பொருநை அருங்காட்சியகம் — அரை நாள் ரிஹ்லா#3

நான்கு நாட்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டு ரிஹ்லா சமூக ஊடகக் கணக்கில் அறிவித்தோம்.மூச்சில்லை.

அரை நாள் ரிஹ்லாக்களுக்கென நேர்ந்து விடப்பட்ட இருவர்(என்னுடன் ஏர்வாடி காதர் மீறான்) ‘ததும்பும் தமிழ்ப்பெருமிதம்’ நோக்கிக் கிளம்பினோம்.பொருநை அருங்காட்சியகத்தின் இலச்சினைஸ் சொல் ‘ததும்பும் தமிழ்ப் பெருமிதம்.’

தினசரி காலை பத்து மணிக்குத்தான் அருங்காட்சியகம் திறப்பு. வரிக்குதிரைப் பட்டைகள் பொறித்த டி சட்டைகளணிந்த கொஞ்சம் பேர் எங்களுக்கு முன்னர் வந்திருந்தனர். காத்திருக்கும் பார்வையாளர்களை வாயிற்காவலரும் காவல்துறையினரும் ‘அங்கு நில்,இங்கு செல்’ என கவாத்து நடத்திக் கொண்டிருந்தனர்.நுழைவாயிலின் பீடத்தில் அமர்ந்திருந்த பெண் காவலரொருவர் யாருடனோ செல்பேசியில் சமையற் குறிப்புக்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார்.கிட்டும் இடைவெளிகளில் அவரும் பார்வையாளர்களிடம் கவாத்து வாங்கினார்.

அருங்காட்சியகத்தின் அமைவிடமான ரெட்டியார்பட்டி சாலையில் கொஞ்சம் தொலைவு பயணித்ததுமே வரும் வலது பக்கமுள்ள குன்றில் ஆட்டின் சிலையுடன்பார்வைக் கோபுரமும் தென்படுகிறது.அதொரு மலைக் கோயில் என நினைத்தேன். மேற்கு தொடர்ச்சி மலையின் அரிய விலங்கான வரையாட்டின் சிலை. மாநில விலங்கு. தமிழ்நாட்டரசின் ஏற்பாடு.அருங்காட்சியக பார்வையியடலுக்குப் பிறகு அங்கும் சென்று வந்தோம். ஆனால் அது குறித்த அறிவிப்புப் பலகையொன்றுமில்லை.ஊர்தி நிறுத்தத் தளமொன்று உள்ளது.வருகையாளர்களை எதிர்பார்த்து ஈரிருளியில் விற்பனைக்கான நொறுவைகளுடன் ஒருவர் காத்திருந்தார்.

முதல்வர் அறிவித்து நான்கே கால் வருடங்களில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்க ஒன்று.

ஒன்றிய அரசினால் இழுத்தடிக்கப்பட்டு பதினேழு ஆண்டுகள் கழித்து நீதிமன்றப் போராட்டங்களுக்குப்பிறகு ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை வெளியிடப்பட்ட.து.  சிந்து வெளி நாகரிகத்திற்கு ஒப்பானது என கீழடி நாகரிகத்தை நிறுவும் அமர்நாத் இராமகிருஷ்ணனின் அகழாய்வு அறிக்கையை திருத்தி வெளியிட முயலும் சங்கி ஆட்சியாளர்கள்தான் ஓடாத சரஸ்வதி நதிக்காக மண்ணைத் தோண்டி முகர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

பேய்களுக்கும் யட்சிகளுக்கும் புனைவுகளை கூம்பாரமாக படையலிட்டு தொன்மங்களின் மீது மட்டுமே பீடமெழுப்பியிருக்கும் இலக்கிய பேருருக்களும் அவற்றின்அதிகார அவதாரங்களுக்கும் ஒவ்வாததினாலேயே பொருநை அருங்காட்சியகம் ஏன் தேவை? என்ற கேள்விக்கான விடை அடங்கியுள்ளது.

