பயணம்#07 ரிஹ்லாசிறுவாணிதங்கல்  –நினைவுக்குறிப்புகள் – 2 ஏகாந்தத்தின் தித்திப்பு – ரிஹ்லா சிறுவாணி அனுபவம் –             ஆஷிர்முஹம்மதுபயணம்#07 ரிஹ்லாசிறுவாணிதங்கல்  –நினைவுக்குறிப்புகள் – 2. ஏகாந்தத்தின் தித்திப்பு – ரிஹ்லா சிறுவாணி அனுபவம் – ஆஷிர்முஹம்மது

இந்தியப்பெருங்கடல் தீரங்களில் பரவிச்செழித்த இஸ்லாமியச் சமூகங்களின் பண்பாட்டையும் வரலாற்றையும் அறிந்துகொள்வதை முதன்மை நோக்காகக் கொண்டு செயல்படும் ரிஹ்லா பயண முகமை ஒருங்கிணைக்கும் பயணங்களில் இது நான் கலந்து கொள்ளும் நான்காவது பயணமாகும்.

ஏற்கெனவே நான் பங்கு பெற்ற மலபார், கிழக்குக் கடற்கரை(ஷீத்), இலங்கை(சரந்தீப்) போன்ற பகுதிகளுக்கு புறப்பட்ட ரிஹ்லாக்களுக்கும் இந்த ரிஹ்லா சிறுவாணி தங்கலுக்கும்  இடையில் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு.

இது மற்ற பயணங்களைப் போல் பண்பாட்டுத் தடங்களைத் தேடிச்செல்லும் பயணமாக அல்லாது ஓர் ஆன்மீக தனித்திருப்பின் தன்மையில் அமைந்திருந்தது.

கேரள தமிழக எல்லையில் பாலக்காடு மாவட்ட வரம்புக்குள் அட்டப்பாடி காட்டுப்பகுதியில் சிறுவாணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள காட்டுக்குடிலான சத் தர்ஷனில்தான் இந்த மூன்றுநாள் ரிஹ்லா அமைந்தது.

சூஃபி மெய்ஞ்ஞானப் பாதைக்கான அறிமுகம், சூஃபி இசை குறித்தஅறிமுகம், நுகர்வுக்கலாச்சாரத்தவிர்ப்பு & இயற்கை விவசாயம் உள்ளிட்ட மாற்றுவாழ்வியல் தேடல்கள், கலை, இலக்கியத்திற்கான அறிமுகம் என சில அறிமுக வகுப்புகளும் பயிற்சிப்பட்டறைகளும் இம் மூன்று நாள் தங்கலின் நிகழ்ச்சி நிரலில் இருந்த கூட்டுச்செயல்பாடுகள்.

அது தவிர்த்த ஏனைய நேரங்கள் வெவ்வேறு வடிவங்களிலான தனிமைத் தியானங்களால் ஆனதாக இருந்தது. இரவில் சின்னஞ்சிறு நெருப்பு மலர்களாக அக்காட்டுப்பகுதியை அலங்கரிக்கும் மின்மினிப்பூச்சிகளின் வருகையை ஒலி-ஒளி மாசகற்றி தியானத்தோடு கவனித்தது அத்தகைய ஏகாந்த வேளைகளுல் சிறப்பாக நினைவுகூரத்தக்கது.

இஸ்லாமிய மெய்ஞ்ஞான மரபில் இறை நினைவில் இலயிக்க ஒரு குறிப்பிட்ட காலம் உலகியலின் சந்தடி நீங்கி ஏகாந்தத்துக்குள் ஆழும் நடைமுறை தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

பிற சமயங்களைப் போன்று ஒரு தனி வர்க்கமாக துறவியர் குழாம் ஒன்று இஸ்லாமிய மரபில் இருந்ததில்லை என்றாலும் மெய்ஞ்ஞானப்பாதையில் தங்களை இணைத்துக்கொண்ட சாதகர்களுக்கு என தனி பரம்பரைகளைக் கொண்ட ஆன்மீகப்பாதைகளும் விடுதிகளும் இருந்துள்ளன என்பதை வரலாறு நெடுகிலும் காணமுடியும்.

இறைச்செய்தி செவியேற்கப்படுவதற்கு முன்னர் நபிகள் பெருமான் மக்கா நகர் நீங்கி ஹிரா என்ற குகையில் இயற்றிய தனிமைத்தவமே இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பள்ளிகளுக்கான முன்மாதிரியாக விளங்குகிறது.

