அன்றாடங்களின் கண்டடைதல்கள் — 1

காலை உடற்பயிற்சி நேரங்களில் துணைக்கு இருக்கும் வானொலியில் ஒலித்த அந்த நேர்காணலும் அப்பெயருமே இப்பயணச்சரட்டின் தலையாகியது.

கேரளத்தின் காசர்கோடு மாவட்டம்  காஞ்சங்காட்டின் உலகம் காண் மனிதராகிய சி.முஹம்மது குஞ்ஞுக்கா தனது வானொலி நேர்காணலில் சொன்ன வரிகள் ஈர்ப்பு விசைக் கொண்டவை.

“நான் இதுகாறும்  நாற்பது நாடுகள் வரை பயணித்திருக்கிறேன். இரஷியா,ஸ்பெயின் உள்ளிட்ட இன்னும் கொஞ்சம் நாடுகளுக்கு போக வேண்டும்.எனக்கு கொஞ்சம் நிலங்களுண்டு.அவற்றை விற்று விட்டு செல்வேன்.”

வானொலியில் உள்ள நண்பர் வழியாக குஞ்ஞுக்காவின் எண் கிடைத்தது.பேசினேன்.வரும் மாதமே பார்க்க வருவதாகச் சொன்னேன்.அப்பயணத்தில் ரிஹ்லா தொடர்பான வேறு இரண்டு சந்திப்புகளையும் இணைத்துக் கொண்டு பயணச் சரட்டின் வாலாக இடுக்கி மாவட்டமும் சேர்க்கப்பட்டது.

ரிஹ்லா சிறுவாணி தங்கலில் வளவாளராகப் பங்கேற்க வந்திருந்த நண்பரும் வாழ்வு கலை பயிற்றுநரும் எழுத்தாளருமான கோழிக்கோடு நவ்ஷாத் சில தனிப் பண்டங்களை எனக்குத் தந்தார். இது அவ்வப்போது எங்களுக்குள் நடக்கும் பரிமாற்றம்.

அதனடிப்படையில் கோட்டயத்தில் இறங்கி இடுக்கி மாவட்டத்திற்குள் செல்வது  இப்பயணத்தின் கடைசியாகச் சேர்ந்துக் கொண்டது. ஆய்வாளரும் நண்பருமான மிடாலம் அன்ஸாரும் உடன் வர சம்மதித்தார். காயல்பட்டினத்தை சார்ந்த வலையொளியாளரும்(யூ டியூபர்) ‘தட்டழி’பவருமான சஞ்சாரி இளவல் சாலிஹும் வர விரும்பினார். அவரையும் இணைத்துக் கொண்டோம்.காஞ்சங்காட்டைத் தவிர மற்ற அனைத்து ஊர்களுக்கும் போக வர தொடர்வண்டிகளில் முன்பதிவு செய்தாகி விட்டது.

நவராத்திரி,துர்கா பூஜை,விஜயதசமி தொடர் விடுமுறைகளினால் திருவனந்தபுரத்திலிருந்து காஞ்சங்காட்டிற்கு பயணச்சீட்டுகள் கிடைக்கவில்லை. தத்கலிலும் இல்லை.

அடுத்தடுத்த பயண முன்பதிவுகளும் திட்டங்களுமிருந்ததால் எப்படியும் காஞ்சங்காட்டிற்கு போயாக வேண்டும். முன்பதிவற்ற அதி விரைவு தொடர் வண்டியான அந்த்யோதயாவில் போகலாம் என அன்சார் சொன்னார். ஆனால் சாலிஹ் சற்று தயங்கவே தனியார் பேருந்தில் முன்பதிவு செய்தோம்..

தென்னெல்லை தியாகியும் என் ஆசிரியர்களில் ஒருவருமான கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் ,குளச்சல் கபீர் ஆகியோருடன் முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு எர்ணாகுளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு கேரள அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் சென்றதைத் தவிர இது வரைக்கும் கேரளத்திற்குள் இவ்வளவு தொலைவிற்கு நெடும்பயணம் தனியார் பேருந்தில் சென்றதேயில்லை.

என்னைப் போலவே அன்சாரும் மலைத்தார். வேறு வழியில்லை.புறப்பட்டு விட்டோம். 553 கிலோ மீட்டர்கள். பதினாறு மணி நேரம்.பின் மதியம் மூன்று மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை ஏழரை மணியளவில் வந்து சேர்ந்தோம்.

அறுநூற்றி சொச்சம் கிலோ மீட்டர் தொலைவை சாலை வழியாக எட்டிலிருந்து பத்து மணி நேரத்திலும் தண்டவாளம் வழியாக பன்னிரண்டு மணி நேரத்திலும் வந்தடையும் தமிழனுக்கு இதொரு துயர் மிக்க பட்டறிவு.

