புத்தகக் கிராமம்

புத்தகங்கள் எண்ணிறந்த உலகங்களைக் கட்டியிழுத்து நம்முள் கொண்டு வருபவைதான். புத்தகங்களை வாங்குவதற்கான மெனக்கெடல் என்பது  ஒரு திறன்பேசி திரைத் தடவலில் முடிந்து விடுவதால் ஏற்கனவே புத்தகங்களுக்காக நடந்த மெனக்கெடல்களுடன் சிறு பயணங்களும் தேவையற்றதாகி விட்டிருக்கின்றன. ஆனால் புத்தகங்களைத் தங்கள் அன்றாடத்திற்குள் வைத்துக் கொண்டாடுகிற ஒரு கிராமமிருப்பதும் அக்கிராமத்திற்கான பயணமென்பதும் உடுகுலத்திலிருந்து அண்டப்பெருவெளிக்குள்ளான பெரும் பாய்ச்சலேதான்.

என் சிறு பருவத்தில் எங்களூரின் அரசு நூலகத்திற்குக் கோணிப்பையில் வந்திறங்கும் புத்தன் புத்தகக்கட்டுகள், கல்வியாண்டின் தொடக்கத்தில் அட்டைக்கு புதுச்சட்டையணிந்துக்கொள்ளும் பாட நூல்கள்,  வடிவமைப்பிலும் தரத்திலும் தனித்திலங்கும் கெட்டியட்டை புத்தகங்கள், திரள் நிதியில் வெளியிடப்படும் மக்கள் பதிப்பு நூற்கள், புத்தகக்கூடுகள்,புத்தகத் தாங்கிகள்,உயிரிகளாலும் ஊர்திகளாலும் இயக்கப்படும் நடமாடும் நூலகங்கள், தன்னிடமிருக்கும் கடைசி சல்லியையும் புத்தகத்திற்காகச் செலவழித்துப்போடும் ஆன்மாக்கள் என மனிதர்களுடனான நினைவுகளை ஓர்மைகளைக் காலந்தோறும் புதுப்பித்தும் தகவமைத்துமாக தங்களை நீடித்துக் கொண்டேயிருக்கின்றன புத்தகங்கள்.

இணைய உலாவொன்றில் கண்ணில் தட்டுப்பட்டதிலிருந்து மேலை நாடுகளில் நடைமுறையிலிருக்கும் புத்தகக்கூடுத்திட்டம்  தலையில் ஒட்டிக் கொண்டது. தும்பி சிறார் மாத இதழில் வாசிக்க நேர்ந்த தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் நடந்து வரும் கழுதை நூலகம் பற்றிய கதையும் (Biblioburro) நெருப்பை இன்னும் விசிறியது.

கீற்றிலிருந்தே தொடங்குகிறது முழு நிலவு. சீர்மை அலுவலகத்தில் மாதாமாதம் நடந்து வரும் மெய்ப்பொருள் புத்தகத் திறனாய்வுக் கூட்டத்தில் பிஸ்மி சொல்லி புக் நெஸ்ட் எனப்படும் புத்தகக்கூடு திட்டத்தை அதன் ஆகக்குறைந்த வடிவத்தில் இவ்வருடம் ஜூன் மாதம் தொடங்கியும் விட்டோம். தனிச் சேகரத்திலிருந்து பெறப்பட்ட நூல்களின் உதவியோடு ஒரு மணவீட்டின் எளிய அலங்காரத்தைக் கொண்ட அட்டைப்பேழையில் புக் நெஸ்ட் தன் முதல் கூட்டைக் கட்டியது.

அப்பேழையில் புத்தகங்களை எவரும் போடலாம் எடுக்கலாம் விலையெதுவுமில்லை திருப்பித்தரும் நிபந்தனைகளுமில்லை. குறைவுறாக் கலன். வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் கொஞ்சம் போயின கொஞ்சம் எஞ்சின. இந்நிகழ்விற்கு சாட்சியாக இருந்த பலர் தங்களிடமிருக்கும் புத்தக சேகரங்களைக் கொண்டு வந்து அளிப்பதாகக் கூறிச்சென்று அவ்வாறு அளித்துமுள்ளனர்.