இன்றும்கூட  இத்தகைய ஆன்மீக தனித்திருப்புகள் மரபார்ந்த முறையில் தற்கால நவீன வளர்ச்சிகளை உள்வாங்கியபடி தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

மேற்கில் புகழ் பெற்ற சூஃபி அறிஞர்களான ஹம்சா யூசுஃப் போன்றோர் அழைத்துச் செல்லக்கூடிய தனித்திருப்பு முகாம்கள் பேர் பெற்றவை.

சில நாட்களுக்கு முன் கோழிக்கோட்டுக்கு அருகாமையில், கேரளத்தின் புகழ்பெற்ற சூஃபி அறிஞர் காந்தபுரம் முஸ்லியார் கட்டிக்கொண்டிருக்கும்  நாலெட்ஜ் சிட்டி என்ற நகருக்கு சென்றிருந்த பொழுது அங்கும் தனித்திருப்பு முகாம்களுக்கான அறிவிப்புகள் செய்யப்பட்டன.

நான் சென்றிருந்த அன்று மேற்காசியாவின் புகழ்பெற்ற ஒரு சுய முன்னேற்றப் பேச்சாளர் ஒருவர் அன்றைய தனித்திருப்பு நிகழ்வை வழி நடத்துவதற்காக வரவிருந்தார்.

திரளரசியல் தவிர்த்து ஏனைய அனைத்து சமூகப் பண்பாட்டு நடவடிக்கைகளிலும் பாரா முகம் காட்டும் தமிழ் இஸ்லாமியச் சமூகத்துள் இத்தகைய நடவடிக்கைகள் இதுவரை தோன்றாததில் ஆச்சரியமில்லை. அவ் வெற்றிடத்தை ரிஹ்லா ஒருங்கிணைக்கும் இதுபோன்ற பயணங்கள் மட்டுமே  நிரப்புகின்றன.

ரிஹ்லா சிறுவாணி தங்கல் நிகழ்ந்த சத் தர்ஷன் குறித்து சிறப்பாகக் கூறவேண்டும். சத் தர்ஷன் என்பது மூன்று ஏக்கர் நிலத்துண்டொன்று ஒரு தனிநபரின் முன் முயற்சியில் வனமாகக் கிளைத்துப் பரவ அனுமதிக்கப்பட்டதொரு வெளி. இவ்வனத்துள் வாசகர்கள், எழுத்தாளர்கள் என பல்வேறு வகைப்பட்ட தேட்டங் கொண்டவர்கள் தன்னுள் ஆழவும் சுய வெளிப்பாடுக் கொள்ளவும் குடில்களும் தியானக்கூடமும், கூட்டாகவும் தனியாகவும் அமர்ந்து இளைப்பாறுவதற்கான அமர்விடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சத் தர்ஷனின் விருந்தினர்கள் பலர் அக்குடிலின் சுவர்களையும், குறிப்பாக அச் சுவர் பரப்புக்கு மேல் ஒரு விதையைப் போன்று புடைத்துக்கொண்டிருக்கும் கற்களையும், சித்திரமாகவும் கவிதைகளாகவும் ஒளிர வைத்திருந்தார்கள்.

ஒளித்து வைக்கப்பட்ட பரிசுப்பொருட்கள் போன்று சத் தர்ஷனின் மடிப்புகளுக்குள் ஏதோ ஒரு சிலையையோ, சித்திரத்தையோ அல்லது கவிதைக் கீறலையோ கண்டுகொண்டபோதெல்லாம் மனம் குதூகலங்கொண்டது.

நாங்கள் நிகழ்விடத்தை எட்டியபொழுது ‘இவர்தான் சத்தர்ஷனின் சிற்பி’ என்று திரு. ஆனந்த குமாரை அறிமுகப்படுத்தினார் பஷீர்காக்கா.

அவருக்கு முகமனைச்சொல்லிவிட்டு, குடிலில் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் பொதிகளை இறக்கிவைத்துவிட்டு சிறுவாணி ஆற்றை நோக்கி விரைந்தோம்.

எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கிருக்கும் நீர் நிலைகளில் முக்குளி போட்டால்தான் அவ்வூர் நம்மை மெய்யாக வரவேற்கும் என்று நான் நினைத்துக் கொள்வதுண்டு.

சில நேரங்களில் அவை சேற்றுக் குளியலாகவும் அமைந்துவிடும். ஆர்ப்பாட்டமோ அச்சுறுத்தலோ இல்லாத, அதே நேரம் புத்துணர்வூட்டும் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த சிறுவாணியில் குளித்தது பயணக்களைப்பிலிருந்து மீள உதவியது.

