பெரும்பயணம் – LE GRAND VOYAGE

“காக்கா இந்தியாங்கிற நிலப்பரப்பு முடியுற இந்த இடத்துல நிக்கும்போது வித்தியாசமாயிருக்குல்ல?“

“அது உண்மைதான். ஆனா, இந்தப் பயணப்பாத இங்க முடியுதுண்டா மறுபக்கம் தொடங்குதுதானே அர்த்தம்? அப்போ முடிவு எது தொடக்கம் எது?“

இரு வழிப்பாதை கொண்ட வாரணாசி – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை எண்: 44 முட்டி நின்ற இடம் முக்கடல் கூடும் கன்னியாகுமரி.

சில மாதங்களுக்கு முன்னர் நானும் மூத்த எழுத்தாளர் ஷுஅய்ப் காக்காவும் ஒரு இலக்கியக் கூடலுக்காக கன்னியாகுமரி சென்றிருந்தோம். அந்தச் சமயம் இந்த சந்தியில் நின்று கொண்டுதான் நான் கேட்டதற்கு மறு மொழியாக அவர் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்.

பயணம் வழியாக வாழ்க்கையை அறிதல்; வாழ்க்கையையே ஒரு பயணமாக உணர்தல் என ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத கண்ணியின் தொடர் சுழற்சியை நிதானித்து கவனித்தால் ஒன்று புரியும். பயணம் என்கின்ற பெரிய சுழல் வளையம் சுருங்கி சுருங்கி இறுதியில் மறுமைப் பெருவெளியில் மூலப்புள்ளியில் போய் ஒடுங்கும்வரை முடிவடைவதே இல்லை என்ற பேருண்மை விளங்க வரும்.

இந்தச் சுழற்சியின் முடிவற்ற தன்மையைத் திரைப்படமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது “LE GRAND VOYAGE“ என்கின்ற ஃபிரெஞ்சு மொழிப்படம். இதன் பொருள் “பெரும் பயணம்“. 108 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம் 2004ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இஸ்மாஈல் ஃபரூக்கியின் எழுத்து & இயக்கத்தில் வெளியான ஆண்டே இந்தப் படம் தொராந்தோ, வெனீஸ் பன்னாட்டு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றது.

படத்தின் கதை இதுதான்:

தென் பிரான்ஸில் மொராக்கிய முஸ்லிம் குடும்பம் ஒன்று வாழ்ந்து வருகின்றது. குடும்பத்தலைவர் (முஹம்மது மஜ்து ) வயதானவர். அவருக்கு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். அந்த வருடம் அவர் ஹஜ் பயணத்தைத் தனது காரின் மூலம் நிறைவேற்றத் தீர்மானிக்கின்றார். அவருக்கோ வண்டி ஒட்டத் தெரியாது. ஓட்டத் தெரிந்த மூத்த மகன் போதையில் போக்குவரத்து சமிக்ஞைகளை மீறியதால் அவரின் வண்டி உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இளைய மகன் ரிதாவை கார் ஓட்ட அழைக்கின்றார் தந்தை. வேண்டா வெறுப்பாக ரிதா உடன் செல்கின்றான்.

வாழ்வின் மாலைப்பொழுதில் இருக்கும் தந்தை X கட்டிளம் பருவத்தின் பொங்கு நுரையாக இருக்கும் மகன் ரிதாவிற்கும் இடையேயான முரண்கள் ஒவ்வொன்றாக பயணத்தில் மேலெழுந்து வருகின்றது. தந்தை இஸ்லாமிய நடைமுறைகளைப் பேணி வாழும் முஸ்லிம். மகன் ரிதாவோ முழுக்க மேலைப் பண்பாட்டில் தோய்ந்தவன். ஃபிரெஞ்சு மொழியில் மட்டுமே உரையாடுவதை விரும்புபவன். பயணம் முழுக்க தந்தை அவனுடன் அறபி மொழியிலேயே பேசுகின்றார். ரிதாவோ ஃபிரெஞ்சு மொழியிலேயே உரையாடுகின்றான். வாழ்வின் அழுத்தத்தின் காரணமாக உலகின் எந்த மூலையில் வசிக்க வேண்டி வந்தாலும் தன்னுடைய மத, மொழி, பண்பாட்டு வேர்களை ஒருவன் இழந்து விடக்கூடாது என்ற தந்தையின் உறுதிப்பாடு முதல் பாடமாக எழுகின்றது.

