள் வர்ணிக்கப்பட்ட அப்புக்கிளியின் தும்பியானது நினைவுகளின் நிரந்தரத்திற்குள் கல் சிற்பமாகி சமைந்துள்ளது. சிற்பப்பூங்காவின் சிற்பங்களை கேரளத்தின் தேர்ந்த  நான்கு சிற்பிகள் செதுக்கியுள்ளனர்.

 வலதோரத்தில் நாற்றுப்புரை. ஓ.வி.விஜயன் தங்கி கசாக்கை உருக்கொடுத்த பிறப்பின் அறை. அறைக்கு முன்பாக இருபுறமும் கட்டி விடப்பட்டிருக்கும்  திண்ணைகள் ஒளியின் தொடர்ச்சியான நிழலை தங்களிருப்பில் வைத்திருந்தன. காவி வேட்டியை தழைய தழைய கட்டிய இரண்டு மூன்று பேர் மௌனித்திருந்தனர். ஒருவேளை கசாக்கின் கதைக்குள்ளிருந்து நழுவி வந்து  காலத்தின் துயரங்கலையாமல் அவர்கள் அமர்ந்திருக்கக் கூடும்.

 தேவாரத்து சிவராமன் நாயரின் நாற்றுப்புரையை காணொளிக்கூடமாக்கியிருக்கின்றனர். இங்கு ஓ.வி.விஜயன், கசாக்கின் இதிகாசம் நாவல் தொடர்பான ஆவணப்படங்கள், குறும்படங்கள் என நூறளவிலான படங்களின் சேகரமுள்ளது. பார்வையாளர்களுக்கு திரையிடலுமுண்டு.  கூடத்தின் தாழ்வாரத்தில் ஓ.வி.விஜயனின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிழற்படங்களையும் கேலிச்சித்திரங்களையும் வைத்துள்ளனர்.

 பாதையின் இடதுபுறம் கல் பதித்த ஒற்றையடிப்பாதை அரபிக்குளத்திற்கு இட்டுச் செல்கிறது. கடந்த காலத்தை நினைவுகள் பொதிந்து உறையிடுவது போல அரபிக்குளத்தின் மேற்பரப்பு முழுவதையும் செடிகொடிகள் மூடியிருந்தன. குளத்து மேட்டு மூலைக்கப்பால் ராஜாவின் பள்ளிவாசல்,பன்னிரண்டாம் பள்ளிவாசல், இருண்ட பள்ளிவாசல் என மூன்று பெயர்களால் அழைக்கப்படும் பள்ளிவாசல் நிற்கிறது.

 நினைவகத்தின் தலையாய கட்டிடத்தின் கீழ்தளத்தில் ஒலி ஒளி வசதியுடன் கூட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 250 பேர்கள் வரை அமரும் வசதியுள்ள இவ்வரங்கில் கேரள லலித் கலா அகாடமியின் உதவியோடு கசாக்கின் இதிகாச காட்சிகள் சுவரோவியங்களாக பரிமளிக்கின்றன. நான் சென்றிருந்த சமயம், பள்ளி மாணவர்கள் குழுவொன்று விரிந்த கண்களுடன் முழு அமைதி பொழிய அரங்கில் அமர்ந்திருந்தனர். நினைவக மேலாளர், ஊற்றத்துடன் விஜயனையும் கசாக்கையும் பற்றி வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். 

 மேல்தளத்தில் ஓ.வி.விஜயனின் நிழற்படங்கள், கடிதங்கள், அவரின் தனிப்பட்ட நூல் சேகரம், மலையாளத்திலும் பிற மொழிகளிலும் வெளியிடப்பட்ட அவரது படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர் காலச்சுவடு பதிப்பித்த கசாக்கின் இதிகாசத்தின் தமிழாக்க படி பச்சைக்கிளியாகி  காட்சிப்பேழைக்குள் இருந்தது. ஓ.வி.விஜயனின் படம் பொறித்த வில்லைகள், கோப்பைகள், டி சட்டைகள், படக்கோவை ஆகியனவும் விற்பனைக்குள்ளன.

