பயணம்# 07ரிஹ்லா சிறுவாணி தங்கல்  — நினைவுக்குறிப்புகள்– 3

ரிஹ்லா சிறுவாணி தங்கலுக்கு அப்பால் …..

ஏற்பாட்டாளர்கள் என்ற முறையில் நானும் உவைஸும் ஒரு நாள் முன்னதாகவே நிகழ்விடமான சத் தர்ஷன் இருக்கும் அட்டப்பாடிஅகழிப் பகுதிக்கு சென்று விட்டோம். ஒரு நாள் முழுவதுமாக கையிலிருப்பதால் அதைத் தொல்குடி பகுதிகளை பார்வையிடுவதில் செலவிடலாம் எனத் தீர்மானமாகியது.

எனக்கு தனிப்பட்ட முறையில் அட்டப்பாடி தொல்குடி பகுதிகளுக்கு போவதென்பது கிட்டத்தட்ட பதினொரு ஆண்டு கனவு. முன்னணி ஆவணப்பட செயற்பாட்டாளரும் நண்பருமான ஆர்.பி.அமுதன் சென்னையில் நடத்திய ஆவணப்பட விழாவில் The Red Data Book: An Appendix என்றதொரு ஆவணப்படத்தை காண நேர்ந்தது. அதைப் பார்த்த பிறகு சில நாட்கள் மனத்தில் சமநிலை இல்லை.(காண்க: வாழ்வின் நிறம் கறுப்பு https://salaibasheer.blogspot.com/search?q=red+data).

72 நிமிடங்கள் ஓடக்கூடிய தி ரெட் டேட்டா புக் ஆவணப்படம் 2014 ஆம் ஆண்டு பாதசாரிகள் பட இயக்கத்தின் சார்பில் தீபுவும் சிறீமித்தும் இணைந்த இயக்கத்தில் வெளிவந்தது.Vimeo இணைய தளத்தில் காணக் கிடைக்கிறது.. அட்டப்பாடியில் வசிக்கும் மூன்று பழங்குடியினரில் பெரும்பான்மையாக இருக்கும் இருளர் இன தொல்குடி அழிவுத் துயரங்களின் ஆவணம்.

அதிலிருந்தே இங்கு வருவதென்பது ஒரு நீங்கா தேட்டமாகவே இருந்து வந்தது.இரண்டு வருடங்களுக்கு முன்பு அட்டப்பாடியின் சத் தர்சனுக்கு வர நேர்ந்தும் அதொரு சுருக்கப் பயணமாகவிருந்ததால் அட்டப்பாடிக்குள் இறங்கவியலவில்லை.

அட்டப்பாடியில் பார்க்கவியலுமான தொல்குடி பகுதிகளைப் பற்றி சொல்லும்படி மன்னார்க்காட்டைச் சார்ந்த மார்க்க அறிஞரும் ஆய்வாளருமான நண்பர் ஷஃபீக் கல்லங்குழியிடம் கேட்டபோது அவர் இடவாணி என்ற பெயரைச் சொன்னார்.மழை பெய்தால் சாலைகளில் நீர் பாயும். அச்சமயம் அங்கு உங்களால் போகவியலாது என எச்சரிக்கை குறிப்பையும் சேர்த்தே சொன்னார். வேறு சில தொல்குடிக் கிராமங்களுக்குப் போக காட்டுத்துறையினர் இசைய மாட்டார்கள் என்றார்.

‘கோட்டத்துறை’ என தமிழிலும் ‘கோட்டத்தரா’ என மலையாளத்திலும் அழைக்கப்படும் ஊரின் பேருந்து நிறுத்தத்தில் உவைஸ் வரும் வரைக்கும் காத்திருந்தேன்.அதற்கிடையில் போகுமிடத்தின் வழியைப்பற்றி அருகிலுள்ள கடைகளில் கேட்டேன். அவர்கள் போகும் வழியைத் தெளிவாகச் சொன்னதோடு எச்சரிக்கவும் செய்தார்கள்.நீங்கள் அங்கு செல்லும் முன்னர் அருகிலுள்ள காட்டுத்துறை அலுவலகத்தில் சொல்லி விட்டு சென்றால் உங்களுக்கு முன் காப்பு கிடைக்கும் என்றனர்.

