ரிஹ்லா ஷீத்(இராமநாதபுரம் மாவட்டம்) பயணத்தில் நாங்கள் தனுஷ்கோடியிலிருந்து திரும்பும்போது சரந்தீப் (இலங்கை) போவது குறித்த உரையாடல் எழுந்தது. ரிஹ்லா சரந்தீபிற்கான முதல் விதை அங்குதான் விழுந்தது.
சுரண்டி ஒடுக்கியது காலனியம். அதனை தீர்க்கவந்த தேசமும்,தேசியமும் விடுதலைக்கான பெரு வழி என்பது போலதொரு தோற்ற மயக்கத்தை முதலில் உண்டுபண்ணி விட்டு பின்னர் அவைகளும் தானொரு தீர்வல்ல, காலனியங்களை உள்ளுக்குள் உண்டாக்கும் நோயின் நீட்சிதான் என்பதை நிரூபித்திருக்கின்றன
இந்த பிரிவினைவாத கோடாரிக் கோட்பாடுகள் தலையெடுக்கும் முன்னர் மனிதர்களை சற்று அகலமாக்கி வைத்தவை கடல்,மலை,காடு, பாதையின் தொலைவுகள் மட்டுமே. அது இயல்பான இயற்கையான அகலம். சிறியதொரு ஒரு புன்னகையின் கீற்றில் செயல்களின் நறுமண வீச்சில் அந்த அகலங்கள் விடை பெற்று விடும்.
இன்றில்லாவிட்டால் நாளை நாளை இல்லாவிட்டால் நாளை மறு நாள் என விரைவில் விழுந்து நொறுங்கப்போகின்றன இந்த செயற்கைச் சுவர்களும் அகழிகளும்.
பெரும்பான்மைXசிறுபான்மை,தமிழ் நீச பாசை, எதிரிகளாக அல்லது காலனியாக இருக்க மட்டுமே தகுதி பெற்ற அண்டை நாடுகள், மலையாளம்,தெலுகு,கன்னடம்,உர்தூ உள்ளிட்ட பிற மொழிக்காரர்கள் வந்தேறிகள், இஸ்லாமும் கிறித்தவமும் அந்நியக் கோட்பாடுகள்,வடமேற்கெல்லைநாடுகளும்,அரபகமும், ஆஃப்ரிக்க,பாரசீக,தென் கிழக்காசிய நாட்டவர்களும் மிலேச்சர்கள் என வெட்டு இலக்கணத்தை உச்சாடனமாக்கி ஓங்காரிக்கின்றன மத,மொழி,இன,நில வழி தேச உள் வெளி காலனியாதிக்க தெய்வங்கள்.
மரு பூமியிலும் பூக்கள் மலரத்தான் செய்கின்றன. சுர பேதங்களினால் இசையின் இனிமையை பறிக்க முடிவதில்லை. எல்லைகளொழிப்பவர்களும் நிலங்களை ஒரே கலனாகக்காண்பவர்களும்தான் இவ்வுலகு என்பது எல்லோருக்குமான ஒற்றை அலகு என்பதை நினைவூட்டுவதோடு அதை நிறுவிக் கொண்டே இருப்பவர்கள்.
பிளக்காதீர் இணையுங்கள் என்ற சிறு கொடிதான் ரிஹ்லா பயணங்களின் பதாகை. வேறு மொழி, வேறு திணை என இது வரை நான்கு பயணங்களை மேற்கொண்டுள்ளோம். கொள்வதும் கொடுப்பதுமான அனுபவங்கள்,ஒன்றென ஆதி இயல்புக்குள் மீளும் தருணங்கள்.கண்டங்களின் நெசவாளிகள் என்ற நிலைத்த தித்திப்புதான் நம்முன் உள்ள ஒரே ஊக்க விசை.
ரிஹ்லாவின் அய்ந்தாவது அத்தியாயமாக ரிஹ்லா சரந்தீப். அதாவது இலங்கைக்கானப் பயணம் முடிவாகியது.
கடவுச்சீட்டு,நுழைவிசைவு,வானூர்தி முன்பதிவு ஆகியவற்றுடன் பயணப்பாதை வரைபடத்திற்காகவும் மூன்று மாத காலத்திற்கு முன்னரேயே அணியமாகத் தொடங்கி விட்டோம்.
