கவரத்தி தீவின்(இலட்சத்தீவு தலை நகர்) தென்னை விவசாயியான யாசீன் கோயா செவலை, வெள்ளை, செம்பழுப்பு, கறுப்பு என பல வண்ணங்களில் ஆசைக்கு ஆறு மாடுகளை தனது தோப்பில் வளர்த்து வந்தார்.
‘சாஸ்திர பசு பரிபாலனம்’ திட்டத்தின் கீழ் அரசின் உதவித் தொகை கொடுக்கப்படுவதால் அவைகளை சரியாக கோயா பராமரிக்கிறாரா? என்பதை அறிவதற்காக கவரத்தி தீவின் ஆடு/கால் நடை மேம்பாட்டு அலுவலர், ஒவ்வொரு மாட்டின் கழுத்திலும் ஜிபிஎஸ் கருவி கொண்ட பட்டையை மாட்டி விட்டார்.
ஒவ்வொரு வாரமும் கையில் ஒரு தாளை எடுத்துக் கொண்டு வரும் அந்த அலுவலர் “ கோயா பாய் ! நீ அந்த வெள்ளை மாட்டை அவிழ்த்த விட்ட பிறகு உங்கள் வீட்டில் திரும்ப கட்டவேயில்லை.” என ஹிந்தியும் மலையாளமும் கலந்த நடையில் சொன்னார். கோயாக்கா இனி மேல் அந்த தவறுகள் நடக்காது என சமாதானம் சொல்லி அந்த அலுவலரை திருப்பியனுப்பினார்.
அடுத்த வாரமும் அந்த அலுவலர் மாட்டிற்கு தண்ணீர் காட்டவில்லை என்ற புகாருடன் செல்பேசியில் தொடர்பு கொண்டார். ஒவ்வொரு வாரமும் மாடுகளைப்பற்றிய ஏதாவதொரு புகாரைத் தூக்கிக் கொண்டு அலுவலர் பேசவும் கோயாக்காவின் மனைவி புறுபுறுக்கத் தொடங்கினாள்.
தெய்வத்தை அன்னையை நீங்கள் நடத்தும் விதம் சரியில்லை. இந்த குறைபாடுகள் தொடர்ந்தால் அபராதத்தில் தொடங்கி மாடு பறிமுதலில் வந்து முடியும் என அழுத்தந் திருத்தமாக உள்ளூர் ஆளொருவரையும் துணைக்கு கூட்டி வந்து எச்சரித்து விட்டுப் போனார் அலுவலர்.
கோயாவுக்கும் அந்த சல்லியம் பிடிபடாமல் இல்லை. அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லையே தவிர அவரது தலைக்குள் நெருப்புக் கோளமாக உருண்டு திரண்டிருந்தது.
அடுத்த வாரம் அந்த அலுவலர் செல்பேசியில் அழைத்திருந்தார். லுஹர் தொழுது விட்டு வந்திருந்த கோயாக்கா இம்முறை நல்ல உற்சாகத்துடன் அலுவலரின் தொலைபேசி உரையாடலை எதிர் கொண்டார்.
“ கோமாதாக்களை கண்டபடி திரிய விடாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்து பராமரித்து வருவதற்கும் அவைகளும் எப்போதுமே துடிப்புடன் இருப்பதற்கும் உங்களுக்கு என் பாராட்டுகள்”என அலுவலர் சொன்னதை கோயாக்காவின் வாயிலிருந்து வியப்புடன் கேட்டுக் கொண்டிருநதாள் அவரது மனைவி. அவளுக்கு சிக்கலின் முடிச்சு அவிழ்க்கப்பட்ட இடத்தை சுட்டிக் காட்டுவதற்காக தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார் கோயா.
