சென்று திரும்பிய தொலைவு:370 கிலோ மீட்டர்கள்.
காலம்: 17 மணி நேரம்
செலவு 2080/=₹
ஊர்தி: ஆட்டோ,தொடர்வண்டி,பேருந்து
ஆட்கள்:02
ஒரு பயணத்தை இப்படி எண்களாக குறுக்கவியலாததுதான். ஓர் சுவைக்காக அப்படி பதிந்தேன்.
செங்கோட்டை – புனலூர் தொடர்வண்டி பாதையில் பயணிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் விருப்பம் 02/11/2024 திங்களன்று நிறைவேறியது.
சென்னை – புது தெஹ்லி, தாணே — கல்யாண் பார்சிக், கொங்கண் என நீண்ட குகை இருப்புப்பாதைகளில் பல்லாண்டுகளாக பயணித்தவன். அவற்றின் பேருருக்கும்,நீளத்திற்கும் பழமைக்கும் குதூகலிக்க வைக்கும் இயற்கை எழிலுக்கும் அருகில் செங்கோட்டை புனலூர் குகைத்தடம் வராதுதான் என்றாலும் நமது கையெட்டும் பகுதியிலிருக்கும் குகைக்கடவையை பார்க்காமலிருப்பது கணக்கில் குறைதான்.
கடந்த சனிக்கிழமையன்று இங்கு கூட்டாளிகளுடன் போவோம் எனத்தோன்றி தொடர்வண்டி நேர அட்டவணை குறித்து வினவிக் கொண்டிருக்கும்போது அதைக் கேட்டுக் கொண்டிருந்த என் இணையர் நான் வருகிறேன் என முதல் பதிவு செய்து விட்டாள். மொத்த பட்டாளமே ஒற்றையாள் இராணுவமாக இருக்கும்போது கூட்டாளிகளும் குழுவாளிகளும் தேவைப்படாது அல்லவா?
செலவைக் குறைக்க எண்ணி மதியத்திற்கு ஏதாவது கட்டமுது எடுத்துக் கொள்வோமே என்றவுடன் அவள் தன் பணியைக் குறைக்க எண்ணி கடையில் அமுதுண்ணுவோமே என்றாள். அதுவும் சரிதான். அல்லும் பகலும் சமையல்கட்டுக் கதியாளர்களுக்கு இந்த ஆறுதலாவது இல்லாவிட்டால் எப்படி?
காலை ஏழு மணிக்கு குளிக்காத நாற்றத்துடன் ஆட்டோவைக் கொண்டு வந்தான் நண்பன். பேயன் விளையில் இட்டிலி,உளுந்து வடை என பசியாறைப் பொட்டலங்கட்டிக் கொண்டோம். புனலூரில் இறங்கி அடுத்த வண்டியில் ஏறி ஊர் திரும்புவதாக திட்டம். குகைப்பாதையை காண்பது மட்டுமே கொண்ட குட்டி ஒற்றை இலக்கு பயணம்.
அள்ளிப் போட்டுக் கொண்டு திருநெல்வேலி செல்லும் பனங்காட்டு எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது.எட்டரை மணிக்கு திருநெல்வேலி சந்திப்பிற்கு வந்தடைந்தோம். செங்கோட்டைக்கான பயணியர் தொடர்வண்டி ஒன்பதே முக்காலுக்குத்தான் என்பதால் வெளியில் சென்று தேநீரருந்தி விட்டு பலகாரக்கடையில் உப்பேறியும் நான்கு கத்லி துண்டங்களும் வாங்கிக் கொண்டோம்.
வண்டியும் நேரத்திற்கு புறப்பட கொஞ்ச நேரத்திலேயே குற்றாலம் சென்னை/கொங்கு மண்டல குடும்பத்தினர் இடிதடியாய் வந்து இருக்கைகளை நிரப்பினர். தெலுகும் தமிழும் கலந்த பேச்சில் பொழுது கரைந்தது.
தென்காசி வரைக்கும் கால நிலை இதம் என சொல்லமுடியாது. குன்றிய பசுமையும் வெளிச்சமும் கரடுமாக புறம் காட்சியளித்தது.செங்கோட்டையை நெருங்க நெருங்க மேற்குத்தொடர்ச்சி மலையின் தண்மை தன் சாளரங்களைத் திறக்கத்தொடங்கியது.பூவாக இறங்கிய மழைத்துளிகள்.
செங்கோட்டை நகருக்குள் போய் சாப்பிட்டு விட்டு புனலூருக்கான பயணச்சீட்டையும் எடுத்து இரண்டாம் நடைமேடைக்கு வந்து சேர்ந்தோம். ஆல மர வேர் போல அகன்று ஊன்றிய தொடர்வண்டி நிலையத்தின் அமைவிடம்.நல்ல வடிவுப்பொருத்தம். நாங்கள் போக வேண்டிய மதுரை – குருவாயூர் தொடர்வண்டி பிற்பகல் மூன்று பத்துக்குத்தான். ஒன்றாம் நடைமேடையில் மதியம் இரண்டரை மணியளவில் மதுரைக்கு செல்ல வேண்டிய வண்டித்தொடர் நின்றுக் கொண்டிருந்தது.