தொடர் பயணத்தில் தூங்கி ஓய்வெடுக்காமல் வண்டியை மிக வேகமாக செலுத்துகின்றான் ரிதா. ஓய்வெடுத்து மெதுவாக செலுத்தும்படி கூறும் தந்தை “வேகமாக சென்ற அனைவருமே இறந்துவிட்டார்கள்“ என அறிவுறுத்துகின்றார். “மெதுவாகச் சென்றால் எப்போது போய் சேர்வது?“ என மகன் கேட்கின்றான். தந்தையின் பேச்சை அவன் பொருட்படுத்தாமல் இருக்கவே அதிவேகத்தில் செல்லும் வண்டியின் பிரேக்கை அவர் சடாரென போடுகின்றார். நிலைகுலையும் வண்டியால் அதிர்ச்சியடையும் மகனிடம் “இங்கே நான்தான் தீர்மானிப்பவன்“ எனக் கூறுகின்றார். வண்டியின் வேகத்தை மரணத்துடன் ஒப்பிட்டு ஆட்சேபிக்கும் தந்தை மகனுடனான உறவில் தன்னுடைய இடத்தை நிலைநிறுத்துவதற்காக வண்டியை விபத்துக்குள்ளாக்கும் முறையில் நிறுத்தும் காட்சிகளின் வழியாக இரு முரண்களின் இயக்கத்தைக் காண முடிகின்றது. இந்தக் காட்சியின் சொற்களை எப்படி புரிந்துகொள்வது? தன்னுடைய அதிகராத்தை மறு உறுதிப்படுத்திக்கொள்வது என்பதின் சிறு வடிவமா? அல்லது அதிரடி முடிவின் வழியாக மகனுக்குப் புகட்டப்படும் போதனையா?

இத்தலி, ஸ்லோவேனியா, குரேஷியா, ஸெர்பியா, பல்கேரியா, துருக்கி, சிரியா, ஜோர்தான் போன்ற நாடுகளின் வழியாக தந்தையும் மகனும் பயணிக்கின்றனர். வெவ்வேறு வகையான மொழி, பண்பாடு, கொட்டும் பனி, கொதிக்கும் பாலை போன்ற பல வகையான நிலப்பரப்புகளும் காலச் சூழ்நிலைகளும் மிக அழகான காட்சிகளாக மலர்கின்றன. எளிதான வான்வழிப் பயணத்தை விட்டுவிட்டு கடினமான இந்தக் கார் பயணத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற மகனின் கேள்விக்கு, “நானாவது காரில் வருகின்றேன். ஆனால், எனது தந்தை, அதுதான் உனது பாட்டனார் ஹஜ் பயணத்தைக் கோவேறு கழுதையில் மேற்கொண்டார். கடலில் உள்ள உப்பு நீரானது மேகங்களினால் எப்படி தூய்மைப்படுத்தப்படுகின்றதோ அதே போல ஒரு ஹாஜி ஹஜ் பயணத்திலிருந்து திரும்பும்போது பாவங்களிலிருந்து நீங்குகின்றார்“ என்கின்றார்.