புறப்பாடு&வருகை உள்ளடக்கமாக மொத்த பயண நாட்கள் பதினெட்டு. இந்த நாட்களுக்குள் மொத்த நாட்டையும் சுற்ற இயலாது என்பதால் வடபகுதி நீங்கலாக திட்டமிடப்பட்டது. எனினும் அங்கு சென்ற பிறகு போதிய வாய்ப்பின்மையின் விளைவாக மன்னார்,திரிகோணமலை மாவட்டங்களுக்கு போவதையும் கைவிட வேண்டியிருந்தது.
ரிஹ்லா பயண முகமைக்கு வணிக நோக்கில்லாததால் கூடுதல் ஆட்களை சேர்க்க வேண்டாம் எனத் தீர்மானம்.அய்ந்து பேர்கள் வரையென்றால் பயண நகர்வுகளுக்கு எளிது என சிராஜ் மஷ்ஹூர் வலியுறுத்தியிருந்தாலும் ஏழு பேர்கள் வரை எண்ணிக்கை போவதை தவிர்க்கவியலவில்லை. இது போக மேற்கொண்டு வரவிருந்த இரண்டு பேர்களை தவிர்த்து விட்டோம். பயண சிரமங்கள் இருந்தாலும் இந்த ஏழு பேர்கள் இல்லாவிட்டால் இப்பயணம் அதன் இலக்கை ஓடி அடைந்திருக்காது.
ஆய்வு மாணவர் ஆஷிர் முஹம்மது, எழுத்தாளரும் ஊடக பயிற்றுநருமான நவ்ஷாத், தகவல் தொழில்நுட்பத்துறையின் காஜா காதர் மீறான் பந்தே நவாஸ், பதிப்பாளர் உவைஸ் அகமது,மலபார் வரலாற்றாய்வாளரான அப்துல்மஜீத் நத்வி,எழுத்தணிக்கலைஞரும் காக்ரார்ட் கலையகத்தின் நிறுவனருமான அப்துல்கறீம் ஆகியோருடன் நானுமாக எழுவர் அணியானோம்.
இலட்சத்தீவின் கில்தானைச் சேர்ந்த எழுத்தாளரும் அத்தீவின் முதல் நாவலை எழுதியவருமான நண்பர் இஸ்மத் ஹூஸைனும் இணைந்திருந்தால் எண்மர் அணியாக உருவெடுத்திருக்கும். அவர் அரசுப்பணியாளர் என்பதால் துறை சார்ந்த இசைவைப் பெறுவதற்கான போதிய அவகாசமில்லை.
இலங்கை வந்தால் என்னென்ன திட்டங்கள் வைத்திருந்தீர்கள்?என இஸ்மத்திடம் ஓர் ஆறுதலுக்கு கேட்டதற்கு நானொரு தீவுக்காரன் என்பதால் இன்னொரு தீவின் தனித்தன்மையை புரிந்துக் கொள்வதற்கும் இரு கரைகளிலுமுள்ள சூஃபித் தொடர்புகளைப் பார்ப்பதற்கும் மாசிக்கடனாளிகளைப்பார்ப்பதுமாக மொத்தத் திட்டம்“என்றார்.
மாசிக்கடன் என்பது பெருங்குணத்துடன் இணைந்தது. அதில் உங்களால் செய்வதற்கு ஒன்றுமில்லையே என சொல்ல நினைத்துக் கொண்டிருக்கும்போதே தான் ரிஹ்லா சரந்தீபில் இணையவியலாமல் போனதில் பயங்கர சங்கடமுண்டு என இரு முறை வருந்தினார் இஸ்மத்.
சென்னையிலிருந்து ஆறு பேர்களாத்தான் புறப்பட்டோம். அப்துல்கறீம் தோஹாவிலிருந்து நேராக கொழும்பில் வந்திணைந்து கொள்வதாகத் திட்டம்.
பொதுவான பயணப் பேணுதல்களுக்கப்பால் இப்பயண நிரலில் வேக ஓட்டம் இல்லை,பிரபலமான சுற்றுலா மையங்களை முன்னிலைப்படுத்துவதில்லை என சில பொதுவான புரிதல்களை ஏற்படுத்திக் கொண்டோம். முழுவதுமாக முடியாவிட்டாலும் இவ்விருப்பங்களில் பகுதியையாவது நிறைவேற்ற இயன்றது.
