பன்னிரண்டணா சுல்தான்

“நான் பள்ளிக்கூடம் போவதற்கில்லை. வீட்டிற்கும் இப்போதைக்கு வரப் போவதில்லை”

 நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக வீடு துறந்து கோழிக்கோட்டிற்கு தப்பிச்சென்ற வைக்கம் முஹம்மது பஷீர், தன்னை அழைத்து போக வந்த தந்தையிடம் கையளித்த சொற்கள் இது. மகன் உதிர்த்த சொற்களின் பாரம் உண்டாக்கிய சோர்வு துயரம் கண்ணீர் எல்லாம் ஒரு சேர கொப்பளிக்க வெறுங்கையுடன் திரும்பினார் வைக்கம் முஹம்மது பஷீரின் வாப்பா.

தங்களின் பிள்ளைகளின் மீது எந்தவொரு சராசரி பெற்றோருக்கும் இருக்கும் தவிப்பிலிருந்து பஷீரின் வாப்பாவும் உம்மாவும் விதிவிலக்கில்லைதானே. அதுவும் தங்களின் எல்லா எதிர்பார்ப்புகளும் கொட்டி வளர்க்கப்பட்ட மூத்த மகன் என்னும்போது அந்த உணர்வுகள் அடையும் உயரம் தனிதான்.

 உன் கைகளிலிருந்து ஒரு பொருள் பறிக்கப்பட்டு வெறுமையாக்கப்படுவது என்பது ஏற்கனவே இருந்த பொருளை விட சிறந்ததொன்றை உனக்கு வழங்குவதற்கான ஏற்பாடுதான் என்பதை புரிந்து கொள் என ஸூஃபி ஞானி ஜலாலுத்தீன் ரூமி சொன்னதைப்போலத்தான் பஷீர் விஷயத்திலும் நடந்தது.

தான் கருதி வைத்திருக்கும் பஷீருக்கு சராசரி குடும்பமும் கல்விக்கூடமும் போதாது என்பதை அறிந்திருந்ததனால்தான் அண்டசராசரத்தின் மூல ஆற்றல் அவரை அவற்றிலிருந்து விடுவித்து பரந்த உலகத்தையே குடும்பமாகவும் கல்விக்கூடமாகவும் ஆக்கியது. பெற்றோரின் மகன் என்ற ஒரு தரத்தில் மட்டுமே இருந்த முஹம்மது பஷீர், இப்போது விடுதலைப்போராளியும் கதை சொல்லியுமான வைக்கம் முஹம்மது பஷீராக வடித்தெடுக்கப்பட்டு. விதைக்குள் ஒளிந்திருந்த பெருமரமாக மனிதத்திரளிடம் திரும்பக் கொடுக்கப்பட்டார்.

 வைக்கம் முஹம்மது பஷீர் எழுதிய கதைகள் அனைத்துமே அவரது ஆன்ம ஒளி ஆடியின் கிரணச் சிதறல்கள்தான். என்னுடைய கதைகள் அனைத்துமே என் சொந்த பட்டறிவுதான். என் கதைகளைக் கேட்டு இவ்வுலகில் கூடுதல் அழுதவனும் சிரித்தவனும் நானாகத்தானிருப்பேன் என்றார் வைக்கம் முஹம்மது பஷீர்.

 பஷீரினுடைய பிறந்த நாளில் (ஜென்ம தினம் கதை) ஒரு குவளை சுடு தேனீருக்கு கூட வழியில்லாத அந்த கொடும்பகலில், உணவுக்கான தவிப்பு மட்டுமே அவருடைய உணவாக இருந்தது. குடல் இடும் பசி நெருப்பின் ஓலத்தில் மொத்த உடல் நாளங்களும் இரைந்து கொண்டிருக்க, பிறந்த தினத்தில் அவர் அணிந்திருந்த உடைகள், காலணி, அமர்ந்திருந்த சாய்வு நாற்காலி என எதுவுமே அவருக்கு சொந்தமில்லாத நிலை. காலணி விற்க வந்த குழந்தைகள் அவரை சார் என அழைத்ததை அவரால் பொறுக்க முடியவில்லை. நான் சாராம். முழு நிர்வாணமான இந்த நான் கூட என்னுடையதுதானா? என ஆன்ம விசாரணை செய்கிறார்.

 அவருடைய மனத்தை தவிர வேறெதுவும் அவருக்கு உடைமையாக இல்லாத அந்த பிறந்த நாளில் உருக்கொண்ட ஜென்ம தினக்கதை அவரை சுற்றியுள்ள மனிதர்களை அவர்களுக்கே உரிய குணச்சுவைகளுடன் மிகத் துல்லிய பாத்திரங்களாக கூடுதல் எத்தனங்கள் எதுவுமின்றி அழகு குறைவின்றி சித்தரிக்கின்றன.

 ஜென்ம தினம் கதையை நாட்குறிப்பு, நிகழ்வறிக்கை என சில இலக்கிய திறனாய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். வைக்கம் முஹம்மது பஷீர் போன்ற இலக்கிய திருஉருக்களின் கதைகள் பல்வண்ண நோக்கி போன்றவை. வாசிப்பவர்களின் மன அறிவு புலங்களுக்கேற்ப அவைகளை கலைத்தும் சரித்தும் பிரித்தும் வேய்ந்தும் புதிது புதிதாக வாசித்துக்கொண்டே இருக்கலாம்.

 வைக்கம் முஹம்மது பஷீரின் வாழ்க்கையின் மைய நாதமாக இருந்து அவரை இயக்கிய விசையென்பது அறமும் அனைத்து உயிரிகளின் மீதான அவரின் பேரன்பும்தான். இவைகள்தான் படைப்புக்குள்ளும் அப்பாலும் அவருக்கு நிரந்தரத்தன்மையை அருளியிருக்கின்றது. இது போன்ற அருட்கொடை எல்லா படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் கைகூடுவதில்லை பஷீர் போன்ற மிகச் சிலரைத்தவிர.

