அன்றாடங்களின் கண்டடைதல்கள் — 1

காலை உடற்பயிற்சி நேரங்களில் துணைக்கு இருக்கும் வானொலியில் ஒலித்த அந்நேர்காணலும் அப்பெயருமே இப்பயணச்சரட்டின் தலையாகியது.

கேரளம் காசர்கோடு மாவட்டம்  காஞ்சங்காட்டின் உலகம் காண் மனிதராகிய சி.முஹம்மது குஞ்ஞுக்கா தனது வானொலி நேர்காணலில் சொன்ன வரிகள்தான் எங்களை அவரது வீடு வரை இழுத்துச் சென்றது.

“நான் இதுகாறும்  நாற்பது நாடுகள் வரை பயணித்திருக்கிறேன். இரஷியா,ஸ்பெயின் உள்ளிட்ட இன்னும் சில நாடுகளுக்கு போக வேண்டும். எனக்கு கொஞ்சம் நிலங்களுண்டு. அவற்றை விற்று விட்டுச் செல்வேன்.”

அன்றாட வாழ்வில் கிட்டாததை வாசிப்பிலும், பயணத்திலும், பயணத்தை இலக்காகக் கொண்ட மனிதர்களிடமும், பொது வகைப்பாட்டிற்குள் அமர மறுக்கிற மனிதர்களிடமும்  திரட்டிக்கொள்வதின் வழியாகவே  நான் இருந்துக் கொண்டிருக்கிறேன். என் மூலப்பொருளும் இயங்குவிசையும் அதுவே. அவ்வகையில் குஹம்மது குஞ்ஞுக்கா எனக்கொரு புதுக் கொள்முதல்.

வானொலியில் பணிபுரியும் நண்பர் மூலம் குஞ்ஞுக்காவின் எண் கிடைத்தது. பேசினேன். வரும் மாதமே (அக்டோபர் 2025)  பார்க்க வருவதாகச் சொன்னேன்இப்பயணத்தில் ரிஹ்லா தொடர்பான வேறு இரண்டு சந்திப்புகளும் இணைக்கப்பட்டன. பயணச்சரட்டின் வாலாக இடுக்கி மாவட்டத்தையும் தொடுத்துக் கொண்டோம்.

ரிஹ்லா சிறுவாணி தங்கலில் வளவாளராகப் பங்கேற்க வந்திருந்த நண்பரும் வாழ்வு கலைப் பயிற்றுநரும் எழுத்தாளருமான கோழிக்கோடு முஹம்மது நவ்ஷாத் சில தனிப் பண்டங்களை எனக்குத் தந்தார். இது அவ்வப்போது எங்களுக்குள் நடக்கும் இரு வழிப் பரிமாற்றம்.

அக்குறிப்பின்படி கோட்டயத்தில் இறங்கி இடுக்கி மாவட்டத்திற்குள் செல்வது  இப்பயணத்தின் கடைசியாக வந்து சேர்ந்துக் கொண்டது. ஆய்வாளரும் நண்பருமான மிடாலம் அன்ஸாரும் உடன் வர சம்மதித்தார். காயல்பட்டினத்தைச் சார்ந்த வலையொளியாளரும்(யூ டியூபர்) ‘தட்டழி’பவருமான சஞ்சாரி இளவல் சாலிஹும் வர விரும்பினார். காஞ்சங்காட்டைத் தவிர மற்ற அனைத்து ஊர்களுக்கும் போக வர தொடர்வண்டிகளில் முன்பதிவு செய்தாகி விட்டது.

நவராத்திரி, துர்கா பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறைகளினால் திருவனந்தபுரத்திலிருந்து காஞ்சங்காட்டிற்கு பயணச்சீட்டுகள் கிடைக்கவில்லை. தத்கலிலும் இல்லை.

அடுத்தடுத்த பயண முன்பதிவுகளும் திட்டங்களுமிருந்ததால் எப்படியும் காஞ்சங்காட்டிற்கு போயாக வேண்டும். முன்பதிவற்ற அதி விரைவு தொடர் வண்டியான அந்த்யோதயாவில் போகலாம் என மிடாலம் அன்சார் சொன்னார். சாலிஹ் தயங்கவே தனியார் பேருந்தில் முன்பதிவு செய்தோம்..

தென்னெல்லை தியாகியும் என் ஆசிரியர்களில் ஒருவருமான கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ், குளச்சல் கபீர் ஆகியோருடன் முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு எர்ணாகுளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு கேரள அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தில் சென்றதைத் தவிர இது வரைக்கும் கேரளத்திற்குள் இவ்வளவு தொலைவிற்கு நெடும்பயணம் தனியார் பேருந்தில் சென்றதில்லை.

என்னைப் போலவே அன்சாரும் மலைத்தார். வேறு வழியில்லை. புறப்பட்டோம். 553 கிலோ மீட்டர்கள். பதினாறு மணி நேரம். பின் மதியம் மூன்று மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை ஏழரை மணியளவில் வந்து சேர்ந்தோம்.