அங்குள்ள மலையின் உள் பகுதிகளில் கஞ்சா பயிரிடப்படுவதால்  உங்களை அறியாமல் வேறு யாராவது  ஏதாவது சட்ட  முரணான நிகழ்வுகள் நடத்தினாலும் நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என விளக்கினர்.ஆனால் அவர்களின் எச்சரிக்கையில் அவர்கள் சொல்லாமல் விட்ட இன்னொரு விடயம் மாவோயிஸ்ட் – அரச மோதல்கள்.

2019 -20 காலகட்டத்தில் ஆபரேஷன் தண்டர் போல்ட் என்ற பெயரில் இப்பகுதிகளில் மாவோ இடதுசாரி ஆயுததாரிகளை கேரளத்தின் இடதுசாரி சிபிஎம் அரசு போலி மோதலில் வேட்டையாடிக் கொன்றொழித்தது.அதிலிருந்து இப்பகுதிகள் மாநில அரசின்  கண்காணிப்பில் இருப்பதாகவும் வெளியிலிருந்து யாரேனும் அப்பகுதிகளுக்கு வந்தால் தொல்குடி கிராமத்தினர் அது குறித்து அரசிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறை இருப்பதாகவும் பின்னர் அறிந்து கொண்டோம்.

உவைஸ் வந்து சேரும் வரைக்கும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த முதியவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.விவசாயியான அவரின் முன்னோர்கள் கொங்கு மண்டலத்திலிருந்து இங்கு குடியேறியவர்களாம். அட்டப்பாடி தொல்குடி பகுதியில் அடர்ந்தேறியிருப்பது தமிழக கேறள சமவெளி மக்கள். இதனால் ஏற்பட்ட தொல்குடி சமநிலைக் குலைவின் ஒரு துளியையத்தான் ரெட் டேப் ஆவணப்படம் சொல்கிறது.

பதினோரு மணியளவில் உவைஸ் வந்து இணைந்துக் கொண்டார். காலநிலை இதமாக இருந்தது. நிறைய தொலைவில் இருக்கும் என நாங்கள் நினைத்த இடவாணி இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதை அறிய வந்ததும் செலவழிப்பதற்கு கூடுதல் நேரம் கேட்காமல் கையில்  கிடைத்த அன்பளிப்பாகியது.

நாங்கள் தாண்ட வேண்டியிருந்தது மொத்தம் அய்ந்து காட்டு நீரோடைகள்.பார்க்கவும் தாண்டவும் எளியதாகத் தோன்றும் அவை பருவ மழை சமயத்தில் காட்டாறாக பேருருக் கொள்கின்றன.இருப்பதிலேயே அகலமாகத் தென்பட்ட முதல் ஓடையில் மழை சமயத்தில் கடக்க முயன்ற காவல் துறை ஊர்தி அடித்துச்செல்லப்பட்டதாகவும் கேள்விப்பட்டோம்.

மூன்றாவது ஓடையின் இரு பக்கமும் சாலை ‘V’ வடிவில் குழிந்திருந்ததால் வண்டி போகுமா என நாங்கள் தயங்கி நிற்க எதிர்ப்புறம் ஜீப் வந்த துணிவில் கடந்தோம். அய்ந்தாம் ஓடையை கடந்த சிறிது தொலைவில் இடவாணி 0’ என மைல் கல் காட்டியது. ஓட்டுக் கூரைகள் கொண்ட சிறு சிறு காரை வீடுகள் வரிசையாக நின்றிருந்தன. அங்கன்வாடி கட்டிடம்தான் அக்கிராமத்தின் முதல் காட்சி.

கிராமம் வரை தார் சாலை பழுதின்றி உள்ளது. மின் வசதியும் உண்டு. 2017 ஆம் ஆண்டில்தான் சாலை மூலம் இடவாணி வெளியுலகுடன் இணைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வீடுகளில்  தொலைக்காட்சிகளுக்கான அலை வட்டில்களை(டிஷ் ஆண்டெனா) காண முடிந்தது.வெளியுலகத்துடனான அவர்களது ஒரே மெய் நிகர் தொடர்பு.

வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு குடியிருப்புக்குள் சென்றோம். தெருவோரத்தில்  கூரை போட்ட பலகை இருக்கையில் இளைஞரொருவரும் கொஞ்சம் சிறார்களும் இருந்தனர். எங்களின் வருகையை அவர்கள் பொருட்படுத்தவேயில்லை. அவர்களுக்குள் சன்னமான குரலில் பேசிக் கொண்டிருந்தனர். சிலர் அப்படியே வெளியைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.இளைஞரோ நாங்கள் கேட்பதற்கு மட்டும் விடையளித்தார்.