 அவரின் படைப்புகளை வாசிக்க வாசிக்க நம்முடைய மனவுலகம் எல்லா திசைகளிலும் விரிவு கொள்கின்றது.அந்த விரிவின் தர்க்க நீட்சியாக, நமது ஆன்மாவின் இனங்காணவியலாத பரப்பினுள் வைக்கம் முஹம்மது பஷீர் படர்ந்திருக்கிறார். எனது கண்ணுவாப்பாவைப்போலவும் ஆசிரியனாகவும் சக பயணியைப்போலவும் தோழனாகவும் என்னில் நானாகவும் அவரை உணர்ந்திருக்கின்றேன். முடிவில் நான் அவரை இன்னதுவென உணர்ந்த எல்லா தளங்களிலும் இருந்து கொண்டே நான் சென்றடைய முடியாத ஒரு புதிய வடிவில் அவர் தன்னை தோற்றுவித்துக் கொண்டே இருக்கிறார்.

 பஷீர், மனத்திற்குள் உருவாக்கிக் கொண்டிருக்கும் முடிவிலியின் தொலைவை குறைக்கவாவது அவரின் நிலத்தை பருவ மழை பொழிவிற்குள் கண்டு வர வேண்டும் என தோன்றியது.

 இளம் சகாவும் ஆங்கில பேராசிரியருமான மல்லிப்பட்டினம் ஆசிர் முஹம்மதுக்கு தொலைபேசியில் தகவல் சொன்னேன்.

நான் நாகர்கோவில் வரைக்கும் பேருந்தில் சென்று அங்கிருந்து அதிகாலையில் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினேன். இருக்கை வசதி மட்டும் உள்ள தொடர்வண்டி.. கழுவித்துடைத்தாற் போலிருந்த ரயில் நிலையத்தை மழையானது மேலும் கழுவி துப்புரவாக்கிக் கொண்டிருந்தது.

ஆசிர் முஹம்மது மல்லிப்பட்டினத்திலிருந்து திருவனந்தபுரம் வரை அரசு விரைவுப் பேருந்தில் வந்து இணைந்தார். ரயில் போகும் திசைக்கு எதிர் திசையில் எனக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. எதிர் திசை ஒவ்வாமை எனக்கு உண்டு. ரயிலின் கடுகிய ஓட்டத்தில் புலனாகாத கரமொன்று சட்டையை பிடித்து பின்னுக்கு இழுப்பது போன்ற உணர்வு பயணம் முழுக்க தோன்றிக் கொண்டே இருந்தது. ஆட்கள் அதிகமில்லை. ஈரிழை முடிக்கட்டுடன் வடிவழகியான பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார். பொது பெட்டி என நினைத்து முன் பதிவில்லாத பயணச்சீட்டுடன் ஆட்கள் ஏறியிருந்தனர். அடுத்த நிலையத்தில் இறங்கி மாறிக் கொள்ளுங்கள் இல்லையெனில் கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டி வரும் என அவர்களிடம் மெல்லிணக்கமாக பேசி புரிய வைத்தார்.

பிரவம் ரோட் தொடர்வண்டி நிலையத்தில் போய் இறங்கும்போது காலை பத்தரை மணி. நடைமேடையில் பெருமழை அட்டியின்றி இறங்கிக் கொண்டிருந்தது. கனவுச்செப்பு போலிருந்த சிறுபேருந்தில் ஏறி, நனைந்து கொண்டிருந்த தெருக்களின் வழியே தலயோலப்பரம்பை அடைந்தோம்.

இரண்டு மூன்று விடுதிகளே இருந்தன. ஐநூறு ரூபாய்கள் வாடகை. இவ்வளவு சிறிய ஊருக்கு இந்த வாடகை கூடுதல்தான். வாடகை வாங்கும் அளவிற்கு இவற்றில் வசதிகள் இல்லை. போனால் போகிறது என இரக்கப்பட்டு குளியலறை கழிப்பறையையும் வைத்திருந்தார்கள். குழாயில் ஒழுக்கு வேறு. உணவு சில்லறைப்பொருட்கள் வாங்கிட விடுதிப்பையன்களெல்லாம் இல்லை. எல்லாம் நமக்கு நாமே தன்னுதவி சேவைதான். சிக்கியவன் கழுத்தில் கத்தியை வை என்பது சிற்றூர் விடுதிக்காரர்களின் தொழில் தாரக மந்திரம்.

 வைக்கம் முஹம்மது பஷீர் நினைவகம் அல்லது அருங்காட்சியகம் என இணையத்தில் தேடினால் உருப்படியான பெறுபேறுகள் இல்லை. எழுத்தாள நண்பரொருவரிடம் கேட்டபோது அவரது வீடு நினைவகம் எல்லாமே கோழிக்கோட்டின் பேப்பூரில் உள்ளது மட்டுமே என உறுதியாகச் சொன்னார்.

 வைக்கம் முஹம்மது பஷீர் பிறந்தது அவரின் தந்தை வீடிருக்கும் கோட்டயம் மாவட்டம் தலயோலப்பரம்பு. இறந்தது கோழிக்கோடு மாவட்டம் பேப்பூர். இதில் எதைப் பார்க்காமல் விட்டாலும் பயணம் முழுமையடையாது என உறுதிபட சொன்னது மனம். மீண்டும் இணையத்தில் முன்னும் பின்னுமாக தேடியதில் பஷீர் நினைவு அறக்கட்டளை எனப் பொருள்படும் “பஷீர் ஸ்மாரக ட்ரஸ்ட்” (http://www.basheersmarakatrust.com/) என்றொரு இணைப்பு கிடைத்தது. அதில் உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டபோது நினைவகத்தின் செயலாளர் பேரா. குஸுமன் வழிசொன்னார்.