அச்சு ஊடகத்தில் அவர் பணியாற்றிய போது அன்றைய ஒன்றிய தலைமையமைச்சர்  இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலைக்கு எதிராக வரைந்த கேலிச் சித்திரங்கள் என அனைத்து மாடங்களும் நேர்த்தியுடனும் ஒழுங்குடனும்  இருந்தன. அழகியலின் மென்மொழியை வரைந்து கொண்டே அதிகாரத்திற்கெதிராகவும் தூரிகையை கைக் கொண்டவர்.

தலையாய கட்டிடத்தின் பின்புறம் ஓ.வி.விஜயனின் மார்பளவு சிலை நிற்கிறது. அவர் எழுதிய புதினங்களான தர்ம புராணம், குரு சாகரம்,  மதுரம் கயத்தியின்  பெயர்களில்  வேலியோரமாக சுவரோவியங்களுடன் காட்சிக் குடில்கள்  அமைக்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய மீதமுள்ள நான்கு புதினங்களுக்கான காட்சிக் குடில்கள் அமைக்கப்படவுள்ளன.

 கேரள இடதுசாரி அரசினால் 2010 இல் அடிக்கல் நாட்டப்பட்டு நிலங்களை கையகப்படுத்தி 2016 இல் இந்த எழுத்து கிராமத்தை திறந்துள்ளனர். நினைவகத்தின் தென்கிழக்கு மூலையில் புதியதாக நிலம் வாங்கப்பட்டுள்ளது. படைப்பாளிகளுக்கான தங்கும் வசதியுடன் கூடிய குடில்களை அமைப்பதற்காக  அந்த நிலம் என்று சொன்னார் அஜயன். படைப்பாளிகளுக்கான குடில்கள் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 விரைவில் கட்டியெழுப்புங்கள். நான் அதில் வந்து தங்கும் நாள்களுக்காக காத்திருக்கிறேன் என்றவுடன் தன் பஞ்சு படர் தலைமுடியை அசைத்து சிரித்தபடியே “ நோக்காம் “ என்றார் சகாவு அஜயன். பயணத்தின் நோக்கங்களில் ஒன்றான கலோல்சவத்தை கூட்ட நெரிசலினால் காணவியலாமல் போய் விட்டாலும் ஓ.வி.விஜயன் நினைவகமான தசரக் எழுத்து கிராமமும் அதனுள்  எழுந்து கொண்டிருக்கும் படைப்பாளர் குடிலும் கொள்கலனை நிரப்பி விட்டன.

 படைப்பூக்கத்திற்கான தனிமைச் சூழலை குன்றாது காக்கும் எழுத்து கிராமம், படைப்பாளி குடில் போன்ற ஏற்பாடுகள் எந்த ஒரு படைப்பாளியின் இதயத்திற்கும் நெருக்கமானவையே.

 கோழிக்கோட்டில் ஜான் ஆபிரகாமின் ஒடைசி அமைப்பு, டிசைன் ஆசிரமம் கோழிக்கோடு, பெங்களுரிலுள்ள சங்கம், ஆழியாறு சத் தர்சன், குமரி மாவட்டத்திலுள்ள நிழல் தாங்கல், ஆனை கட்டி வானகம்  என தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் எழுத்தாளர்கள், படைப்பாளிகளுக்கான குடில்கள் உருவாகியிருக்கின்றன.

 இவற்றில் இரண்டு இல்லாமலாகி விட்டன. எஞ்சிய சிலவற்றில்  வேறு சில சிக்கல்கள். ஒரு குடிலில் இயற்கை பொங்கும், அமைதி கிடந்துறங்கும்,, மின்மினுபூச்சி நிறையும் என்பதோடு தியானம் செய்,மரத்தை வெட்டு என்ற ரிங் மாஸ்டர் கட்டளைகளுடன் கூடிய  அழகிய சிறை, மற்றொன்றிலோ வளர்ப்பு படைப்பாளிகளுக்கே முன்னுரிமை . மேற்கண்ட சிக்கல்கள் எதுவுமில்லாத இடத்தில் கட்டணம் கூடுதல் என்ற நெருக்கடி.