அதுவும் நாங்கள் வந்தது மேலடுக்கு படுக்கை வசதி கொண்ட பேருந்தில். பேருந்தின் தரம், நேர மேலாண்மை,பராமரிப்பு,பணியாளர்களின் நடத்தை இவற்றிலெல்லாம் தேறும் மதிப்பெண்கள் ஓட்ட நேரத்திலும் சாலை  குலுக்கலிலும் தகர்ந்துதான் போகின்றன.

மேலடுக்கில் எங்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததினால் அலைவு இருந்துக் கொண்டேயிருந்தது. வயிற்றிலுள்ளவை தலைக்கு சுழன்று ஏறிக் கொண்டேயிருக்கும் உணர்வு. சீர்வளியின் அடைந்த வாடையும் சேர்ந்துக் கொள்ள பிரகண்டம் உண்டாயிற்று.

“நம்ம கையில் இல்லாத விஷயம் இது. நம்மட சின்ன பாவங்களுக்கு பரிகாரம்னு எடுத்துக்குற வேண்டிதான்“ என்றார் மிடாலம் அன்ஸார்.

மேற்கொண்டும் புரட்டல் உண்டாகாமலிருக்க இரவுணவை மூவருமே தவிர்த்து விட்டோம். இரவுணவிற்காக வண்டியை நிறுத்திய இடத்தில் எலுமிச்சைச் சேர்த்த வெறுந்தேயிலை அருந்தினோம். கை நிறைய புளிப்பு மிட்டாய்கள் வாங்கிக் கொண்டோம்.குமட்டலுக்கும் புரட்டலுக்குமான சிறந்த ஆறுதல்

காஞ்சங்காட்டில் காலைத்தேவைகளை முடிக்கவும் முஹம்மது குஞ்ஞுக்காவும் காசர்கோட்டு நண்பர் அப்துஸ்ஸமத் ஹுதவியும் தங்கள் மகிழுந்துகளைக் கொண்டு வந்தனர். முஹம்மது குஞ்ஞுக்காவின் அலுவலகத்தில் சந்திப்பு நடந்தது.

2008க்குப் பிறகு இது போன்ற பயணங்களை மேற்கொள்ளும் முஹம்மது குஞ்ஞுக்கா அகவை அறுபத்தேழைத் தொட்டவர்.அலுவலகத்தின் நேர்த்தியும் அவரின் ஆடை நேர்த்தியும் ஒழுங்கும் ஒரு தொழிலதிபரின் தோரணையிலிருந்தது. குஞ்ஞுக்கா முஸ்லிம் லீக்கின் தலையாய ஆளுமைகளில் ஒருவர்.கேரளத்தின் முன்னாள் முதல்வர் சி.ஹெச்.முஹம்மது கோயாவின் மகனும் கேரளத்தின் பிரபல அரசியல் ஆளுமைகளில் ஒருவருமான மருத்துவர் முனீர் கோயாவின் சிறு பருவத்து நண்பர்.

தான் வழமையாகத் தொழப்போகும் மஸ்ஜிதில் நடக்கும் குர்ஆன் வகுப்பில்தான் உலகப்பயணத்திற்கான தூண்டுதலைப் பெற்றிருக்கிறார். பயணிக்காமல் ஈமான் செறிவுறாது என உறுதிபடக் கூறும் குஞ்ஞுக்கா ஏறத்தாழ இரு பத்தாண்டு  காலத்தில் நாற்பது நாடுகளுக்கு பயணித்திருக்கிறார். இந்த ஓட்டத்தின் தொடக்கம் 2008 ஆம் ஆண்டின் ஹஜ் பயணத்திலிருந்து தொடங்கியிருக்கிறது.ஹஜ் பயணத்திற்காக குறைவுபட்ட பணத்தை நண்பரொருவர் கொடுத்துதவியிருக்கிறார்.இது போன்ற ஹஜ் பயணங்களுக்கு செலவழிப்பதை நேர்ச்சையாகக் கொண்டவராம் அவர்.

மதீனா, ஃபலஸ்தீன் பயண பட்டறிவுகளைக் கூறும்போது கண் கலங்கினார்.இஸ்ராயீல் சோதனைச்சாவடியில் ஏற்பட்ட நெருக்கடியை தீவிர சலவாத் ஓதலில் ஏற்பட்ட உள்ளுதிப்பில் கடந்திருக்கிறார்.உலகின் மிக அழகான மனிதக்கூட்டங்களில் ஒன்றாகிய ஃபலஸ்தீன் மக்கள் அங்கு வரும் வெளிநாட்டவர்களின் பைக்குள் கை விடும் அளவிற்கு கொடிய வறுமை அவர்கள் மேல் திணிக்கப்பட்டிருக்கிறதை மிகுந்த விசனத்துடன் சொன்னார்.