சமிக்ஞைகள் அறவே இல்லாத போதும் செல்பேசியை கையில் வைத்துக் கொண்டு உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். வெளியூருக்கு போகும்போது மட்டுமே இணையத் தொடர்புகளும் செல்பேசி சமிக்ஞைகளும் கிடைக்கும்.

ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அண்மையலை(வைஃபை) வசதியை இலவசமாக அரசு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்களாம். இப்போதெல்லாம் அது இல்லை என்றனர்.மாவோக்கள் அழிக்கப்பட்ட பிறகு  மக்களுக்கு தகவல் சொல்லுவதற்கான ஏற்பாடு வேண்டாம் என அரசு நினைத்ததோ என்னவோ?

கிணற்றின் கல்லை நகர்த்தும் விதமாக, எங்களுக்கு பசியில்லாத போதும்  மதிய உணவு கிடைக்குமா? அதற்குரிய தொகையை செலுத்தி விடுகிறோம் எனக்கேட்டதற்கு “ இங்கு கடையெல்லாம் இல்லை. யார் வீட்டில் போய்க் கேட்டாலும் உணவு கிடைக்கும்” என்றார் அவ்விளைஞர்.

மேற்கொண்டு கண்ணி தொடராததால் தெருவிற்குள் சென்றோம். அங்கும் சிறார் குழுவொன்று வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது. முந்திய குழுவினரைப்போலவே அதில் கொஞ்சம் பேர் மௌனமாக தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அத் தெருவைத் தாண்டும் போது பாதை வளைந்து ஏறுகிறது. அங்கு இரண்டு மூன்று வீடுகள் மட்டுமிருந்தன. மேட்டில் இருந்த வீட்டில் இரு பெண்கள் பலாக் கொட்டைகளை தோல் நீக்கி நறுக்கிக் கொண்டிருந்தனர்.

வீட்டின் பின்புறம் குடியிருப்பு முடிந்து மலைக்கு மேல் காடு மட்டும் செறிகிறது.மழைக்கு வாசியாக முகில் குவை கருமை கொண்டு கவிந்திருந்தது.. மழை விழுந்தால் சுணங்காது கிளம்பி விட வேண்டும்.சமதளத்தில் பெய்யும் மழையின் ஒரு துளியானது மலைகளிலும் காடுகளிலும் ஒரு குடம் நீருக்கு சமம் என சில வருடங்களுக்கு முன்பு கொல்லம் மாவட்டம் பாலருவியிலிருந்த கேரள காட்டுத்துறையினர் சொல்லித் தந்த சூத்திரம் மறப்பதேயில்லை.அய்ந்து காட்டு ஓடைகளையும் தாண்டியாக வேண்டுமே.

இடவாணி வாசிகள் சிற்றோடைகளில் இரப்பர் குழாய்களை பதித்துள்ளனர்.அதிலிருந்து அவர்களுக்கு தேவையான நீர் கிடைக்கிறது. தேன் கிடைக்குமா? எனக் கேட்டதற்கு அதற்கான பருவம் முடிந்து விட்டது. வரும் வழியிலுள்ள அட்டப்பாடி தேன் கூட்டுறவு சங்கத்தில் கேட்கச் சொன்னார்கள்.

பலாக்கொட்டைகளை நறுக்கிக் கொண்டிருந்த இரு பெண்களிடமும் பேச்சினிடையே உணவு பற்றிக் கேட்டதற்கு அவர்கள் உட்பட இடவாணி வாசிகள் காலை,இரவு என இரு வேளை மட்டுமே உண்பதாகவும் தற்சமயம் உணவில்லை எனச் சொன்னார்கள்.உழைப்பிற்கும் பசிக்கும் மட்டுமான உண்ணல் முறை. இதன் பிறகாவது  நாவை அடக்கும் மந்திரத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

விடாப்பிடியாக காட்டுப்பழங்கள் எதுவும் இருக்குமே எனக் கேட்டேன். உடனே வீட்டிற்குள் சென்று  பலாப்பழத்தின் கால் பகுதியை எடுத்து வந்து நீட்டினர். உரித்துண்ண வாய்ப்பில்லை என நாங்கள் சொல்லவும் தங்களின் வேலைகளை விட்டு விட்டு எங்களுக்காக சுளைகளை உரித்து தந்தனர்.