பயணத்தின் நிறைவில் ஆஷிர் முஹம்மது சொன்னார் “பாஆய்! எப்போதும் வண்டிக்குள்ளேயே இருப்பது போல இருக்கே”.
என்ன செய்ய? நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்ற தத்துவ சமாதானத்தை துணைக்கழைத்துக் கொள்ள வேண்டியதுதான்..
புறப்படும் அந்நாளுக்குரிய காலைப்பொழுதும் புலர்ந்தது. எங்களது பயணச்சீட்டில் உணவைப் பற்றி ஒரு குறிப்புமில்லை. வானூர்தி நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஊழியப் பணியாளருடன் தொடர்பு கொண்டு இதைப்பற்றிக்கேட்டோம்.
“உங்களது பயணக்கட்டணத்தில் அது இல்லை” என்றவரிடம் வானூர்திக்குள் சுவாசிப்பதற்கான உயிர்வளியை இலவசமாக பயணிகளுக்கு வழங்குவதற்குரிய நன்றிகளைத் தெரிவித்துவிட்டு இத்துயரை விழுங்கி விட்டோம். புறப்படுவதற்கு முன் மதிய உணவின் இல்லாமையை நினைவிலிறுத்திக் கொண்டே அருகிலுள்ள உணவகத்தில் காம்போ பசியாறை முடித்துக் கொண்டோம்.
எங்களது பயணக்குழுவிலுள்ள ஒருவரின் கடவுச்சீட்டில் ‘குடியகல்வு பரிசோதனை தேவை’ முத்திரை இருந்ததினால் குடியகல்வு துறை மேல் அலுவலரிடம் போய் கையொப்பம் வாங்கி வருமாறு பணிமேடையில் இருந்தவர் பணித்தார். தீப்பெட்டி படவி போலிருந்த ஆண்டு மாறிய டப்பாக்குள் ஒளிந்திருந்த கேமிராவை உற்றுப்பார்த்தல் உள்ளிட பணிமேடை சடங்குகளை முடித்து விட்டு போனவரின் வருகைக்காக ஏனையவர்கள் காத்திருந்தோம்.
தொலைவிலிருந்து காணும்போது நம்மவர் வலதும் இடதுமாக கையைஆட்டுவது தெரிகிறது. மணித்துளிகள் செல்கின்றனவே தவிர அவரை விட்டபாடில்லை. அங்குள்ள உயர் அலுவலரின்அறைக்குள் அழைத்து செல்வதும் வெளியே இருக்கையில் காக்க வைப்பதுமாக காட்சிகள் தொடர்கின்றன.
இதற்கிடையில் எங்களை நோக்கி காவலரின் உடல் வாகோடு இயல்பு உடையில் நெட்டை மனிதரொருவர் வந்து சேர்ந்தார். எங்கள் ஒவ்வொருவரையும் பற்றி கேட்டறிந்ததோடு கடவுச்சீட்டுக்களையும் வாங்கிப் பார்த்து விட்டு எங்களில் இன்னொருவரையும் கையோடு கூட்டிக் கொண்டுப் போனார்.
மறுபடியும் அதே கையசைவுகள், அறைக்கு நடத்தலுடன் கூடுதலாக ஒரு விஷயம் நடந்தது.. தூய்மைப்பணியாளர்களை அழைத்து அறைக்கலன்களுக்கு அடியில் பெருக்கத் தொடங்கினர். திரும்ப திரும்ப புகுந்து குனிந்து உருண்டு பெருக்கினர்.எங்களுக்கோ ஒன்றும் விளங்கவில்லை.பின் நவீனத்துவ பனுவலொன்றை வாசித்துக் கொண்டிருப்பது போன்ற அனுபவம்.தலைமைப் பேயனின் ஸ்வச் பாரத் திட்டத்தை முழுக்கரிசனத்தோடு செயல்படுத்துகிறார்களா? இரவு,பகலுக்குள் பித்தல்லவா ஏறிக் கிடக்கிறது?
அரைமணி நேர அல்லாட்டத்திற்குப்பிறகு ஒரு வழியாக இருவரும் மீண்டனர்.தங்களுக்கு நடந்ததைப்போலவே திருவனந்தபுரத்திலிருந்து வந்த ஒரு பெண்ணுக்கும் நேர்ந்ததாகக் கூறினர். ‘குடியகல்வு சோதனை தேவை’ முத்திரையின் காரணமாக தொழில்நுட்ப தேர்ச்சியற்ற இந்தியக் குடிமக்கள் வெளி நிலத்தில் சுரண்டப்படுவதை தவிர்ப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு எனச் சொல்லிக் கொண்டாலும் இங்கு நடப்பது வேறு மாதிரியாக உள்ளது.