மொத்த நிலையத்திலும் எங்களிருவருடன் துப்புரவுப்பணியாளர் மூவர்,மேலாளர் ஒருவர்,கொல்லம் செல்லக் காத்திருந்த ஒரு பெண் பயணி,நடைமேடைக்கூரையின் சட்டகத்தில் அலகை தேய்த்துக் கொண்டிருந்த காக்கை. இவ்வளவு பேர்கள்தான்.
சென்னை,மதுரை,குருவாயூருக்கு எனதினமும் மூன்று தொடர்வண்டிகளும் வாரத்தில் இரு நாட்கள் வேளாங்கண்ணி- எர்ணாகுளத்துக்கு கூடுதலாக ஒரு வண்டி என தொடர்வண்டி போக்குவரத்து மிகச் சுருக்கம். அதனால் பயணியர் நடமாட்டமில்லை.
நிலையத்திலுள்ள மற்றவர்கள் ஒவ்வொரு திசையில் இருந்ததினால் மொத்த நிலையத்திலுமே நாங்களிருவர் மட்டும்தான் என்ற தோற்ற மயக்கம். மங்கிய கதிரொளியும் மழைத்தூறலும் மென் காற்றும் முற் பகல் நேரத்து சொக்கலை உண்டுபண்ணின.வெளிக்கும் நமக்குமான மௌன உரையாடலின் முற்றமானது தொடர்வண்டி நிலையம்.அதுவும் எங்களுடன் சேர்ந்து சொல்லிழந்து கிடந்தது.கொஞ்ச கொஞ்சமாக ஓரிரு மலையாளப் பயணிகள் வந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்புக்கு நோகாமல் இருந்தனர்.
இரண்டரை மணிக்கு புறப்பட வேண்டிய தொடர்வண்டியின் ஓட்டுநர்கள் பொறியை இங்குமங்கும் ஓடி அணியமாக்கிக் கொண்டிருந்தார்கள். புலரியில் குழந்தையை எழுப்பி பல் துலக்கி குளிப்பாட்டி உடுத்து உண்ண வைத்து கிளப்பும் பாவனை. மொத்த நிலையத்தின் சுற்றுப்புறத்தில் அது புறப்பட்டுச்செல்லும் வரைக்கும் கேட்டுக் கொண்டிருந்த ஒலிதான் மிகப்பெரிதாக இருந்தது.ஒரு வழியாக பல தயக்கங்களுடன் அது புறப்பட்டுச் சென்றது.
நாங்கள் போக வேண்டிய வண்டி மதுரையிலிருந்து பத்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து சேர்ந்து உரிய நேரத்தில் கிளம்பியும் விட்டது. வண்டி கிளம்பிய அரை மணி நேரத்திற்குள் ஆரியங்காவு குகை வரும் என செங்கோட்டையில் ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்திருந்தார்.
ஆனால் முதல் குகை வர கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாகியது.எங்களின் வண்டி முப்பதிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில்தான் புனலூர் வரைக்கும் சென்றது. தொடர்வண்டியின் பின்புறமும் பொறியைப்பூட்டியிருந்தார்கள். நாட்டிலேயே இதுதான் மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்படும் தொடர்வண்டி எனக் கூறிக் கொள்கிறார்கள்.
குகைகள்,மலைகளில் செல்லும் தொடர்வண்டிகளில் இவ்வாறு இரண்டு பொறிகளைப் பூட்டுவது வழமைதான். குகைக்குள் செல்லும்போது பொறி பழுதாகி தொடர் வண்டி நின்று விடக்கூடாது. அப்படி நின்றால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் சாத்தியமுண்டு போலும் அதனால்தான் அப்படி செய்கிறார்கள் என இது நாள் வரை நினைத்திருந்தேன்.
ஆனால் உண்மையோ வேறு. பாதையானது கூடுதல் வளைவுகள் கொண்டதாகவும், ஏற்ற இறக்கமாகவும் இருப்பதால் கூடுதல் வேகத்தில் சென்றால் தொடர்வண்டியை நிறுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் தொடர்வண்டியின் தொடக்கத்திலும் இறுதியிலும் இரு பொறிகளை இணைத்து, மணிக்கு முப்பது கிலோ மீட்டர் வேகத்துக்குள் தொடர்வண்டி இயக்கப்படுகிறது. பின்னால் உள்ள பொறி மேடான பகுதிகளில் செல்லும் வண்டியின் வேகத்தை கூட்டவும், தாழ்வான பகுதிகளில் செல்லும்போது வேகத்தை குறைக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகிறது. இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் இருபொறிகளுடன் சேர்த்து பதிநான்கு வண்டிக்கூண்டுகளுடன் முப்பதிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டப்படுகின்றன.