பழத்துக்குரிய காசை வாங்க மறுத்தனர். பழத்தை சும்மா வாங்கவும் மனம் ஒப்பவில்லை.இது பழத்திற்கான விலை இல்லை, எங்களின் அன்பளிப்பு என சொன்ன பின்னரே பெற்றுக் கொண்டனர். அன்றைய எங்களின் மதிய உணவு அதுதான்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது வீட்டின் தலைவனும் வந்திணைந்துக் கொண்டார். பேச்சினூடே அவரின் தொழிலைக் கேட்டதற்கு நூறு நாள் வேலைத்திட்டத்தில் இருப்பதாகச் சொன்னார். மன்மோகன்சிங்  தலைமையமைச்சராக இருந்தபோது ‘மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அத்திட்டத்தில் வருடத்திற்கு நூறு நாட்கள் வேலைவாய்ப்பு எனச் சொல்லப்பட்டாலும் நடைமுறையில் இரு மாத அளவில் மட்டுமே வேலை உண்டு.நாள் சம்பளமாக முன்னூற்றி அறுபத்தொன்பது  ரூபாய்கள் கொடுக்கப்படும். ஒரு வருடத்திற்கு இருபத்தியிரண்டாயிரம் ரூபாய்கள். சராசரியாக ஒரு மாதத்திற்கு ஆயிரத்து எண்ணூறு ரூபாய்கள்.

அதுவும் நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு போக இயன்றவர்களுக்கு மட்டும்தான்இந்தக் கணக்கு. ஆகவே இது சராசரி கூட இல்லை.எட்டு வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன்  வடகிழக்கு மாநிலங்களுக்குப் போயிருந்தபோது மிஜோரம் மாநில மக்களின் சராசரி மாத வருமானம் அய்யாயிரம் ரூபாய்கள். இன்று கண்டிப்பாக அது உயர்ந்திருக்கும்.

மேற்கொண்டு அவர்களுடன் பேச்சை வளர்க்க வழியில்லாததால் சிறுவர்கள் அமர்ந்திருந்த கூரையிட்ட பலகை இருக்கையில் அமரச் செல்லும்போது தங்களது மாதக் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்த  ஒரு குடும்பம் எங்களுக்காக இடத்தை விட்டுத் தந்தனர்.

இடவாணியின் பரப்பிற்குள் ஆடுகளுடன்மாட்டையோ எருமையையோ பார்த்ததாக நினைவு, அவற்றுடன் நிறம் செறிந்த காட்டுக் கோழிகளும் தங்களின் ஆட்சிப் பரப்பை கால்களாலும் அவ்வப்போது எழுப்பும் ஓசைகளாலும் ஆண்டுக் கொண்டிருந்தன.பழந்துணியுடன் ஓரிருவர் அவரவர் வீட்டை விட்டு வெளியே வந்து ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இருமியபடி ஒரு மாது எங்களை நோக்கி வந்தார்.அவருக்கு சில நாட்களாக உடல் நலமில்லை. காட்டில் விளைந்த கேழ்வரகு தானியத்தை சிறு பொட்டலமாக துணியில் பொதிந்திருந்தார்.எங்களைப் பற்றிக் கேட்டார்.கரிசனத்துடன் தொடர்ந்து உரையாடினார்.அவராகவே தனது வீட்டிற்கு எங்களை அழைத்துச் சென்றார்.

அவரின் தமிழ் உச்சரிப்பில் கன்னியாகுமரி,இலட்சத்தீவுடன் இலங்கையும் வந்து போனது.ஒரு சாடைக்கு இலங்கைத்தமிழ் பேசும் ஹிந்திக்காரரின் உச்சரிப்பையும் ஒத்திருந்தது.இதுவும் கன்னியாகுமரி,நெல்லைச்சீமையின் காணித் தொல்குடிகளின் மொழியும் மலையாளத்தின் முன்னத்தி மொழியான மலையாண்மையாக இருக்கலாம் என்கிறார் நண்பரும் ஆய்வாளருமான மிடாலம் அன்சார்.இங்குள்ள முகச்சாயல்கள் ஆஸ்திரேலிய, அந்தமான் தொல்குடியினருடன் ஒத்துப் போகின்றன. தொடக்கம் ஒன்றுதானே.

