இது மனைவி கேட்ட கேள்வி.
“வியட்நாம் போறிங்களே அந்த நாட்டில் என்னங்க இருக்கு?”
“உங்க வயசுக்கு ஜாலியா மலேசியா, தாய்லாந்து, பாலி தீவுனு போகாம அதுயென்ன வியட்நாம்?, அங்கயென்ன இருக்கு” என்கிற கேள்வியை கொஞ்சம் வெளிப்படையாகவே கேட்டனர் நெருங்கிய நண்பர்கள்.
“இந்த கேள்வியை எதிர்க்கொண்டபோது எனக்கு வியட்நாம் குறித்து சொல்வதற்கு மூன்று பாய்ண்டுகளே இருந்தன. அது ஒரு பொதுவுடமை தேசம், கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் தேசம். உலக வல்லரசாகவும், உலகத்தின் நாட்டாமையாக தன்னை வெளிப்படுத்திவரும் அமெரிக்காவை போர்களத்தில் புறமுதுக்கிட்டு ஓடஓட விரட்டிய தேசம். அமெரிக்கா – வியட்நாம் இடையிலான போர்க்களத்தில் பயத்தில் அலறிக்கொண்டு ஓடிவரும் சிறுமியின் புகைப்பட பிம்பம் மட்டுமே மனதில் இருந்தது. இவைகளை மட்டுமே சொல்ல முடிந்தது.
“கம்யூனிஸ தேசத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் என்ன இருந்துவிடப்போகிறது என்கிற எண்ணம் மனதுக்குள் இருந்தது. 14 நாட்கள் அங்கே இருக்கப்போகிறோம் அங்கே பார்க்க என்ன இருக்கிறது என இணையத்தில் வியட்நாம் குறித்து தேடத்துவங்கினேன்.
“ஆசியா கண்டத்தில் தெற்காசியாவில் உள்ள நாடுகளில் ஒன்று வியட்நாம். சோசலிச குடியரசு நாடு. நாட்டின் தலைநகரம் ஹனாய். நாட்டின் மொத்த பரப்பளவு 3,31,689 சதுர கிலோமீட்டர். நாட்டின் மொத்த மக்கள் தொகை தோராயமாக 10 கோடியே 40 லட்சம் சொச்சம் பேர் உள்ளனர். நாட்டின் நிலவியல் அமைப்பு மண்ணுளி பாம்பு போல் இருக்கும். அதாவது நாட்டின் வடக்கு எல்லை பகுதியும், தெற்கு எல்லைப்பகுதியும் மண்ணுளி பாம்பின் தலையைப்போல் பெரியதாக இருக்கும், உடம்பு நீண்டதாக வால் போல் இருக்கும். வியட்நாமின் எல்லைகளாக நாட்டின் கிழக்கு பகுதியில் தென்சீனக்கடல், வடமேற்கு பகுதியில் லாவேஸ், தென்மேற்கு பகுதியில் கம்போடியா, வடக்கு பகுதியில் சீனா போன்றவை அமைந்துள்ளன.
சீனப்பேரரசின் ஒருப்பகுதியாக சுமார் ஆயிரம் ஆண்டுகள் சீனர்களின் ஆட்சியில் இன்று வியட்நாம் என அழைக்கப்படும் பகுதிகள் இருந்துவந்தன. வியட்நாம் என்கிற பெயரே 1802ஆம் ஆண்டு இந்நாட்டை ஆட்சி செய்த பேரரசர் ஜியா லோங்கினால் சூட்டப்பட்டுள்ளது. நாட்டில் 54 இனக்குழுக்கள் உள்ளன. இதில் வியட்நாமிஸ் என்கிற பெயரில் அழைக்கப்படும் கிங்க் என்கிற சமூகம் 85 சதவிதம் உள்ளது, தாய் 2 சதவிதம், மியோங் 1.5 சதவிதம், கிமீர் 1.4 சதவிதம், மோங் 1.4 சதவிதம், நுங் 1 சதவிதம். இத்தனை சமூக குழுக்கள் இருந்தாலும் இவர்கள் பேசும் மொழி, நாட்டின் அதிகாரபூர்வமொழி வியட்நாமி மொழி அடுத்ததாக அலுவல் மொழியாக ஆங்கிலத்தை வைத்துள்ளனர். பிரெஞ்ச், சீன, கெமர் மொழிகளும் பேசப்படுகின்றன.
வியட்நாமில் பௌத்த மதம் தான் முதன்மையானது. கிருஸ்துவர்கள் பெருமளவில் இருந்தாலும் அவர்களும் பௌத்த கொள்கைகளைத்தான் கடைப்பிடிக்கின்றனர். இஸ்லாமியர்களும் மிக குறைவாக உள்ளனர். அனைவருக்குமான சமமான நாடாக வியட்நாம் இருக்கிறது. பௌத்தர்கள் அதிகமாக இருந்தாலும் அதைவிட அதிகமாக மதமற்றவர்கள் இந்நாட்டில் உள்ளனர்.
வியட்நாமில் உலக பாரம்பரிய சுற்றுலாதலங்கள் எட்டு இருக்கின்றன அதில் 5 தலங்கள் அந்த நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இடங்களாக உள்ளன. ஹியூ ஹாலாங் பே, ஹோய், என் மகன் சரணாலயம், போங்க் நுக பாங்க் தேசிய பூங்கா, தாங் லாங்கின் இம்பீரியல் சிட்டாடல் – ஹனோய், ஹோ வம்சத்தின் கோட்டை, டிராங் ஆன் லேண்ட்ஸ்கேப் காம்ப்ளக்ஸ் போன்ற இடங்கள் இருப்பதை படித்து ஆச்சரியமாகின. இந்த இடங்கள் குறித்து யூடியுப்பில் அந்த வீடியோக்களை பார்த்தபோது, இயற்கை பகுதிகள் மனத்தை கொள்ளைக்கொண்டன. இணையத்தில் பார்ப்பதற்கும், நேரில் பார்ப்பதற்கும் பெரும் வேறுபாடு இருக்குமே என மனத்தில் தோன்றியது.
வியட்நாம் தேசத்தில் முதல்நாள் பயணமே அதிரிபுதிரியாய் தொடங்கியது. இரவு விமான பயணம் என்பதால் காலையில் தாமதமாகத்தான் எழுந்தோம். 10 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு சாப்பிடலாம் என ஹோட்டல் வரவேற்பறை மேலாளரிடம் கேட்டபோது, காலையில் மட்டும் தான் ஹோட்டலில் உணவு, மதியம், இரவு கிடையாது என்றார். இது காலை தானே எனக்கேட்டபோது மதியமாகப்போகுது என்றார். அங்கே காலை உணவு என்பது 7 டூ 9 வரை தானாம். அதற்கு மேல் இருக்காதாம். நாங்கள் சாப்பிட அவரே விசிட்டிங் கார்டு தந்து “இந்தியன் ரெஸ்டாரென்ட் இருக்கு அங்கே உங்களுக்கு தேவையானது கிடைக்கும்” என்றார்.
ஹோட்டலில் இருந்து வெளியேவந்தபோது பகலில் முதல்முறையாக ஹனாய் நகரத்தை பார்த்தோம். நகரத்தின் முக்கிய பகுதி, சாலையின் இருபுறமும் நடைபாதையில் நம்மவூர் கையேந்தி சாப்பாட்டு கடைகள் போல் குட்டி குட்டியாக நாற்காலி போடப்பட்டு சாலையோரம் உணவகங்கள் வியாபித்திருந்தன. இரண்டு குச்சிகளை வைத்து நூடுல்ஸ், பச்சை இலைகளை எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். விசிட்டிங் கார்டில் இருந்த பெயரை கூகுள் மேப்பில் தட்டியதும் அது வழிகாட்டியது. அதுகாட்டிய வழியிலேயே சென்று ஹோட்டலை அடைந்தோம்.
அவர்கள் தந்த மெனு கார்டில் ஏதோதோ பெயர்கள் இருந்தன. மூன்று ஆனியன் பராத்தா ஆர்டர் செய்தபோது வந்தவை நம்மவூர் ஸ்வீட்போளி போல் இருந்தது. நம்மவூர் போளியில் இனிப்பு வைத்திருப்பார்கள். இதில் ஆனியன் அரைந்து வைத்திருந்தார்கள் அவ்வளவே. பராத்தாவுக்கு தொட்டுக்க வட்டமாக நறுக்கிய வெங்காயம், பாதி எலுமிச்சை பழம், இரண்டு பச்சை மிளகாய் தந்தனர்.சாப்பிட்டபோது நாக்கு குடிக்க தண்ணீர் கேட்டது. குடிக்க தண்ணீர் கூட வைக்கவில்லை என்பது அப்போதுதான் தெரிந்தது. தண்ணீர் கேட்டபோது அதுக்கு தனி விலை என்றார் சப்ளையர்.
சாப்பிட்டு முடித்தபின் பில் வந்தது, வாங்கி பார்த்தபோது மயக்கமே வந்துவிட்டது.
மூன்று பராத்தாவுக்கும் ஒரு 300எம்.எல் வாட்டர் பாட்டிலுக்கும் 6.5 லட்சம் டாங். நம்மவூர் மதிப்புக்கு 1900 ரூபாய் சொச்சம். வாட்டர் பாட்டில் விலை 30 ஆயிரம் டாங். நம்மவூர் மதிப்புக்கு 90 ரூபாய் சொச்சம்.
“சப்ளையரும் மேனேஜரும் ஒருவரே. பில் செட்டில் செய்தபோது அந்த இளைஞரிடம் “என்ன ஊர் ராசா நீ” எனக்கேட்டபோது,”குஜராத் அகமதாபாத்” என்றான்.
“சோத்துக்கு இவ்ளோ செலவா” என புலம்பியபடி வெளியே வந்தோம்.
எங்களுக்காக நியமிக்கப்பட்ட உள்ளுர் சுற்றுலா வழிகாட்டி, ஏறுங்க, ஏறுங்க என அவசரப்படுத்தி காரில் ஏற்றிக்கொண்டு நம்மை அழைத்து சென்று தொன்மையான ஒரு கட்டிடம் முன்பு இறக்கினார். அந்த கட்டிடம் குறித்து வழிக்காட்டி விளக்கம் சொல்லத்துவங்கினார். அங்கே ஆடியோ வழியாக அதன் வரலாறுகளை பயணிகள் தெரிந்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுயிருந்தன.
“வியட்நாமின் முதல் பல்கலைக்கழகம் இது. கி.பி1070 ஆம் ஆண்டு நாட்டின் தலைநராக அப்போதும் இருந்த ஹனாய் நகரில் கட்டப்பட்டது. 1076ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் என்கிற பெயருடன் கல்வி கற்பித்துவந்தது. இங்கு சீன பண்டையகால கல்வி முறையான கன்பூசியனிசம் கற்று தரப்பட்டது. கன்பூசியனிசம் என்பது சிந்தனைக்கல்வி முறை. இது மனிதநேயத்தை வலியுறுத்தும், சமூகநல்லிணக்கத்தை கடைப்பிடிக்கவேண்டும், சடங்கு நெறிமுறைகளின்படி எப்படி வாழவேண்டும், பகுத்தறிவு சிந்தனையுடன் இருக்கவேண்டும் என்பதோடு போர்க்கள பயிற்சிகள் போன்றவை இங்கு கற்றுதரப்பட்டுள்ளன.