அவரது வீட்டிற்கும் எங்களை அழைத்துச் சென்று மதிய உணவளித்தார்.குறைந்த நேரத்தில் உண்டாக்கியளிக்கப்பட்ட நல் விருந்து.வீட்டிலும் ஓர் அரச களை. வீட்டிலிருந்து உரையாடல் தொடங்கியது. எண்ணூறு சதுர அடியில் வெளிகளை சிதறடிக்காமல் முழுமையாக உருவாக்கப்பட்ட வீடு.

இன்று நிற்கும் அவரது வீடு வருடங்களில் பல கட்டங்களாக வளர்க்கப்பட்டிருக்கிறது. அவரது தொழில் என்னவென்று பார்க்கும்போது கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம்  காஞ்சங்காடு டாக்டர் அம்பேத்கர் கலை &அறிவியல் கல்லூரியில் மக்கள் தொடர்பு அலுவலர் பணி.ஒரு பெண், இரண்டு ஆண் பிள்ளைகள் என மூன்று மக்களுக்கும் மண முடித்து விட்டார்.மூவரும் தற்சார்பாக உள்ளனர்.எங்களுக்கு அவர் செவ்வி வழங்கிய அலுவலகமும் அவரது மகனுக்குரியது.

அவர் தொழிலதிபர் இல்லை என்பது உறுதியானவுடன் “தொடர்ச்சியான செலவேறிய வெளிநாட்டுப்பயணங்களுக்கு வீட்டில் எதிர்ப்பில்லையா?” எனக்கேட்டேன்.

“தப்லீக்காரர்களைப்போல இல்லாமல் வீட்டாருக்குரிய கடமைகளில் ஒரு குறைவுமில்லாமல் பார்த்துக் கொண்டேன். எங்களது வாழ்க்கை முறையும் என் மக்களின் திருமணங்களும் எளிமையானவை.அடுத்தவருக்காக நானும் எனது வீட்டாரும் வாழ்வதில்லை.வரவிற்குள்தான் செலவு.இருக்கின்ற கடன் களையும் அடைத்தாகி விட்டது.யாருக்கும் நிலுவையில்லை”என சொல்லி முடித்தவரின் வேட்டிக் கரையிலுள்ள வெள்ளிச் சரிகை மின்னிக்கொண்டிருந்தது.

எங்களுக்காக அவர்  எலுமிச்சை சாறும் உலர் பழங்களும் கொண்டு வரப் போன இடைவெளியில் சாலிஹ் கேட்டான்” இவர் போனது அவ்வளவும் கூட்டாக நிரல்படுத்தப்பட்ட ஒரு பயணத்தொகுதிதானே.இவர் எப்படி சஞ்சாரியாவார்?”.

கூட்டுப்பயணம்,தனிப்பயணம்,நிரல் பயணம் என்பதெல்லாம் ஒரு பயணத்தின் தொழில் நுட்ப விவரங்கள் மட்டுமே. அப்பயணங்களில் நாம் கொண்டதும் கொடுத்ததும்தான் சாரம்.அதை தரிசனம்,கண்டடைதல்,அறிதல்  எனவும் நம் வசதிக்கேற்ப பெயரிட்டுக் கொள்ளலாம் என்றேன்.

கடி குடியுடன் திரும்பி வந்த முஹம்மது குஞ்ஞுக்கா “ஆண்கள் கொண்டு வரும் பணம் ஹலாலா ?ஹறாமா? எனக் கேட்டறியும் பெண்கள் வீட்டிலிருக்கும் வரைக்கும் பொருளாதாரம் தொடர்பான சிடுக்கு சிக்கல்கள்  எழாது” என்றவர் தனது பயணங்களில் உடன் வந்த திருவனந்தபுரம் பாளையம் மவ்லவியிடமும் இன்னொரு நன்னெறி அறிஞரிடமும்  இது போன்ற நல்ல சங்கதிகளை தான் கற்றதாகச் சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Latest Travel Blog
  • பொருநை அருங்காட்சியகம் — அரை நாள் ரிஹ்லா#3

  • An Evening Train in Central Sri Lanka

  • அன்றாடங்களின் கண்டடைதல்கள் — 2

Close
© Copyright 2024. All rights reserved.
Website by Dynamisigns.
Close