அலுவலர்களின் உரையாடல்களிலிருந்தும் நடத்தைகளிலிருந்தும் தெளிவான விடயம் இதுதான்.எளிய பயணிகளை அலைக்கழித்தல், அதிகாரத் திமிர்ப்பு,மதக்காழ்ப்பு,பிற பாகுபாடுகளுமே இம்மாதிரி வரம்புமீறல்களுக்கு காரணமாக அமைகின்றன.
நான் பார்த்த வகையில் சென்னை,மதுரை,திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வானூர்தி பயணிகளை குடியகல்வு பணி மேடையில் இருப்போர் நடத்தும் விதம் அவ்வளவு தரம்,நாகரிகம் மிக்கதாக இல்லை.நாய்த்தோரணைகளை இவர்கள் கைவிட வேண்டும். அயல் நிலங்களில் குடியகல்வு&குடிவரவு துறையினர் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை அங்கு போய் அவர்களின் காலடியில் இருந்து இவர்கள் கற்க வேண்டும். நாம் கொடுக்கும் வரிப்பணத்தில்தான் இவர்களின் அன்னமும் குடிப்பும்.
“எல்லாம் சரி. என்ன எழவுக்கு குனிஞ்சு குனிஞ்சு பெருக்கினானுவோ?” என அழைத்துச் செல்லப்பட்டவர்களிடம் கேட்டோம். பரிசோதிக்க வாங்கிய ஏறும் சீட்டை(போடிங்க் பாஸ்) தொலைத்து விட்டிருக்கிறார்கள்.அதற்குத்தான் இத்தனை வாருவல்களும்.
கொழும்பு பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் குடிவரவு&அகல்வுக்காரர்களிடம் இந்த சிக்கல்களெல்லாம் இல்லை. சொற்களைஅவர்கள் வீணடிப்பதில்லை. எல்லாம் நொடிப் பொழுதுகள் செலவாகும் முத்திரை குத்தல் மட்டுமே.
வானூர்தி நிலையத்திலிருந்து வெளிவரும்போது கடும் மழை. வானியல் துறையிலிருந்து செந்நிற எச்சரிக்கை விடப்பட்டதாக தெரிவித்தனர். தென்னிலங்கையின் கரையோர நகரான மாத்தறை மாவட்டம் வெலிகமைதான் அன்றிரவு நாங்கள் தங்க வேண்டிய இடம். அங்கு சென்று சேரும் வரையிலும் மழை விடவில்லை.
வெலிகமையில் நல்ல வசதியான முழு வீடொன்றை வாடகைக்கு எடுத்திருந்தோம். இடியாப்பம்,பராத்தா,பரிப்பு(பருப்பு),ஆக்கிய இறைச்சி என இரவுணவு கழிந்தது.ராஹத்தான இரவுறக்கம்.
இலங்கை இன்று தனி நாடாக இருக்கலாம். அய்ந்நூறு வருடங்களுக்கு முன் இந்தியப்பெரு நிலத்தின் மேற்கு,கிழக்கு கடற்கரைகளில் நடந்த காலனிய அடர்ந்தேறுதல் இலங்கைக்குள்ளும் அப்படியே நிகழ்ந்தது.
கேரளம்,இலட்சத்தீவுகள்,கொங்கண்,தமிழகம் என பெருந்தொற்றாகிப்படர்ந்த போர்த்துக்கீசிய பரங்கியர் இலங்கையையும் தொற்றினர். இலங்கையின் முழு பகுதியிலும் பரங்கியரின் அழிவு ஆட்டத்தின் கால்படாத இடமேயில்லை. அத்தொடர்ச்சியில் இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களில் வெலிகமையும் ஒன்று. இங்கு முஸ்லிம்களின் மொத்த வாழ்க்கை உட்பட அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் பரங்கியர்களால் அழிக்கப்பட்டன.அதன் பின் விளைவுகள் சில நூற்றாண்டுகளுக்கு தொடர்ந்தன.