இந்த பல்கலைக்கழகத்தை கட்டியவர் பேரரசர் லைநான்டங் (1066-1127). இவரது ஆட்சிக்காலத்தில் நாட்டுக்கு டை கோ வியட் என்கிற பெயரை வைத்தார். அதாவது கிரேட் வியட் என ஆங்கிலத்தில் பொருள் வரும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த குறுநில மன்னர்கள், நாட்டின் அரசர்கள், பேரரசர் குடும்ப வாரிசுகள் இங்கு கல்வி பயின்றனர்.
படிப்பில் மிக திறமையான மாணவர்கள் மட்டுமே இங்கு சேர முடியும். இங்கு படித்தவர்களில் சிலர் பிற்காலத்தில் வியட்நாமின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், ராணுவ உயர் அதிகாரிகள் பொறுப்புகளில் இருந்துள்ளனர், இருந்தும் வருகின்றனர். பலர் அரசின் பொறுப்புகளில் இருக்கின்றனர்.
இப்பல்கலைகழகத்தை இப்போது இலக்கியக் கோவில் என்றழைக்கின்றனர். இதன் வளாகத்தில் தியன் குவாங் என்கிற கிணறு உள்ளது. இதனை இலக்கிய கிணறு என்றும் அழைக்கின்றனர். 1802ஆம் ஆண்டு நகுயன் வம்சம் யூ நகரத்தில் புதிய கல்விச்சாலையை உருவாக்கியதால் இதன் தன்மையை இழக்கத்துவங்கியது. அதன்பின் இது பிரெஞ்ச் ஆட்சிக்காலத்தில் நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டது. அதன்பின் இப்போது நாட்டின் மதிப்பு மிக்க வரலாற்றுச் சின்னமாக பராமரிக்கப்படுகிறது.
5.80 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த பல்கலைகழகத்துக்குள் வருவதற்கு மூன்று வழிகள் உள்ளன. அதில் பிரதான வாயில் வழியாக நுழையும்போது வழியில் வெண்கலத்தால் செய்யப்பட்ட பெரும் மணியொன்று உள்ளது. இந்த மணி முக்கிய தகவல்களை மன்னருக்கு அறிவிக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த மணியை துறவிகள் மட்டும்மே அடித்து தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நம்மவூரில் துளசி மாடம் என நாம் அழைப்பது இங்கும் உள்ளது. கற்பூரம், விளக்கு ஏற்றும் வழக்கம் இல்லை என்பதால் இங்கு ஊதுவத்தி ஏற்றி வணங்குகின்றனர். ட்ராகன், ஃபீனிக்ஸ் பறவைகள் பலவிடங்களில் செதுக்கியும், வரைந்தும் வைக்கப்பட்டுள்ளன.
வியட்நாமின் நான்கு புனித சின்னங்கள் ட்ராகன், ஃபீனிக்ஸ், ஆமை, யூனிகார்ன் போன்றவையாகும். வீரத்தை அடையாளப்படுத்தும் டிராகன் அரசரின் சின்னமாகவும், அழகியலையும், போராடும், உயிர் பெறும் தன்மையை கொண்ட ஃபீனிக்ஸ் பறவை ராணியின் சின்னமாகவும், ஆமை நீண்ட ஆண்டுக்காலம் உயிர் வாழக்கூடியது, யூனிகார்ன் உருவம் நீர்வழி ஞானம் உள்ளது என்பதாலும் இந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மக்கள் இப்போதும் மரியாதை தருகின்றனர்.
இப்பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் போர்களால் சிதலமடைந்ததுபோக மீதி 82 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அதனை பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். அதில் அரசர்களின் வீரம், புகழ் பறையப்பட்டுள்ளது. அதோடு, பல்கலைக்கழகத்தில் 1442 முதல் 1779 வரை நடைபெற்ற முப்பெரு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 1307 நபர்களின் பெயர், அவர்களின் ஊர் போன்றவை அதில் செதுக்கிவைக்கப்பட்டுள்ளன. லீ வம்சத்தால் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இங்கு கல்வி என்பது மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை கற்பிக்கப்பட்டுள்ளது. வியட்நாமின் கலாச்சாரம், கல்வி, வரலாறு, சமூகம் குறித்து தெரிந்துக்கொள்ள இன்றளவும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு இங்குள்ள குறிப்புகள் ஆவணமாக உள்ளதை பார்க்க முடிந்தது.
இன்றைய கல்விமுறை
“வியட்நாம் மக்கள் பண்டைய காலம் முதல் இப்போதுவரை கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். நாட்டில் 95 சதவித மக்கள் படித்தவர்கள். கல்வியை பள்ளி முதல் கல்லூரி வரை பல அடுக்குகளாக பிரித்துவைத்துள்ளனர். அதன்படி மழலையர் கல்வி என்பது 3 வயதில் தொடங்குகிறது. 1 முதல் 5வது வரையிலான தொடக்ககல்வி 11 வயதில் முடிகிறது. நடுநிலைப்பள்ளி என்பது 6 முதல் 9வது வரையிலும், மேல்நிலைப்பள்ளி என்பது 10 முதல் 12 வது வரை வைக்கப்பட்டுள்ளன. அதன்பின் கல்லூரியில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு என வைத்துள்ளனர். மேல்நிலைப்பள்ளி வரை கல்வி அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு தனியார் இணைந்து நடத்தும் பள்ளிகள், அமைப்புகள் நடத்தும் பள்ளிகள் என உள்ளன. கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகள் கூட கட்டிடங்களாக அழகிய வடிவில் இருந்ததை பார்க்க முடிந்தது. தொடக்ககல்வி கட்டாயப்பட்டியலில் உள்ளது.
வியட்நாம் தேசிய பல்கலைக்கழகம் ஹனாய், ஹோசிமின் என இரண்டு நகரங்களில் உள்ளது, இதன் கீழே கல்லூரிகள் வருகின்றன. நாட்டில் சுமார் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் உள்ளன.மருத்துவம், பொறியியல், கட்டிடவியல், சட்டம், ராணுவம், காவல்துறை, விவசாயம், பொருளாதாரம், கலை, இலக்கியம், கடலியல், துணித்துறை, போக்குவரத்து என தனித்தனியாக பல்கலைக்கழகங்கள் உள்ளன. நாட்டில் 237 பல்கலைக்கழகங்கள் உள்ளனவாம். அதோடு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டு பல்கலைக்கழகங்கள் 6 வியட்நாமில் கல்வி கற்பித்து வருகின்றன குறிப்பிடதக்கது.
மக்களின் உருவ, ஆடை அமைப்பு
இந்திய பெண்கள் ஒல்லி, மையம், உடல் பருமன் என சில வகைகளில் உள்ளதை நாம் பார்க்கிறோம். வியட்நாம் பெண்கள் இதற்கு நேரரெதிராக இருக்கிறார்கள். நாடு முழுவதும் நான் பார்த்தவரை 99 சதவித பெண்கள் அளவான உயரம், பருமனற்ற உடல் எனத் தோற்றமளிக்கிறார்கள்.
இந்தியாவில் திருமணத்துக்கு முன் ஒல்லியாக உள்ள யுவதிகள் கூட திருமணத்துக்கு பின் ஒருசுற்று குண்டாகியிருப்பதை பார்க்கிறோம். உடலில் போடப்பட்ட சதையை குறைக்க நம்நாட்டில் ஊருக்கு நாற்பது உடற்பயிற்சி நிலையங்கள் இருக்கிறது. ஆனால் வியட்நாம் தேசத்தில் நான் சுற்றிய பகுதிகளில் அப்படியொரு ஜிம்மைப் பார்க்கவே முடியவில்லை.
சீன குடியேற்றத்துக்கு முன்பு வரை தாய்வழி சமூகமாகவே இருந்துள்ளது வியட்நாம். சீனர்களின் ஆட்சி காலத்திலேயே அது ஆண் வழி சமூகமாக மாற்றமடைந்துள்ளது. அப்போது முதல் இப்போதுவரை வியட்நாமில் ஆண்களுக்கு சமமாக பெண்கள் உழைக்கிறார்கள். நாட்டின் மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் குறைவாகத்தான் உள்ளார்கள். ஹோட்டல்கள், உணவு விடுதிகள், சமையல் கூடங்கள், கடைகள் என பலவற்றிலும் பெண்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். உணவு சமைக்கும் இடத்தில் கண்டிப்பாக பெண்கள் உள்ளனர். சமையலுக்கு பெண்கள் கிடைப்பதில்லை என்றார்கள் ஹோட்டல்காரர்கள் அந்தளவுக்கு பெண்கள் உழைப்பாளிகளாக உள்ளனர். சுற்றுலா வழிகாட்டிகளாக பெண்கள் ஆங்கிலத்தில் விளக்கம் சொல்லிக்கொண்டு இருந்தனர்.
நம்மவூர் சிறுமிகள் முதல் கிழவிகள் வரை அணியும் நைட்டி வகை உடை தான் அந்நாட்டு பெண்கள் அணியும் பாரம்பரிய உடை. ஆனால் மேற்கத்திய பெண்கள் அணியும் மாடர்ன் உடைகளைப் பெரும்பாலான படித்த, பணியாற்றும் பெண்கள் அணிகின்றனர்.
சிறை
சைமன் சென்ட்ரல் என அழைக்கப்பட்ட ஹோவா லோ சிறை,வியட்நாம், பிரெஞ்சு இந்தோசீனாவின் ஒரு பகுதியாக இருந்தபோது, ஹனாய் நகரில் பிரெஞ்ச் ஆட்சியாளர்களால் 1886 இல் இந்த சிறையை கட்டத்தொடங்கி 1901 இல் முடித்தனர். 12,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலை ஒருக்காலத்தில் இந்தோசீனாவில் உடைக்க முடியாத சிறையாக கருதப்பட்டது. 4 மீட்டர் உயரமும் 0.5 மீட்டர் தடிமனும் கொண்ட சுற்றுச்சுவர்களால் கட்டப்பட்டிருந்தது. சிறைவாசிகள் தப்பிக்காமல் இருக்க சுவர்கள் மேல் உடைந்த கண்ணாடி மற்றும் உயர் மின்னழுத்த மின்சார முள்கம்பிகள் சுவற்றில் பதிக்கப்பட்டுயிருந்தன. சிறைச்சாலையின் நான்கு மூலைகளிலும் நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் இருந்தன.