மாடுகளின் வெற்றுக் கழுத்துகளை சுட்டிக் காட்டிய கையோடு மனைவியிடமிருந்து தொடர் கேள்வி எழும்பும் முன்னர் காற்றின் விசையில் எல்லாப்பக்கமும் அசைந்துக் கொண்டிருந்த தென்னை மர மடல்களை நோக்கி கையை நீட்டினார்.
சிரித்து உருண்ட கோயாவின் மனைவி அன்று மதியம் மாட்டிறைச்சி பிரியாணிக்கு நல்ல முறுமுறு சாப்ஸ் கறியும் சேர்த்து சமைத்திருந்தாள்.”
இலட்சத்தீவில் கேட்ட கதையிது. உள்ளூர் மக்களின் பண்பாட்டு சிடுக்குகளை தேவைகளை புரிய மறுக்கும் ஒன்றிய அரசின் குருட்டுப் போக்கிற்கு ஓர் தனியாளின் எதிர் வினை. இந்தியாவின் ஓர பண்பாட்டு நிலங்களில் இவ்வாறான சமூக பண்பாட்டு எதிர்வினைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.
2017 ஆம் ஆண்டு . வடகிழக்கு இந்தியாவின் மிஜோரம் மாநிலத்திற்கு போயிருக்கும் போது மாட்டு பக்திக்கான எதிர் நிலைக் கொண்டாட்ட நிகழ்வைப்பற்றி கூறியிருந்தார்கள். இறைச்சிக்கான மாடுகளை சந்தையில் விற்பதற்கு ஒன்றிய அரசு கொண்டு வந்த தடையை எதிர்த்து மாட்டிறைச்சி திருவிழாவை அம்மக்கள் முன்னெடுத்தார்கள்.
கதையாடல்களின் இடங்களை மாற்றி ஒழுங்கு பண்ண வேண்டிய காலமிது. ஓர நிலைக் கதையாடல்கள் மையத்திலும் பெரும் ஓட்ட கதையாடல்களை ஓரத்திலுமாக அமர வைக்கப்பட வேண்டிய தேவையை நோக்கி நாடு நகர்த்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.
எதிர்ப்பின் குறியீடாக மாட்டின் கதையிலிருந்து இத் தொடர் தொடங்கினாலும் கடல்,மீன்,ஓடம்,கொடுங்காற்று,பிரிவு,காத்திருப்பு, என ஒவ்வொரு தலைப்பிலுமாக ஏராளமான கதைகளை இலட்சத்தீவு தன்னுள் வைத்திருக்கிறது.
கடல் ஓர் அரண் மட்டுமில்லை. அதுதான் அன்னையின் மடி தந்தையின் கரம் வாளும் கேடயமும் தொலைவும் நெருக்கமும் அந்தரங்கமும் எல்லையற்ற வெளியும் என இலட்சத்தீவுக்காரர்களுக்கு எல்லாமுமாக இருக்கிறது அறபிக்கடல்.
எனது சிறு வயதில் வீட்டிற்கு வரும் அந்த்ரோத்(இலட்சத்தீவு) தீவைச் சேர்ந்த கோயா தங்ஙளின் அருகமையில் வளர்ந்தவன் நான். இப்போதெல்லாம் முன்பு போல் அந்த்ரோத் தீவு தங்ஙள்மாரின் வருகை காயல்பட்டினத்தில் நடைபெறுவதில்லை. அழுக்காற்றின் பாசனத்தில் ஆன்மீகம் தழைப்பதில்லை.அடுத்துக் கெடுத்த நட்பினால் நூற்றாண்டின் கண்ணி முறிக்கப்பட்டது.
வளர்ந்த பிறகு ஊர் சுற்றல் தொடங்கினாலும் இலட்சத்தீவு எப்போதும் அப்பட்டியலுக்குள் வந்ததில்லை. அப்பெயரும் மனத்திற்குள் பெரியதாக நின்றதில்லை. ‘கண்டுபிடித்தங்களுடே கப்பித்தான் ‘ என்ற செல்லப் பெயருடைய மினிக்காய் தீவைச் சேர்ந்த பத்மசிறீ அலீமனிக்ஃபான் அவர்களை 90களின் இறுதியில் முதன்முறையாக சந்திக்கும்போதுதான் இலட்சத்தீவு மனத்திற்குள் மீண்டும் துளிர்த்தது.