தந்தையின் நேரம் தவறா தொழுகையும், குர்ஆன் ஓதுதலும், திக்ரும் நடைபெற பயணம் தொடர்கின்றது. ஓர் இடத்தில் வழிதவறி விடுகின்றனர். அப்போது ஒரு பெண்ணிடம் வழி கேட்க அவரோ இவர்களின் வண்டியில் ஏறிக்கொள்கின்றார். எதுவும் பேச மறுக்கும் அவர் வண்டியை விட்டு இறங்கவும் மறுக்கிறார். பெருந்தன்மையுடன் குறிப்பிட்ட தொலைவுவரை அந்தப் பெண்ணை வண்டியில் அனுமதிப்பதோடு அவருக்கு உணவும் வாங்கிக் கொடுக்கின்றனர்.

மொழிப் பிரச்சினை காரணமாக துருக்கி நாட்டின் சோதனைச்சாவடியைக் கடப்பதில் சிக்கல் ஏற்படுகின்றது. அப்போது முஸ்தஃபா என்ற துருக்கியர் உதவி செய்கின்றார். அப்படியே அது நட்பாக விரிகின்றது. முதல் பார்வையிலேயே தனது நிறைந்த பட்டறிவின் வழியாக முஸ்தஃபாவை எடைபோடும் தந்தை அந்த நட்பை விரும்பவில்லை. துருக்கியைச் சுற்றிப் பார்க்க விரும்பும் மகனைப் பார்த்து, “நாம் நெடுந்தொலைவு போக வேண்டியுள்ளது. இடையில் சுற்றிப் பார்க்க நேரமில்லை” என மறுக்கின்றார் தந்தை. மகன் ரிதாவிற்கு தன் வீட்டில் தேனீர் கொடுத்து விருந்தோம்ப அழைக்கின்றார் முஸ்தஃபா. தந்தையின் கட்டுப்பாடுகளில் இறுகிப்போயிருக்கும் ரிதா முஸ்தாஃபாவின் தோழமைக்குத் தன்னை ஒப்புவிக்கின்றான்.

மதுக் குப்பியைக் காட்டி ரிதாவுக்குள் ஒளிந்திருக்கும் விருப்பங்களை மெல்ல திறந்து விடுகின்றார் முஸ்தஃபா. சிறிது தயங்கும் ரிதாவைப் பார்த்து, “சிறிய தண்ணீர் குவளையில் கொஞ்சம் மதுவைக் கலந்தால் குவளை முழுவதும் மதுவாகி விடும். ஆனால், அதே அளவு மதுவைக் கடலில் கலந்தால் ஒன்றும் ஆகி விடப்போவதில்லை“ என்ற ஸூஃபி ஞானியின் மேற்கோள் ஒன்றைக் கூறி அவனை மது அருந்த வைக்கின்றார்.
போதையில் மிதக்கும் ரிதாவை விடுதியில் விட்டுவிட்டு செல்கின்றார் முஸ்தஃபா. மறுநாள் காலை கண் விழித்து பார்க்கும்போது, “பணத்தைக் காணவில்லை“ எனத் தந்தை பதறுகின்றார். முஸ்தஃபாவின் மீது ஐயப் பார்வை விழ காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் செல்லுகின்றனர். விசாரணையில் முஸ்தஃபா தான் குற்றமற்றவன் என வாதிடுகின்றார். முஸ்தஃபா பணம் திருடியதைத் தான் நேரடியாகக் காணாதபோது குற்றச்சாட்டை மேற்கொண்டு வலியுறுத்த விரும்பவில்லை என ரிதாவின் தந்தை சொல்கின்றார்.