மதிய உண்டிக்குப் பின் நிகழ்வுகள் தொடங்கின.முதலில் பேசிய இஸ்லாமிய அறிஞர் சுல்தான் பாகவி இன்னல்களிலிருந்து விடுபட இறை நினைவின் அவசியம் குறித்து உரையாற்றினார்.

அவரது உரையின் முதற் பகுதி உடல் என்ற அருட்கொடை குறித்த தியானமாக இருந்தது. அவ்வருட்கொடை பற்றிய பிரக்ஞையுணர்வு நம்முள் கிளர்த்தவேண்டிய நன்றியுணர்வை அவரது உரை வலியுறுத்தியது.

துயர் நீக்கிக் கொள்வதற்கு மறைந்து விடுபவற்றின் மீது நமக்குள்ள பிணைப்புகளை அறுத்துவிட்டு மறையாதவனைச் சார்ந்திருக்க முயலவேண்டும் என்றும் அவர் கூறினார்.

இறுதியாக, ஏற்கெனவே மரணித்துவிட்டதைப் போன்று வாழவேண்டுவதன் அவசியத்தை வலியுறுத்தியவாறு இவ்வமர்வு நிறைவு பெற்றது.

பிறகு பஷீர் காக்கா காயல்பட்டினத்திலிருந்து கொண்டு வந்திருந்த மிக்சரும் தம்மடையும் கறுப்புத் தேநீருக்குத் துணையாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

தஞ்சையின் காவிரிப் படுகை & கடற்கரையோர முஸ்லிம் ஊர்களில் வழங்கி வரும் தம்ரூட்டுக்கு காயல்பட்டினத்து தம்மடையோடு ஒரு பரம்பரைச் சாயலைக் காணமுடிந்தாலும் தம்ரூட்டில் ஊறியுள்ள தித்திப்பு இரு துண்டுகளை வாயில் போட்டவுடனேயே திகட்டிவிடக்கூடியது. கையில் நெய் பிசுபிசுப்பும் தொண்டையில் கமறலும் வயிற்றை நிரப்பி விட்ட அசௌகரிய உணர்வையும் ஏற்படுத்தக்கூடியது.தம்மடைஅவ்வாறல்ல. எல்லாம் சரியான பதத்தில் அமைந்த தம்ரூட்தான் தம்மடைஎன நினைக்கத்தூண்டியது.

தேநீர் இடைவேளைக்குப்பின் சூஃபி இசைபற்றிய அடுத்த நிகழ்வு. கேரளத்தில் ஸமா வகைமையில் பாடும் சூஃபி இசைக்கலைஞர் சமீர் பின்ஸி வளவாளராகப் பங்குகொண்டு இவ்வமர்வை வழிநடத்தினார்.

வழக்கமாக இத்தகைய இசை அமர்வுகளை பக்கவாத்தியங்களோடும் தனது இசைக்குழுவினருடனும்தான் அவர் நடத்துவார். இந்தமுறை அத்தகைய ஏற்பாடுகள் இன்றி எளியமுறையில், ஆனாலும் ஒரு தனி அழகமைதியோடு, அதை நடத்தினார். சில பாடல் பகுதிகளைப் பாடுதல், அதன் பின்னர் அவற்றின் அகமிய மெய்மைகள் பற்றிய ஒரு சிறு அறிமுகம், பின்னர் அதிலிருந்து இன்னொரு பாடலுக்குத் தாவுதல் என்பதாகவே அவர் வழிநடத்திய நிகழ்வின் வடிவம் அமைந்தது.

இப்னு அறபியோடும் ரூமியோடும் இச்ச மஸ்தானும் நாராயண குருவும் பிரசன்னமான அமர்வு அது.உரையினூடேயும் சரி அதன் பின்னரான கேள்வி பதில்களிலும் சரி, வகைமை சம்பந்தப்பட்ட விவாதம் ஒன்று திரும்பத் திரும்ப எழுந்து வந்தது. மெய்மை நோக்கிய தேடலில் கவித்துவ உருவகத்தின் இடம் பற்றி வேறு வேறு சொற்களில் கேட்கப்பட்டது.

உருவகங்கள் என்பது மெய்மையை மர்மமாக்குவதா? அல்லது உருவகங்களின் வழி மெய்மை மின்னல் வெட்டு போன்று ஒரு கணத்தில் தோன்றி மறைகிறதா?என்ற பரப்பெல்லைக்குள் இவ்விவாதம் நிகழ்ந்தது.