கொடுந்தீயொன்று ஆழி வளைந்தால் அதனை அவிக்க முகில் குவையின் பால் பொழிவு தொடர்வதைப்போல் தீய்ந்த நிலங்களில் உயிர் நீர் தெளித்தனர் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள். முந்நிலங்களிலும் பரங்கியர்கள் அழிவுக்குள்ளாக்கிய முஸ்லிம்களின் நெறி,பண்பாட்டு,பொருளியல் தளங்களில் அன்னார் மறு கட்டுமானம் செய்தனர். அவற்றில் எண்ணற்ற வாழ்வாதார உதவிகள்,கல்வி நிறுவனங்கள்,தைக்காக்கள்,பள்ளிவாயில்கள் அடங்கும்.
அவ்வகையில் முதல் கணக்காக வெலிகம அல்பாரி அறபுக் கல்லூரி கி.பி. 1884 ஆம் ஆண்டு மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களால் தொடங்கப்பட்டது. ரிஹ்லா சரந்தீபின் முதல் வருகையையும் இம்மத்ரசாவிலிருந்துதான் தொடங்கினோம்.
இம்மத்ரசாவில் பழைய கட்டுமானத்தின் எச்சமாக ஒரு அறை மட்டும்தான் மிச்சம். அதற்குள் முதல் முதல்வரின் மண்ணறை உள்ளது. மற்றவை பின்னர் தேவைக்கேற்ப விரித்துக் கட்டப்பட்டிருக்கின்றன. தற்சமயம் மத்ரசாக்கல்வி முறையானது காலம்,சூழலின்தேவைக்கேற்ப வளர்ச்சி கண்டிருக்க அல்பாரி மத்ரசாவோ தொடங்கிய இடத்திலேயே நிற்பது உறுத்தலாகத்தான் இருந்தது.
மாத்தறைக்கு வண்டி கிளம்பியது. மகா துறை = பெருந்துறைமுகம் என்பதுதான் மாத்தறை என மருவியதாகச் சொல்கிறார்கள். சரியாக இலங்கையின் தென்முனை. ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீதிகளில் அத்தனை ஓட்டமும் பரபரப்புமில்லை.
மாத்தறையின்பிரதான சாலையில் ஆற்றங்கரையோரமுள்ள வெண்ணிற முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளிவாயிலுக்கு சென்றோம். காலனிய பாணியில் கட்டப்பட்டிருந்தது வியப்பளித்தது. அங்குள்ளவர்களிடம் கேட்டதில் யாருக்கும் பெரிதாக வரலாறு தெரியவில்லை. அதன் மாடங்கள் கிறித்தவ தேவாலயத்தை நினைவுபடுத்தின. பள்ளிவாயிலின் வளாகச் சுவரையொட்டி ஓடும் நில்வல ஆறு மதங்கலங்கிய யானையின் பெருங்கண் போல செந்நிறத்தில் கலங்கி ஓடிக்கொண்டிருந்தது. காலனிய அழகியல் X மக்களின் அழகியல் இவற்றிற்கிடையே இணக்க,பிணக்கங்களை ஆய்வதற்கு இப்பள்ளிவாயில் உதவக்கூடும்.
கலப்படமற்ற வெய்யில் காய்ந்து கொண்டிருந்த மாத்தறை சாலையின் நடுவே அய்ரோப்பிய கட்டிடப்பாணி முகப்பைக் கொண்டிருந்த கோட்டையொன்று கவனத்தைக் கோர உள்ளே சென்றோம். ஒரு காலத்தில் ஒல்லாந்துகாரர்களின் சந்தையாக இருந்திருக்கிறது. (நெதர்லாந்துகாரர்களுக்கு இங்கு இந்த பெயர்தான்).
உலக அளவில் டச்சு,பழைய தமிழ் ஏடுகளில் உலாந்தர், கேரளத்தில் லந்தக்கார் என எத்தனைப் பெயர்களில் எத்தனை விதமாக அழைக்கப்பட்டாலும் அவர்கள் நமக்கு காலனியாதிக்க ஆக்கிரமிப்பாளர்கள்தான்.