ஹஜ் பயணத்திலிருந்து திரும்பும்போது தேவைப்படும் பணத்தை வேறொரு உறையில் போட்டு வைத்திருந்தார் தந்தை. அதை வைத்து முட்டை, ரொட்டித்துண்டு என சிக்கனமாகச் சாப்பிடுகின்றனர். முட்டையும் ரொட்டியும் தனக்குப் போதாது இறைச்சிதான் வேண்டும் என மகன் அடம்பிடிக்கின்றான். அவனுக்காக ஓர் ஆட்டை வாங்கி அறுக்க முனையும்போது ஆட்டைச் சரியாகப் பிடிக்கத் தெரியாமல் ரிதா தப்ப விடுகின்றான். இடைவழியில் யாசிக்கும் ஒரு ஏழைக்குத் தர்மம் வழங்குகின்றார் தந்தை. அவரின் சிக்கன நடவடிக்கைகளினாலும் இறைச்சி தின்ன முடியாத எரிச்சலிலும் இருந்த ரிதா, அந்த ஏழையின் கையிலிருந்த தர்மப்பணத்தைப் பிடுங்குகின்றான். கோபத்தில் மகனை அறைந்து விடுகின்றார் தந்தை. இனி தன்னால் வண்டி ஓட்டி வர முடியாது என ரிதா மறுத்து விடுகின்றான். ஒன்றாகப் பயணித்து வந்த இரண்டு உறவுகளுக்கிடையில் உரசி வந்த இரு முரண்களும் திடீரென வலுத்து பிரிவிற்கான புள்ளியில் வந்து நிற்கின்றது. தந்தை மகனுக்கிடையேயான வலிமிக்க ஆழ்ந்த மௌனமானது சுடும் பாலைமணலில் தீக்குழம்பு போலக் கொதித்து நிற்கின்றது.

ஒரு தீர்மானத்திற்கு வந்தவராய் சங்கடமிக்க அந்த மௌனத்தைக் கலைக்கின்றார் தந்தை. அடுத்த பெரிய ஊர் வரும்வரை காரை ஓட்டி வருமாறும், அங்கு அந்த வண்டியை விற்று கிடைக்கும் பணத்தில் ரிதாவை ஊருக்கு திரும்ப அனுப்பி வைத்துவிட்டு தான் மட்டும் தன்னந்தனியாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவிக்கின்றார். தந்தையின் சொற்களில் தோய்ந்திருந்த முதிர்வும் கனிவும் உறுதியும் அமைதியும் தீக்குழியின் மீது கொட்டும் மழை நீர் போல ரிதாவின் பிடிவாதத்தை அவிழ்த்து விடுகின்றது. ஒற்றைக் கணத்தில் மொத்தமாக மலரும் காடு போல தந்தை மீதான பாசம் ரிதாவுக்குள் மீண்டு விடுகின்றது. மீளத்தொடங்கும் பயணத்தில் தந்தை மகன் உறவின் புதிய விரிசல்கள் ஒட்டுதல்கள், காணாமல் போன பணத்தினால் ஏற்பட்ட தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் விதம், ஹஜ் பயணத்தின் போது ஏற்படும் நிகழ்வுகள் என படம் மலரின் இதழ் போல மெல்ல அவிழ்கின்றது.

ஸூஃபி ஞானியின் நல்லதொரு மேற்கோளைத் தனது தவறான செயலுக்காக முஸ்தஃபா கையாளும் காட்சியின் வழியாக ஆன்மிகப் பரவச பட்டறிவின் உன்னத வெளிப்பாடுகளை மனிதர்களின் அற்பச் சிந்தனை/வாழ்க்கைத் தரம் எப்படியெல்லாம் திரிக்க முடியும் என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. கடலிலிருந்து உப்பு நீரானது மேகங்களினால் எப்படித் தூய்மைப்படுத்தப்படுகின்றதோ அதே போல ஒரு ஹாஜி ஹஜ் பயணத்திலிருந்து திரும்பும்போது பாவங்களிலிருந்து நீங்குகின்றார் என்ற முதிய தந்தையின் சொற்களை ஸூஃபி ஞானியின் மேற்கோளுடன் இணைத்து நோக்கும்போது எளிய வாசகனுக்கும் அவை புரியும்படியாக மாறுகின்றது.