பொருநை அருங்காட்சியகத்தின் விளைவாக இன்னொரு நன்மையும் நடந்துள்ளது.இரண்டாம் அகழாய்வு நடந்து அய்ம்பத்தெட்டு ஆண்டுகளாக உறங்கிக் கிடந்த கொற்கையின் தொல் பொருட்களும் 2021 ஆம் ஆண்டு நடந்த அகழாய்வில் கிட்டியவைகளும் இன்று ஒன்றாகக் காணக் கிடைக்கின்றன.

பொருநையின் வால் பகுதியில் வசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு கொற்கை எப்போதுமே நெருக்கமானது.அய்ந்து நாகரிகத்தவர் கொள்வினை கொடுப்பினை நடத்திய நெய்தல் நிலம்.பரந்த காயல் நிலத்தின் தலை.பாண்டிய அரசின் வருவாய்த் தலைநகர் என பல வகைகளில் தலையாய நகரம்.

ஆதிச்ச நல்லூர்,சிவகளை,சாயர்புரம்,தேரிக்காடு – தூத்துக்குடி மாவட்டத்தின் தொல்லியல் தளங்களான இவை நான்கும்அரை மணி நேர தொலைவின் சுற்றளவில் அமைந்திருப்பவை.பல்லாயிரமாண்டுகள் நம்மைச் சுற்றி கோட்டையாகி எழும்பி நிற்கின்றன.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூருக்கு அருகிலுள்ள துலுக்கப்பட்டியில் நடந்த அகழாய்வுகள் மிகவும் சமீபத்தியவை.2022 ஆம் ஆண்டு நடந்த அகழாய்வில் இத்தனைப் பொருட்கள் கிடைத்திருப்பது வியப்பூட்டுகிறது.முப்பது வருடங்களுக்கு முன் நான் அங்கு போயிருக்கிறேன். நிலத்தின் மூலையிலொதுங்கிய ஒரு தூசு,நிழல் முக்கு என அன்று எனக்குத் தோன்றியது.

பொருநை அருங்காட்சியகத்தை ஒற்றை நோட்டத்தில் சுற்றிப் பார்க்க நான்கு மணி நேரம் எடுக்கிறது.எழு பரிமாண காட்சி பார்க்க வேண்டிய ஒன்று.வரலாறும் தொன்மையும் காட்சி ஊடகத்தின் தொழில் நுட்ப மேன்மையுடன் இணையும் போது அது இன்னொன்றாகிறது.

அருங்காட்சியக கட்டிடப் பாணியில் பெருமளவு  தமிழக மரபு காணப்படாதது ஏமாற்றமளித்தது.வெள்ளை வெள்ளையாகக் கட்டிடங்கள் நிற்கின்றன.அலுவலகத்திற்குள் நுழைந்து வெளியேறுவது போல உணர்வு.நீடிப்புக்கு எதிரானதும் சூழலியல் அழிவை உண்டுபண்ணக்கூடியதுமான காங்கிரீட்டில் வார்க்காமல் கட்டிடங்களை மெட்ராஸ் டெர்ரஸ் எனப்படும் கட்டைக் குத்து முறையில் அமைத்திருப்பது நல்ல முன்மாதிரி.மற்ற பொதுக் கட்டிடங்களுக்கும் அரசு இதைப் பின்பற்ற வேண்டும்.

படியமைப்புக்களும்  நடமாடும் வெளிகளும் நல்ல ராஹத்தாக பரந்து இருக்கின்றன.அருங்காட்சியகத்தின் அமைவிடம் மலை மேட்டில் இருப்பதால் வேறு உயரமான கட்டிடங்களினால்  நெருக்குதல் ஏற்படாது எனத் தோன்றுகிறது.

வளாகத்தில் தமிழ்நாட்டரசின் பூம்புகார் / கோ ஆப்டெக்ஸ் விற்பனைக் குடில்கள் அமைக்கப்பட்டிருப்பது மரபார்ந்த கைவினைத் தொழிலை ஊக்குவிப்பதுடன் இளைய தலைமுறையினரிடம் அதை சேர்க்கவும் உதவும்.பூம்புகாரும் கோ ஆப்டெக்ஸும் தமிழ் நாட்டரசின் சீர் மிகு நிறுவனங்களின் வகைமையில் சேருபவை.