சிறைச்சாலையின் உள்ளேயே ஒரு காவலர் இல்லம், மருத்துவ மனை, இரும்பு, ஜவுளி தயாரிக்கும் பகுதி, குற்றம் சாட்டப்பட்ட கைதிகளை அடைக்க தனியாக 7 பெரிய அறைகள். கச்சோட் என்று அழைக்கப்படும் ஒரு பயங்கரமான இடமும் இருந்தது. இங்கு கடுமையான குற்றங்களுக்கு, அரசை எதிர்ப்பவர்களுக்கு தண்டனை வழங்கும் இடமாக இருந்தது. இதற்குள் சூரிய ஒளி கிடையாது. கால்களை அங்குள்ள தரையில் உள்ள இரும்பு லாக் போட்டு பூட்டிவிடுவார்கள். திரும்பிக்கூட படுக்கமுடியாது. உள்ளேயே கழுத்தை துண்டாக்கி கொல்லும் தண்டனையும், கழுத்தில் இரும்பு ராடுகளை சொருகி கொல்லும் முறையும் இருந்தன.
வியட்நாம் சுதந்திரத்திற்காக போராடிய அரசியல் கைதிகளை அடைக்க இந்த சிறை பயன்படுத்தப்பட்டது. வியட்நாமிய கைதிகள் இங்குள்ள காவலர்களால் இரக்கமின்றி சித்திரவதை செய்யப்பட்டு தினமும் தாக்கப்பட்டனர். சித்திரவதைகளில் மின்சார அதிர்ச்சி, தலைகீழாக தொங்குதல் மற்றும் மோசமான சாப்பாட்டை தந்தனர்.
முதலில் 200 பேரை அடைக்கும் விதமாக கட்டப்பட்ட இந்த சிறையில் அதைவிட 10 மடங்கு பேர் அடைக்கப்பட்டனர். 1913களில் 600 பேர் வரை அடைக்கப்பட்டுயிருந்தனர். பின்னர் 1916ல் 700 கைதிகள், 1922ல் 895 கைதிகள், 1954ல் 2 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த சிறை பாதுகாப்பானதாக கட்டப்பட்டிருந்தாலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் 16 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிந்தது. அவர்கள் 1951 டிசம்பர் 24 ஆம் தேதி சிறை வளாகத்திலிருந்து பாதாள சாக்கடைக்கு தண்ணீர் செல்லும் வழியாக தப்பிச்சென்று மீண்டும் விடுதலை போராட்டத்தில் கலந்துக்கொண்டு போராடினர். 1954 இல் பிரெஞ்சுக்காரர்கள் ஹனோயிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகும் சிறைச்சாலை செயல்பட்டே வந்தது.
1964 முதல் 1973 வரை, இரண்டாம் இந்தோசீனா (வியட்நாம் – அமெரிக்கா) போரின் போது வியட்நாமை எதிர்த்து அகப்பட்ட அமெரிக்க போர் கைதிகளை அடைத்துவைக்கும் சிறையாகவும் இருந்துவந்தது. அமெரிக்காவுடனான போருக்கு பிறகும் அடுத்த 20 ஆண்டுகள் உள்நாட்டு அரசியல் கிளர்ச்சியாளர்களை காவலில் வைக்க இந்த சிறை பயன்பட்டது. 1990 ஆம் ஆண்டு இந்த சிறைச்சாலை மூடப்பட்டது. நகரத்தின் மையத்தில் இந்த சிறைச்சாலை இருந்தது. நகரத்தின் வளர்ச்சியால் இந்த சிறைச்சாலையை இடித்துவிட்டு அரசின் செயல்பாடுகளுக்காக பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்காக சிறைச்சாலையின் பெரும்பகுதி இடிக்கப்பட்டது. முகப்பு பகுதி மற்றும் சில பகுதிகளை மட்டும் பிற்கால சந்ததிகள் அறிந்துக்கொள்ளவேண்டும், வரலாற்றை தெரிந்துக்கொள்ள வேண்டும் என அருங்காட்சியகமாக மாற்றி, உள்ளே சிறை கைதிகள் நடத்திய முறையை மினியேச்சர், சிற்பங்கள், உருவபொம்மைகள், ஓவியங்கள் வழியாகவும் அதன் குறிப்புகள் வழியாக பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துகின்றனர்.
இந்த சிறைக்கு வருபவர்கள் இரண்டு வெவ்வேறு காலக்கட்டங்களில் அதாவது 1896 முதல் 1955 வரையிலான பிரெஞ்ச் காலக்கட்ட சிறை குறித்தும், 1964 முதல் 1975 வரையிலான வியட்நாம் நாட்டின் சிறை செயல்பாடுகள் குறித்தும் அறிந்துக்கொள்ளமுடியும். இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதே நமது கருத்து. கருத்துச் சுதந்திரம் அரசியல் சாசனத்தால் பாதுகாக்கப்பட்டாலும், ஆட்சியை, அரசாங்கத்தை விமர்சிக்கவேகூடாது என்கிறது வியட்நாமை ஆளும் அரசும், கம்யூனிஸ்ட் கட்சியும். அரசை விமர்சனம் செய்தார்கள் என்பதற்காக சுமார் 160 பேர் சிறையில் அடைத்துள்ளனர் என்கிறது 88 இயக்கம்.
அதென்ன 88 இயக்கம் ?
வியட்நாம் ஆட்சிக்கு எதிராக அமைதியாக போராடுபவர்களை, பேசுபவர்களை, கருத்து தெரிவிப்பவர்களை அடக்க வியட்நாம் குற்றவியல் சட்டம் 1999 பிரிவு 88 பயன்படுத்தப்படுகிறது. இப்பிரிவு நாட்டுக்கு எதிராக போராடுபவர்களை, பேசுவர்களை குற்றவாளிகள் என்கிறது. இந்த சட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. அதில் குற்றவியல் சட்டத்தின் 117 பிரிவு 88ன் படி, சோசலிசக் குடியரசிற்கு எதிராக பேசுவதை, பிரச்சாரம் செய்வதை தடுக்கிறது. இது ஆட்சி கவிழ்ப்புக்கான குற்றமாக கருதப்பட்டு மூன்று முதல் இருபது ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கமுடியும். பிரிவு 79 இன் கீழ் (தற்போது 2015 கோட் பிரிவு 109) பிரிவு, மக்கள் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கத்துடன் அமைப்புகளை உருவாக்கினால், உருவாக்குபவர்கள், அதில் உறுப்பினராக சேருபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் பிரிவு இது.
குற்றவியல் பிரிவு 88ன் கீழ் நாடு முழுவதும் அரசியல் பிரபலங்கள், யூ டியூப் பிரபலங்கள், சமூக வலைத்தள பிரபலங்கள், ஆட்சியாளர்களை விமர்சனம் செய்தார்கள் என சுமார் 200 சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்வதை கண்டிக்கும் விதமாக இந்த சட்டப்பிரிவின் பெயரிலேயே 88 இயக்கம் எனத்தொடங்கியுள்ளனர்.
வியட்நாமில் இந்த சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்டாலே அவர்களுக்கு தண்டனை உறுதி என்கிற நிலை. கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்டவர்களில் 30 பெண்களும் இருக்கின்றனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச அளவில் வியட்நாமுக்கு அழுத்தம் தரவைக்கும் அளவுக்கு இயங்கிக்கொண்டு இருக்கிறது இந்த மனித உரிமை இயக்கம்.
வியட்நாம் பெண்கள் அருங்காட்சியகம்.
1985 ஆம் ஆண்டு வியட்நாம் பெண்கள் சங்கம் நுகுய்ன் தை டிங் என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் இரண்டாம் இந்தோசீனா போரின்போது தேசிய விடுதலை முன்னணியில் முக்கிய பெண் தலைவராக இருந்தார். அவரின் வேண்டுகோளின்படியே பெண்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. ஹனாய் நகரத்தில் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டு 1987 ஜனவரி 10ஆம் தேதி வியட்நாம் சோசலிஸ்ட் குடியரசின் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. 1995 அக்டோபர் 20 ஆம் தேதி நான்கு மாடி கட்டிடமாக திறக்கப்பட்டது.
இக்கட்டிடத்திற்குள் குடும்பத்தில் பெண்கள், வரலாற்றில் பெண்கள், பெண்கள் ஃபேஷன் என மூன்று தலைப்பில் பிரித்து வைக்கப்பட்டு நாட்டில் உள்ள 54 இனங்களின் பெண்களின் கலாச்சாரம், உணவு, உடை, கலாச்சாரம், விடுதலை போராட்டம், இந்தோசீனா போர், இரண்டாம் இந்தோசீனா போரில் பெண்களின் பங்கை பறைச்சாற்றும் ஆவணங்களாக 40 ஆயிரம் பொருட்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வியட்நாமில் உள்ள 64 மாகாணங்கள், நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாலினம்,பெண்களின் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் குறைவாக உள்ளது. கிராமப்புற பெண்களிடம் விழிப்புணர்வே இல்லை. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பொதுவாக அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. பெண்களுக்கு ஓய்வு,சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு குறைந்த நேரமே உள்ளது. அவர்களின் பெரும்பாலான நேரங்கள் வீட்டு வேலைகள் செய்யவும், வயல்களில் வேலை செய்யவும், கால்நடைகளை வளர்த்து பொருளீட்டவே நேரம் சரியாக இருக்கின்றன என்றுள்ளார்கள்.
தற்போது நாடு முழுவதும் 10,472 உள்ளூர் பெண்கள் சங்கங்களைச் சேர்ந்த 13 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் வியட்நாம் பெண்கள் சங்கத்தில் உள்ளனர் என்கின்றனர்.
சுதந்திரத்துக்காக, உரிமைக்காக ஒருக்காலத்தில் பெரும் பேரரசுகளை எதிர்த்த, துப்பாக்கி குண்டுகளுக்கே பயப்படாத வியட்நாம் பெண்கள் இப்போது மக்களுக்காக குரல் கொடுத்துவிட்டு சிறையில் கொடுமைகளை அனுபவித்து வரும் சக பெண்களுக்கு குரல் கொடுக்ககூட தைரியமுற்று இருப்பதை காண முடிந்தது.
“இன்றைய டூர் முடிந்தது, உங்களை ஹோட்டலில் இறக்கிவிடுகிறேன் காரில் ஏறுங்கள்” எனச்சொன்னபோது நகரத்தில் இருள் படத்தொடங்கி சாலைகளின் மின்விளக்குகள் எரியத்துவங்கியது. நேரம்போனதே தெரியலயே என கடிகாரத்தை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது.
கடிகாரத்தில் நேரம் 5 மணியைக் காட்டியது. 5 மணிக்கெல்லாம் இருட்டிவிட்டதே என நினைத்தால் காலநிலை அப்படி. 4 மணிக்கே சூரியன் மறைந்து இருள் சூழத்தொடங்கிவிடுகிறது. வியட்நாமில் 5 மணி என்றால் இந்தியாவில் மாலை 3.30 மணி.