அறுநூற்றி சொச்சம் கிலோ மீட்டர் தொலைவை சாலை வழியாக எட்டிலிருந்து பத்து மணி நேரத்திலும் தண்டவாளம் வழியாக பன்னிரண்டு மணி நேரத்திலும் வந்தடையும் தமிழனுக்கு இதொரு துயர் மிக்க பட்டறிவு.

அதுவும் நாங்கள் வந்தது மேலடுக்குப் படுக்கை வசதி கொண்ட சீர்வளிப்பேருந்தில். பேருந்தின் தரம், நேர மேலாண்மை, பராமரிப்பு, பணியாளர்களின் நடத்தை இவற்றிலெல்லாம் தேறும் மதிப்பெண்கள் ஓட்ட நேரத்திலும் சாலைக்  குலுக்கலிலும் தகர்ந்து போயின.

மேலடுக்கில் எங்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததினால் அலைவு இருந்துக் கொண்டேயிருந்தது. குடலிலுள்ளவை தலைக்குச் சுழன்று ஏறிக் கொண்டேயிருக்கும் உணர்வு. சீர்வளியின் அடைசல் வாடையும் சேர்ந்துக் கொள்ள பெரும் பிரகண்டத்தில் அலைக்கழிந்தேன்.

“நம்ம கையில் இல்லாத விஷயம் இது. நம்மட சின்ன பாவங்களுக்கு பரிகாரம்னு எடுத்துக்குற வேண்டிதான்.” மிடாலம் அன்ஸார் சொன்னதை சிக்கென மனம் பற்றிக் கொண்டது. உரிய தருணங்களில் சொற்களின் வழியாகக் கைமாற்றப்படும் ஆறுதலுக்கு விலையேயில்லை.

மேற்கொண்டும் புரட்டல் உண்டாகாமலிருக்க இரவுணவை மூவருமே தவிர்த்து விட்டோம். உணவிற்காக வண்டியை நிறுத்திய இடத்தில் எலுமிச்சைச்சாறு  சேர்த்த வெறுந்தேயிலை அருந்தியதோடு கை நிறைய புளிப்பு மிட்டாய்களும் வாங்கிக் கொண்டோம். குமட்டலுக்கும் புரட்டலுக்குமான சிறந்த பரிகாரம்.

காஞ்சங்காட்டில் முஹம்மது குஞ்ஞுக்காவும் காசர்கோட்டு நண்பர் அப்துஸ்ஸமத் ஹுதவியும் தங்கள் மகிழுந்துகளைக் கொண்டு வந்தனர். முஹம்மது குஞ்ஞுக்காவின் அலுவலகத்தில் சந்திப்பு நடந்தது.

2008க்குப் பிறகு இது போன்றப் பயணங்களை மேற்கொள்ளும் முஹம்மது குஞ்ஞுக்கா அகவை அறுபத்தேழைத் தொட்டவர். அலுவலகத்தின் ஒழுங்கும் அவரின் ஆடை நேர்த்தியும் தொழிலதிபரின் தோரணையிலிருந்தது. குஞ்ஞுக்கா  கேரள முஸ்லிம் லீக்கின் தலையாய ஆளுமைகளில் ஒருவர். கேரளத்தின் முன்னாள் முதல்வர் சி.ஹெச்.முஹம்மது கோயாவின் மகனும் அம்மாநிலத்தின் பிரபல அரசியல் ஆளுமைகளில் ஒருவருமான மருத்துவர் முனீர் கோயாவின் சிறு பருவத்து நண்பர்.

அய்வேளைத் தொழப்போகும் மஸ்ஜிதில் நடக்கும் குர்ஆன் வகுப்பில்தான் உலகப்பயணத்திற்கான தூண்டுதல் அவருக்குள் விழுந்தது. பயணிக்காமல் ஈமான் செறிவுறாது என உறுதிபடக் கூறும் குஞ்ஞுக்கா ஏறத்தாழ இரு பத்தாண்டு  காலத்தில் நாற்பது நாடுகளுக்கு பயணித்திருக்கிறார். இந்த ஓட்டத்தின் முதல் அத்தியாயம் 2008 ஆம் ஆண்டின் ஹஜ் பயணத்திலிருந்து தொடங்கியிருக்கிறது. ஹஜ்ஜுக்காகக் குறைவுபட்ட பணத்தை நண்பரொருவர் கொடுத்துதவியிருக்கிறார். இது போன்ற ஹஜ் பயணங்களுக்கு செலவழிப்பதை நேர்ச்சையாகக் கொண்டவராம் அவர்.

