ஆடு ஜீவிதம் – பகுதி1

கமீஷ் மிஷ்யத், ஸவூதி

 அஸ்ஸலாமு அலைக்கும் ! தேவரீர். வாப்பா அவர்களின் சமூகத்திற்கு !!

உங்கள்  அன்பு மகன் மொகுதூம் எழுதிக் கொள்வது,

  40 ஆடுகள் , 1 கழுதை இவற்றுடன் நான் இங்கு சுகம்.

தாங்களும் உம்மாவும் தம்பி தங்கைமார்களும் அங்கு சுகமாக இருப்பீர்கள்…..

தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணையை சார்ந்த ஒரு சகோதரர் ஸவூதியிலிருந்து தன் வீட்டிற்கு எழுதிய கடிதம் அது.

 அரபு நாடு என்ற பாலை பூமியில் தனது கனவுகளுக்கும் நினைவுகளுக்கும் ஆசைகளுக்கும் எதிர் பார்ப்புகளுக்கும் அவர் கொடுத்த விலைகளின் பட்டியல்தான் அது..

 சொந்த நாட்டில் பசுமையான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக அன்னிய பூமியில் வாழ்க்கையை களவு கொடுத்தவர்களின் கதைகள் ஏராளம்.

கடல் கடந்து பணி புரியும் மனிதர்களின் பளபளக்கும் வாழ்க்கை பக்கங்களை மட்டும் அறிந்த அவர்களின் குடும்பத்தினருக்கு இருண்ட இன்னொரு பக்கம் தெரிவதே இல்லை.

வாழ்வை களவு கொடுத்த மனிதர்கள் தங்களின் துயரத்தை தானாக சொல்வதுமில்லை. அவர்களின் குடும்பத்தினரும் அதை அறிய முயற்சிப்பதுமில்லை.

ஆனால் கலை இலக்கிய வடிவங்களில் அந்த முயற்சி நடந்திருக்கின்றது.

“””  கப்பலுக்கு போன மச்சான்

கண்ணிறஞ்ச ஆச மச்சான்

எப்பத்தான் வருவீங்கன்னு எதிர்பார்க்கின்றேன்

நான் இரவும் பகலும் தொழுது தொழுது கேட்கிறேன்.

கண்ணுக்குள்ள வாழ்பவளே

கல்புக்குள்ள ஆள்பவளே …………..

……. உன்னை விட்டு வந்து உள் மனசு வாடுதடி

உள்ளபடி சொன்னாக்கா உயிர் அங்கே வாடுதடீ…… “”

பிரிவின் துயர் வழியும் வரிகள். 

காயல்பட்டினத்தின்  இசைக் குயிலான மறைந்த ஏ.ஆர். ஷேக் முஹம்மது அவர்களின்  தேர்ந்த குரலில் அந்த ஏக்கம் சற்றும் குறையாது நம்மை வந்தடைகின்றது. வெளியே யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத மனக் குமைச்சலானது குன்று போல் குவிந்து கிடப்பதை உணர முடிகின்றது.

வாழ்க்கை எனும் மாளிகையை எழுப்புவதற்காக பிறந்த மண் துறந்து வெளி நாடு செல்வது குறிப்பாக வளை குடா நாடுகளுக்கு செல்லும் துயர வாழ்க்கை என்பது நமதூருக்கு மட்டும் சொந்தமில்லை. நமது அண்டை மாநிலமான கேரளத்திற்கும் இது பொருந்தும்.

மண் துறந்த உறவுகளின் துயரமானது ஏராளமான பாடல்களின் வழியாக மலையாள தேசத்தில் பதியப்பட்டுள்ளது. துபை கத்து ( துபை கடிதம் ) பாட்டுகளில்

http://www.youtube.com/watch?v=44UDKYKKUbA

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vBt3drFzgoY

இந்த துயரம் நிறைந்து கிடப்பதை காணலாம்.

நாடு கடந்து சென்றவர்களின் துயரம் தொடர்பான ஒரு புதினத்தை ( நாவல் ) அண்மையில்  வாசிக்க நேர்ந்தது. வெளி நாட்டு வாழ்க்கையின் துயரத்தை அறிய விரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய புதினம் இது.

அந்த புதினத்தின் பெயர் ஆடு ஜீவிதம். இந்த நூலை எழுதியவர் கேரளத்தைச்சார்ந்த பென்னி டானியல் என்ற பென்யாமீன்.

இதற்கு கேரள சாஹித்ய அகாடமியின் விருதும் கிடைத்துள்ளது. இது மலையாளத்திலிருந்து ஆங்கிலத்தில் Goat days    என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

 இந்த நூலை தமிழில் ஆடு ஜீவிதம் என்ற  பெயரிலேயே சிறப்பாக மொழியாக்கம்  செய்துள்ளார் ராமன் அவர்கள்.