தலயோலப்பரம்பின் பாலம்கடவுப்பகுதியில் மூவாட்டுப்புழை ஆற்றின் தீரத்தில் வைக்கம் முஹம்மது பஷீர் நினைவு நூலகத்துடன் அரங்கும் நிறுவப்பட்டுள்ளது. வைக்கம் முஹம்மது பஷீரின் முதிர்ந்த வாசகர்களுடைய நிதி நல்கை, கேரள அரசின் பண்பாட்டுத்துறையின் நிதியளிப்பு, நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி நிதி ஒதுக்கீடு என பல கரங்களின் இணைவில் வைக்கம் முஹம்மது பஷீருக்கே உரிய குறும்புடனும் முடிவற்ற தனிமையுடனும் சமன் செய்து கொண்டவாறு நினைவகம் ததும்புகிறது.

பாலம்கடவுப்பகுதியில் வைக்கம் முஹம்மது பஷீரின் நினைவகத்திற்கு அருகிலேயே மூவாட்டுப்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்திற்கும் அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது. நீரின் இக்கண ஓட்டத்தில் தன்னை முழுவதும் ஒப்புக் கொடுத்து விட்டு நிலையின்மை என்ற படலில் மணிக்கணக்கில் பஷீர் மிதந்த தலம். நினைவகத்தை ஒட்டிய நீண்ட அகன்ற படித்துறையானது . கனிந்த மனிதனின் நெடுகிய ரேகைகளைப்போல. கடந்த கால நிராகரிப்புத்துயரின் சாட்சி என்னும்படியாக கைகளை விரிந்து மல்லாந்தபடி கிடந்தது. அதன் முக்கால் பாகத்தில் செடி கொடிகள் மண்டிக் கிடக்கின்றன. படித்துறைக்கப்பால் கைவிடப்பட்டு கரை முட்டிய நிலையில் உடைந்த இரு கரிய படகுகள் நின்றிருந்தன.

வைக்கம் முஹம்மது பஷீர் எந்த அளவு தனிமையின் நேசனோ அதேயளவு தனித்தன்மையானவரும் கூட. எதற்குள்ளும் கரைந்தழியாத சிகரத்தின் நிலை நிற்றல் போன்ற துலங்கும் தனித்தன்மையது. மனித இருப்பின் வாழ்வின் நிலையின்மை பற்றிய தெளிவின் தளத்தில் தன் கால்களை பாவிக்கொண்டே தன்னில்தானே தனிமையின் பெருக்கில் ஆழ்த்திக் கொள்ளும் பஷீரின் திளைப்புதான் அவரை தற்பெருமை ஆணவ பிசுக்குகளிலிருந்து காத்தது.

 அவர் சராசரிக்குள் பொருந்தியவரில்லை. ஆனால் தினசரி மனிதர்கள் உள்ளிட்ட வாழ்வின் எல்லா அடுக்கு மனிதர்களும் பஷீரை ஏதாவது ஒரு விதத்தில் தங்களுக்குள்ளாக அவரை உணர்ந்துகொண்டேயிருக்கின்றார்கள்.

 மாலை நான்கரை மணிக்குத்தான் நினைவகம் திறக்கப்படும் என்பதால் அங்கிருந்து நூறு மீற்றர் தொலைவிலுள்ள பஷீர் பிறந்த அவரது தரவாட்டு (தந்தை வழி) வீட்டிற்கு போனோம்.

 வீட்டுக்கு வெளியே இடியாப்பம் புட்டு விற்பனைக்கு கிடைக்கும் என்ற அறிவிப்பு பலகை இருந்தது. எங்களுக்கு குழப்பம். அக்கம்பக்கத்தில் விசாரித்த பிறகுதான் அதுவேதான் நாங்கள் தேடி வந்த வீடு என்பதை உறுதிப்படுத்தினர். வைக்கம் முஹம்மது பஷீரின் பிறந்தகம் என்ற அறிவிப்போ குறிப்போ எதுவுமில்லை. பங்கு பிரிவினையின்போது வைக்கம் முஹம்மத் பஷீரின் இளைய தம்பி அபூபக்கருக்கு தரவாட்டு வீடு வந்து சேர்ந்திருக்கிறது. பஷீரின் கதைகளில் அபூபக்கருக்கு நிறைய பாத்திரமுண்டு. 2016ஆம் ஆண்டில் அபூபக்கரின் இறப்பிற்குப்பிறகு அவரது மகன் ஷாஜி தனது குடும்பத்தினருடன் இங்கு வசித்து வருகின்றார். பலகார விற்பனை மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் அவரின் வாழ்க்கை நகர்கிறது.

 வீட்டின் முன் இடது ஓரத்தில் உள்ள வளவில் நிற்கும் சாம்ப மரத்தினடியில்தான் பஷீரின் தொடக்க கால கதைகள் விளைந்திருக்கின்றன. போன வாரம் பள்ளிக்குழந்தைகள் வந்து சாய்வு நாற்காலி போட்டு அவரது கதைகளை நடித்து மீட்டியதாக ஷாஜி சொன்னார்.

 வீட்டை வலம் வந்தோம். வீடு நீங்கிய தேசாந்திரி மகனின் வருகைக்காக ஒவ்வொரு இரவும் சமைத்து வைத்துக் காத்திருந்த அந்த தாய்மையிலிருந்து கனிந்திறங்கிய சொற்கள், நீருளி பாம்பு என்ற மெய்ப்பாடநூல் வழி கருணையின் மொத்தவடிவையும் போதித்த வாப்பா ஆசான், ஃபாத்துமா, ,ஆடுகள் என எல்லா உயிர் படிமங்களும் சொல் நீங்கி வீட்டு வளவில் அருவமாக உறைந்து நிறைந்திருந்தன. கதை சொல்லும் மலை வித்து விழுந்து படர்ந்த நிலத்தில் காலடிகளை தப்பித்தவறி எடுத்து வைத்தால் காலமிலிகளில் எவை மீதாவது நாங்கள் இடறி விழுந்துவிடக்கூடும்.