அணுக்க நண்பரும் எழுத்தாளரும் ஊடக பயிற்றுநருமான கோழிக்கோடு நவ்ஷாத் 2021 இல் வரலாற்று எழுத்திற்காக காயல்பட்டினம் வந்திருந்தார். அங்கு போகவியலும் என்ற தகவலோடு அதற்கான நம்பிக்கையை ஊட்டியவரும் அவர்தான்,
அதே ஆண்டின் இறுதியில் பட்கல்,கண்ணூருக்கு மரபு வழிப் பயணம் போய் திரும்பும் வழியில் கோழிக்கோடு கடற்கரையிலுள்ள காக்ரார்ட் எழுத்தணி கலைக்கூடத்தில் மலபார் – மஅபர் பண்பாட்டு நிகழ்வொன்று நடந்தேறியது. அதில் கில்தான்(இலட்சத்தீவு) தீவின் மூத்த இலக்கியவாதிகளான பேராசிரியர் முல்லக்கோயாவும் எழுத்தாளரும் ஆய்வாளருமான பாஹிரும் காயல்பட்டினத்திற்கும் இலட்சத்தீவிற்கும் இடையேயான தொல் உறவுகளை மீட்டினர்.
பேரா.முல்லக் கோயாவின் தொகுப்பில் சாஹித்ய அகாதமி “இலட்சத்தீவின் இராக்கதைகள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளது .இப்புத்தகத்தை ஆங்கிலத்தில் வாசித்தேன். ஆங்கில மொழிபெயர்ப்பாளரின் குறைபாடுகளும் பண்பாட்டு தொடர்பின்மையும் மூலத்திற்கும் நிழலுக்குமுள்ள இடைவெளிகளை உணர்த்திற்று. இதன் தமிழாக்கமும் மூல மொழியான மலையாளத்திலிருந்து செய்யப்படாமல் ஆங்கிலத்திலிருந்துதான் மொழி மாற்றப்பட்டிருந்தது. இக்குறையை தெரிவித்ததும் பேரா. முல்லக்கோயா தன் மலையாள மூல நூலை அனுப்பித்தந்ததுடன் தமிழாக்கவும் சம்மதித்தார்.
எனக்கு மலையாளம் தெரியாததினால் தமிழாக்க முயற்சியில் ஓரங்குலம் கூட நகர இயலாதது அவசத்தை உண்டு பண்ணியது. அது இலட்சத்தீவைக் காணும் வேட்கையாக இன்னொரு புறம் பிய்த்துக் கொண்டு வளர்ந்தது. அந்த தேடலில்தான் கில்தான் தீவின் இஸ்மத் ஹூஸைனையும் மைசூரின் அப்துர்ரஷீதையும் நவ்ஷாத் அறிமுகப்படுத்தினார்.
அரசுப்பணியாளரான இஸ்மத் ஹூஸைன், மலையாளத்திலும் தீவின் மொழியான ஜசரியிலும் கட்டிறுக்கமான நடையுடைய சிறந்த புனைவெழுத்தாளர். மலையாளத்தில் எழுதப்பட்ட இலட்சத்தீவுக் கூட்டத்தின் முதல் புதினமான ‘கோலோடம்’ புதினத்தின் ஆசிரியருங்கூட. இந்த நாவலுக்காக இலட்சத்தீவு சாஹித்ய கலா அகாதமி விருது, இலட்சத்தீவு சாஹித்ய புரஸ்காரம், எல் எஸ் ஏ எக்ஸலன்சி விருது, சிறந்த நாவலுக்கான பி.எம்.சயீது விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.மலர்ந்த முகத்துடன் நிதானமும் கூர்மையும் ஒருங்கே கைவரப்பெற்றவர். ‘மிஸ்டிக் பம்பன் கோயா” என்ற பெயரில் இவரின்சிறுகதை தொகுப்பும் வெளிவந்துள்ளது.