கவித்துவ உருவகங்கள் கற்றறிந்த மேட்டுக்குடிகளுக்கானது மட்டும்தானா? என்ற ஒரு பங்கேற்பாளரது கேள்விக்கு ‘இது கல்வியில் மிகவும் அடித்தளத்தில் உள்ள பாமரருக்கும், மிகவும் மேல்நிலையில் உள்ள அறிஞருக்கும் பிடி கிடைக்கும் கலை. இடைநிலையினருக்கு அன்று’என சமீர்பின்ஸி பதிலளித்தார்.

அமர்வு நிறைவுபெற்றதன் பின் தொழுகை. நாளின் இறுதி அமர்வாக சத் தர்ஷனின் சிற்பி திரு. ஆனந்த குமாரோடு ஒரு சிறிய கலந்துரையாடல் நடந்தது.

அதில் சத் தர்ஷன் என்பது பிரக்ஞையைப் போன்று சதா பிரவகித்துக் கொண்டிருக்கும் ஒரு வெளியாக, அனைத்து மரபுகளுக்கும் மெய் தேடல் மார்க்கங்களுக்கும் இடம் இருக்கும் ஒரு அடையாளமற்ற வெளியாக இருப்பதையே அது விழைவதாகக் கூறினார்.

‘இங்கு ஒரு யோகி வந்தால் நன்றாக யோகம் செய்யலாம். ஆனால் அவர் பயிற்சி முடிந்து திரும்பச்செல்லும்போது அவரது பாயைச் சுருட்டி அவர் கையில் கொடுத்துவிடுவேன். அப்போதுதான் நீங்கள் வந்து இங்கு உங்களது தொழுகைப்பாயை விரித்துத் தொழமுடியும்’என்றார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும்பொழுதே கீழே மின்மினிகள் வந்து நிறைந்து நிலத்தை ஓர் ஒளிப் போர்வையால் போர்த்தத் தொடங்கியிருப்பதைக் கவனித்துக்கொண்டேஇருந்தேன்.பின்னர்,ஒலி-ஒளி மௌனத்துக்குள் மின்மினிகள் அனல் மொழி பேசுவதைக் கேட்டோம்.

இந்நாளின் இடையிடையே தனிமைக்கான நேரங்களும் வகுக்கப்பட்டிருந்தன. குடிலினதும் வனத்தினதும் ஏதோ ஒரு வளைவுக்குள் கதகதப்பான தனிமையை அனுபவிக்க, இயற்கையின் சலனத்தில் சற்று நேரம் எடையிழக்க வாய்ப்பளித்தன.

இத்தகைய தனிமை நேரங்கள்.பயணக்களைப்பும் அதற்குப்பின்னான ஆசுவாசமும் இணைந்து பத்துமணிக்கெல்லாம் உடலை உறக்கத்தின் மணல் மூடவைத்துவிட்டது.

சுபஹ் தொழுகையோடு ஐந்தரைக்கெல்லாம் தொடங்கியது அடுத்த நாள். நடைபயிற்சி, ஆற்றோடு உரையாட அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளிலும் கல் மேடைகளிலும் கோபுரங்களிலும் தனித்திருத்தல் என அவரவர் விருப்பின்படி அடுத்த ஒரு மணி நேரம். பின்னர் சிறுவாணியில் குளியல், தேநீர் என்று எங்கள் பயணக்குழுவுக்கான வழமை மெல்ல உருவாகியிருந்தது.

அதன்பின்னர்மலையேற்றம். சத் தர்ஷனின் நாய்களான சூஃபியும், தாவோவும் எங்களோடு கூடவே மலையேறினார்கள்.

மதிய உணவுக்குப்பின் இயற்கை விவசாயம் பற்றிய தனது சொந்த அனுபவத்தையும் அதனோடு ’இயற்கை விவசாயம்’என்ற முழக்கம் எவ்வாறு இன்று சந்தைப்படுத்தப்படுகிறது, இன்னும் வேறு பல எதிர்மறைப் பண்பாட்டு அரசியல்களுக்கான கவர்ச்சிகர உரையாக அது மாறியிருக்கிறது என்று பேசினார் இயற்கை விவசாயி காதர் மீரான்.