 கதிரவனிலிருந்து வழிந்திறங்கும் அன்றாட தினத்திலிருந்து பெரும்பாலான சராசரி மனிதர்கள் சலிப்பையும் அச்சு வார்ப்பான வாழ்க்கையையுமே பெற்றுக் கொள்கின்றார்கள். தலயோலப்பரம்பும் இந்த சலிப்பிலிருந்து விலக்கு பெற்றதல்ல. ஆனால் அதன் வீதிகள் அங்காடி, மனிதர்கள் , மூவாட்டுப்புழா அதன் நீர்மை , தரவாட்டு வீடு என்ற மாயக்குடுவைக்குள் முங்கிய பஷீரின் விரல்களிலிருந்துதான் கதைகள் தங்களை திறந்து கொண்டன.

 ஏராளமான அறியாமையும் பட்டறிவுமே எனது சொத்து. என்று சொன்ன பஷீர், அறியாமையை அறிதலின் தாள் முன் வைத்து பணிகின்றார்:

 “இத்தனை காலமாகியும்…. உன்னை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. அறியாமலேயே அன்பு செலுத்தினேன். அறியாமலேயே வெறுக்கவும் செய்தேன். அறிந்து எதையேனும் செய்திருக்கிறேனா?

 உன் மீதான அன்புடனேயே நீ இதை புரிந்து கொள்ள வேண்டும். பரஸ்பரம் நாம் எப்போது ஒன்றானோம்? ஒன்றானோமா? நான் முயன்றேன். இறுதியில் அன்பு காட்ட மட்டுமே கற்றுக் கொண்டேன். இல்லை. எதையுமே சரியாக அறிந்து கொள்ளவில்லை. அறியாமை. சிறப்பாக எதுவும் தெரியாது.‘ (அபூர்வ தருணங்கள்’ சிறுகதையிலிருந்து )

 வைக்கம் முஹம்மது பஷீர் என்ற படைப்பாளுமைக்குள் கசிந்த அறியாமையானது பேராற்றலின் முன் பலியிடப்பட்ட பிறகு அதன் இருப்பை களைந்து  விட்டுஅறிதலாக மின்னுகிறது. ஏராளமான கதைகளாக கிளைக்கின்றது . அவற்றின் உள்ளோட்ட மினுக்கத்திற்குள் தீர்க்கதரிசனங்கள் பெருகுகின்றன.

 “ஒரு ஐநூறு வருசங்களுக்குள்ளே, இந்த பூமியுலுள்ள சர்வ உயிரினங்களெயும் பறவைகளையும் மிருகங்களெயும் மனுசன் கொன்னு அழிச்சிடுவான். மரங்களெயும் செடிகொடிகளெயும் அழிச்சிடுவான். இந்த பூமியிலே மனுசன் மட்டுந்தான் மிச்சமிருப்பான். பெறகு. ஒட்டு மொத்தமா அவனும் செத்துருவான்” என பூமியின் வாரிசுதாரர்கள் கதையில் தொலைப் பிரகடனம் செய்யும் அன்றைய பஷீரின் கேரளத்தில் சூழலழிவு என்பன போன்ற பேரழிவுகள் நடந்திடவில்லை.

 ஆனால் வருங்காலத்தில், வளர்ச்சியின் இருள் பதாகைகளின் கீழ் நிகழ்த்தப்படவிருக்கும் பேரழிவிற்கு தேவையான மனக்கோணல் என்ற முதல் எரிகொள்ளி சக மனிதனுக்குள் உறைந்திருப்பதை பஷீரின் படைப்பு மனம் வரும்முன் அறிந்து உரைக்கிறது.

 அருகிலுள்ள தேனீர் கடையில் கட்டஞ்சாயாவை குடித்த பிறகு நினைவகம் சென்றோம்.. தமிழ்நாட்டிலிருந்து வருகிறோம் என்றவுடன் பெருமகிழ்வுடன் வரவேற்றனர்.

 வழக்கறிஞர் ஹரிகுமார் தலைமையில் இயங்கும் இந்த நினைவக அறக்கட்டளை 2008 ஆம் ஆண்டு எழுத்தாளர் சுகுமார் அழிக்கோடினாலும், நினைவகமானது வைக்கம் முஹம்மது பஷீரின் நெருங்கிய தோழர்களில் ஒருவரும் பன்முக ஆளுமையுமான பேரா. எம்.கே. ஸாநுவினாலும் திறந்து வைக்கப்பட்டது.

 வைக்கம் முஹம்மது பஷீரின் மொத்த படைப்புகளையும் இங்கு வைத்துள்ளார்கள். “ ஓர்மச்சாய “ ( நினைவின் நிழற்படங்கள் ) என்ற தலைப்பிட்ட ஒளிப்படக்கோவையைக் கண்டோம். வைக்கம் முஹம்மது பஷீர் என்ற பெருக்கிலிருந்து அள்ளியெடுக்கப்பட்ட ஒளி நொடிகளின் அகல் சுவடி. ஒரு படி வாங்கலாமென்றால் விற்பனைக்கு வேறு படிகளும் இல்லையாம். தங்களின் நோக்கீட்டு தேவைக்காக ஒன்றே ஒன்றை மட்டும் பாதுகாத்து வைத்துள்ளார்கள். நாங்கள் இந்த சுவடியை சந்தையில் தேடியும் கிடைக்கவில்லை. அச்சில் இல்லை.

 வைக்கம் பஷீர் நினைவு அறக்கட்டளையின் சார்பில் வருடந்தோறும் தேர்ந்தெடுக்கப்படும் மலையாள இலக்கியவாதிகளுக்கு பஷீர் விருது அளிக்கப்படுகிறது. இங்குள்ள அரங்கில் இலக்கிய விவாதங்கள், சிறப்பு நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கின்றன. மாணவர்கள் அதிகமாக இங்கு வருகின்றனராம்.