அணுக்க நண்பரின் அனுசரணையில் ஒரு முழு புத்தகக்கூட்டை உருவாக்கி அதை சென்னையிலுள்ள தலையாய ஜுமுஆ மஸ்ஜிதொன்றில் நிறுவுவதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. இவ்வோட்டத்தினிடையில்தான் நண்பர் உவைஸ் அஹ்மது ஒரு வலையொளியை வாட்சப்பில் அனுப்பி வைத்திருந்தார்.

கேரளத்தின் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை வட்டத்திலுள்ள பெரும்குளம் புத்தகக்கிராமம் பற்றிய வலையொளி. அவ்வூரின் பொதுவெளிகளில் நிறுவப்பட்டுள்ள புத்தகக்கூடுகளினருகில் நின்றுக் கொண்டு ஒரு இளைஞி அதைப் பற்றிக் கதைக்கிறார். விரல் நுனியருகில் கனவுகள் உருப்பெற்ற இடங்கள் உண்டு என அறிய வரும்போது இனி இறக்கைகளை விரிக்க வேண்டியது மட்டுமே மிச்சம்.

திருவனந்தபுரம்,கொல்லம் மாவட்டத்து நண்பர்களிடம் கேட்டதில் இடத்தைத் துல்லியமாக அடையாளங்காட்டினார்கள். என்னதான் புவியிடங்காட்டி வரைபடம் (ஜிபிஎஸ்) வழிகளை எளிதாக்கினாலும் மனிதர்களிடம் கேட்டுக் கொள்வதென்பது குறைக்கு மேல் வைக்கப்படும் ஒரு நிறைவுதான்.

பெரும்குளத்திற்கான பயணத்தொலைவு போக வர என ஏறத்தாழ  நானூறு கிலோ மீட்டர்கள். வலையொளியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பயண முறை பைக்கில்தான் என்பதும் தீர்மானமாகியது. இப்பாதையில் கொட்டாரக்கரை வரைக்கும் மகிழுந்து,பேருந்து,தொடர்வண்டி என பல முறைகள் பயணித்திருந்ததினால் பைக் என்பது இயல்பான தேர்விற்குள் வந்தது. இத்தேர்வுக்கும் மேல் கூடுதல் ஈர்ப்புகளும் இல்லாமலில்லை. நிறையக் குகைகளுடன் பசுமை நிறைந்த ஏகாந்தத்தின் மர்ம வெளிகளைக்கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைத்தடம், ஆரியங்காவில் உள்ள பாலருவி…. என ஒரு பட்டியலுண்டு.

திருமணம் முடிந்த புதிதில் செங்கோட்டை வழியாக முதன்முதலாகக் குடும்பத்தாருடன் வேனில் இத்தடத்தில் பயணித்து முப்பத்தியிரண்டு வருடங்களுக்கும் மேலாகி விட்டது. இன்று என்றது போலிருக்கும் மாறா நினைவுகள். கதிரிறங்கிக் கொண்டிருக்கும் ஒரு செவ்வேளையில் பாதையின் வளைவில் மலையோடை சிறு சீறலாகி தெறித்துக்கொண்டிருந்தது. தேனடைகளிலிருந்தும் மரக் கிளைகளின் நுனிகளிலிருந்தும் தெறித்ததைப் போன்ற கண நேரக்காட்சியை ஓவியம் கற்றுத்தான் மீட்ட வேண்டும். மக்கள் தொகையும் ஊர்திப்போக்குவரத்தும் பெருகி விட்ட இன்றைய நாட்களில் அப்பழைமையின் மாறாத்தொடர்ச்சியாக இருப்பது குகை வழி தொடர் வண்டித்தடம் மட்டும்தான்.

இன்னொரு நிலத்தை மிக அணுக்கமாக அறிவதற்கான ஒரே வழியென்பது அங்கு நடந்தலைவது மட்டுமே. அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவெனும்போது அடுத்து சிறந்த வழி இரு சக்கர ஊர்திதான். இரயில் தடத்தில் பயணிப்பதென்பது  வேறொரு இரசவாத சாத்தியங்கள் கொண்டது.