தனித்தனியான இரு அறைகளுடன் விரிந்து திறந்த முற்றமும் கொஞ்சம் தொலைவில் கழிப்பறையுடன் இணைந்த குளியலறை என்பதாக அவர் வீடு.முற்றத்தில் அவரைக்காயை உலர வைத்திருந்தனர்.

அவருக்கு ஒரு ஆணும் இரு பெண்களுமாக மூன்று மக்கள்.கணவர் இறந்து விட்டார். மகனுக்கு சம நிலத்தில் ஆசிரியப்பணி. மூத்த மகளை கணவன் கைவிட்டு விட்டுப் போய் விட்டார். திருமணமாகாத இளம் மகள் மட்டுமே மீதம். கைவிடப்பட்ட மூத்த பெண் எங்களுடன் ஒரு சொல் கூட பேசவில்லை. நாங்கள் கேட்டதற்கும் மறுமொழியில்லை. துயரத்தையும் நகைப்பையும் அவரது முகம் மிக மெலிதாக  வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தது.

மொத்தம் நாற்பத்தைந்து வீடுகள் மட்டுமே கொண்ட இக்கிராமத்தில் வெள்ளம்,நிலச்சரிவு உண்டா? எனக் கேட்டோம். இயற்கை சீற்றம் இதுவரை வந்ததில்லை.கூடுதல் மழைப்பொழிவு சிறுவாணி ஆற்றினூடாக ஒழுகி விடும்.காட்டுக்குள்ளிருக்கும் ஏனைய விலங்குகள் இங்கு வருவதில்லை.அவ்வப்போது வரும் காட்டு யானைகளும் அதன் வழிக்கு போய் விடும். ஒருக்கால் அவை போகாத பட்சத்தில் மட்டும் காட்டுத்துறையினரை அழைக்க நேரிடும். மலையும் மழையும் ஆறும் விலங்குகளும் இவர்களை தங்களிலிருந்து வேறுபட்டவர்களாகப் பார்ப்பதில்லை என்பதுதான் அடிப்படைக் கணிதம்.

ஒன்றிரண்டு பேர்கள் மட்டுமே மாநில அரசின் பணிகளில் உள்ளனர்.மற்றவர்களுக்கு காட்டில் கிடைக்கும் பழ,தானிய வகைகளும் அதன் விற்பனையும்  நூறு நாள் வேலைத் திட்ட சம்பளமுமே போதுமானதாக இருக்கிறது. ஏறத்தாழ பத்து கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள புதூரில்தான் மருத்துவமனை உண்டு.

அவ்வப்போது சம நிலத்திலிருந்து  வந்து போகும் மீன் விற்பனையாளர்கள் மூலம் கடலுணவு கிடைக்கிறது. காட்டிலுள்ள சிறு விலங்குகளை உண்ண இயலாத அளவிற்கு காட்டுத்துறையின் கண்காணிப்பு உள்ளதாம்.

பருவ மழைகாலங்களில் மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை சேகரித்துக் கொள்வதுண்டு.தனித்த இருப்புக்கும் காடு மலையுடனான உரையாடலுக்குமான கூடுதல் நேரமாக அவர்கள் அந்த வீடடைவு காலத்தை கருதுவதால் அதைப் பற்றி அவர்களுக்கு முறையீடு இல்லை.

பெரும் சுழிப்பை ஒளித்துக் கொண்டு சாலையைக் கடந்துக் கொண்டிருந்த காட்டு நீரோடைகள் அய்ந்தும் இடவாணிக்கு நாங்கள் போய் வந்த பிறகும் இணை வரைகளாய் வந்து வந்து செல்கின்றன.

இக் கதையைக் கேட்டு வர விருப்பங்கொண்ட ரிஹ்லா சிறுவாணி தங்கல் நண்பர்களை இந்த அய்ந்து கஜங்களைச் சொல்லித்தான் பின் வாங்க வைக்க வேண்டியிருந்தது.நாங்களிருவரும் அங்கு போய் வந்ததே சரியில்லையோ? எனத் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. அதனால்தான் அங்கு ஒரு சொட்டு ஒளிப்படம் கூட எடுக்கத் தோன்றவில்லை. இடவாணிவாசிகளின் பெயர்களையும் குறிப்பிட விரும்பவில்லை.

“பூமி

உண்மையெனும்போது

பூமியின்

வரைபடம்

ஏன்

இப்படிப்

பொய்யாகிப்போனது?”