இந்திய அரசின் ஒலிபரப்புத்துறையைச்சேர்ந்த அப்துர்ரஷீத் குடகில் பிறந்தவர். தாய் மொழி கன்னடம்.மலையாளத்தில் எழுதத் தெரியாவிட்டாலும் அதனை நன்கு பேச அறிந்தவர். இலட்சத்தீவின் மீதான பற்றினால் இங்குள்ள ஒரே வானொலி நிலையமான கவரத்தி தீவிற்கு விருப்ப மாறுதல் பெற்று வந்து மூன்று வருடங்கள் பணியாற்றிருக்கிறார். நிலைய நிகழ்ச்சித் தலைவர் பொறுப்பு வகித்த போதிலும் ஈரிருளி மட்டுமே அவரது ஒரே ஊர்தியாக இருந்துள்ளது. அது அவரது விருப்பத்தேர்வு எனலாம்.
ஒன்றிய, மாநிலங்களின் சாஹித்ய அகாதமி உட்பட பல விருதுகள் வாங்கியவர் அப்துர்ரஷீத். ஊடகவியலாளர்,புனைவெழுத்தாளர்,கவிஞர் என பல பட்டடை கொண்டவர்.தான் விரும்பிய நிலத்தின் ஒவ்வொரு துகளையும் தொட்டு அறிவதற்காகவும் தான் நேசிக்கும் மக்களின் தோள் உராய்ந்து,உப்பின் உண்மையுடன் அது குறித்த நிகழ்ச்சிகளைத் தருவதற்காகவும் அவ்வாறான ஒரு வாழ்க்கைக்கு மூன்று வருடங்கள் அவர் தன்னை ஒப்புக் கொடுத்திருந்தார். தீவு வாழ்க்கை குறித்து ‘காற்றோசையும் பிஞ்ஞாணவும் (இலட்சத்தீவு டயரி)’ என்ற நூலை கன்னடத்தில் எழுதி அது மலையாளத்தில் மொழியாக்கப்பட்டுள்ளது.
மலை தனது புட்டத்தின் கீழ் அகப்பட்ட நிலத்தை ஒரு போதும் அசைய விடுவதில்லை. எண்ணெய்ச்சட்டியில் மிதக்கும் போண்டா துணுக்குகளைப்போல அறபிக்கடலில் சிதறிக்கிடக்கும் இத்தீவுக் கூட்டம் தனக்கான மனிதர்களை உள்ளிலிருந்தும் வெளியிலிருந்தும் பிறப்பித்துக் கொண்டேயிருக்கிறது. முஹம்மது மலையிடம் போய்த்தான் ஆக வேண்டும். இலட்சத்தீவைக் காணுவதற்கான விருப்பம் தீர்மானமாக மாறிய கட்டம்.
இதற்கு முன்னர் நடந்த பெரும் பயணங்கள் போல இந்த பயணத்திற்கும் இரு வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி வந்தது.2023இன் இறுதியில் கோழிக்கோட்டில் நடந்த மலபார் இலக்கியத் திருவிழாவில் இலட்சத்தீவின் தலையாய ஆளுமைகளில் சிலரை சந்தித்ததும் அவர்களிடமிருந்து தீவு வாழ்க்கையின் மேல் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் சுமைகளை கேட்க நேர்ந்ததும் பயணத்திற்கான புறப்பாட்டை இன்னமும் நெருக்கமாக்கிக் கொண்டு வந்தது.