சஞ்சாரித்தோழர் ஏர்வாடி காஜா காதர் மீறான் பந்தே நவாஸ்  மறுசொல் சொல்லாமல் பயணத்தேதியைக் குறித்தும் விட்டார். மூன்றாவதாக ஒரு ஆளைக்கூட்டேன் என்றதற்கு வழமையான சுற்றுலாவென்றால் வருவார்கள். நாம் போகும் அமைப்பிற்கு ஆட்களைக் கூப்பிடவியலாது என்றார். உண்மைதான். எங்களின் பயணங்கள் பெரும்பாலும் காற்றிலிருந்து நூல் நெய்பவை. அதற்கேயுரிய பித்தேறினாலொழிய அவை உருவங்கொள்ளவியலாதவை

ஜூலை மாதம் 29 ஆம் தேதி புதன்கிழமைக் காலையில் நான் திருச்செந்தூர் பாசஞ்சரில் திருநெல்வேலி சந்திப்பு  போய்ச்சேர பந்தே நவாஸ்  தனது பைக்கில் அங்கு வந்திணைந்துக்கொண்டார். இருவரும் செங்கோட்டை பாசஞ்சர் இரயிலில் ஏறி தென்காசியை அடைந்தோம். பந்தே நவாஸுக்கு தெரிந்தவர்களின் வழியாகப் பைக் கிடைக்கப் பயணம் தொடங்கியது.

தொடர் வண்டியில் வரும்போது மேட்டூர்,பாவூர்சத்திரம் வரைக்கும் வெய்யிலின் வறுத்தெடுப்புக்குக் குறைவேயில்லை. தென்காசி சிலுசிலுத்தது. இதோ நான் இதோ நான் என தென்மேற்குப்பருவ மழைச்சாரல் அவ்வப்போது பன்னீர் தூவ தூறல் சாரலில் காடு நகரத்திற்கு வந்து விடுகிறது. புளியரை எல்லைக் கடந்து கோட்டைவாசலில் மலைக்கணவாய் தொடக்கம்.. கிடையிலிருந்து செங்குத்து நிலைக்கு நிலம் விண் நோக்கி பொங்கும் அமைப்பு. அந்தரங்கத் தனியிடத்திற்கு அழைக்கும் கமுக்கத்தின் நிரந்தரக் கரங்கள். பந்தே நவாஸுக்கும் இது முதல் இரு சக்கர மலையோட்டம். மலைக்கணவாயில் புதியதாக ஓட்டுபவர்களுக்கு ஒவ்வொரு வளைவும் திருப்பமும்  அறைகூவலானதுதான். கீழிருந்து வேகத்தில் ஏறி சமன் செய்து  ஒடித்துத் திருப்ப வேண்டும். இதில் கணக்குத் தெற்றும்போது சறுக்கல் அல்லது எதிரில் வரும் ஊர்திகளுடனான முகாமுக முழு முத்தம் என எதுவும் நடக்கலாம். ஒவ்வொரு திருப்பத்திலும் சறுக்கல் நினைவுக்கு வராமலில்லை. இறையருளால் நலமே போய் மீண்டோம்.

சக்கரங்களுக்குச் சாலை கீழடங்குவதை உணர்வது  ஒரு தனி இன்பம். எங்கும் நிறுத்தத் தோன்றவில்லை. பிந்தினால் மதிய உணவு கிடைக்காதென்பதால் எடப்பாளையம் அல் பக்தாதி  உணவகத்தில் நிறுத்தினோம். முதிய இணையர்தான் உணவக உரிமையாளர்கள். பொரிக்கப்படும் மீனின் மணம் வரவேற்க உள்ளே இருக்கைகள் நிரம்பியிருந்தன. காத்திருந்தோம். மட்டையரிசிச் சோறு, அவியல்,பொரியல், மீன் துண்டுகளுடனுள்ள ஆணம், பொரித்த மீன்கள், அப்பளம், எரிசேரி என நல்ல ஊண். ஓராளுக்கு நூற்றி முப்பது  ரூபாய்கள். உணவக உரிமையாளருடன் அமர்ந்து  உரையாட விருப்பமிருந்தாலும் நேரக்குறை குறுக்கே வந்து நின்றது. தென்காசியிலிருந்து நண்பகல் வேளையில் புறப்பட்டதால்  மாலைத் தொடங்கும் நேரத்தில் பெரும்குளம் போனால்தான் சரிவருமென்பதால் உடனே கிளம்பினோம். அவரும் வழி சொன்னார்.