மறைந்த மலையாளக்கவியின் வாக்கு மனிதப் படங்களுக்கும்தான்.

சிவன் அல்லது குல தெய்வம்தான் குரும்பர்களின் கடவுளர்கள்.படையலுக்கு காட்டில் விளையும் தானியங்கள்தான். பண்டிகைகள் எனத் தனிப் பட்டியல் இல்லை.அப்படியேக் கொண்டாடினாலும் அது மொத்தக் கிராமத்தின் கூட்டுக் கொண்டாட்டமாகத்தான் இருக்கும் என்றார் அம்மாது.

அட்டப்பாடியில் வாழும் மூன்று பழங்குடியினருள் மிகச் சிறுபான்மையினர் குரும்பர் இன மக்கள். ஒரு காலத்தில் உதகமண்டலத்திலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என ஒரு கூற்றும் உண்டு. கன்னடம் தமிழ் மலையாளம் கலந்த மொழியை தாய் மொழியாகக் கொண்ட இவர்களின் சமூக வழமைப்படி உள்ளூரில் திருமண உறவு வைக்க மாட்டார்கள்.

அட்டப்பாடியிலும் உதகையிலும் இவர்களுக்கு திருமண உறவு கிடைப்பது சிக்கலாக உள்ளதாம். காட்டோடைகளின் சிறையுடன் தொலைவும் ஒரு காரணம். சாதிய அடுக்குடன் தொல்குடிகள் மீதான சமவெளி மனிதக் கண்ணோட்டத்தின் சமத்துவமின்மையாலும் இடவாணியின் குரும்பர் தொல்குடிகள் புதூரைத் தாண்டுவதேயில்லை.

சாலை வசதி வருவதற்கு 2017 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. அய்ந்து காட்டோடைகளுக்கு மேல் குறும் பாலங்களைக் கட்டினால் இச் சிக்கல் தீரலாம்.அதற்கான கால எண்ணிக்கைகளின் மர்மத்தை அரசின் கனவுகள் மட்டுமே அறியும்.

காப்புக்காடுகள் என அறிவித்து விலங்குகளையும் தாவரங்களையும் பாதுகாக்க முனையும் பொது மனத்திற்கு அழிவின் விளிம்பை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் குரும்பர் என்ற மனித சமூகம் ஒன்றிருப்பது உறைத்தால் நல்லது.

எங்களுக்கு வெறுந்தேயிலை போட்டுத் தந்தார்கள்.கோப்பையினுள் இரு ஏலக்காய்கள் மிதந்தன.குறு மிளகுடன் ஏலமும் இஞ்சியும் அவர்களின் வீட்டின் கொல்லையில் விளைபவை.

நாம் வகுத்திருக்கும் அத்தியாவசிய, ஆடம்பரங்கள் பற்றிய வரையறைகளும் வாழ்க்கை மீதான நம் பார்வைகளும் கண்ணோட்டங்களும் கருத்தியல்களும் நிறையவே குழம்பித்தான் போகின்றன.

இலட்சங்களிலும் கோடிகளிலும் புரளும் மனிதர்களுக்கு குட்டானில் வேர்க்கடலை விற்று அன்றாடத்தை நகர்த்தும் பாதையோர மனிதர்களின் வாழ்க்கை சட்டகம் ஒரு போதும் புரியப்போவதில்லை.

அதே போல்தான் சமவெளி மனிதர்களின் அல் பகல்களுக்குள் தொழிற்படும் தர்க்கங்களும் சட்டகங்களும் இலயம் தப்பித் தாறுமாறாகும் இடங்கள்தான் தொல்குடிகளின் வாழ்வும் வாழிடமும்.

நாம் காடுகளுக்குள் போய் இருக்க இயலாதுதான். அய் வகை மூலகங்களிலிருந்து நமக்குத் தேவையான நெருப்பு,காற்று,நீரைப் பெற்றுக் கொள்வதைப்போல தொல் வாழ்க்கையின் தாளங்களிலிருந்து தேவைக்கேற்ப முகர்ந்துக் கொள்ள வேண்டியதுதான்.

வளர்ச்சியின் பெயரால் நகரங்கள் கிராமத்திற்குள்ளும் சமவெளிகள் மலை காடுகளுக்குள்ளும் நுழைந்து ஏறும்போதுதான் நினைவாற்ரல் மிக்க இயற்கை வெளிகள் தங்கள் தடங்களை மீளத் தேடி வருகின்றன.