அவர் நெறிப்படுத்திய கலந்துரையாடலில் முத்தாய்ப்பாக எனக்குப்பட்டது மனோரதியங்கள் எல்லாம் நீக்கி, இயற்கை விவசாயம் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் அதை தனது நடைமுறைப் படைப்பூக்கம் &அயராத நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் எவ்வாறு எதிர்கொண்டார் என்றும் அவர் பகிர்ந்துகொண்டதுதான்.

ஒரே நேரத்தில் இயற்கை விவசாயம் என்ற முழக்கத்தின் சமகால சீரழிவுகளையும், வணிகமயமாக்கலையும் இரக்கமின்றி விமர்சித்துக்கொண்டே மண்வளத்துக்கும் மக்கள் நலத்துக்கும் அது எவ்வாறு இன்றியமையாததாக இருக்கிறது என்றும் பேசினார்.

செயற்கை உரம் பயன்படுத்தும் விவசாயம் போன்றல்லாது இயற்கை விவசாயம் இலாபம் குறைந்தது என்றாலும் கூட அதனால் அற, அரசியல் பரிமாணங்களில் வேறு பல அடைவுகள் உண்டு என்று கூறினார்.

நடைமுறையில் காலூன்றி திறந்த நிலையிலான உரையாடலாக மாற்று உற்பத்தி குறித்த இத்தகைய விவாதங்கள் தொடர்ந்து நடைபெறுவதும், விமர்சனப்பூர்வமான முறையில் அத்தகைய பரிசோதனைகள் ஒரு சமூகத்துள் நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டியதும் அவசியம்தான் என்று இவ்வமர்வு உணர்த்தியது.

இதன்  பின்னர் சிறுவாணியை சாட்சியாக வைத்து அதன் கல்மேடையில் ஒரு சிறிய கலந்துரையாடல் நடந்தது. இவ்விரு நாட்களில் கேட்டவையும் கற்றவையும் தங்களுள் கிளர்த்திய உணர்வுகளையும், இவ்வனுபவத்தின் அடர்த்தியினால் உள்ளத்தில் சிறிய அளவில் சிறகு விரிக்கும் எதிர்காலத்திட்டங்களுக்கான விருப்பங்களையும் நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள். அதன் பின்னர் தனிமைக்கான நேரத்தை வனத்தைச் சுற்றி வருவதிலும் சற்று நேரம் கண்மூடி அமைதி கொள்வதிலும் செலவழித்தேன்.

மூன்றாவது நாள் வழமை போல சுபஹ் தொழுகையோடு தொடங்கியது. காலை உணவுக்குப் பிற்பாடு கலை, இலக்கியத்துக்கான அறிமுக வகுப்பு ஒன்றை நடத்தினார் வாழ்கலை பயிற்றுநர் நவ்ஷாத் இக்கா.

கலை என்பது சூஃபி, ஜென் உள்ளிட்ட மரபுகளில் எவ்வாறு பயிலப்பட்டிருக்கிறது என்றும் அதற்கும் நவீன திரள் உற்பத்தியின் காலகட்டத்தில் வெகுமக்களிடமிருந்து அந்நியமாகிவிட்ட கலைக்குமான வேறுபாடு என்ன என்பது பற்றியும் பேசினார். மேலும் சமூக மாற்றத்துக்கான கருவியாகக் கலையைபார்க்கும் இடதுசாரிப் பார்வையையும் விலக்கி அவர் மரபார்ந்த பார்வையை முன்வைத்தார். கலை என்பது ஒரே நேரத்தில் ‘நாமெல்லாம் மனிதர்கள் அல்லவா’ என்று நமது அறச்சான்றை உலுக்கும் அரசியல் கொண்டதாகவும், அதே நேரம்‘ என்னதான் இருந்தாலும் நாமெல்லாம் மனிதர்கள்தானே’ என்று நம்மை ஆற்றுப்படுத்தும் வகையிலானதாகவும் இருக்கக்கூடியது என்றார்.

அதாவது, ஒரேநேரத்தில் அது அரசியலாகவும் துயர்நீக்கியாகவும் இருக்கக்கூடியது என்றார்.

பின்னர்,செய்து பார்த்து கற்கும் வகையிலாக ஒரு குழுச்செயல்பாட்டுக்கு எங்களைப் பணித்தார். உடைந்தது, சிதைந்தது, காலத்தால் முதிர்ந்தது ஆகியவற்றில் அழகைத்தரிசிக்கும் ஜப்பானிய வாபி-சாபி முறை அறிவுறுத்துவது போன்று நாங்கள் வனத்துக்குள் சென்று வழமையான பொருளில் ‘அழகற்ற’மூன்று பொருட்களைக் கைப்பற்றிக் கொண்டு வரவேண்டும்.