தென்மலையைக் கடந்தோம். இவ்வூரும் நிதானித்துப் பார்க்க வேண்டிய தலம். விடுபடுபவைகள்தான் திரும்ப திரும்ப இங்கு நம்மை வரவழைக்கும் கடவுச்சொற்கள்.புனலூர் தாண்டி கொட்டாரக்கரை வந்தது. அங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள  பெரும்குளம் கிராமப்பரப்பில் வந்து சேர்ந்தோம். சிறு அலைச்சலுக்குப் பிறகு உள்ளூர் பைக்காரர் ஒருவர் புத்தகக்கூடு வரைக்கும் வழிகாட்டினார். எங்களிருவரைத்தவிர ஆட்கள் தட்டுப்படவில்லை.

அருகிலுள்ள மேட்டிலிருந்த வீட்டில் போய்  வழி கேட்டவுடன் அங்கிருந்த மூதாட்டி சாலை வரைக்கும் இறங்கி வந்து பைக்கில் விரைந்துக் கொண்டிருந்த ஒராளை மறித்து நிறுத்தினார். தொடர்புடையவருக்கு அம்மனிதரும் செல்பேசியில் பேச வந்து சேர்ந்தார் பிரகாஷ் வர்மா. அவர் வருவதற்கிடையில் சிமிட்டித்தளமிடப்பட்டு இருக்கைகளுடன் கூடிய புத்தகக்கூட்டைப் பார்த்துக் கொண்டிருந்தோம்

பிரகாஷ் வர்மா அடிப்படையில் தொழில் முறை வடிவமைப்பாளர். புத்தகக்கூடு தொடர்பான சங்கதிகளைப் பகிர்ந்துக் கொண்டார்.

ஏறத்தாழ ஐயாயிரம் மக்கள் தொகையினரைக் கொண்ட பெரும்குளம் கிராமத்தினரில் அரசு, தனியார் துறைகளில் பணிபுரிவோர், சொந்தத்தொழிலுடையோர் போகப் பெரும்பாலானோர் உழவர்களே. நாங்கள் தேநீரருந்தியது மரக்கட்டை மேடை மீது நிற்கும் ஒரு கூரையிட்ட கடையில்தான். கல் கட்டிடத்தில் இயங்கும் வணிக நிறுவனங்கள் எதுவும் தட்டுப்படவில்லை. இச்சூழலில் இதை எப்படிப் பராமரிக்கிறீர்கள்? எனக்கேட்டதற்கு நாங்கள் மக்களிடமிருந்து நிதி திரட்டுவதில்லை. வசதியுள்ளவர்களிடம் அனுசரணைப் பெற்றே இப் புத்தகக் கூடுகளை அமைத்தோம். நிலம் பஞ்சாயத்திற்குரியது என்றார்.

இப்புத்தகக் கூடுகள் பெரும்குளம் பொது நூலகக் குழுவினரால்தான் பராமரிக்கப்படுகின்றன. சங்கிகளால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதிற்கு எதிர் வினையாக இக்கிராமத்தின் அன்றைய இளைய காந்தியவாதிகளால் ‘பாபுஜீ ஸ்மாரக வாயனசாலா’ (பாபுஜீ நினைவு நூலகம்) என்ற பெயரில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டாமாண்டு தொடங்கப்பட்ட இந்நூலகம் பின்னர் மாநில அரசின் கீழ் வந்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெறும்  இது போன்ற முன்னெடுப்புகளைக் கண்டு ஈர்க்கப்பட்டே இவற்றை இங்கு நிறுவியுள்ளனர். மொத்தம் பதினான்கு புத்தகக் கூடுகள். இவற்றில் நான்கு மட்டுமே சுற்றிலும் இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் கூடுகள்  மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. புத்தகக்கூடுகளைக் கிராமத்தின் ஆசாரிகளே வடிவமைத்துள்ளனர். புத்தகங்களை எடுப்பவர்கள் அவற்றை வாசித்த பிறகு திரும்பக் கொண்டு வந்து வைத்து விட வேண்டும் என்பது இங்குள்ள நடைமுறை. நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கையில் நூலகக் குழுவின் தலைவர் ராஜீவும் எங்களுடன் இணைந்துக் கொண்டார். இவர் பணி நிறைவு பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநரும் கூட