சென்னையில் இயங்கும் உயிர்மை பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. ( விலை . ரூ .140/=. தொலை பேசி : 044 2499 3448 ).

. இதுதான் கதைச்சுருக்கம் :

தனக்கான சிறிய வீடு ஒன்றை கட்ட வேண்டும். தனது வீட்டாரின் சிறியதும் பெரியதுமான ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ஸவூதிக்கு செல்கின்றார் நஜீப்.

ஸவூதிக்கு அனுப்பிய பயண முகவர் வாக்களித்த வேலைக்கு மாற்றமாக ஒரு ஆட்டுப்பண்ணையில் போய் யதேச்சையாக சிக்கிக்கொள்கின்றார் .

ஆட்டுப்பண்ணை முதலாளி மிக கொடூர மனம் படைத்த ஒரு காட்டரபி. எந்த அடிப்படை மனித நாகரீகமும் அறியாத ஒரு பிறவி. சுட்டுப் பொசுக்கும் பாலைவனத்தில்தான் அந்த ஆட்டு பண்ணை அமைந்திருக்கின்றது .தனது பண்ணையில் உள்ள ஆடுகளை விட கேவலமாகவும் இழிவாகவும் இரக்கமின்றியும் நஜீபை நடத்துகின்றார்.

அங்கிருந்து தப்பிச்செல்ல எந்த வழியும் இல்லை.

ஒரு வழியாக அறிமுகமான ஓரிரு மனித உயிர்களின் துணையுடன் அதீத வெப்பமுடைய வெண் மணற் கடலில் தனது உயிரை இழுத்து பிடித்து காப்பாற்றியபடி தப்புகின்றார் நஜீப்.

பின்னர் காவல்துறையிடம் தஞ்சம் புகுந்து சிறைக்கு செல்கின்றார். அங்கு சென்றாலும் கூட நிம்மதியில்லை .அங்கும் வந்து தொழிலாளிகளை மீட்டிச்செல்வதற்கு முதலாளிகளுக்கு ஸவூதி சட்டம் வழி வகுக்கின்றது.

அப்படிப் பலர் துடிக்க பதைக்க நஜிபின் கண் முன்னே இழுத்தும் செல்லப்படுகின்றனர். அந்த அவலம் மீண்டும் ஒரு பாலை வனத்துயரை அவருக்குள் நிகழ்த்துகின்றது.

மனிதன் வாழும் இந்த பூமியில் அவனது உணர்வுகளையும் உள்ளத்தையும் உடலையும் தகர்த்தெறியும் முழு வல்லமை பாலைவனத்திற்கும் சிறைக்கும் உண்டு.  

ஸவுதீய சட்டங்களின் பாரபட்சமானது பாலைவனம் , சிறையின் கொடூரங்களை அதி கொடூரம் மிக்கதாக மாற்றுகின்றது . எக்கு தப்பாக அங்கு மாட்டும் மனிதனுக்கு இறந்து போவது ஒன்று மட்டுமே விடுதலைக்குண்டான ஒரே வழியாக தெரிவதில் எந்த அதிசயமுமில்லை.

வாழ்வின் மூச்சுப் பாதையை இழுத்துப் அடைக்கும் பாலை மனிதர்களின் பூமியில் இறைவன் மீதுள்ள நம்பிக்கை என்ற ஒற்றை பற்றுக்கோட்டின் துணை கொண்டு பாலைவனத்திலிருந்தும் சிறையிலிருந்தும் பாரபட்சமான சட்டங்களிலிருந்தும் தாயகம் மீளுகின்றார் நஜீப்.

வாழ்க்கையின் முற்றுப்புள்ளிகளால் மட்டுமே நிறைந்திருப்பதாக கருதப்படும் பாலைவனத்திலும் சிறையிலும் வாழ்க்கையின் மிக மெல்லிய சரடு இழையோடுவதையும் , அழகியலோடு அந்த வாழ்க்கை துள்ளு நடை பயில்வதையும் நஜீபின் மனம் கண்டு பிடிக்கத்தவறவில்லை.

ஆதிக்கம் நிறைந்த மனித மனங்களை விட பாலைவனம் ஒன்றும் கொடுமையானது இல்லை .  மழைத்துளி பட்டவுடன் தழைக்கும் செடி கொடிகளின் சிறகு விரிக்கும் புள்ளினங்களின் அங்கு வாழும் சிற்றுயிர்களின் கிசு கிசுப்பிலிருந்து இதை   அறிகின்றார் நஜீப்.

நூலின் பெரும்பகுதி ஆடுகளோடும் , பாலை வனத்தோடும் , பாலை வன உயிரிகளோடும் கழிகின்றது.

அந்த வாழ்வை நூல் வர்ணித்து செல்கையில் நம்பிக்கை , அவ நம்பிக்கை என்ற இரு கோட்பாடுகளின் எல்லைக்கோடுகளை மாறி மாறி தொட்டுச் செல்கின்றது.