 வானொலிப்பேழையில் தலை சாய்த்திருக்கும் மோகன சுந்தர பஷீர், மங்குஸ்தான் மரத்தினடியில் படைப்புத்தொழில், காலக்கடலில் வெள்ளோட்ட பார்வை என பஷீரின் வெவ்வேறு கறுப்பும் வெள்ளையுமான ஒளிப்படக்கணங்கள் நினைவகத்தின் சுவர்களில்நின்றவாறே அவருக்குள் நம்மை கொண்டு சேர்க்கின்றன.

 பஷீரை பல நாட்கள் பின்தொடர்ந்து அவர் அறிந்தும் அறியாமலும் இந்த படங்களை எடுத்திருக்கின்றார்   நிழற்படக்கலைஞர் புனலூர் ராஜன்.கறுப்பு வெள்ளை கேமிராவுடன் கடவுளால் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒற்றன் என புனலூர் ராஜனை எம்.டி.வாசுதேவன் நாயர் செல்லமாக அழைத்திருக்கிறார்.

 ஒற்றி எடுத்து சிமிழில் பொத்தப்பட்ட பெருங்கடலைப்போல வண்ணத்தோகையிலிருந்து தனித்து குழந்தைமைக்குள் தன்னை ஒளித்துக்கொள்ளும் ஒற்றை மயிலிறகைப்போல இருக்கின்றன படங்கள். ஒவ்வொன்றிலிருந்தும் பஷீரை நாம் நமக்கேற்ப மீட்டுருவாக்கிக் கொள்ளலாம்.

 பஷீருக்குள்ளிருந்த எழுத்தை ஒரு எதிர்மறை விசையோட்டம்தான் கிளர்த்தி விட்டிருக்கிறது. சாகித்ய அகாதமிக்காக எம்.ஏ. ரஹ்மான் இயக்கிய ‘ பஷீர் த மேன் ‘ என்ற ஆவணப்படத்தில் பஷீர், தான் எழுத வந்ததன் காரணத்தை பின்வருமாறு சொல்கிறார்:

 வைக்கம் அஷ்டமி திருவிழாவில் புத்தகங்கள் வாசிக்கக் கிடைக்கும். அப்படி ஒரு நாவல் எனக்கு கிடைத்தது. அந்நாவலில் முஸ்லிம்கள் திருடர்களாகவும் கொலைகாரர்களாகவும் , மோசடிக்காரர்களாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தனர். ஆனால் என் வீட்டில் உள்ள யாரும் இந்த நாவல் சொல்கிற மாதிரி மோசமான மனிதர்கள் இல்லை. இது என் மனதில் பதிந்து விட்டது. எனவே நான் எழுத தீர்மானித்தேன்.

 ஆனால் வெறுப்பின் மறுமொழியாக எதிர்வினையாக பஷீர் வெறுப்பை எழுதவில்லை விதைக்கவில்லை பரப்பவில்லை. வீட்டு பரம்பின் நீருளி பாம்புக்குள்ளும் எலிக்குள்ளும் ஹிந்து துறவியருக்குள்ளும் சூஃபி ஞானிகளுக்குள்ளும் தன் பசியை அருந்தி பிறன் பசியை ஆற்றியதற்குள்ளும் தாசிகளுக்குள்ளும், சட்டைப்பை திருடர்களுக்குள்ளும், வடிவற்ற நங்கைக்குள்ளும் ஒன்றே ஒன்றைத்தான் கண்டார். அதுதான் மானுடத்தை உள்ளடக்கிய எல்லா உயிரினங்களின் மீதான பேரன்பு. அந்த பேரன்புதான் அவரது மொத்த எழுத்து சித்திரத்தின் வண்ணச்சேர்க்கையாகும்.

 உலகையும் அதிலுள்ள எல்லா உயிரிகளையும் நேசித்த பஷீர் தனது சமூக பண்பாட்டு அடையாளத்தில், வேர்களில் பிடிப்பும் பற்றுறுதியும் கொண்டவராகவே இருந்தார். அதில் அவர் வெட்கப்படவோ குற்றவுணர்ச்சி அடையவோ இல்லை.

 இன்று தமிழக இலக்கிய வட்டத்தில் கமுக்கமாகவும் வெளிப்படையாகவும் இயங்கும் ஆதிக்க வகுப்பு லாபியினருக்கு ஒத்தூதும் வகையில் எழுதி குளிர்விக்கும் சில முஸ்லிம் எழுத்தாளர்களைப்போல இழிவான சமரசங்கள், ஆட்காட்டிகங்காணி வேலைகள் என எதையும் வைக்கம் முஹம்மது பஷீர் தனது வாழ்நாளில் செய்ததே இல்லை.

 நீங்கள் ஏன் தொழுவதில்லை? என பஷீரைக் கேட்டதற்கு செடிகொடிகளுக்கு நீரூற்றுவதும் ஒரு வகையான தொழுகைதான். வாழ்க்கையே ஒரு முடிவற்ற பிரார்த்தனைதான் என்றார். குர்ஆனை அதன் அழகியல் மொழியில் அவர் வாசித்தார். அதன் வழியாக அகம்புறமாக இரண்டு விஷயங்களை அவரடைந்தார். அவரின் இறை நம்பிக்கையை ஆழமாக்கி உறுதிப்படுத்தியது. அவரது தனி உலகின் கற்பனையின் எல்லைகளை அது அகலமாக்கிக் கொண்டே இருந்தது.

 அன்றைய ஆளும் வர்க்கத்தினரை தனது கதைகளினூடாக எள்ளலுடன் சீண்டினார் பஷீர். ஆனால் அந்த விமர்சனத்தை பொதுவுடைமை கட்சியினர் தோழமையுடனேயே எடுத்துக் கொண்டனர். பொதுவுடைமை கட்சியில் இணைய அவரை அழைத்தபோது நான் ஒரு இறை நம்பிக்கையாளன் வன்முறையற்ற காந்தி வழிக்காரன் என மென்மையாக மறுத்து விலகினார் பஷீர் .