மேலும் இரு புத்தகக் கூடுகளையும் போய் பார்த்தோம். சிறப்பான அமைவிடங்கள். பசுங்கூரையமைத்து புல்தரைகளுடன் பாதையோர அரச வனம் போலிருந்தன. கேரளத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் இக்கிராமத்தைப்பற்றி எழுதிய பின்னரே மாநிலத்தின் ஏனைய பகுதியினர் அறிந்திருக்கின்றனர். இரண்டாயிரத்து இருபத்தொன்றில்  பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அரசு அலுவல்ரீதியாகப் பெரும்குளத்தை வாசிப்புக் கிராமம் என அறிவித்திருக்கிறது.

புத்தகக்கூட்டின் பயன்பாடுகளைப்பற்றிக்கேட்டோம். நூற்களை எடுத்துச் செல்பவர்கள் திரும்பக் கொண்டு வந்து வைப்பதில்லை என்றனர். இந்த மறுமொழியிலிருந்துதான் இத்திட்டத்திலுள்ள சிக்கல் புரிய வந்தது. நாங்கள் கண்ட  மூன்று கூடுகளிலும் இருந்தவை சிறந்த தலைப்பிலான புத்தகங்கள் கிடையாது. சில பாடப்புத்தகங்கள், சில துறைசார் இதழ்கள் என ஒரே அமைப்பில் இருந்தன. ஏதோ வைக்க வேண்டும் என்பதற்காக வைத்தது போலிருந்தது. தரமான தலைப்பிலான நூல்களைக் காண முடியவில்லை. அதுமட்டுமல்ல வாரக்கணக்கில் இக்கூடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான தடயங்களும் தென்படவில்லை.

மூவாயிரம் வாக்காளர்களைக் கொண்டுள்ள இச்சிற்றூருக்கு விகிதப்படி பதினான்கு புத்தகக் கூடுகள் என்பது கூடுதலாகத்தான் தெரிகிறது. இத்திட்டம் தேங்குவதற்கு அதுவும் ஒரு காரணமாகவிருக்கலாம். நூலை எடுப்பவர்கள் எவருமே திரும்பக் கொண்டு வந்து வைப்பதில்லை என்பதும் அவ்வளவு பொருத்தமாகப்படவில்லை.. எத்தனையோ அற்பத் தேவைகளுக்குச் செலவழிக்கத்தயங்காத மக்கள் புத்தகங்களுக்காக ஒரு சல்லிக்காசும் செலவழிக்க மாட்டார்களா என்ன? இத்தனைக்கும் வாசிப்பிலும் புத்தக விற்பனையிலும் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் கேரளமும் ஒன்று.

ஒருவேளை புத்தகங்கள் திரும்ப வரவில்லையென்பது உண்மையானாலும் கூட புத்தக வாங்கலை ஊக்குவிக்கக்கூடிய சமூக,பண்பாட்டு உத்திகளைக் கடைப்பிடித்தால் நிலைமை மாறக்கூடும். புத்தகங்களுக்காகச் சிறுசேமிப்பு, அன்பளிப்புகளின் பட்டியலில் புத்தகங்களையும் கொண்டு வருவது என சிறு சிறு உத்திகளையும் கடைப்பிடித்துப் பார்க்கலாம்.

இவ்வகையில் தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் செய்து வருவது நல்ல முன்மாதிரி. பொன்னாடைகளுக்கு மாற்றாக புத்தகங்களைத் தாருங்கள் என அவர் அறிவித்த பிறகு இன்று வரை புத்தக அன்பளிப்புகள் மலையாய் வந்து குவிகின்றன. அவற்றை அவர் பொது நூலகங்களுக்குப் பிரித்தளிக்கிறார்.

எது எப்படியோ புத்தகக்கூடு என்பது பெரும்குளம் கிராமத்தின் பெருமை மிக்க முக அடையாளமாகவே மாறி விட்டது. அதைத் தக்க வைக்கவும் அவர்கள் விரும்புகிறார்கள் என்பது நல்ல அறிகுறிதான்.