வாழ்வின் எல்லா நம்பிக்கைகளும் செயலற்றுப்போவதாக மனித மனதின் பெரும் பகுதி உணரும் கணங்களில் , அவனது இன்னொரு பகுதி மனதானது அந்த எதிர் மறை உணர்வுகளோடு நடத்தும் போராட்டம்தான் இந்த புதினத்தின் மையக்களம்.

வாசகர்களின் பார்வைக்காக அந்த புதினத்திலிருந்து சில வரிகள் :

 “” அந்த பாலைவனத்தின் சின்னஞ்சிறு செடிகள் எனக்கு வாழ்க்கையின் நம்பிக்கை பாடங்களை மிக ரகசியமாக என் காதில் கிசு கிசுத்தன.

நஜீப் ! இந்த பாலைவனத்தின் வளர்ப்பு மகனே , எங்களைப்போல நீயும் உன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இந்த பாலை வனத்துடன் போராடு. தீக்காற்றும் ,வெயில் நாளங்களும் உன்னைக் கடந்து போகும்.

அவற்றிடம் நீ தோற்று விடாதே : போராடி சோர்ந்து விடாதே , அவை உனது உயிரையே விலையாக கேட்கும். விட்டுக் கொடுத்து விடாதே.

இறந்தவனைப்போல தியானத்தில் ஆழ்ந்து விடு. முட்டாளைப்போல நடி. மறுபடியும் நீ வீறு கொண்டு எழவே மாட்டாய் என நம்ப வை. கருணை நிறைந்த அல்லாஹ்வை மட்டும் ரகசியமாகக் கூப்பிடு.அவன் உன்னுடைய துயரத்தை அறிவான். அவனுக்கு உனது பரிதாபக் குரல் நிச்சயம் கேட்கும்.

நஜீபே … ! முடிவில் உனக்காக  ஒரு காலம் கனியும். காலத்தின் இளம் காற்று உன்னை இந்த பூமிக்கடியிலிருந்து கைப்பிடித்து வெளியே கொண்டு வரும்.. “” ( நூல் பக்கம் : 137 )

  “ நம்பிக்கையற்றவர்களே … பரம காருண்யனான அல்லா நல்கிய அழகிய பசுஞ்சோலையில் மெய் மறந்து வாழும் பாக்கியம் பெற்றவர்களே …. உங்களைப்பொறுத்த வரை பிரார்த்தனைகள் வெறும் பிரசங்கங்களாகவும் , சடங்குகளுமாக இருக்கலாம். ஆனால் எனக்கோ அதுதான் என் வாழ்க்கையின் கடைசி அச்சாணி.

உடலளவில் உருக்குலைந்து சல்லடையாகிப்போனாலும் என் ஆத்மா உறுதி பெற்றிருந்தது  இந்த நம்பிக்கையின் மீதுதான் . அது மட்டும் இல்லையென்றால் அந்த நெருப்பில் நானொரு நாணல் புல் போல எரிந்து சாம்பலாகிப்போயிருப்பேன்.”  ( நூல் பக்கம் : 145 ).

ஸவூதி மண்ணில் மார்க்க சட்டங்கள் இறுக்கமாக பின்பற்றப்படுவதாக மார் தட்டப்படுவதுண்டு .  ஆனால் இந்தியா , பங்களா தேஷ் ,  இலங்கை ,நேபாள் , வியட்னாம் போன்ற மூன்றாம் உலகை சார்ந்த ஏழைத் தொழிலாளிகளிடம் அரபி முதலாளிகள் பொதுவாக இரக்கம் காட்டுவதில்லை.

 இதில் சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால் அந்த நாட்டு சட்டங்கள் அரபுகளுக்கு ஒரு விதமாகவும் அஜ்னபிகளுக்கு { அன்னியர்கள் } ஒரு விதமாகவும்தான் செயல்படுகின்றன.

 ஏன் இந்த பாரபட்சம் ?  என ஸவூதிய முதலாளியிடம் என் நண்பர் ஒருவர் கேட்டிருக்கின்றார். உங்களை யார் எங்கள் நாட்டிற்கு வேலைக்கு வரச் சொன்னது ? என அவர் திருப்பிக் கேட்டாராம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Latest Travel Blog
  • மழை ரிஹ்லா –வேணுவனத்தில் ஒரு பகல்

  • மலைக்கடவை-செங்கோட்டை புனலூர் குகை தொடர்வண்டித்தடம்

  • சரந்தீபில் மலையாளக் கதைகள்…நூற்றாண்டுகள் பழமையான சிறீலங்காவில் மலையாள மரபின் வரலாற்றுத் தடயங்கள் தேடி ஒரு பயணம்.

Close
© Copyright 2024. All rights reserved.
Website by Dynamisigns.
Close