 படைப்பாளி குடிலை நிறுவி பின்னர் அம்முயற்சியில் பின்னடைவை சந்தித்த கவிஞரொருவருடன் பேசினேன். வாடகை வீடொன்றை எடுத்து படைப்பாளி குடிலை திறந்திருக்கிறார். முக்கியமான சில படைப்பாளிகள் வந்து தங்கியும் சென்றிருக்கின்றனர். குடிலில் தங்கிய படைப்பாளிகளுக்கு தன் கைக்காசை போட்டு உணவிட்டு ஆதரித்திருக்கிறார். அனுசரணையாளர் ஒருவரின் கூடாவொழுக்க நடவடிக்கையில் குடில் கலைந்து விட்டது.

 தன்னை நாடி வரும் படைப்பாளிகளுக்கு அக்கூரையின் கீழ் புழங்கும் உணவு, உடை, பணம் என அனைத்துமே பொதுவுடைமையாக இருந்த ஜான் ஆபிரகாமின் ஒடைசியும்,  சென்னையில் கவிஞர் ராஜமார்த்தாண்டன் தங்கியிருந்த அறையும்  தனக்குள் கிளர்த்திய  விசையிலிருந்தே  படைப்பாளிகளுக்கான இல்லம் என்பது தனது வாழ்நாள் கனவாகி விட்டதாக அக்கவிஞர் சொன்னார். ‘வெளியில் இறங்கும் ஓர் ஓவியனுக்கோ எழுத்தாளனுக்கோ தெம்பும் துணிவும் நம்பிக்கையும் அளிக்கும் ஓரிடம் வேண்டும்’ என்றவாறே  தன் வாழ்நாள் கனவை முறுகப்பிடித்திருக்கும் அவரொன்றும் செல்வரில்லை.வறுமையின் தணலில் அடிக்கடி இளைப்பாறுபவர். வலிய கனவுகளளை சுமக்கும்  எளிய கரங்கள் நசுங்கி விடாமல் இது போன்ற முயற்சிகளுக்கு  சமூகப் பொறுப்புள்ள புரவலர்கள் பொறுப்பெடுக்க வேண்டும். இதில் செலவாக்கப்படும் ஒவ்வொரு காசும் சமூகத்தின் கலைப்பண்பாட்டு செயல்பாட்டிற்கான  நிரந்தர வைப்பு நிதிதான்

 எல்லோருடைய கனவுகளுக்குள்ளும் நம் கனவுமிருப்பது போல நமது கனவுக்குள்ளும் எல்லோரின் கனவுகளும் இருக்கின்றன. மக்களுக்கான கட்டிடச் சிற்பி லாரி பேக்கர் பாணியில் மரங்களுடன் தனிமையும் அடர்ந்த இலவசமான அல்லது மிக மலிவான செலவில் உணவகமொன்றுடன் ஒரு படைப்பாளி குடிலுக்கான கனவு மெய்ப்படும் வரை காக்கை கூடுகளில் முட்டையிட வேண்டியதுதான். அக்கனவின் பொறி நூர்ந்து விடாமலிருக்க பௌத்தசாலை ஒன்றுடன் இணைந்த அமைதிக்குடிலுக்கு போக வேண்டியுள்ளது. அங்கு பரிமாறப்படும் இஞ்சி எலுமிச்சைச்சாற்றுடன் தேனும் கலந்த தேனீருக்கும் கூடத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Latest Travel Blog
  • மழை ரிஹ்லா –வேணுவனத்தில் ஒரு பகல்

  • மலைக்கடவை-செங்கோட்டை புனலூர் குகை தொடர்வண்டித்தடம்

  • சரந்தீபில் மலையாளக் கதைகள்…நூற்றாண்டுகள் பழமையான சிறீலங்காவில் மலையாள மரபின் வரலாற்றுத் தடயங்கள் தேடி ஒரு பயணம்.

Close
© Copyright 2024. All rights reserved.
Website by Dynamisigns.
Close