விடைபெறும் முன்னர் ஊரின் எல்லையில் இருந்த வேறு சில புதுமைகளையும் கண்டோம். பழங்குடி சாயலுDAN புத்தர் சாயலும் கலந்த சிலையொன்றை வார்த்து நிறுவியிருக்கிறார்கள். அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் குப்பாயக்கூடொன்று இருக்கிறது. பயன்படுத்தி நல்ல நிலையிலிருக்கும் துணிகளைக் கழுவி இங்கு வைக்கப்படுகின்றன. தேவையுள்ளவர்கள் அவற்றைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம். கூட்டுக்குள் நல்ல துணிகள் தென்பட்டன.

என் சிறுவயதில் பழந்துணிகளை இரவலாகக் கேட்டுப் பெறுபவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அப்படியான ஓராளைக் கூட சந்திக்கவியலவில்லை. அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். பயன்படுத்திய துணிகள் தேவைப்படும் சிற்றூரில் புத்தகக்கூடும் இருப்பது இவ்வூரின் நற்குறி. தான் வாழும்  சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமையும் உண்டு என்ற நிரந்தரச் செய்தியை  இத்தகைய செயற்பாடுகள் பொது மனத்தில் நிலை நிறுத்துகின்றன.

இங்குள்ள பொது நூலகத்திற்குள்ளும் சென்றோம். விடுமுறை நாள் என்பதால் ஆட்களில்லை என்றார்கள். நூல் தாங்கிகளில்  புதிய நூல்கள் காணப்படவில்லை. ஏற்கனவே இருப்பவை செறிவானவை.  நூலக மாடியிலுள்ள அரங்கத்தை மாணவர்களின் கலை நிகழ்வுகளுக்கும் திரையிடல்களுக்கும் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தனர். ஒரு நாளைய வாடகை ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே. வாசிப்போர் பெரிய அளவில் வருவதற்கான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் நூலகத்தை ஏதாவதொரு வகையில் உயிர்ப்புடன் ஊரார் வைத்திருப்பது மனங்கொள்ளத்தக்கது.

பொதுவாகவே குக்கிராமங்களிலும் சிற்றூர்களிலும் பெருத்த மௌனமே கவிழ்ந்திருக்கும். எளிய வாழ்க்கை முறையைக் கொண்ட.பெரும்குளமோ அதன் மேல் கலை,வாசிப்பைக் கொண்டு வண்ணமயமாக்குகிறது.

விடைபெற்றுக் கிளம்பினோம். இரவு தங்கலுக்காகக் கொட்டாரக்கரையில் போய் விடுதிகளைக்கேட்டால் எல்லாம் ஆண்டி அல்லது அரசன் தரம்தான். நடுத்தரக் கட்டணமுள்ள விடுதிகள் பெருச்சாளி பொந்தைப்போலிருக்கின்றன. இல்லையென்றால் மூவாயிரம் நான்காயிரம் கட்டணம். அவையும் மதுச்சாலைகளின் விளக்குகள் மின்ன நிற்கின்றன.

போகிற வழியில் பார்த்துக் கொள்ளலாம் என காஜா காதர் மீறான் பந்தே நவாஸ் சொல்ல புனலூரில் ஒரு பள்ளிவாயிலில் போய் ஆலோசனை கேட்டோம். பள்ளியின் செயலாளர் எங்கள் பெயர்களை மேசைத் தாளில் பென்சிலால் குறித்துக் கொண்டு மிக அருகிலுள்ள குன்னிக்குளம் கிராமத்திலிருக்கும் விடுதியைக் கைகாட்டினார். அவருக்கு எழுதிப்பார்த்துதான் பெயர்கள் மனத்தில் பதியும் போல. அவ்விடுதிக்குச் சென்றோம். மோசமில்லை..விடுதியற்ற விடுதிதான் அது. வணிக வளாக மாடியறைகளை விடுதிகளாக்கி வாடகைக்கு விடுகின்றனர். இருவருக்கும் சேர்த்து எண்ணூறு ரூபாய்கள் வாடகை. இடம் துப்புரவாகத்தான் இருந்தது. சிறிது நேர ஓய்விற்குப்பிறகு இரவுணவிற்காகக் கீழே இறங்கினோம். மாட்டிறைச்சியுடன் பரோட்டாவும் தோசையும். தோசையில் அவ்வளவு மென்மையும் சுவையும். அழகிய வெண் கைக்குட்டை போல இதம் பதமாக இருந்தது.