 கோழிக்கோட்டிற்கான வண்டி நள்ளிரவு 12:35க்குதான். இரவு 10:00 மணிக்கே விடுதியை விட்டு நீங்கி பிரவம் ரோட் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். காரணம், இரவு சுணங்க சுணங்க ஆட்டோ கிடைக்காது. நமது தமிழகத்தை போல மொத்த இரவிற்கும் வெளிச்சம் பூசி பகலாக்கும் அசட்டு அலங்கார வேலைகளையெல்லாம் கேரளியர்கள் செய்வதில்லை. அந்தி சாய்ந்து விட்டாலே அவர்களது வெளி நடமாட்டங்கள் கணிசமாக குறைந்து விடுகின்றன. இரவை அவர்கள் ஆக்கிரமிப்பதில்லை. இரவு அவர்களுக்குள்ளும் இரவுக்குள் அவர்களுமாக.

 ரயில் நிலைய நடைபாலத்தில் நாய் கும்பலானது முழு நிலைய பொறுப்பும் தங்களுக்கே என்ற அதிகார தோரணையில் நின்றிருந்தன. உங்களுக்கும் எங்களுக்கும் பகையில்லை என்பதை உடல் மொழியில் தெரிவித்தவாறே மெல்ல படியிறங்கி நடைமேடைக்கு வந்து சேர்ந்தோம். நடைமேடை இருக்கையில் அமர்ந்த சிறிது நேரத்தில் கக்கத்தில் குறிப்பேடும் கையில் பேனாவுமாக வந்த ஆர்பிஎஃப் காவலரொருவர், காத்திருந்த பயணிகளிடம் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை மட்டும் காட்டச் சொல்லி அவற்றை குறித்துக் கொண்டார்.

 ஏன்? என்றதற்கு இது எங்களது நடைமுறை என்ற ஒற்றை வரி மறுமொழியோடு அடுத்த பயணியை நோக்கி நகர்ந்து விட்டார். யாரிடமும் பயணச்சீட்டை காட்டச் சொல்லவேயில்லை. இது என்ன கணக்கில் சேருமோ?

 உறக்கம் கலையும் முன்னரே கோழிக்கோடு வந்து விட்டது. கோழிக்கோடு நகரத்திலிருந்து 11 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பேப்பூரில் வைக்கம் முஹம்மது பஷீர் வாழ்ந்த வீட்டில் தற்போது அவரது மகன் அனீஸ் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அந்த வீட்டில்தான் பஷீரின் நினைவகம் உள்ளது. அனீஸை தொடர்பு கொண்டோம். முழுமை பெறாத சொற்களில் படபடவென பேசினார்.

 தான் ஒரு நாளிதழில் பணி புரிவதாகவும், மனைவியும் மக்களும் பள்ளிக்கூடம், அலுவலகம் என இருப்பதால் மாலை நான்கரை மணிக்கு வந்தால் மட்டுமே நினைவகத்தை பார்க்கவியலும் என்றார்.

மழை அடித்து தகர்த்துக் கொண்டிருந்தது. நாடன் கேரள உணவை தேடி ஒரு உணவகத்திற்குள் நுழைந்தோம். உணவு தீரும் சமயம். எனினும் பொறித்த மீன், மரக்கறி, அப்பளம் வந்தது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே மின்சாரம் தடைப்பட்டது. அரை வெளிச்சத்தில் தகரக்கூரையின் மீது மழை தன் விரல்களை மீட்டிக் கொண்டிருக்க உணவு நிறையுணவானது.

பள்ளிக்கூடங்கள் விடும் சமயமாதலால் பேப்பூர் வழித்தட பேருந்துகள் பிதுங்கி வழிந்துக் கொண்டிருந்தன. பத்து கிலோமீற்றர் தொலைவை முக்கால் மணி நேரத்தில் வந்தடைந்தது பேருந்து. ஒரு வழியாக மனித அம்பாரத்திலிருந்து உதிர்ந்தோம். அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப தாமதமாகும். எனவே நேரே நீங்கள் வீட்டுக்கு சென்று பாருங்கள் என சொன்னார் அனீஸ் . ஒரு முடுக்கில் வைக்கம் முஹம்மது பஷீர் வீட்டிற்கு செல்லும் வழி என அறிவிப்பு பலகை நாட்டியிருந்தது. திட்டு திட்டாக செந்நிறங்கொண்டு மழை நீர் தேங்கிக் கிடந்தது. உள்ளே நடக்கத்தொடங்கி சில அடிகளிலேயே பாதை இரண்டாக பிரிந்தது. அதிலிருந்து கொஞ்ச தொலைவில் மீண்டும் இரண்டாக பிரிந்தது. வழிகாட்டும் பலகைகளும் இல்லை வழி சொல்ல ஆட்களுமில்லை. ஒரு வழியாக ஒரு வயதானவர் வந்து சேர்ந்தார். வீட்டைக் காட்டினார்.

 இரும்பு வாயிலை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றோம். யாருமில்லை.. மௌனத்திற்குள் உறையும் பேரரசின் அதிகார அவையாகவும் திறந்தவெளி உயிர் கலையரங்கமாகவும் ஏகாந்தத்தின் நடன முற்றமாகவும் என எல்லாமுமாக இருந்தது பஷீரின் கொட்டாரம்.

 வீட்டு கதவை தட்டியவுடன் ஆரானு? என மூக்கின் நுனியதிர கேட்டபடி பஷீரின் பேரக்குட்டி கதவைத்திறந்தான். பின்னாலேயே அவனின் உம்மாவாகிய அனீஸின் மனைவி வந்தார். தாழ்வாரத்தின் வலது ஓரத்து அறையில் வைக்கம் முஹம்மது பஷீர் புழங்கிய பொருட்கள், வாங்கிய விருதுகள் வைக்கப்பட்டுள்ளன.