ஒல்லாந்தர் சந்தை தற்சமயம் பூச்சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்த சிங்களத்திகள் விற்கும் நாற்றங்கால் பண்ணையாகி உருமாறி நிற்கிறது. பூத்த நினைவுகளுடன் மாத்தறையிலுள்ள சரசவி புத்தக விற்பனையகத்திற்கு சென்றோம். ஃப்ரீ மேசன்களைப்பற்றி சொல்லக் கூடிய புத்தகங்களை தேடிக் கொண்டிருந்த எனக்கு ‘ THE FREENASONS – THE ILLUSTRATED BOOK OF AN ANCIENT BROTHERHOOD ‘ என்ற ஆங்கிலப்புத்தகம் கிடைத்தது.ரிஹ்லா சரந்தீபில் எனது முதல் வாங்கல். வாசித்துப்பார்த்த பிறகுதான் விதந்தோதுதலா? விமர்சனமா?உடன்பாட்டுப் பாணி அறிமுகமா? என்பது விளங்கும்.
பெருந்தொற்று& நொடிந்த பொருளாதாரத்துக்குப் பிறகு புத்தகக்கடைகளில் அவ்வளவாகக் கூட்டமில்லை எனச் சொன்னார்கள். இருந்தாலும் இலங்கையிலுள்ள தலையாய மூன்று சமூகங்களில் சிங்களவர்கள்தான் கூடுதல் புத்தகம் வாங்கி படிக்கின்றனராம்.
நண்பர் நவ்ஷாத் தான் போகுமிடங்களிலுள்ள புத்தக அங்காடிகளை தவறாமல் பார்வையிடும் வழமை தனக்குண்டு எனசொன்னார், இதன் வழியாக வாசிப்பு,சிந்தனை,அறிவு ஆகிய திறன்களில் அச்சமூகத்தின் திசைவழியை கணிக்கலாம் என்றார்.சுவாரசியமான ஆய்வாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
காலஞ்சென்ற கலாநிதி (முனைவர் )எம்.ஏ.எம்.ஷுக்ரி(1940-2020)அவர்கள் மாத்தறைக்காரர்தான்.இங்குதான் அவர் அடங்கப்பெற்றிருக்கிறார். ராஹுல சாலை ஷேஹ் மதார் மைய்யத்துக்காட்டிலுள்ளஅவரின் அடக்கத்தலத்திற்கும் சென்று வந்தோம்.அவரின் மண்ணறையை செடிகள் இதமாய் பொதிந்திருந்தன.
இலங்கையின் மணிகளில் ஒருவர்.கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி.இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அறிவாக்க மறு கட்டுமானத்திற்கு மிகப் பெரும் பங்களிப்பை ஆற்றியவர். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வரலாறு, கல்வி, பண்பாடு, சமய நல்லிணக்க வாழ்வு, பண்பாட்டு வளர்ச்சி என்பவற்றிற்காக தனது நீண்ட கால வாழ்வை முழுமையாக ஒப்புக் கொடுத்தவர். இஸ்லாத்தையும் நவீனத்துவத்தையும் நன்கு விளங்கியவர்.
மௌலானா ரூமி,அல்லாமா இக்பால், அபுல் ஹஸன் அலி நத்வி, இப்னு கல்தூன், ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி, மாலிக் பின் நபி போன்றவர்கள் அவரின் மானசீக ஆசான்கள்.சூஃபிய மரபை சமூகத்தின் இரு எதிர் நிலைகளிலிருந்து விடுவித்தவர். அவரின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த ‘இஸ்லாமிய சிந்தனை’ முத்திங்கள் ஆய்விதழிலும் பிற இதழ்களிலும் பல காத்திரமான கட்டுரைகளை நெடுங்காலம் தந்தவர்.நிறைய நூற்களையும் தந்துள்ளார்.அவரின் ‘சூஃபித்துவம் – இஸ்லாத்தின் ஆன்மீகப்பரிமாணம்’ என்ற நூலை தமிழகத்தில் சீர்மைப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இலங்கை ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளராக அவர்பணியாற்றிய நாட்களில் சுக்ரி அவர்களைப் பலமுறைக் கண்டிருக்கிறேன். சொல்லுக்குக் கூட தெரியாமல் மிகச் சிக்கனமாக பேசக்கூடிய மென்னியல்பாளர். அவரிடம் கை குலுக்கிய போது நான் உணர்ந்த ஈர மென்மை இன்னும் அப்படியே உள்ளது.அவரின் மறைவுக்கு வட இந்தியாவின் மதிப்பு மிக்க ஆங்கிலமொழி முஸ்லிம் அச்சிதழ்களும் நினைவேந்தல் செலுத்தியிருந்தன.