கேரளத்தின் மாநில சிற்றுயிரான கொசு இரவிலிருந்து சுபஹ் வரைக்கும் சலிக்காமல் உடனிருக்க இரவு முழுக்க பல இடைவெளிகளில் கனத்த மழை பொழிந்துக் கொண்டிருந்தது. அரைகுறை தூக்கத்தினிடையில் மழையை சதுரங்களாகக் கற்பனை செய்துக் கொண்டேன். பல நூறு நூறு சொற்களுடைய மழைச்சரங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மொழி தனித்தனியான சங்கேதம். சுபஹுத் தொழுகையை நிறைவு செய்து விட்டு தென்காசிக்குக் கிளம்பினோம்.

புலரியின்போது மலைப்பாதை ஓட்டத்தில் கிடைக்கும் அகமாகுதலுக்கு நிகராக மிகக் குறைவானவற்றையே ஒப்பிட இயலும். எல்லாம் புதியதாகச் செய்து நமக்காகத் தாம்பாளத்தில் பரத்தப்பட்டது போன்று சக்கரங்களுக்குக் கீழ் சுழன்று திரளும் சாலையும் தலைக்கு மேலாக வந்து  நிறையும் விண்ணும் மலையும் முகில் குவையுமாக.

தண்ணேறியக்காற்று நம்மை பைக்கிலிருந்து அப்படியேக்கிளப்பி  மீட்சியே  தேவைப்படாத உயரங்களில் கொண்டு போய் வைத்து விடாதா?

நாளின் முதல்  தேநீருக்கு சிறுகடி சேராமல் வட்டம் முழுமையடைவதில்லை. வழியில் தென்படுகிற கடைகளிலெல்லாம்  பலகாரக்கூடுகள் வெற்றாக நின்றன. வேறு வழியின்றி அடுமனையுடன் கூடிய தேநீர்க்கடையில் நிறுத்தினோம்.

வலப்பக்கம் மேக அடுக்குகள். அதைக் கவனிப்பதற்குள் இடப்பக்கம் பள்ளத்தாக்குகளும் வானும் பிணைந்துருவாக்கும் முடிவிலியென்பது மனத்தைக்கொண்டே தவிர வேறெதைக்கொண்டும் அள்ளவியலாத பேராழம் செறிந்தது. வளைவொன்றில் கையடக்கமான அருவி பொழிந்துக் கொண்டிருக்க அதிலிருந்து இடுப்புத் துவாலையுடன் ஒருவர் நீராடி மேலேறினார். நின்று நின்று வரல் என்பதாகத்தான் இப்பயணத்தைத் திட்டமிட்டிருந்தோம். பந்தே நவாஸுக்கு வந்த வேறொரு பயணத் தேதி மாற்றத்தால் அருவியை அங்கேயே விட்டு விட்டுக் கிளம்பினோம்.

சாரல் வலுக்கவே ஓரிடத்தில் ஓரங்கட்ட வேண்டி வர “காக்கா இது நாம நேத்து சாப்பிட்ட ஓட்டல்” என்றார் பந்தே நவாஸ். அதே ஹோட்டல் அல் பக்தாதி. அதற்கென விதிக்கப்பட்ட நேரம் செலவழிக்கப்படாமல் எதையும் தாண்டிப்பறக்கவெல்லாம் முடியாதுதானே. உள்ளே எட்டிப்பார்த்தோம். குழல் விளக்குகள் எரிந்துக் கொண்டிருந்தன. ஆளில்லை. குரல் கொடுத்தோம். மறுமொழியில்லை. ஒலியெழுப்பிக்கொண்டே உள் நுழைந்தபோது உரிமையாளர் நாற்காலியில் அமர்ந்து யாஸீன் ஓதிக் கொண்டிருந்தார். சலாம் சொல்லி விட்டு காலை பசியாறு கிடைக்குமா? என வினவியதற்கு “அய்யோ ஒன்னுமில்லயே “ என சங்கடப்பட்டவர் மதிய உணவு மட்டுமே அங்கு சமைக்கப்படுவதாகக் கூறினார். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர் மனைவி வெறுந்தேயிலை போட்டுத் தந்தார்.