உணவு
நம்மை முதல் நாள் ஹோட்டலில் இறக்கிவிட்டபின் இரவு உணவுக்காக தலைநகர் ஹனாய் நகர வீதிகளில் வலம்வந்தோம். அங்கு நாம் கண்டது, நகரத்தின் பலபகுதிகளில் பல்வேறு விதமான கடைகள், ஷாப்பிங் மால்கள் எல்லாம் 7 மணிக்கெல்லாம் மூடப்பட்டிருந்தன. சுற்றுலாப்பயணிகள் அதிகம் புழங்கும் பகுதிகளில் மட்டும் கடைகள், தங்கும் விடுதிகள், சாலையோர உணவகங்கள் மட்டும் இரவு 9 மணி அதிகப்பட்சம் 10 மணி வரை இயங்குகின்றன. இதிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய உணவு கடைகள் மட்டுமே இரவு 11 மணி வரை இயங்குகின்றன.
இந்தியாவில் விதவிதமாக சாப்பிட்டு நாக்கு நளபாகத்துக்கு அடிமையானவர்கள் வியட்நாம் உணவை சாப்பிட்டால் முகம் சுருங்கிவிடும். வியட்நாமின் பிரதான உணவு ’போ’ என சொல்லப்படும் சூப். சுடச்சுட தருகிறார்கள். அதில் சைவம் என்றால் நூடூல்ஸ், நறுக்கப்பட்ட வெங்காயதண்டு, வேக வைக்கப்பட்ட முட்டைக்கோஸ் இலை, ஏதாவது ஒரு கீரையைப் போட்டுத் தருகிறார்கள். அசைவம் என்றால் நூடூல்ஸ்சுடன், எலும்பு இல்லாத வேகவைக்கப்பட்ட சிக்கன் துண்டுகளை பஞ்சுப்போல் பிய்த்துப்போட்டு தருகிறார்கள். பீப், பன்றிக்கறி வேண்டும் என்றாலும் கலந்து தருகிறார்கள். அவர்களின் உணவு எதிலும் உப்பு, காரம் கிடையாது, பெப்பர் கூட கிடையாது. சில ஹோட்டல்களில் மட்டும் பெப்பர், உப்பு தந்தார்கள். வியட்நாமிய மக்கள் பெரும்பாலும் உணவில் உப்பு, காரம் சேர்த்துக்கொள்வதில்லை. உணவில் மஞ்சள் தூள் மட்டும் போட்டு வேகவைத்த உணவை தருகிறார்கள். உணவில் காரம் வேண்டும் என்றால் பொடிசாக நறுக்கிய பச்சை மிளகாய் 4 அல்லது 5 துண்டு தருகிறார்கள் அல்லது மிளகாய்சாஸ் தருகிறார்கள்.
காலை, மதியம், இரவு மூன்று வேளையும் கட்டாயம் வியட்நாமியர்கள் போ உணவை சாப்பிடுகிறார்கள். அதற்கு தொட்டுக்கொள்ள பொரித்த நத்தை, வேகவைக்கப்பட்ட மஸ்ரூம், மீன் துண்டுகளை வாங்கிக்கொள்ளலாம். அவர்கள் தரும் உணவை அந்த இரண்டு குச்சிகளில் எடுத்து சாப்பிடுவதுதான் எங்களுக்கு சிரமமானதாக இருந்தது. அவர்களும், மேற்கத்திய சுற்றுலாப்பயணிகள் எளிதாக அக் குச்சியை பயன்படுத்தினார்கள்.
அசைவத்தில் சிக்கன், கடல் உணவுகள், பீப், பன்றிக்கறி பிரதானமாக உள்ளது. மட்டன் எனச்சொல்கிறார்கள் அது ஆட்டுக்கறி இல்லை. பன்றிக்கறி சாப்பிட்டு பழக்கம் இல்லாததால் தினமும் சிக்கன், கடல் உணவையே சாப்பிட்டோம். அதிலும் எண்ணெயில் பொறித்த குட்டி ஆக்டோபஸ் அவ்வளவு அற்புதமாக இருந்தது. ஹோட்டல்களில் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் என்கிற பெயரில் மரவள்ளி கிழங்கில் செய்யப்பட்ட வடை, வேகவைத்து வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், வெங்காய போண்டா அற்புதமாக செய்து தந்தனர்..
வெள்ளைச் சோறு வியட்நாமில் எல்லா ஹோட்டல்களலும் தருகிறார்கள். நம்மவூரில் சாப்பாடு என்றால் அதனோடு சாம்பார், காரக்குழம்பு, மோர்க்குழம்பு, ரசம், மோர், பொறியல், கூட்டு என வகை வகையாக தருவார்கள். அங்கே அதெல்லாம் கிடையாது, அரைவேக்காட்டில் வேகவைக்கப்பட்ட கத்தரிக்காய், வெங்காயம், புதினா வைத்து அதன்மேல் எண்ணெய்யில் பொறிக்கப்ட்ட சிறியதாக கட் செய்யப்பட்ட வெங்காயத் தாள்களை தூவி சாஸ் ஊத்தி தனியாக ஒரு பிளேட்டில் தந்தார்கள். சாதத்தோடு இதனைத்தான் கலந்து சாப்பிடவேண்டும். தொட்டுக்கொள்ள மரவள்ளிக்கிழங்கு வடை தருகிறார்கள்.
வெள்ளை சாதம்மே சர்க்கரை பொங்கல் போல் லேசாக தித்திப்பாக இருந்தது. காலை, இரவு நேரத்தில் ஃப்ரைட்ரைஸ் கண்டிப்பாக இருக்கிறது. சிக்கன் ரைஸ், பீப் ரைஸ், வெஜிடபிள் ப்ரைட்ரைஸ் தருகிறார்கள். முட்டை அங்கே சைவ கேட்டகரியில் வைத்துள்ளார்கள். ஒரு ஆம்லேட் என்றால் இரண்டு முட்டை ஊற்றி செய்கிறார்கள். டபுள் ஆம்லேட் என்றால் நான்கு முட்டைகளை கொண்டு இரண்டு ஆம்லேட்களாக போட்டு வந்து தந்தார்கள்.
வியட்நாம் உணவு பழிவாங்கிவிடும்மோ என நினைத்திருந்தோம். முதல் இரண்டு நாள் வியட்நாம் உணவுகளை ஏற்றுக்கொள்ள நாக்கு அடம்பிடித்தது அதன்பின் அதன் சுவைக்கு பழக்கமாகி வெளுத்துவாங்கினோம். அந்த உணவு அங்கிருந்த 14 நாட்களும் உடம்பை எதுவும் செய்யவில்லை.
உலகளவில் சாலையோர உணவகங்களில் புகழ்பெற்றது வியட்நாம். இந்நாட்டின் தலைநகரம் ஹனாய், ஹோசிமின், ஹலாங் பே போன்ற எந்த நகரமாக இருந்தாலும், சிற்றூராக இருந்தாலும் நடந்துப்போகும்போது தடுக்கி விழுந்தால் சாலையோர உணவகங்கள் மேல்தான் விழவேண்டும். அந்தளவுக்கு சாலையோரங்களில் உணவகங்கள் உள்ளன. 80 சதவித சாலையோர உணவகங்கள் அசைவம். 20 சதவிதம் அளவுக்கே சைவ உணவகங்கள்.
வியட்நாம் மக்கள் பெரும்பாலும் இந்த சாலையோர உணவகங்களிலேயே உணவு சாப்பிடுகின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் ஆர்வமாக இங்கே சாப்பிடுகின்றனர். அந்தளவுக்கு சாலையோர உணவகங்கள் தூய்மையாக இருந்தன. சாலையோர ஹோட்டல்களில் குறைந்த விலை, தரமான உணவாக இருக்கிறது. பெரிய ஹோட்டல்களில் அதிகவிலை, அதே தரத்திலான உணவு கிடைக்கிறது.
ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய உணவகங்கள் இருந்தாலும் உணவு பொருட்களின் விலை நம்மவூரைவிட அதிகமாகவே இருக்கிறது. சாலையோர உணவு விடுதியாக இருந்தாலும், ஓரளவு பெரிய உணவு விடுதியாக இருந்தாலும் விலை கிட்டதட்ட ஒரே விலையாகத்தான் இருந்தது, கொஞ்சம் தான் வித்தியாசப்படுகிறது. நம்மவூர் உணவை தான் சாப்பிடனும் என விரும்பி இந்திய ரெஸ்டாரெண்ட்டுக்குள் சென்றால் அங்கே கிடைப்பது வடஇந்தியா உணவுகள் தான். தென்னிந்திய உணவுகள் 99 சதவிதம் நாட்டின் எந்த பகுதியிலும் கிடைக்கவில்லை.
இங்குள்ள ஹோட்டல்களில் உள்ள ஒரே ஒற்றுமை குடிக்க தண்ணீர் வைப்பதில்லை. 300 மில்லி லிட்டர் குடிதண்ணீர் பாட்டிலின் விலை நம்மவூர் மதிப்புக்கு 80 ரூபாய் வருகிறது. கம்பெனிக்கு தகுந்தார்போல் விலையும் மாறுகிறது.
சாப்பிடும்போது விக்கல் எடுத்தால் என்ன செய்வது? அதற்கு இதை குடிங்க என நம் கையில் திணிப்பதை பார்த்து அதிர்ச்சியாக இருந்தது.“இதுவும் தண்ணீ தான் குடிங்க” என டின் பீர் பாட்டிலை வைத்தார்கள்.
என்னதான் குடித்தாலும் சின்ன சலசலப்பும் அந்த ஊர் சாலைகளில் அந்த ஊர் குடிமகனோ, வெளிநாட்டு குடிமகன்களையோ பார்க்க முடிவதில்லை. சாலையில் சிரித்து கும்மாளமிட்டு கத்தி பேசுகிறார்கள் என்றால் அது இந்தியர்கள் குறிப்பாக தென்னந்திய குடிமகன் என்பதை கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். ஹனாய் நகரத்தின் மார்க்கெட் சாலைகளில் அப்படி சிலபேச்சுக்களை கேட்க முடிந்தது.
வியட்நாமில் பெரும்பாலான பொருட்களில் பொருட்களின் மீது அதன் விலைகள் பாக்கெட்களில் அச்சிடப்படவில்லை. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு இடத்திலும் வாங்கும்போது விலைகளில் வித்தியாசம் உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள சின்னக் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் என்றாலும் உள்ளுர் விலைக்கு தரும்போதுதான் நமக்கு அந்த பொருளின் உண்மையான விலை என்னவென்பது தெரிகிறது.
கர்நாடாகா மைசூரில் இருந்து நாடு நாடாக உலகம் சுற்றும் வாலிபனாக வலம் வந்த 27 வயது இளைஞன் நம்மிடம் அறிமுகமாகி பேசும்போது, “சின்னக்கடையோ, பெரியக்கடையோ பேரம் பேசுங்க கண்டிப்பா விலையை குறைப்பாங்க. பொருட்கள் மீது கூடுதல் விலை வைத்தே விற்கறாங்க” என்றார். அதன்படி இந்திய ரெஸ்டாரண்ட், வியட்நாம் ஹோட்டல்களில் ஃபில் தொகையில் டிஸ்கவுண்ட் கேட்டபோது சிரித்துக்கொண்டே தந்தார்கள். இதில் நம்மை விட மேற்கத்திய நாட்டினர் கில்லி. முகத்தை உம்மென வைத்துக்கொண்டு பேரம் பேசி சாதித்துவிடுவதை பார்க்க முடிந்தது, அவர்கள் தேவையில்லாததை வாங்குவதேயில்லை.