இலட்சத்தீவு பயணத்திற்கான திட்ட வரைவு அணியமாகியது. என் வாழ்வில் நான் இதுவரை நடத்திய பயணங்கள் அனைத்தும் என் செலவில் நடந்தேறியவை. முதன் முதலாக இப்பயணத்திற்கு அனுசரனையாளர்களைத் தேட வேண்டிய சூழல். அணுக்க நண்பர்கள் மூன்று பேரிடம் விஷயத்தை சொல்லவும் உரிய தொகை வந்து சேர்ந்தது.
பச்சை விளக்கு எரியவும் வேலைகள் தொடங்கின. 2024 ஆம் வருடத்திய நோன்புக்கும் எனது பயண திட்டமிடல் நாட்களுக்கும் ஒன்றரை மாதங்களே இடைவெளி. றமதான் காலங்களில் பகலில் தீவே முடங்கி விடும். அத்துடன் தென்மேற்கு பருவத்திற்கான முன்னெடுப்பாக கடல் கொந்தளிக்கத் தொடங்கி விடும் என்பதால் மே மாத நடுவில் தொடங்கி செப்டம்பர் வரை விரைவுப்படகு சேவைகள் நிறுத்தப்பட்டு விடும். கப்பல்கள் மட்டுமே ஓடும். இடங்கிடைப்பது சிரமம் என அகத்தி தீவில் அஞ்சல் நிலையத்தலைவராக பணியாற்றும் நண்பர் ஸலாஹுத்தீன் பீச்சியத் தகவல் தெரிவித்திருந்தார்.
உள்ளூர் காவல் நிலையத்திலிருந்து ‘காவல்துறை சரிபார்ப்பு சான்றிதழ்’ கிடைத்த பிறகே மற்ற பயண ஆவணங்களுக்கான வேலைகள் செய்ய முடியும். முன்னர் இலடசத்தீவில் ஒரு சுற்றுலாப்பயணி குடித்து விட்டு கரச்சல் பண்ணியதால் இந்த முறைமை பின்பற்றப்படுகிறது என சொல்லப்பட்டாலும் இந்தியப் பெரு நிலத்தில் தேடப்படுபவர்கள்/குற்றவாளிகள் அங்கு போய் தலைமறைவாகி விடக்கூடாது என்பதுதான் காரணமாக இருக்க வாய்ப்பு கூடுதல். பெரு நிலத்திலிருந்து பல நூறு கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள பன்னாட்டு ஆழ்கடல் பரப்பில் தென்னை மட்டையை பிடித்துக் கொண்டு கடுகாகி தப்பி விடுவார்களோ என்ற ஆள்வோரின் அச்சம்தான் தலையாய காரணமாக இருக்கும்.
காவல்துறை சான்றிதழ் கிடைக்கவே பத்து நாட்களாகி விட்டன. அதன் பிறகு அதை இலட்சத்தீவிலுள்ள எனது பிணைமையாளருக்கு(ஸ்பான்சர்) அனுப்ப வேண்டும்.இலட்சத்தீவின் மாவட்ட ஆட்சியரகத்திற்கு காவல்துறை சான்றிதழ். ஆதார் அட்டை,ஒளிப்படம் ஆகியவற்றை இணைத்து தனது பிணைமை கடிதத்தை எந்தெந்த தீவுகளுக்கு நுழைவு இசைவு வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு அவர் அனுப்ப வேண்டும்.
இலட்சத்தீவு மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து இசைவாணை(பர்மிட்) கிடைத்த பிறகே கப்பல்/படகிற்கான பயணச்சீட்டிற்கு நாம் முயல இயலும்.ஆட்கள் வசிக்கும் பத்து தீவுகளுக்கும் நண்பர் குறிப்பிட்டு விண்ணப்பித்திருந்ததை மாவட்ட ஆட்சியரகம் ஏற்றுக் கொண்டு ஒரு மாத கால இசைவாணை வழங்கியது.