விலகி நிற்கும் மெய்ம்மைகளை இணைத்துக்காட்டி நேரடி பாடம் நடத்தும் வேலையைச் செய்யாமல் வாசகர்களின் சிந்தனைக்கு விட்டுவிடும் இயக்குனரின் உத்தி பாராட்டிற்குரியது. இரண்டு மேற்கோள் கதைகளிலிருந்து உணர முடிந்தது இதுதான்: குவளை என்பது மனித உடல். அதில் நிரப்பப்பட்ட நீர் என்பது மனித மனமாகிய ஆன்மா. இந்த நீர் குவளைக்குள் கலக்கப்படும் மது என்பது இச்சைகள், தவறான தூண்டுதல்கள், பாவங்களின் குறீயீடு.

மனித ஆன்மாக்களைப் பாவங்கள் எளிதில் கறைப்படுத்த இயலும். ஆனால், இறைவனின் விரிந்த மன்னிப்பு என்ற பெரு நீரில் அந்தப் பாவங்களைக் கொட்டும்போது பாவங்களின் தீய இயல்புகள் மனிதனில் மிகைக்க முடியாமல் வலிமை இழந்து விடும். அதன் பிறகு இறைவனின் எல்லையற்ற கருணை என்கின்ற வான் மேகத்தின் உறிஞ்சலில் மதுவின் சாரமாகிய பாவக் கசப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மனித ஆன்மாவானது மழை நீர் போன்று அதன் தொடக்க தூய்மையைப் பெறுகின்றது. ஹஜ்ஜுக்காகப் பயணப்படும் முதியவர் முஹம்மது மஜ்து மக்காவைச் சென்றடையும் முன்னரே சக மனிதர்களுடனான தனது அற நடத்தைகளினால் இறைவனை முன்னோக்கிய தனது பாதையின் கதவுகளை திறந்துகொண்டே செல்கின்றார்.

பாவத்தைத் தொலைக்கும் முயற்சியான ஹஜ் பயணம் நிறைவேற முன்னரேயே அதற்கான விளைவுகள் முதியவர் முஹம்மது மஜ்தின் உள்ளத்திலும் உடலிலும் சுனை நீர் போல சுரந்துகொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் குழந்தையாகத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றார். தன்னுடைய சொல்லிலும், செயலிலும், நோக்கத்திலும் ஒரு ஒத்திசைவைத் தொடர்ந்து பராமரித்துவரும் முதியவரின் வாழ்வு வந்தடையும் இடம் என்ன என்பதை இயக்குநர் படத்தின் கடைசி காட்சிகளில் அற்புதமாக சித்தரித்துள்ளார்.

தன்னுடைய பிள்ளைகளின் வளர்ப்பின் போது தான் செலுத்தத்தவறிய கவனத்தை ஹஜ்ஜின் போது உணரும் முதியவருக்கு இந்தப் பயணம் என்ன திரும்பக் கொடுத்தது? “இந்தப் பயணப்பாத இங்க முடியுதுண்டா மறுபக்கம் தொடங்குதுதானே? அப்போ முடிவு எது, தொடக்கம் எது ?“ என இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் எழுந்த கேள்விக்கான விடையை இந்தப் படத்தில் தேட முனையும் நேயருக்கு முன்னால் ஆன்மத் தேடல் நிறைந்த ஒரு பயணக்கதையின் பெரும்பாதைக்குள் அழகிய மரமொன்றின் சிறியதும் பெரியதுமான வளைந்ததும் நேரானததுமான பல்வேறு கிளைகளைப் போல புதியபுதிய பயணங்கள் முளைத்து முளைத்து சென்றுகொண்டே இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Latest Travel Blog
  • மழை ரிஹ்லா –வேணுவனத்தில் ஒரு பகல்

  • மலைக்கடவை-செங்கோட்டை புனலூர் குகை தொடர்வண்டித்தடம்

  • சரந்தீபில் மலையாளக் கதைகள்…நூற்றாண்டுகள் பழமையான சிறீலங்காவில் மலையாள மரபின் வரலாற்றுத் தடயங்கள் தேடி ஒரு பயணம்.

Close
© Copyright 2024. All rights reserved.
Website by Dynamisigns.
Close