
“கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை”.
பயணம் வழிக்காட்டி,
பயணம் வழித்துணை,
பயணம் வாழ்வியல்,
பயணம் அறிவூற்று,
பயணம் ஆசிரியன்,
பயணம் ஆனந்தம்,
பயணம் பேரின்பம்.
ரிஹ்லா மரபு பயண முகமையின் அண்ணன்களான சாளை பஷீர்& உவைஸ் அஹமது ஆகியோரின் ஒருங்கிணைப்பில் மலபார், ஷீத், நாகூர், சரந்தீப்,திருவிதாங்கூர்,துளுநாடு உள்ளிட்ட பயணங்களின் தொடர்ச்சியான “ரிஹ்லா”வின் 7ஆம் கட்டப் பயணமான சிறுவாணி தங்கல் அகமகிழ்வுடன் நிறைவுற்றது.
இது என் முதல் “ரிஹ்லா”.
இம்முறை பயணக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் “சத் தர்சன் படைப்பாளிகள் குடில்”.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் அட்டப்பாடியில் ஒழுகும் சிறுவாணி ஆற்றை ஒட்டி அமைந்துள்ள “சத் தர்சன்” குடிலின் சிறப்பையும் அக்குடில் உருவாக்கப்பட்ட நோக்கத்தையும் ஒரு பத்தியில் விவரிக்க இயலாது.
வார்த்தைகளின் இரைச்சலில் ஊடே அனு தினமும் நேரத்தை செலவிடும் நகரவாசிகள் இக்குடிலில் இயற்கை எழிலும் மௌனத்தின் மொழிகளையும் செவியுறலாம்.
இக்குடிலில் மௌனம்,
சிற்பங்களாய் பேசின,
ஓவியமாய் பேசின,
குறியீடுகளாய் பேசின,
மின்மினிகளின் கூட்டம்
ஒளிக்கதிர்களாலும்,
ஆற்றங்கரை வைகறை குளியல் தென்றலின் தழுவல்கலாலும் பேசின,
குடில் எங்கும் மௌனத்தின் சத்தங்கள்.
“அறிவுத்தாகம்”– அறிவைப் பருகப் பருக தாகத்தை அதிகரிக்கும் இயல்பை கொண்டது.
பயணத்திற்கு வருகைதந்த, உடனிருந்த அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்வதற்கு பல சிந்தனைகள் தென்பட்டன.
அனைவரும் ஆளுமைகளாக தென்பட்டதால் எவரின் பெயரையும் குறிப்பிடவில்லை, செவியுற்ற அனைத்து உரையாடல்களும், நண்பர்களின் அன்பும்,
ஆற்றுக் குளியலும்,
பரிமாறப்பட்ட உணவும்,
இருளில் அமர்ந்து மின்மினிகளை கண்ட நிகழ்வுகளுமாக அனைத்து நிகழ்வுகளும் மனத்தில் நீங்கா இடம்பெறும் நினைவுகளாக உருமாறக்கூடியவை.
பொதுவாக, இரண்டு நாட்கள் தொடர்ந்த இந்த “ரிஹ்லா” சிறுவாணி தங்கலில்,
நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளில்,
மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில்,
பரிமாறிக் கொள்ளப்பட்ட சிந்தனைகளில் என எண்ணிலடங்கா கருத்துக் கருவூலத்திலிருந்து ஒரு சோறு பதமாக எம். நவ்ஷாத் அவர்கள் கூறிய” Behaviour is the richest form of art” என்னும் வார்த்தையை அடையாளங் காட்டி ஆவலுடன் பயணங்கள் தொடர வல்லோனிடம் வேண்டி பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
கலந்தர் ஹாரிஸ்,சென்னை