இரயில்
நகரத்தை சுற்றிக்கொண்டிருந்தபோது அடுத்த நாள் (இரண்டாவது நாள்) சுற்றுலாவுக்கு புறப்படுங்கள் என இரவு 9 மணிக்கு நம்மை கார் ஏற்றி இரயில் நிலையத்துக்கு அனுப்பிவைத்தார்கள். அதற்காக இரயில் பயணத்துக்காக சீட் பதிவு செய்துயிருந்தனர். நாங்கள் இரயில் நிலையம் சென்றபோது பயண சீட் பரிசோதனை என்பது மெட்ரோ ஸ்டேஷன்களில் இருப்பதுப்போல் இருந்தது. எங்களுக்காக அங்கே காத்திருந்தவர் எங்களிடம் பயண சீட் தந்து, உள்ளே நுழையும் வழியை காட்டினார். எங்கள் பயண சீட்டை ஸ்கேன் செய்துவிட்டு எங்களை உள்ளே அனுப்பிவைத்தார்.
அந்த அறையில் நான்கு பேர் இருக்கும் வசதி. நான்கு பேருக்கு உண்ண வாழைப்பழம், குடிநீர் பாட்டில், ஜூஸ் பாட்டில், ஸ்நாக்ஸ் பாக்கெட்கள், கை துடைத்துக்கொள்ள டிஸ்யூ பேப்பர் என இருந்தன. எங்கள் பெட்டிக்கு அடுத்த பெட்டி இரண்டு பேர் பயணம் செய்யும் அறைகளாக இருந்தன. நம்மவூரிலும் தான் ஏசி கோச் ரயில் பெட்டிகள் உள்ளன, இவர்களின் ஏற்பாட்டினருகே இந்தியன் ரயில்வே வரமுடியாது.
வியட்நாமில் 1880ஆம் ஆண்டு முதல் ரயில் பாதை சைகோன் என்கிற ஹோ சி மின் நகரத்துக்கும் சோலோன் நகரத்துக்கும் இடையே போடப்பட்டது, ரயில்கள் இயங்கின. பின்னர் உள்நாட்டு போரால் ரயில் பாதை தகர்க்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டுக்கு பிறகே மீண்டும் ரயில் பாதைகள் புனரமைக்கப்படுகின்றன. நாடு முழுவதும்முள்ள 2600 கி.மீ ரயில் பாதையில் 2168கி.மீ பாதை மீட்டர் கேஜ் பாதை. ஹனாய் டூ ஹோசிமின் சிட்டி இடையிலான வடக்கு – தெற்கு ரயில்பாதையே மிக நீளமானது. நாட்டில் மொத்தம் 278 நிலையங்கள் உள்ளன. சீனாவின் குன்மிங் ரயில் நிலையத்துக்கு வியட்நாமின் பொருளாதார நகரன ஹைபோங்கிலிருந்து தினமும் இரவு ரயில் புறப்பட்டு செல்கிறது.
சரக்கு போக்குவரத்துக்கே அதிகளவு ரயில்கள் பயன்படுத்தப்படுகிறது. ரயில் பயணத்தை வியட்நாம் மக்கள் குறைவாகவே விரும்புகின்றனர். சாலை போக்குவரத்தையே அதிகளவு விரும்புகின்றனர். இப்படிப்பட்ட ரயில்வே அமைச்சகம் உள்ள தேசத்தில் இப்படியொரு வசதிகள் கொண்ட அழகிய ரயிலை மக்கள் விரும்பாமல் இருப்பதற்கு காரணம், பயண நேரம் அதிகம் என்பதாலே.
வியட்நாம் தலைநகரம் ஹனாயில் இருந்து 380 கி.மீ தொலைவில் உள்ள சா பா நகரத்துக்கு அலுங்கல், குலுங்கல் இல்லாமல் பயணத்தை மேற்க்கொண்டோம். தொலைக்காட்சிகள், யூ டியூப்களில் ரயில் பாதையில் கடைகள் இருக்கும், ரயில் வரும்போது கடைகளை எடுத்துவிடுவார்களே அந்த ஹனாய் நகரத்துக்குள் உள்ள ரயில் பாதையில் தான் நாங்கள் அமர்ந்திருந்த ரயில் சென்றுக்கொண்டு இருந்தது.
சா பா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 90 ஆயிரம் பேர். ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் வியட்நாமின் வடமேற்கு பகுதி இது. நாட்டில் உள்ள 53 இனங்களில் சிறுபான்மையினமாக உள்ள கின், ஹமாங், டாவோ, டே, ஜியா, ஃபோ மக்கள் இம்மாவட்டத்தில் வசிக்கின்றனர். இது முழுக்க மலைப்பகுதி, கடல் மட்டத்திலிருந்து சா பா நகரம் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதி ஆண்டில் 6 மாதங்கள் மூடுபனியுடனே இருக்கும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிக மழை பெய்யும். சராசரி ஆண்டு மழைப்பொழிவு 2,779 மில்லிமீட்டர்கள் என்றால் இந்த இடம் எப்படியிருக்கும் என கற்பனை செய்துக்கொள்ளுங்கள். இந்த சா பா மாவட்டத்தின் அருகில் சீனா நாட்டின் எல்லை தொடங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 3143 மீட்டர் உயரம்முள்ள மலைப்பகுதியான ஃபேன்சிபன் மலை உலக பிரபலம். வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய மூன்று நாடுகளில் இவ்வளவு பெரிய மலைசிகரம் அமைந்துள்ளது வியட்நாமில் மட்டும் தான். இந்த மலை உச்சிக்கு செல்லத்தான் இரயில் பணத்தை தொடங்கினோம்.
இரவு 9.30 மணிக்கு தொடங்கிய இரயில் பயணம் மறுநாள் விடியற்காலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது. 7 மணி நேர பயணத்தில் சா பா வுக்கு அருகில் உள்ள லோவோகாய் நகர இரயில் நிலையத்தில் இறங்கினோம். சா பா நகரம் மலைமீது இருப்பதால் மேலே செல்ல இரயில் பாதை வசதியில்லை என்பதால் இங்கேயே நிறுத்தப்படுகிறது. இங்கிருந்து சாலை மார்கமாக ஏ.சி வேனில் பயணத்தை தொடங்கினோம். ஜில்லென்ற பனிக்காற்று முகத்தில் மோத 30 நிமிட பயணத்தில் சா பா வில் எங்களுக்கான ஹோட்டலை அடைந்தோம்.
கேபிள் கார்
காலை 11 மணிக்கு தான் எங்களுக்கான ரூம் தருவார்கள் என்பதால் வரவேற்பறையிலேயே காத்திருந்தோம். குளிர் ஒருப்பக்கம் வாட்டி வதைத்தது. குளிருக்கு இதமாக சூடாக பால் கலக்காத டீ அரைமணி நேரத்துக்கு ஒருமுறை தந்தபடியே இருந்தார்கள். 8 மணிக்கெல்லாம் பெண்களின் சராசரி உயரத்தைவிட கொஞ்சம் குறைவான உயரம் கொண்ட அந்த பெண் எங்களை நோக்கி வேகவேகமாக நடந்துவந்தார், எங்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
வியட்நாமில் அகதியாக தஞ்சமடைந்துள்ள மங்கோலிய இளம்பெண் தான் இன்றைய நாளுக்கான வழிக்காட்டியாக வந்திருந்தார். எங்களை பிக்கப் செய்துக்கொண்டார். நாங்கள் அடிவாரத்தில் இருந்து வரும்போதும், இப்போது செல்லும்போதும் நாங்கள் பார்த்தது விடியற்காலை 6 மணிக்கெல்லாம் மக்கள் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள். டூரிஸ்ட் வாகன ஓட்டுநர்கள், வழிகாட்டிகள், உணவு விடுதி நடத்துபவர்கள், கடை வைத்திருப்பவர்கள் என பரபரப்பாக தங்கள் வேலைகளை செய்தபடி இருந்தனர்.
ஃபேன்சிபான் மலை உச்சிக்கு செல்ல ஒரே வழி, கேபிள் கார் தான். கேபிள் காரில் செல்ல டிக்கட் வாங்கிக்கொண்டு வரிசையில் நின்றபோது அங்கு நின்றுயிருந்த கூட்டத்தைப்பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்றுயிருந்தனர். இவ்வளவு நபர்களா என யோசிக்கும்போதே அடுத்த 30 நிமிடத்தில் கேபிள் கார் வழியாக எங்களை மலை உச்சிக்கு அனுப்பிவைத்துவிட்டார்கள். தினசரி சில ஆயிரம் பேர் இங்கு வருகிறார்களாம். இந்த கேபிள் கார் உட்பட மொத்த செயல்பாடுகளையும் சன் வேல்டு என்கிற தனியார் நிறுவனம் தான் செய்கிறது.
“ஃபன்சிபான் மலைக்கு மூன்று, நான்கு மலைகளை கடந்து 6 கிலோமீட்டர் தூரத்துக்கு செல்கிறது கேபிள் கார். மலைகளின் அடிவாரத்தில் இருந்து உச்சி வரை, பாதி மலையில் பெரிய உயரமான கோபுரக் கட்டுமானத்தை உருவாக்கி கேபிள் கார் இயக்கப்படுகிறது. மலை உச்சிக்கு செல்ல மூன்று கேபிள் ரூட்கள் உள்ளன. அந்த பெட்டியில் அமர்ந்தபடி இயற்கையை ரசிக்கும்போது அவ்வளவு அற்புதமாக இருந்தது. முயோங் ஹோவா பள்ளத்தாக்கு, ஹோங் லியன் சன் தேசிய பூங்கா இரண்டையும் இந்த கேபிள் காரில் செல்லும்போது பார்க்கச்சொன்னார்கள். கேபிள் மின்கம்பி அறுந்து பெட்டிகள் கீழே விழுந்தால் உடலை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபமானதல்ல என்பது கீழே பார்க்கும்போது தெரிந்தது. 18 முதல் 20 நிமிடங்கள் பயணமாகி மலைப்பகுதியின் ஒருப்பகுதியில் கொண்டும்போய் விட்டது.
2016க்கு பிறகு தான் கேபிள்கார். அதற்கு முன்பு வரை மலை உச்சிக்கு வருவதற்கு மலைகளின் வழியே நடந்துதான் வந்துள்ளார்கள். இப்போதும் சா பா வில் இருந்து மலையேறி மலை உச்சிக்கு வருகிறார்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள். அப்படி வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகுமாம். மலை வழியாக அழைத்துவருவதற்கான வழிகாட்டிகள் உள்ளார்களாம்.