மதீனா, ஃபலஸ்தீன் பயணப் பட்டறிவுகளைக் கலங்காமல் அவரால் கூறவியலவில்லை. இஸ்ராயீல் சோதனைச்சாவடியில் கடவுச்சீட்டைக் காட்ட வேண்டிய சூழல். இவரோ அதை அறையில் வைத்து விட்டு வந்து விட்டார். பிடிபட்டால் நாட்டை விட்டு வெளியேற்றம் அல்லது தடுத்து வைக்கப்படும் நெருக்கடி. உலகத்தில் இதைத் தவிர ஒன்றுமில்லை என்ற  ஓர்மையில் சலவாத் ஓதியிருக்கிறார். அப்போது ஏற்பட்ட உள்ளுதிப்பில் இரண்டு எட்டுகளை வரிசையின் மறு பக்கம் எடுத்து வைத்தார் சிக்கல் தீர்ந்தது.

உலகின் மிக அழகிய மனிதக்கூட்டங்களில் ஒன்றான ஃபலஸ்தீனியர்கள் வெளிநாட்டுப்பயணிகளின் பைகளுக்குள் கை விட்டு இரக்கின்றனர்.  அவர்களின் தற்கால கொடும் வறுமை நிலையை மிகுந்த விசனத்துடன் சொன்னார்.

ஜுமுஆத் தொழுகை முடிந்து அவரது வீட்டில்தான் மதிய உணவு. குறைந்த நேரத்தில் உண்டாக்கியளிக்கப்பட்ட நல் விருந்து. வீட்டிலும் ஓர் அரச களை. எண்ணூறு சதுர அடியில் வெளிகளை சிதறடிக்காமல் முழுமையாக உருவாக்கப்பட்ட வீடு.

இன்று நிற்கும் அவரது வீடு வருட காலமாக  பல கட்டங்களில் வளர்க்கப்பட்டிருக்கிறது. நான் எண்ணியது போல அவர் தொழிலதிபரில்லை. கல்வித்துறையில் பணி நிறைந்த பின் தற்சமயம்  காஞ்சங்காடு டாக்டர் அம்பேத்கர் கலை &அறிவியல் கல்லூரியில் மக்கள் தொடர்பு அலுவலர் பணி. ஒரு பெண், இரு ஆண் பிள்ளைகள். மூவருக்கும் மண முடித்து விட்டார். அனைவரும் தற்சார்பாக உள்ளனர். எங்களுக்கு அவர் செவ்வி வழங்கிய அலுவலகமும் அவரது மகனுக்குரியது.

“தொடர்ச்சியான செலவேறிய வெளிநாட்டுப்பயணங்களுக்கு வீட்டில் எதிர்ப்பில்லையா?” எனக்கேட்டேன்.

“தப்லீக்காரர்களைப்போல இல்லாமல் வீட்டாருக்குரிய கடமைகளில் ஒரு குறைவுமில்லாமல் பார்த்துக் கொண்டேன். எங்களது வாழ்க்கை முறையும் என் மக்களின் திருமணங்களும் எளிமையானவை. அடுத்தவருக்காக நானும் எனது வீட்டாரும் வாழ்வதில்லை. வரவிற்குள்தான் செலவு. இருக்கிற கடன்களையும் அடைத்தாகி விட்டது. யாருக்கும் நிலுவையில்லை”என சொல்லி முடித்தவரின் வேட்டிக் கரையிலிருந்த வெள்ளிச் சரிகை மின்னிக்கொண்டிருந்தது.

அவர் கடி, குடி கொண்டு வரப் போன இடைவெளியில் சாலிஹ் கேட்டான். ”இவர் போனது அவ்வளவும் சுற்றுலா முகமை வழிப்பயணங்கள்தானே??”

கூட்டுப்பயணம்,தனிப்பயணம்,நிரல் பயணம் என்பதெல்லாம் ஒரு பயணத்தின் தொழில் நுட்பபெயர்கள் மட்டுமே. அப்பயணங்களில் நாம் கொண்டதும் கொடுத்ததும்தான் சாரம். நம் வசதிக்கேற்ப வெவ்வேறு பெயர்களிட்டு அழைத்துக் கொள்ளலாம் என்றேன்.

எலுமிச்சைச் சாற்றுடன் உலர் பழங்களுமாக திரும்பி வந்த முஹம்மது குஞ்ஞுக்கா “ஆண்கள் கொண்டு வரும் பணம் ஹலாலா ?ஹறாமா? எனக் கேட்டறியும் பெண்கள் வீட்டிலிருக்கும் வரைக்கும் பொருளாதாரம் தொடர்பான சிடுக்கு சிக்கல்கள்  எழாது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Latest Travel Blog
  • நிறமும் மணமும் களவாடப்பட்ட மலர் — ரிஹ்லா ஹைதராபாத் நினைவுகள்

  • ஹம்பிப் பயணம்

  • திருவிதாங்கூர் —  தென்னெல்லை

Close
© Copyright 2024. All rights reserved.
Website by Dynamisigns.
Close