மூக்கு கண்ணாடி, சாய்வு நாற்காலி, கைக்கடிகாரம், எழுத்து அட்டை, கையெழுத்து தாள், நூல்கள், பேனா, துடைப்பம், குழந்தைகளும் பிரபல ஓவியர்களும் வரைந்தளித்த ஓவியங்கள், சாகித்ய அகாதமி & பத்மசிறீ விருதுகள், விருது வாங்கும் ஒளிப்படங்கள், இசைத்தட்டுகள், இசைத்தட்டு கருவி. என அனைத்தும் பஷீரின் நினைவுகளுக்குள் நனைந்து கிடக்கின்றன.

 அருங்காட்சியக அறிவியல் காப்பு முறைகளின்படி இந்த பொருட்கள் பாதுகாக்கப்படவில்லை. இவற்றை உள்ளுறை கரையான் போல காலம் தின்றழிப்பதற்கு முன்னர் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். ஓ..வி. விஜயனின் கசாக்கின் இதிகாசத்திற்காக வாழும் கிராமத்தையே நினைவகமாக மாற்றி நன்றி தீர்க்கும் மாநில அரசு பஷீர் விஷயத்தில் ஏன் ஒன்றும் செய்யாமலிருக்கிறது?

மங்கத்தொடங்கியிருக்கும் கறுப்பு வெள்ளையுமான ஒளிப்படமானது காட்சி அலமாரியில் செருகப்பட்டிருந்தது. அதில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் இலக்கிய புலமைக்கான முனைவர் பட்டத்தை அன்றைய கேரள ஆளுநரும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான பா. ராமச்சந்திரன், வைக்கம் முஹம்மது பஷீருக்கு வழங்கி கும்பிடுகிறார். மறுதலையாக வைக்கம் முஹம்மது பஷீர் அவரை கையுயர்த்தி ஆசியளிக்கின்றார். அதிகாரத்தின் இருப்பு தனக்கு கீழ்தான் என்பதை படைப்பாற்றல் மறு உறுதி செய்த வரலாற்றுக் கணமது.

அவரின் எழுத்துமேசையில் பஷீரின் கையெழுத்திலிருந்த தாளை வைத்திருந்தார்கள். ஜீவிதம் ஒரு அனுக்கிரகமானு (வாழ்க்கை ஓர் அருட் கொடையாகும்) என வரிகள் தொடங்கின. அந்த ஒற்றை சொல்லை தூக்கியெடுத்து எனக்குள் வைத்துக் கொண்டேன். மிகவும் கனமாக இருந்தது.

 ஒரு மனிதன், உணவின் ஒற்றை பருக்கைக்காக எதிர்பார்த்திருக்கும் பல நாட்களில், வயிறே வயிற்றைத்தின்னும் பசியின் கொடும் மணித்துளிகளில், பிறரின் தயவில் தனக்கு கிடைக்கும் ஒரு வேளை உணவையும் அப்படியே இன்னொரு பசித்த மனிதனுக்கு தாரை வார்ப்பதை நீங்கள் எந்த சொற்களாலும் உணர்வுகளாலும் பதிவிடுவீர்கள்?

 எழுதிக்கிடைத்த பன்னிரண்டனா (எழுபத்தைந்து காசு) வெகுமதியை வைத்துக் கொண்டு நான் பணக்காரன் என்ற பிரகடனத்தை வைக்கம் முஹம்மது பஷீரால் மட்டுமே செய்ய முடியும்.

 நாட்டு விடுதலைப்போராளி, தேசாந்திரி, வாசிப்பு இவற்றிலேயே அவருடைய ஐம்பது வயது வரை கழிந்து விட்டது. சராசரி மனிதர்களுக்கோ ஐம்பது வயதில் வாழ்க்கை தரை தட்ட தொடங்கியிருக்கும். சலிப்பின் விளை நிலமாக மாறியிருக்கும் நடுத்தர வயதுக்கே உரிய பொருளாதார கடப்பாடுகள் கழுத்தை நசுக்கிக் கொண்டிருக்கும். மொத்தத்தில் வாழ்வே எல்லா முடிவுகளின் தொடக்கமாக உருளைக்கனமாக இருக்கும்.

 ஆனால் பஷீரோ தனது ஐம்பதாவது வயதில்தான் திருமண வாழ்வையே தொடங்குகின்றார். இளமை தன்னை இரண்டாக பெருக்கி வகிர்ந்து கொண்டு இரண்டாம் பங்கை முழுமையாக அவருக்காகவே எடுத்து வைத்திருந்திருக்கின்றது.பஷீரின் இறப்பு வரையிலான மொத்த வாழ்க்கையை தொகுத்து பார்க்கும்போது பத்து மடங்குக்கும் மேலாக பெருகிய வாழ்க்கைகளுக்குள் அவர் முழுமையாக வாழ்ந்திருக்கின்றார்.

 சருகை அடித்துக் கொண்டு போகும் நீரோட்டத்தைப்போல தன்னை தன் சுயத்தை தள்ளிக்கொண்டு போக வாழ்க்கையை அவர் இசையவில்லை. தன் வாழ்வின் சுக்கானை அவர்தான் பிடித்தார். அவர்தான் மாலுமி அவர்தான் பயணி.

 வீடா? பொது வாழ்க்கையா ? என்ற கேள்வியானது தன் பௌதிக இருப்பின் காரணவரான அன்பு வாப்பாவின் வடிவில் வந்து நின்றபோதும் சரி,

 தன்னுடைய பிறந்தநாளில் தன்மானம் தன்னம்பிக்கை என்ற வாழ்வின் சுழல் மையத்தை சல்லிசல்லியாக பிய்த்தெறியும் மூர்க்கத்துடன் எல்லா திசைகளிலிருந்தும் அவர் மீது எறிகணைகள் பாய்ச்சப்பட்டபோதும் சரி.