இப்போது நாங்கள் 3143 மீட்டர் உயரத்தில் நின்றிருந்தோம், எங்களுக்கு கீழே மேகங்கள் இருந்தன. அந்த இயற்கையின் அழகை சுற்றுலா பயணிகள் இரசித்துக்கொண்டும் அதனை தங்களது செல்போனில் பதிவு செய்துக்கொண்டும் இருந்தார்கள். நாங்கள் சென்றிருந்தது பனிப்பொழிவு காலத்தில் என்பதால் காலை 11 மணிக்கு குளிர் எடுத்தது. உச்சியிலிருந்து முழுவதும் கீழே பார்க்க முடியவில்லை, மேகங்கள் மறைத்துக்கொண்டிருந்தன. மலைப் பகுதியில் 10 அடி தூரத்துக்கு அந்தப்பக்கம் யார் நிற்கிறார்கள் என சிலநிமிடங்கள் தெரியவில்லை. முழுக்க வெள்ளைவெளேரென மேகங்கள் சூழ்ந்திருந்தன.
புத்தம்
வியட் பகுதியில் பௌத்தம் தழைத்தோங்கியிருந்த காலத்தில் மலை மீது 3037 மீ உயரத்தில் அமெரிக்காவின் லி வம்சத்துக்கு பிறகு இந்தோசீனா பகுதியை ஆட்சி செய்த டிரான் வம்சத்தின் கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டது பிச் வான்ஜென் மடாலயம். இந்த ஆலயம் மட்டும்மல்ல அன்னை ஆலயம், செயின்ட் ரான் ஹங் ஆலயம் போன்றவையும் இப்படி கட்டப்பட்டு இருக்கிறது.
மடாலயத்தின் எதிர்புறத்தில் கிராண்ட் பெல்ஃப்ரி கல்லறை உள்ளது. 35 மீ உயரமுள்ள இந்த ஐந்து மாடிகளை கொண்ட கோபுரம் உள்ளது. இதன் ஒவ்வொரு தளத்திலும் ஒரு அறிவிப்பு மணி உள்ளது. இந்த மணிகள் இப்போதும் தினமும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருமுறை சுழற்சி முறையில் அடிக்கப்படுகின்றன என்றார் வழிகாட்டி.
அதேபோல் இதன் அருகிலேயே 21.5 அடி உயரம் கொண்ட வெண்கலத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலை உள்ளது. 50 டன் செம்புவால் இந்த புத்தர் சிலை மூன்று அடுக்குகளாக செய்யப்பட்டுள்ளது. நம்ம கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை போல. இந்த புத்தர் சிலையின் முதல் அடுக்கு தாமரை பூ வடிவில் உள்ளது, இதன்மீதே புத்தர் நிற்கிறார். புத்தர் சிலையின் அருகே ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது, அதாவது கொடிமரம் போன்றது. இது 11 மாடிகள் கொண்டதாக உள்ளது. இது வடக்கு வியட்நாமில் உள்ள வின் ஃபூக், ஃபோ மின் ஸ்தூபி என உள்ளதாம், நாங்கள் அதனை பார்க்கவில்லை, அதுப்போல் இது இருக்கும் என்றார். புத்த மத கருத்துக்களை வெளிப்படுத்தும் கற் படிக்கட்டுகள் இருந்தன.
குவான்யின் சிலை
குவான்யின் என்பவர் பௌத்தரை போன்ற உள்ளுர் இன மக்களின் கடவுள். கருணையை மக்களுக்கு வழங்கும் கடவுளாம். மலை மீது கிம் சோன் பாவ் தாங் பகோடாவின் எதிர் பக்கத்தில் ஒரு பெரிய பாறையின் மீது குவான்யின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 12 மீட்டர் உயரம், 18 டன் எடையில் முழுக்க வெங்கலத்தால் செய்யப்பட்ட சிலை. இப்படி இரண்டு முக்கிய கோயில்களைக் கொண்ட மலை இது. சந்திர நாட்காட்டியின் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் ஏராளமான பௌத்தர்கள் இங்கு வருவார்கள் என்றார் வழிகாட்டி.
மலையுச்சி
இதனையெல்லாம் பார்த்துவிட்டுவந்தபோது இன்னும் 600 படிக்கட்டுகள் ஏறவேண்டும் அப்போதுதான் மலை உச்சியை அடைய முடியும் என்றார் வழிகாட்டி. படிக்கட்டு வழியாகவும் மேலே செல்லலாம், படி ஏற முடியாதவர்களுக்கு இழுவை ரயில் பெட்டி ஒன்று சென்று வருகிறது, அதில் செல்லலாம் என்றார். மலை உச்சியில் காற்று குறைவாக இருந்ததால் உடல் ஒத்துழைக்கவில்லை, அதனால் இழுவை ரயில் பெட்டி மூலமாகவே மேலே செல்ல முடிவு செய்தோம். பயண சீட் வாங்கிக்கொண்டு அதற்காக காத்திருந்தபோது வியட்நாம் ராணுவத்தின் இரண்டு உயர் அதிகாரிகள் நாங்கள் இருந்த பகுதிக்கு வந்து, என் முன் நின்றார்கள்.
“வேர் ஆர் யூ ஃப்ரம்?”
“இந்தியா”
“ஓ நைஸ், தேங்க் யூ” என புன்னகைத்தபடி சொல்லிவிட்டு நம்மிடம் இருந்து விலகிஸ் சென்றார்கள். இங்கே இவ்வளவுப்பேர் இருக்காங்க, நம்மை மட்டும் எதுக்கு கேட்டாங்க என நினைத்தபடி சுற்றி நின்ற மக்களை பார்த்தபோதுதான் தெரிந்தது, அங்கிருந்த ஆயிரக்கணக்கானவர்களில் நாங்கள் மட்டுமே ஒர்ஜினல் திராவிட கலரில் நின்றுயிருந்தோம். அங்கே இந்தியர்கள் சிலர் சுற்றுலா வந்திருந்தனர், அவர்கள் வடஇந்தியர்கள்,கொஞ்சம் இளம் மஞ்சள் நிறத்தில் இருந்தனர்.
இழுவை ரயில் பெட்டி மூலமாக உச்சிக்கு சென்றோம். இந்தோசீனாவின் உயரமான மலை உச்சியில் நாங்கள் நின்றிருந்தோம், சுற்றிலும் மலைப்பகுதி, எந்த திசையிலும் தரைப்பகுதி தெரியவில்லை. அங்கிருந்த சுற்றுலா பயணிகள் நாம் உட்பட மகிழ்ச்சியின் உச்சத்தில் நின்றுயிருந்தோம். இதைவிட உயரமாக 30 ஆயிரம், 40 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறந்து பயணம் செய்துயிருந்தாலும் அதைவிட இது மகிழ்ச்சியாக இருந்தது. குளிரை தாண்டி மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.
25 மீட்டர் உயர கொடி கம்பம் அமைக்கப்பட்டு அதில் வியட்நாம் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொடி இறக்கி ஏற்றும் நிகழ்வு நடைபெறும் என்றார்கள். ராணுவத்தை சேர்ந்த வீரர்கள், மலையேற்ற பயிற்சி கொண்ட வீரர்கள் மூலம் இதைதனியார் நிறுவனம் பராமரிக்கிறது.
மலையின் மற்றொரு புறம் பார்த்தபோது முழுக்கமுழுக்க மலைகள், அடிவாரத்திலுள்ள காட்டு மரங்கள் தெரிந்தன. இங்கிருந்து தப்பித்தவறி விழுந்தால் உடல் எல்லாம் கண்டுபிடிக்கவே முடியாது, முடியவே முடியாது. காக்கா, கழுகுகளுக்கும், காட்டு விலங்குகளுக்கு உணவாகிவிடும் என நினைத்தபோது அந்த பனியிலும் உடல் சூடானது. மலையை விட்டு இறங்க மனமில்லாமல் கேபிள்கார் வழியாக மலையின் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தோம்.
இவ்வளவு பாதுகாப்பான கேபிள்கார் சிஸ்டத்தை அமைத்திருப்பது சன் வேல்டு என்கிற தனியார் நிறுவனம். ஃபேன்சிபான் லெஜன்ட் என்கிற பெயரில் இந்த கேபிள் கார் அமைப்பை அமைத்துள்ளது. உலக கின்னஸ் ரெக்கார்ட் நிறுவனம், எங்கும் நிற்காத ஆசியாவின் மிகநீளமான, மிக உயரமான கேபிள் கார், மணிக்கு இரண்டாயிரம் பேர் மலை உச்சிக்கு அழைத்து செல்லும் திறன், மூன்று வழி கேபிள் கார் போன்றவற்றுக்காக விருது வழங்கியுள்ளது.
“ஃபேன்சிபான் சென்றுவிட்டு கீழேவந்தபின் 12 மணிக்கெல்லாம் மதிய உணவு தந்தார்கள். காலை 7 மணிக்கு தொடங்கும் உணவு நேரம் அதிகபட்சம் 9 மணிக்கெல்லாம் முடித்துக்கொள்கிறார்கள். மதிய உணவு சரியாக 12 மணிக்கெல்லாம் தொடங்கிவிடுகிறார்கள் 2 மணிக்குள் முடிந்துக்கொள்கிறார்கள். நமக்கும் அதேநேரம் தான், அதுதான் நமக்கு முதலில் ஒத்துப்போக மறுத்தது. வேறு வழியில்லை நாமும் அதே நேரத்துக்கு சாப்பிட்டதால் இரண்டு நாளில் வழக்கமாகிவிட்டது. மதிய உணவுக்கு பின் வியட்நாம் கிராமங்களை நோக்கி பயணத்தை துவங்கினோம். வியட்நாம் நகரங்கள், மாநகரங்களை மட்டும் கடந்த சில நாட்களாக சுற்றிக்கொண்டு இருந்த நாங்கள் இன்று வியட்நாமின் கிராமங்கள் எப்படி இருக்கிறது என அறிந்துக்கொள்ள சில கிராமங்களுக்கு பயணத்தை துவங்கினோம்.
லாவோ சாய் – தா வான்
“லாவோ சாய் கிராமம், சா பா நகரத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் அருகில் தா வான் என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமங்களில் விவசாயம் தான் பிரதானம். ஆண்களுக்கு ஈக்வலாக பெண்களும் விவசாய வேலைகளை செய்வதை பார்க்க முடிந்தது. பெண்கள் அங்கே ஏர் ஓட்டிக்கொண்டு இருந்தனர். மாடுகளுக்கு பதில் இயந்திரத்தை கைகளால் இழுக்கும் வகையில் இருந்தது. சில இடங்களில் மாடுகளை வைத்தும் ஏர் ஓட்டிக்கொண்டு இருந்தனர். பெண்கள் தான் பிரதானமாக விவசாய நிலங்களில் இருந்தனர். நெல், சோளம் தான் இங்கு முக்கிய பயிர் என்றார் நம்முடன் வந்த வழிகாட்டி.