மொத்தம் அய்ம்பது கிலோமீட்டர் தொலைவுள்ள இத்தடத்தைக் கடக்க இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் எடுக்கிறது.இந்த இருப்புப்பாதையில் ஆறுகுகைகள், அய்ம்பதுக்கும் மேற்பட்ட வளைவுகள் உள்ளன. பதின்மூன்று கண்களுடைய கழுத்துருட்டி பாலம் உட்பட சிறிய பெரிய அளவிலான இருநூறு பாலங்கள் இவ்வழித்தடத்தில் உள்ளன.
நீரோடைகளும் மலைச்சாரலும் மனத்தை ஆற்றுகின்றன.முதல் குகை வழியை கடந்தவுடன் வருகிற நிலையம் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் ஆரியங்காவு நிலையம்.ஆனால் கேரள எல்லை குகையின் பாதியிலேயே தொடங்கிவிடுகிறது.தொடர்ந்து குட்டி குட்டியான மலையூர்கள்.மாஞ்சோலை,கண்டி தேயிலைத் தோட்டக் குடியிருப்புகளைப்போலவே காட்சியளிக்கின்றன.
ஆறு மணிக்கு வர வேண்டிய புனலூர் நிலையத்தை ஐந்தரை மணிக்கே வந்தடைந்து விட்டோம்.நிலையத்தில் இறங்கவும் மழைப்பொழிவு.உடனே ஆட்டோ பிடித்து கேரள சாலைப்போக்குவரத்து பேருந்து நிலையத்தில் போய் தென்காசிப்பேருந்தில் எறினோம். மழையின் பொது நிறத்தை உடுத்திருந்தது புனலூர்.இரண்டு மணி நேர ஓட்டத்தில் ஒன்றரை மணி நேரமும் மழை பெய்துக் கொண்டேயிருந்தது.
இரவு ஏழரை மணிக்கு தென்காசிக்கு வந்து சேர்ந்தோம். புதிய மாவட்டத்தின் தலைநகராதலால் பேருந்து நிலையம் பரந்து விரிந்து கிடந்தது. அங்குள்ள கடைகள் பிரபஞ்சத் தொங்கலில் மின்னும் தாரகைக் கூட்டத்தைப்போல பேருந்து நிலையத்தின் விளிம்பில் ஒட்டி வைக்கப்பட்டிருந்தன.
திருநெல்வேலிக்கு செல்லும் இடை நில்லாப்பேருந்து வருவதற்கு நேரமிருந்ததால் அடுத்து தென்பட்ட புத்தகக் கடைக்குப் போனேன்,திருநெல்வேலியில் தேடியும் கிடைக்காத இலக்கிய மாத இதழ் அங்குதான் கிடைத்தது. பெயரைச் சொன்னவுடன் இன்றுதான் வந்தது என எடுத்து நீட்டினார் கடைக்காரர். ஏராளமான பருவ இதழ்களைக் கொண்டிருந்த கடை அனைத்து மங்கலங்களுடன் காட்டை நிறைத்த ஒற்றைப்பூ போல மலர்ந்திருந்தது.அவரை மனதார வாழ்த்தினேன்.
மின்னியல் சமூக ஊடகங்கள்,திறன்பேசிகளின் வருகையோடு இறந்து கொண்டிருக்கும் அச்சிதழ் வாசிப்பினால் முன்னர் போல விரிவான பருவ இதழ்களுக்கான கடைகளை நகரங்களிலும் போக்குவரத்து நிலையங்களிலும் காண முடிவதில்லை.நாளிதழ் விற்கும் கடைகள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்படுகின்றன.சென்னையிலும் இதுதான் நிலை.
பேருந்து வந்தது.திருநெல்வேலிக்கு சென்று ஊருக்கான கடைசிப் பேருந்தைப்பிடித்து அமர்ந்து செலவுக்கணக்கைக் கூட்டினேன். செங்கோட்டையில் இறங்கி அங்குள்ள குற்றாலக் குளியல் கால உணவகத்தில் தின்றதும் அதற்காக ஆட்டோ பிடித்ததும்தான் ஏறக்குறைய பாதி செலவை எட்டப்பார்த்தது.புனலூர் நகரத்தை அதன் இயல்பான வண்னத்தில் முழுவதுமாக பார்க்க இன்னொரு தடவை வரும்போது இந்த தவற்றை செய்யக்கூடாது என புத்தறிவு கிட்டியது.
புனலூரில் என்னென்ன புதிய தவறுகள் காத்திருக்குமோ?காத்திருந்தால்தான் என்ன! அந்த தவற்றை செய்த பிறகு அது பழையதாகி விடும்தானே!!
See insights and ads
All reactions:
11You and 10 others