பின்னர், அதை வைத்து குழுவாக நாங்கள் ஒரு கலைப்படைப்பை உருவாக்கவேண்டும். அவரவர் கையில் கிட்டிய இலை தழைகள், ஓலைகள், கொப்பரை, உதிர்ந்த சிறுகாய்கள், ஏதோ ஒரு வண்டுக்கு உணவாகி மீந்திருந்தபழம் என்று சில பொருட்களை எடுத்துவந்தோம்.

பின்னர் யார் எதை எடுத்தார்கள் என்று தெரியாதவாறு அதையெல்லாம் ஓரிடத்தில் சேர்த்து அவற்றுள் ஒரு வடிவத்தைக் கண்டடைய எத்தனித்தோம்.

அச்செயல்பாடு நிறைவெய்தியது என்ற பொது மனநிலை திரண்டு வந்ததும் பயிற்றுநரான நவ்ஷாத்கா நாங்கள் இயற்றிய கலைப்படைப்பைப் பார்த்தால் எங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டார்.

‘ஒரு ஆதிவாசி கடவுளுக்கு செய்த படையல் போன்று உள்ளது’என்று ஒருவர் சொல்ல தங்கள் மனத்திலும் அதே எண்ணமிருந்ததாக வேறிருவர் கூறினர்.

‘கலை என்பது இயற்கையைப் போலச் செய்யும் அலகிலா விளையாட்டு. நான் உங்களை வனத்துக்குள் இறங்கித் தேடச் சொன்ன பொழுது நீங்கள் அனைவரும் வயது வேறுபாடு கடந்து ஒரு மழலையாகித் தேடினீர்கள். அந்த குதூகலத்தின் எதிரி நம்மோடு பிறரை ஒப்பிடும் செயல். படைத்த பொருளில் இல்லை கலை,படைப்புச் செயல்பாட்டிலேயே அது இருக்கிறது ’என்று அவர் கூறினார்.

இம் மூன்று நாட்களில் தொடர்ச்சியாக எல்லா உரையாடல்கள் & அமர்வுகளிலும் திரும்பத்திரும்ப சொல்லப்பட்ட விடயம் வணிகமயமாதலின் மீதான விமர்சனம். ஆன்மீகத்தேடல், இயற்கை விவசாயம் உள்ளிட்ட மாற்றுவாழ்வியல் முறைகள், சூஃபி இசை என்று எதை எடுத்தாலும் அவை உடனேயே வணிகமயமாகி உயிரோட்டத்தை இழப்பதோடு தங்கள் பங்குக்கு அவை மேலும் சீரழிவுகளை ஏற்படுத்துகின்றன.

ஆக, மாற்று வாழ்வியல் முயற்சிகளுக்கு அணியமாகுபவர்கள் கைக் கொள்ளவேண்டிய முதன்மையான அறம் இஸ்லாமிய மரபில் மையமாகச் சொல்லப்பட்டிருக்கும் ‘ஜுஹ்து’ எனும் உலகப்பற்றின்மையும் எளிமையும் தான்.

இக்கருத்து மூன்றுநாள் அமர்வுகளினூடே இயல்பாகவே திரண்டு வந்திருந்ததைக் காணமுடிந்தது.இவ்வாறு இந்த ரிஹ்லா சிறுவாணி தங்கல்  தனது நிறைவை அறிவித்து எங்களுக்குப் பிரியாவிடை கொடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Latest Travel Blog
  • பயணம்# 07ரிஹ்லா சிறுவாணி தங்கல்  — நினைவுக்குறிப்புகள்– 3

  • பயணம்#07 ரிஹ்லாசிறுவாணிதங்கல்  –நினைவுக்குறிப்புகள் – 2 ஏகாந்தத்தின் தித்திப்பு – ரிஹ்லா சிறுவாணி அனுபவம் –             ஆஷிர்முஹம்மதுபயணம்#07 ரிஹ்லாசிறுவாணிதங்கல்  –நினைவுக்குறிப்புகள் – 2. ஏகாந்தத்தின் தித்திப்பு – ரிஹ்லா சிறுவாணி அனுபவம் – ஆஷிர்முஹம்மது

  • பயணம்# 07ரிஹ்லா சிறுவாணி தங்கல் — ஒளிப்படங்கள்

Close
© Copyright 2024. All rights reserved.
Website by Dynamisigns.
Close