லாவோ சாய் அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நகரத்துக்கு மிக அருகில் உள்ள கிராமமாக இருந்தாலும் பழமையில் இருந்து மாற முடியாத கிராமமாக உள்ளது. இந்த பகுதியில் இப்படி பலகிராமங்கள் இன்னும் பழமையிலேயே உள்ளது என்றார் வழிகாட்டி. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் இப்போதும் மாடர்ன் உடைக்கு மாறாமல் பண்டையகால உடைகளையே அணிந்துவருகின்றனர். சமவெளி பகுதி என்பது இங்கு வெகு குறைவு. மலையில் நிலங்களை படிக்கட்டுகள் வடிவில் அமைத்து வைத்துள்ளனர், இந்த நிலங்களில் நெல் பயிரிட்டிருந்தனர். நாங்கள் சென்றிருந்தபோது பல இடங்களில் நெல் அறுவடை முடிந்திருந்தது. நம்மவூர் பகுதியில் நெல் நாற்றுவிட்டு அதனை எடுத்து வயலில் நடும் முறையில்லை. மானாவரி போல் நெல்லை வயல்களில் தூவி அது முளைத்து வருவதே நெல் பயிராக இருக்கிறது. அதேபோல் கதிர் அறுக்காமல் நெல்லை மட்டும் தனியே பிரித்து எடுக்கின்றனர். அதாவது தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிப்பார்களே அதுப்போல் செய்திருந்தனர். நெல் பயிருக்கு அடுத்ததாக சோளம் பயிரிடுகின்றனர்.
பொது போக்குவரத்து என்பது கிராமங்களில் வெகு குறைவாக இருக்கும், மக்கள் நடந்தே செல்வார்கள் என்றார் வழிகாட்டி. ஏழ்மையின் பிடியில் இந்த கிராமங்கள் இருந்தாலும் அரசாங்கம் கல்விக்கு முக்கியத்துவம் தந்திருந்தது. அடுக்குமாடி கட்டிடமாக பள்ளிகள் கட்டப்பட்டிருந்தன. அவ்வளவு சிறிய கிராமத்திலும் அழகாக பள்ளி கம்பீரமாக நின்றது. வீடுகள் மூங்கில்களால் கட்டப்பட்டிருந்தன. இக்கிராமங்களில் கைவினைப்பொருட்கள் அதிகளவு விற்பனை செய்தனர். பெண்கள் பயன்படுத்தும் பர்ஸ், ஹேன்ட் பேக், திரைச்சீலைகள் போன்றவற்றை உருவாக்குகின்றனர். மூங்கிலால் பல கலைப்பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதை பார்க்கமுடிந்தது. மலையின் உச்சியில் இருந்து பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த கிராமங்களுக்கு வழிகாட்டியுடன் நடந்துசென்றபோது அக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் சா பா நகரத்திலிருந்து நடந்து வந்தார்கள். அவர்களிடம் பேசியபடி நடந்துசென்றபோது, அவர்கள் மங்கோலியர்கள் என்பது தெரிந்தது. 15 வயதில் திருமணமான ஒரு பெண்ணுக்கு இரண்டு வயதில் குழந்தை இருந்தது. அக்குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு தான் செய்த கைவினைப்பொருட்களை விற்பனை செய்ய சா பா போய் வருவதாக நம்மிடம் கூறினார்.
எட்டு வயது சிறுமி நம்முடன் பேசிக்கொண்டே நடந்துவந்தவர் சாலையோரம் வளர்ந்திருந்த கோரைப்புல்லை உடைத்து அதில் அழகிய நாற்காலி ஒன்றை செய்து தந்து வெல்கம் சா பா எனச்சொல்லி நம்மை அசத்தினார். அவர்களின் திறமையை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.
மலை கிராம பழங்குடியின மக்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் சா பா நகரத்தில் உள்ள பழைய மார்க்கெட் சென்று அந்த வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் கிராமத்துக்கு நடந்து அல்லது இருசக்கர வாகனத்தில் வந்துவிடுவார்களாம். இதுப்போன்ற சந்தை பாக் ஹா நகரத்திலும் நடைபெறும் வார இறுதியில் நடைபெறுமாம். சா பா நகரத்தின் இரவு நேர சந்தையும், உணவு விடுதியும் இன்னும் பிரபலம் என்றார்கள். இரவில் நகரத்தை சுற்றி வரலாம் என புறப்பட்டு நடந்து சென்றோம். வழி கண்டறிந்து சென்று வருவது பெரும் சிரமமாக இருந்தது. சில கிலோ மீட்டர்கள் நடந்தபோது நாம் பார்த்த இரவு வாழ்க்கை சுவாரஸ்யமாக இருந்தது. மலையேற்றம், கிராமத்தில் நடந்தது போன்றவற்றால் திரும்ப ஹோட்டலுக்கே வந்தோம். உடல் அசதியாக இருந்ததால் படுத்ததும் நன்றாக தூங்கிவிட்டோம்.
அருவி
மூன்றாவது நாள், லவ் வாட்டர் பால்ஸ்க்கு போகிறோம் என்றார்கள். “சா பா வில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது இந்த லவ் வாட்டர் பால்ஸ். இந்த வாட்டர் பால்ஸ் செல்வதற்கு பொதுப்போக்குவரத்து கிடையாது. வாடகை கார், வாடகை பைக் தான் வழி, நாங்கள் வாடகை காரில் பயணத்தை தொடங்கினோம். ஹோயாங் என்கிற ஹோவாங் லியன் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது இந்த லவ் வாட்டர் பால்ஸ். 2002ஆம் ஆண்டு இந்த தேசிய பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு 2006ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது 30 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் வனமாக, மலையாக உள்ளது. இங்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தாவர இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 20 நிமிடங்கள் காட்டுக்குள் நடக்கவேண்டும், நடைபாதை அழகாக பராமரித்திருந்தார்கள். வழியில் வாய்ப்பிருந்தால் காண்டாமிருகம் போன்றவற்றை பார்க்கலாம் என்றார் வழிகாட்டி.
நாம் நடக்கதுவங்கியபோது லேசான தூரல் இதனால் வனத்தின் இயற்கையை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. வனப்பகுதியில் சில கிலோ மீட்டர் நடந்து சென்றபோது, காட்டு மாடுகள் கண்ணில் பட்டதே தவிர காண்டாமிருகமெல்லாம் கண்ணில் தட்டுப்படவில்லை. இருபது நிமிட நடைக்கு பின்னர் கண்ணுக்கு காட்சியளித்தது லவ் வாட்டர் பால்ஸ். 100 மீட்டர் உயரத்தில் இருந்து லவ் வாட்டர் பால்ஸ்சில் தண்ணீர் கொட்டியது.
எதற்கு காதல் நீர்வீழ்ச்சி என பெயர் வைத்தார்கள் என விசாரித்தபோது, இந்த நீர்வீழ்ச்சி தேவதைகள் குளித்த இடம் என்று புராணக் கதை கூறுகிறது. ஒரு நாள், ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசிப்பதைக் கேட்டு, தேவதைகளில் ஒருத்தி அவனைக் காதலித்தாள். அவனுடைய பாடல்களைக் கேட்க அவள் தினமும் இந்த அருவிக்கு வந்தாள். இதை அவளது பெற்றோர்கள் கண்டுபிடித்து, அவள் மீண்டும் நீர்வீழ்ச்சிக்கு வரக்கூடாது என்று தடை விதித்தனர். தேவதை மிகவும் சோகமாக இருந்ததால், அவள் தனது காதலனுடன் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை ஒரு பறவையாக மாற்றிக்கொண்டாள். அதனால்தான் இந்த இடம் காதல் நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்பட்டது என்கிறது அருவியின் கதை. நாங்கள் சென்றுயிருந்த நேரம், ஆப் சீசன் என்பதால் காதல் அருவியில் தண்ணீர் குறைவாக இருந்தது, அதேபோல் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் வெகு குறைவாக இருந்தது.
“வ் வாட்டர் பால்ஸில் இருந்து சில்வர் வாட்டர் பால்ஸ்க்கான தூரம் 2.5 கி.மீ தூரம் இருந்தது. இந்த பூங்காவில் 199 பட்டாம்பூச்சி இனங்கள், 347 பறவை இனங்கள் உள்ளனவாம், இவைகளை கண்ணை பொத்தி பொத்தி பாதுகாக்கும் இமைகள் போல் இந்த இயற்கை வனத்தை பாதுகாக்கிறது வியட்நாம். ஆசியாவின் சிறந்த இயற்கை வனம் என்கிற பெயர் எடுத்துள்ளது. மழை அதிகமாக பெய்ததால் மீண்டும் சா பா நோக்கி பயணத்தை தொடங்கினோம். மதிய உணவுக்கு பின்னர் நீங்கள் ஹனாய் புறப்படலாம் என்றார் அந்த மங்கோலிய வழிகாட்டி.
பேருந்து பயணம்
சா பா விற்கு வரும்போது இரயிலில் வந்தோம், திரும்ப செல்ல பேருந்தில் டிக்கட் புக் செய்யப்பட்டு இருந்தது. ட்ராவல்ஸ் அலுவலகத்தில் கொண்டுவந்து விட்டுவிட்டு சென்றார் கார் ஓட்டுநர். நாங்கள் பயணமாக வேண்டிய பஸ் வெளியே இருந்து பார்க்கும்போது நம்மாநிலத்தில் ஓடும் டிராவல்ஸ் பேருந்துகள் போல் தான் இருந்தன. பேருந்தின் உள்ளே ஏற முயன்றபோது ஒருவர் படிக்கட்டில் நின்று தடுத்தார். என் கையில் ஒரு பிளாஸ்டிக் கவரை தந்தார். காலில் அணிந்திருந்த காலணியை கழட்டி அதில் போட்டு கையில் வைத்துக்கொள்ளச்சொன்னார். அனைவரிடடும் இப்படி கவர் தந்தார். அவர் சொன்னதுப்போல் செய்தபின்பே உள்ளே அனுமதித்தார்கள். பேருந்தின் உள்ளே உட்கார சீட் எதுவும் கிடையாது, ஸ்லிப்பர் கோச். படுத்துக்கொண்டு மட்டுமே பயணம் செய்யும் வகையில் படுக்கை வசதியுடன் இருந்தது.
வியட்நாம் தேசத்தை பேருந்து, கார் வழியாகவே சுற்றிவந்துவிடலாம் அந்தளவுக்கு சாலைகள் போடப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தம் 2,22,179 கி.மீ அளவுக்கு சாலைகள் உள்ளனவாம். இதில் தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 17295 கி.மீ. மற்றவை மாகாண நெடுஞ்சாலை, மாவட்ட, நகர்ப்புற, கிராமப்புறச் சாலைகள் என பிரித்து சாலைகள் அமைத்துள்ளனர். சா பா வில் இருந்து நாட்டின் தலைநகரான ஹனாய் மாநகரத்துக்கு வந்த சாலையில் எந்த இடத்திலும் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதை நான் பார்க்கவில்லை. ஆனால், சர்வதேச தரத்தில் சாலை இல்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. நாட்டில் சாலை சரியாக இல்லாததால் வாகனங்களின் சராசரி வேகம் 50 கி.மீ மட்டுமே என்கிறது. நாங்கள் பயணித்த தேசிய நெடுஞ்சாலைகள் பக்காவாக இருந்தன. தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அரசு போக்குவரத்து பேருந்துகளை அதிகம் பார்க்கமுடியவில்லை. நாட்டிற்குள் பொது போக்குவரத்துக்கான பேருந்து என்பது மிகக்குறைவாகவே உள்ளது.