ஒரு மாத காலத்திற்குள் இத்தனை தீவுகளுக்கும் போக முடியாது. எனக்கும் பறந்து பட்டை கட்டும் போக்கிற்கும் மிகத் தொலைவு. ஆழ இறங்கி எவ்வளவு இடம் போக முடிகிறதோ அவ்வளவு போதும்.கூடினால் வழிந்து விடும். ஒன்றில் நிறைந்தால் ஒன்பதில் நிறைந்தது போல. அத்தனை தீவுகளுக்கும் போனாலும் போகாவிட்டாலும் அவற்றிற்கு போக இயலும் என்ற நினைப்பே பெரும் விடுதலைதான்.
ஃபிப்ரவரி 17,18 ஆகிய தேதிகளில் கடமத் தீவில் இலட்சத்தீவு இலக்கியத்திருவிழா ஏற்பாடாகியுள்ளது.அதில் பங்கேற்கும் தோதில் வாருங்கள் என நவ்ஷாத் தெரிவித்தார். இஸ்மத் ஹூஸைனும் பிப்ரவரி 12 அல்லது 13 வாக்கில் கொச்சியிலிருந்து அந்த்ரோத் தீவிற்கு சிறப்பு விரைவு படகு ஏற்பாடாகியுள்ளது. அதில் வரவேண்டியிருக்கும் என்றார்.
ஒரு வாரங்கழித்துதான் பயணம் புறப்பட வேண்டும் என இருந்தவனுக்கு திடுமென புறப்பட வேண்டிய சூழல். இளம் வயதில் நின்ற நிலையில் பயணம் புறப்பட்டது போல நடுத்தர வயதில் முடிவதில்லை. உடலும் மனதும் அறிவும் ஒத்திசைவுக்கு வரும் வரையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
ஃபிப்ரவரி ஒன்பது,பத்தாம் தேதிகளில் காசர்கோட்டில் தென்னக பதிப்பாளர் சந்திப்பொன்றுக்கு ஏற்பாடாகியிருந்தது.அதற்கு போவதோடு இலட்சத்தீவிற்குரிய சட்டி பொட்டிகளையும் சேர்த்தே கொண்டு போய் விடலாம். வீணாய் இந்த தொங்கலுக்கும் அந்த தொங்கலுக்கும் அலையாதீர்கள் என மனைவியும் வலியுறுத்தினாள்.
நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் வழி கொச்சியைக் கடந்துதான் காசர்கோடு போக வேண்டும். காசர்கோட்டு நிகழ்ச்சியை முடித்து விட்டு மீண்டும் பாதி தொலைவைக் கடந்து கொச்சியில் போய் இறங்கினேன்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஓரத்தில் கிடக்கும் பெரு நகரமான கொச்சியில் எந்த மூலையிலும் போய் தங்கி விட இயலாது. இலட்சத்தீவிற்கு புறப்படும் கப்பல்துறையை வெலிங்டன் என்ற செயற்கைத் தீவில் வைத்திருந்தார்கள். கப்பல்/படகு புறப்படும் நேரமென்பது பெரும்பாலும் விடியற்காலையில் இருக்கும் என்பதால் அதனருகிலேயே விடுதிக்கு ஏற்பாடாக்கும்படி நண்பரும் ‘நெய்னா மரக்காயர் வரலாறு- அறியப்படாத உண்மைகள்’ நூலின் ஆசிரியருமான மன்சூர் நெய்னாவிற்கு சொல்லியிருந்தேன்.
எர்ணாகுளம் இரயில் நிலையத்திற்கு பின்னிரவில் வந்து சேர்ந்த என்னை தன் உறக்கம் கெடுத்து இரு சக்கர ஊர்தியில் விடுதிக்கு அழைத்து சென்றார் மன்சூர் நெய்னா. இருட்டிற்குள் நிற்கும் கரிய எருமை போல பளபளத்துக் கிடந்தது கொச்சி.