மற்றபடி காட்சி மாடங்களில் தென்படும் குறைகளைச் சுட்டிக் காட்டும்போது அங்குள்ள பணியாளர்கள் அவற்றை செவி மடுப்பதுடன் அலுவலர்களுக்கு தெரிவிப்பதாகவும் சொன்னார்கள்.அவ்வாறு நாங்கள் கவனித்த பிழைகளில் ஒன்று– ஆதிச்சநல்லூரில் நீத்தாரை எரிக்கவும் செய்வார்கள் என்றிருந்த குறிப்பு.

அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு மூலையிலும் அதற்கான உழைப்பு மிளிர்கிறது.தொடக்கத்தில் சில போதாமைகள் இருப்பது தவிர்க்க இயலாதது.அரசு விரைந்து சரி செய்ய வேண்டியது என தோன்றியவை:

—–  வெய்யில் விளையும் நிலம். அருங்காட்சியகம் மலையில் அமைந்திருப்பதால் வெப்பத்தை இன்னும் கூடுதலாக உணர முடிகிறது. நடைபாதைகளில் நிழற் கூரை அமைக்கப்பட வேண்டும்..குடிநீர் வசதிகள் போதாது.

—– வழிகாட்டுப் பலகைகள் போதிய அளவில் வைக்கப்பட வேண்டும்

—– வருகையாளர்கள் அமர்வதற்கு போதிய அளவில் இருக்கைகள் நிழல் கூரையுடன் அமைக்கப்பட வேண்டும்..

—– தமிழ்நாடு/ஒன்றிய தொல்லியல் துறையின் வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும்

—- நொறுவை,குடிப்புகளின் விலை கூடுதலாக உள்ளது

—- திரையரங்கிற்கு வெளியே காத்திருப்போர் கூடத்தின் இடவசதி போதாது.இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.

—-  காட்சிக் கூடங்களில் அமர்த்தப்பட்டுள்ள வழிகாட்டிகள்/விளக்குநர்கள் போதாது.இருப்பவர்களுக்கும் போதிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்

—- ஒவ்வொரு அகழாய்வு மாடங்களின் உச்சியில் அவ்வூரின் பெயரை பெரிய பலகையில் பொறித்து நிறுவினால் வருகையாளர்கள் தடுமாற்றமில்லாமல் செல்ல இயலும்

—-.பரிமாண அரங்குகளில்  காட்சிகளின் போது பார்வையாளர்கள் மீது நீர் தூவப்படுவதால் செல்பேசிகளை பத்திரப்படுத்தும்படி அறிவிக்க வேண்டும்

—அய் பரிமாணக் காட்சிகளில் இருக்கைகளை அங்குமிங்கும் புரட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

வளாகத்தில் சில இடங்களில் இன்னும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.பார்வையாளர்களுக்கு மேம்பட்ட வசதிகள் கிடைக்கும் என நம்பலாம்.

நமது தொன்மையும் பழைமையும் இன மேட்டிமை அகம்பாவத்தையும் தேசிய வெறியையும் உண்டாக்கி ஏனைய மனிதர்களை ஒதுக்கி நிறுத்துவதற்கல்ல. வேத புராண பதாகையின் கீழ் வரும் வரலாற்றுப் பண்பாட்டு ஆக்கிரமிப்புக்களை மேலாதிக்கத்தை முறியடிக்க இது போல நிரந்தர ஏற்பாடுகள் தேவை என்னும் நிலையில் தமிழ் நாட்டரசிற்கு நன்றியும் பாராட்டுக்களும்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Latest Travel Blog
  • பொருநை அருங்காட்சியகம் — அரை நாள் ரிஹ்லா#3

  • An Evening Train in Central Sri Lanka

  • அன்றாடங்களின் கண்டடைதல்கள் — 2

Close
© Copyright 2024. All rights reserved.
Website by Dynamisigns.
Close