“தலைநகரான ஹனாயிலும் பெருநகரான ஹோசிமின்னிலும் பொது போக்குவரத்து அதிகமாகவே உள்ளன. பொதுப்போக்குவரத்துக்கான பேருந்துகளை மொழி தெரியாதவர்கள் கண்டுபிடிப்பது சுலபம். அதாவது ஹனாய் மாநகரில் பொதுபேருந்துகள் சிவப்பு, வெள்ளை,மஞ்சள் நிறந்திலும், ஹோசிமின் சிட்டியில் வெள்ளை,பச்சை நிறத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இடைவழி உணவகம்
மாலை 4 மணிக்கு ஒருஇடத்தில் பேருந்தை நிறுத்தினார்கள். மாலை நேர சிற்றுண்டி நேரம் என்றார்கள். நம்மவூர் மோட்டல்களை நினைத்துக்கொண்டு இங்க என்ன நிலையில் இருக்கப்போகுதோ என நினைத்துக்கொண்டு பிளாஸ்டிக் கவரில் போட்டு வைத்திருந்த காலணியை எடுத்துக்கொண்டு இறங்கினால் “இறங்காதீங்க நில்லுங்க” என்றார் பேருந்துப் பணியாளர். மோட்டல் குறித்து நம்மை எச்சரிக்கப்போகிறார் போல என நினைத்துக்கொண்டு நின்றோம். கையில் வைத்திருந்த காலணிகளை அணியக்கூடாது உள்ளேயே வையுங்கள் எனச்சொன்னார்.
நாங்கள் வந்த பேருந்து படிக்கட்டை நோக்கி ஒருவர் பெரிய பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடிவந்து படிக்கட்டின் கீழே வைத்தார். அதில் நூற்றுக்கணக்கான கறுப்பு கலர் காலணிகள் இருந்தன. அதில் நம் பாதம் அளவுக்கு ஏற்ற காலணியை எடுத்து அணிந்துக்கொண்டு போகச்சொன்னார்கள். இந்த பேருந்தில் தான் இப்படியா எனப்பார்த்தால் அங்கு வந்து நின்ற அனைத்து பேருந்துகளின் படிக்கட்டின் கீழும் இப்படியொரு பெட்டி இருந்தது. அவர்கள் பேருந்து நிறுத்தியிருந்த இடம், நம்மவூர் பயணவழி உணவகம் போல், இது அவர்கள் ஊர் பயண உணவகம் என நினைத்துக்கொண்டோம்.
நம்மவூர் உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி மோட்டல்கள் அருகே செல்லும்போதே சிறுநீர் நாற்றம் மூக்கை துளைக்கும். ஹோட்டல்களில் புளித்துப்போய் ஏதாவது இருக்கும், வாயில் வைக்கமுடியாது. அதற்கு அப்படியே நேர்எதிர் இங்குள்ள மோட்டல்கள். மூன்றாம் தர ஹோட்டல் ரேஞ்ச்க்கு பராமரிக்கின்றனர். பாத்ரூம் கூட அவ்வளவு சுத்தமாக இருந்தது. நாங்கள் இருந்த மோட்டலில் சுமார் 400, 500 பேராவது இருந்திருப்போம். தரையெல்லாம் மின்னியது, அந்தளவுக்கு சுத்தம். பொருட்களின் விலை அதிகம் தான், ஆனால் தரமாக இருந்தது. தாராளமாக பேரம் பேசலாம், பேரம் பேசித்தான் வாங்கவேண்டும்.
பேருந்துகள், வேன்கள் வந்து நின்றது நின்றபடியே இருக்கின்றன. கதவை, ஜன்னலை தட்டி இறங்கச்சொல்வது, ஆத்தா மகமாயி என உச்சஸ்தாயியில் கத்தும் பாடல்கள் என எதுவும் கிடையாது. அமைதியாக பயணிகள் இறங்கி வருகிறார்கள். அந்த இடத்தை பார்த்ததுமே ஏதாவது வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தை தந்தது. காபி கடையில் தான் கூட்டம் குழுமியிருந்தது. இளைப்பாறிவிட்டு பேருந்துக்கு திரும்பியபோது அவர்களுக்கான காலணியை அங்கே இருந்த பெட்டியில் வைத்துவிட்டு பேருந்தில் ஏறி அமர்ந்ததும் பயணம் தொடங்கியது.
நாட்டின் தலைநகரத்தை நடந்து எல்லாம் சுற்றி பார்க்க முடியாது என்பதால் இரவு நேர அடுக்கு மாடி பேருந்தில் பயணம் செய்ய முடிவு செய்து பயணச்சீட்டு வழங்கும் இடத்துக்கு சென்றோம். ஒருமணி நேரத்துக்கு நம்மவூர் மதிப்பில் 800 ரூபாய் கட்டணம் வாங்கினார்கள். பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு காத்திருந்தநேரத்தில் ஏதாவது கொறிக்கலாமே என சாலையோர கடையிலிருந்த பெண்மணியிடம் ஒரு மக்காச்சோளம் கேட்டபோது, அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. உதவிக்கு தனது தாயுடன் அங்கிருந்த கல்லூரி படிக்கும் அவரது மகளை எங்களிடம் பேசச்சொன்னார். அவருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. அவர் மட்டுமல்ல வியட்நாம் மக்களுக்கு அடிப்படை ஆங்கிலம் கூட தெரியவில்லை என்பது ஆச்சர்யமும், கவலையுமாக இருந்தது.
நம்மவூர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு தெரியும் அளவுக்குகூட அங்கே கல்லூரியில் படிக்கும் பசங்களுக்கு ஆங்கிலம் (நான் பார்த்தவரை) தெரியவில்லை. அதற்காக அவர்கள் கவலைப்படவும் இல்லை. மொபைலில் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் உதவியுடன் பேசுகிறார்கள். அந்த கல்லூரி மாணவியும் அப்படித்தான் விலை சொன்னார். ஒரு சோளத்தின் விலை அதிகமில்லை நம்மவூர் மதிப்புக்கு 160 ரூபாய் தான். அந்த சாலையோர கடையில் பன்றிகறி, சிக்கன் இரண்டை பாபிக்யூ டைப்பில் விற்பனை செய்துக்கொண்டு இருந்தனர். கூடவே பீர் பாட்டிலும் இருந்தது. அவற்றை ஒதுக்கிவிட்டு மக்காச்சோளம் வாங்கிக்கொண்டு நகர்ந்தோம்.
போக்குவரத்து ஒழுங்கு
உயரமான அந்த பேருந்தில் ஏறி அமர்ந்தபோது அழகிய நகர்வலம் தொடங்கியது. நாட்டின் தலைநகரான ஹனாயின் ஒருப்பகுதியை வலம் வந்தோம். பிரெஞ்சு கால கட்டிடங்கள் நேர்த்தியான வடிவமைப்பில் கட்டப்பட்டிருந்தன. சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை இவ்வளவு சரியாக கடைப்பிடிக்கும் மக்களை இங்குதான் காண முடிந்தது. முந்திக்கொண்டு செல்லவேண்டும், மின்னல் வேகத்தில் செல்லவேண்டும், ட்ராபிக் சிக்னல் விழும் முன்பே செல்லவேண்டும் என்கிற எண்ணம் அங்குள்ள வாகன ஓட்டிகளிடம் காணமுடியவில்லை.
ஒரு சாலை இருசக்கர வாகனங்களுக்கான ஒருவழிப்பாதை என்றால் அதற்கு அருகில் உள்ள மற்றொரு சாலை கார்களுக்கான ஒரு வழிப்பாதையாக உள்ளது. இருசக்கர வாகன ஓட்டி, கார் ஓட்டுநர் யாரும் விதியை மீறுவதில்லை என்பதை இரவு பேருந்து பயணத்திலும் பார்க்க முடிந்தது. சிசிடிவி கேமரா இருக்கும் அதனால் பயப்படுவார்கள் என நினைத்தால் அதுவும் தவறு. நான் பார்த்தவரையில் சாலைகளை கண்காணிக்க மூன்றாவது கண் இருந்தாலும் சின்ன சின்ன சாலைகள், குறுக்கு சாலைகளை கண்காணிக்கவெல்லாம் கேமராக்கள் இல்லை. நமக்கே அது தெரியும்போது உள்ளுர் மக்களுக்கு தெரியாதா என்ன? தெரியும். மக்களிடம் இதில் ஒரு ஒழுக்கமிருக்கிறது. அதேபோல் சாலைகளில் இந்திய தலைநகரம் டெல்லியைப்போல் வியட்நாம் தேசம் முழுவதிலும்மே இருசக்கர வாகனம், கார், வேன், பேருந்து ஓட்டுநர்கள் யாரும் ஹாரன் அடிப்பதில்லை.
வியட்நாமில் எந்தவிதமான ஆட்டோக்களும் கிடையாது. அதற்கு பதில் கார், டூவீலர். நம்மவூரில் ஆட்டோ ஸ்டாண்ட் இருப்பதுப்போல் மக்கள் கூடும் இடங்களில் வாடகை இருசக்கர வாகன ஓட்டிகள் இருக்கிறார்கள்.
ஒருவர் போகவேண்டும் என்றால் இருசக்கர வாகனத்திலும், இரண்டு பேர் என்றால் கார் வாடகை க்கு எடுத்துக்கொள்ளலாம். அதற்கென ஆப்கள், மொபைல் எண்கள் உள்ளன. நாங்கள் இன்ஸ்டால் செய்துயிருந்த மொபைல் ஆப்பில் இடத்தை குறிப்பிட்டு கார் புக் செய்தால் அதிகபட்சம் 5 நிமிடங்களுக்குள் வந்து நிற்கிறது. கார்களில் 2 பேர், 4 பேர், 6 பேர் அதுவே காட்டுகிறது. பயணிகளின் எண்ணிக்கையை நாம் செலக்ட் செய்தால் அதற்கு தகுந்தாற்போல் கார் வாடகையை நிர்ணயிக்கிறது. இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதும் அப்படியே. கார் வாடகை, ஒருவர் அவ்வூரில் டீ சாப்பிடும் தொகையை விட குறைவாக இருந்தது. நாம் காரில் ஏறி அமர கதவை திறந்ததுமே ஜில்லென ஏசி காற்று நம்மை வரவேற்கும். ஏசி போடாத கார்களை நாம் அங்கு காணவே இல்லை. எல்லா கார்களிலும் வைஃபை இலவசமாகவே கிடைக்கிறது, நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தபின் கட்டணம் அதிகமாக கேட்பது, சில்லறை இல்லை எனச்சொல்லும் ஓட்டுநர்களை பார்க்கவே முடியவில்லை.