 அவை எவற்றுடனும் அவர் சமரச சமாதானம் செய்திடவுமில்லை முழந்தாளிட்டு விடவுமில்லை. .அவைகள், அவரை எட்ட முடியாத பிரபஞ்சங்களுக்குமப்பால், முடிவற்ற நெடுந்தொலைவில் ஒளிக்கதிர்களை விதைக்கும் மாபெரும் ஒளியான அந்த குவிமையத்தில் தன்னை கொண்டு போய் வைத்தார்.

 இந்த இரண்டு முச்சந்திகளில் தன்னில் தானறிந்து அவர் எடுத்த தீர்மானங்கள்தான் இரைப்பையை நிறைப்பதற்கான பிழைப்பாக மட்டும் சுருங்க விடாமல் அவருடைய பூவுலக இருப்பை பாதுகாத்தது.

அன்றாட வாழ்க்கையின் உராய்வுகளில் பிறக்கும் வெப்பத்தை ஆற்றுவதற்காகவே அவர் இசைக்குள்ளும் தனிமைக்குள்ளும் இருந்தார்.

 தனிமைத்தீரத்தின் தீராவாசியாக இருக்கும் பஷீர் கொண்டாடும் தனிமையை அவரது கதைகளுக்குள் காண முடிவதில்லை. தனது வாழ்நாள் வரை அவர் அதை தனது தனியுடைமையாகவே வைத்திருந்தார்.

 அவரின் விடைபெறலுக்கு பிறகு எஜமானனின் வரவுக்காக காத்திருக்கும் பூனைக்குட்டி போல பஷீரின் தனிமை அவர் வீட்டின் பரம்பு முழுவதும் விளம்பப்பட்டு தனியாகவே கிடக்கிறது.

பஷீரின் எண்ணிறந்த கதைகளுக்கு சாட்சியான மங்குஸ்தான் மரம், பரம்பின் தலைப்பகுதியில் சாய்ந்த இருப்பு கொண்டிருக்கிறது. பஷீருடன் இந்த பரம்பில் அன்று வாழ்ந்திருந்த கோழி, ஆந்தை, எலி, பருந்து, பாம்பு உள்ளிட்ட உயிரிகளின் தலைமுறைகள் எதுவும் எஞ்சியிருக்கின்றனவா? எங்கு போயின அவை?. அவரின் கதைக்குள் இருப்பதே போதும் என அவை நினைத்திருக்கலாம் அல்லது பஷீரின் தனி உடைமையான பெருந்தனிமையில் பங்கு வேண்டாம் எனவும் அவை சிந்தித்திருக்கலாம். மொத்த பரம்பும் அந்தி கிரணங்களின் நிழல் விளிம்புகளோடு யாராலும் விவரித்திட முடியாத சொற்களில் பரிமாறிக் கொண்டிருந்தது.

 பயணத்தின் நிறைவாக பேப்பூரின் ஸுல்தான் நெடுந்ததுயில் கொண்டிருக்கும் ஜுமுஆ மஸ்ஜித் மண்ணறை தோட்டத்திற்கு சென்று அவரின் அடக்கவிடத்தை தேடினோம். அந்த பள்ளிவாசலில் உள்ளவர்களுக்கும் அவரின் கப்ர் எங்குள்ளது? எனத்தெரியவில்லை. ஒருவேளை வைக்கம் முஹம்மது பஷீர் என்ற தனது பெயரின் பின்னொட்டாக பாபா மஸ்தான் என சேர்த்திருந்தால், கந்தூரி நெய்ச்சோறு நேர்ச்சை மணத்திரி கமழ மறைந்து வாழும் அற்புதராக அவர் உருவெடுத்திருப்பார்.

மண்ணறைத்தோட்டத்தில் கிட்டத்தட்ட முக்கால் மணி நேர போராட்டம். பகலின் மீது இருள் வேகமாக விழுந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்ணறையின் பெயர் பலகையையும் வாசித்து வாசித்து களைப்பும் ஏமாற்றமுமே எஞ்சியது. கடைசி முயற்சியாக மண் மேடிட்ட கருஞ்சலவைக்கல் ஒன்றினை ஆசிர் முஹம்மது கிளறினார். முடிவிலியின் இருப்பிடத்திலிருந்து பளிச்சென துலங்கியது அந்த பெயர் “வைக்கம் முஹம்மது பஷீர்”. சொற்கள் ஒடுங்க நின்றோம்.

மஃரிப் தொழுகையை நிறைவு செய்துவிட்டு பேருந்தில் கோழிக்கோடு திரும்பும்போது இந்த பயணம் ஏற்படுத்திய அக கொந்தளிப்பை யாரிடமாவது பகிர வேண்டும் போல இருந்தது. குளச்சல் யூஸுஃபை அழைத்தேன். வைக்கம் முஹம்மது பஷீரின் கதைகளை கருக்குடன் தமிழாக்கம் செய்தவர். திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் இருக்கிறேன். மொழியாக்கத்திற்கான சாலித்ய அகாதமி விருதினைப்பெறுவதற்காக வந்திருக்கிறேன் என்றார். பயணத்தின் நிறைவு முத்திரை சரியாகத்தான் விழுந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Latest Travel Blog
  • மழை ரிஹ்லா –வேணுவனத்தில் ஒரு பகல்

  • மலைக்கடவை-செங்கோட்டை புனலூர் குகை தொடர்வண்டித்தடம்

  • சரந்தீபில் மலையாளக் கதைகள்…நூற்றாண்டுகள் பழமையான சிறீலங்காவில் மலையாள மரபின் வரலாற்றுத் தடயங்கள் தேடி ஒரு பயணம்.

Close
© Copyright 2024. All rights reserved.
Website by Dynamisigns.
Close