மக்கள் திரள் போராட்டங்களை ‘பயங்கரவாதம் தீவிரவாதம்’ என அரசு செல்லமாக அழைப்பதைப்போல நாமும் அவற்றின் மீள் வரவை  ‘பேரிடர், சீற்றம்’ எனப் பெயரிட்டு அச்சொற்களின் இடுக்குகளுக்குள் போய் நமது குற்றங்களை ஒளித்துக் கொள்கிறோம்.

காடுகளிலும் மலைகளிலும் அவற்றின் மக்களாகிய தொல்குடிகள் விட்டு வைக்கப்படும்போதுதான் அவைகள் தங்கள் அமைதியையும் சம நிலையையும் இழப்பதில்லை.மடியறுக்காமல் பால் குடிக்கவும் குட்டியைக் கண்டவுடன் மடி ஊறவும் யாரும் வகுப்பு நடத்துவதில்லை.

காட்டுத்துறைப் பணியிடங்களுக்கு  முழுக்க முழுக்க பொருத்தமானவர்கள்,  நினைவிலும் நனவிலும் காட்டையும் மலையையும் சுமந்துக் கொண்டிருக்கும் தொல்குடிகளே.அவர்கள் ஒவ்வொருவரின் மௌன இருப்பும் ஒரு கண்காணிப்புக் கோபுரத்திற்கு சமானம். அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தது போக எஞ்சியுள்ள இடங்களையே சம நிலவாசிகளுக்கு ஒதுக்க வேண்டும்.

எவ்வித வெளியார் நெருக்குதல்களும் அழுத்தங்களுமின்றி தங்களின் வாழ்க்கை முறையை மாற்ற தொல்குடிகள் விழையும்போது மட்டுமே அரசு இடையிட்டு  ஆவன செய்ய வேண்டும்.

ஆதாயக் கணக்குகளினடியில் அவர்களுக்கு குடிநீர்,மின்சாரம்,மருத்துவம்,கல்வி,போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை தாமதப்படுத்தவோ மறுக்கவோ கூடாது.

நாம் நுகரும், துய்க்கும் நவீன வாழ்க்கையின் கனிகளை தொல்குடிகளுக்கு இயற்கை பாதுகாப்பின் பெயரில் மறுப்பது நீதியில்லை என அரசு,பெரு நிதி வணிக நிறுவனங்களின் மெத்தப் படித்த பேராளக் குரல்கள் எழுகின்றன. அறுதியில் அவற்றின் சுரம் திரிந்து அங்கு வேட்டை விலங்குகளின் குருதி ஒட்டிய கோரைப்பற்களே தட்டுப்படுகின்றன.

இன்னும் இரண்டு இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்ததால் கிளம்பினோம். ரிஹ்லா சிறுவாணி தங்கல் தொடங்குவதற்கு முன்னரே என் கலன் நிறைந்து விட்டது.

பொதுவாக நினைவுகள் அருவமானவை.இது போன்ற பெருந் தலங்கலுக்கு வந்து செல்லும் போது அந்நினைவுகளை கொஞ்சம் தூலமாக்கிக் கொள்ளும் சில சேகரங்கள் என் வீட்டில் உண்டு. தற் கணங்களின்  தடங்களை தன்னில் கொண்டுள்ள சிறுவாணி,பவானி,காட்டோடை நதிப்படுகைகளின் கூழாங்கற்கள் மூன்றை அவற்றிற்காக சேகரித்துக் கொண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Latest Travel Blog
  • பயணம்# 07ரிஹ்லா சிறுவாணி தங்கல்  — நினைவுக்குறிப்புகள்– 3

  • பயணம்#07 ரிஹ்லாசிறுவாணிதங்கல்  –நினைவுக்குறிப்புகள் – 2 ஏகாந்தத்தின் தித்திப்பு – ரிஹ்லா சிறுவாணி அனுபவம் –             ஆஷிர்முஹம்மதுபயணம்#07 ரிஹ்லாசிறுவாணிதங்கல்  –நினைவுக்குறிப்புகள் – 2. ஏகாந்தத்தின் தித்திப்பு – ரிஹ்லா சிறுவாணி அனுபவம் – ஆஷிர்முஹம்மது

  • பயணம்# 07ரிஹ்லா சிறுவாணி தங்கல் — ஒளிப்படங்கள்

Close
© Copyright 2024. All rights reserved.
Website by Dynamisigns.
Close