உரிமையாளர் காக்காவிற்கு அறுபத்தைந்து அகவையாகிறது. இரு மகள்களும் ஒரு மகனுமாக மூன்று பிள்ளைகள். மூவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. அவரவர் நல்ல நிலையிலுள்ளனர். உணவு ஆக்கும் பிழைப்பு  வேண்டாம் என பிள்ளைகள் சொன்னாலும் காக்காவிற்கு இதை நிறுத்த இயலவில்லை. தலைமுறைத் தொழில். ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பத்து மூன்று வாக்கில் இவர் இந்த உணவகத்தைப்  பொறுப்பெடுத்திருக்கிறார். அப்போது ஒரு சாப்பாட்டின் விலை ஆறு ரூபாய்கள். இரான் மேல் அமெரிக்கா/இஸ்ராயீல் தொடுத்த போரில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டபோதும் தான் விலையை உயர்த்தவில்லை எனச் சொன்னார்.

நாகமலைத் தோட்டத்திற்கு வேலை செய்ய வெள்ளையர்களால் தமிழகத்திலிருந்து தருவிக்கப்பட்டவர்தான் இவரது தந்தை வழி பாட்டனார். வெள்ளையலுவலரின் சாட்டையடி பொறுக்கவியலாமல் சாட்டையைப் பறித்து வெள்ளையரை வெளுத்துக்கட்டி விட்டு இங்கு வந்து இந்நிலத்தை வாங்கி உணவு சமைத்து விற்கத்தொடங்கி  அது கல் கட்டிட உணவகத்தில் வந்து நிற்கிறது.

இப்பகுதியின் பெயர் எடப்பாளையம். படை வீரர்கள் தங்கிச்செல்லும் தாவளமாக இருந்திருக்க வேண்டும். இடைப்பாளையம் என்பது எடப்பாளையமாகத் திரிந்திருக்கலாம். ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றிரண்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டு சாலைக்கு அப்புறம் ஓடிக்கொண்டிக்கும் ஆறு பொங்கி நிலச்சரிவு ஏற்பட்டதில் பாட்டனார் கட்டிய உணவகம்  அடித்துச்செல்லப்பட இன்றைய கட்டிடத்தை அதன் பிறகு இவர்தான் கட்டியுள்ளார். அவ்வெள்ளம் தூத்துக்குடி மாவட்டம் வடக்காத்தூர் வரை எதிரொலித்தது. முக்காணி ஆற்றுப்பாலத்தின் தெற்குத்தலை வெடி வைத்து தகர்த்தது போலப் பெயர்ந்து விழ வடக்காத்தூர் சாலைகளில் படகுகள் ஓடின. காயல்பட்டினத்துப் பள்ளிவாயில்களில் வடக்காத்தூர் மக்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிவாயில் நிர்வாகம்  உணவு சமைத்து வழங்கியது.

மழையும் குறைய பைக்கை எடுக்கும்போது ஆற்றைப் பார்த்தோம். சாலையிலிருந்து எட்டுப் பத்தடி பள்ளத்தில் விரிந்த படம் கொண்ட பாம்பைப்போல அது தன் வழியறிந்து பளபளத்தவாறே ஓடிக் கொண்டிருந்தது.

கேரளத்தைக் கடக்கும் முன் பசியாறிடலாம் எனத் தீர்மானித்து பைக்கை எடுத்தோம். மழையும் தீர்மானத்தை வழி மொழியத் திரும்பவும் வண்டியை ஆரியங்காவில் நிறுத்தினோம். கேரள அரசின் பரிசுச்சீட்டுக்கடைகள் நிறைய இருந்தன. அதிசயப்பணத்திற்கான தமிழர்களின் மோகமறிந்து முளைத்துள்ள கடைகள். இவ்வளவு மொத்தமாகக் கடைகளை கேரளத்திற்குள் காணவியலவில்லை. உணவகமொன்றில் ஏறி முதல் உலை இட்லிக்காகக் காத்திருந்தோம். இட்லிக்குப் பின்னாலேயே மொறுமொறுப்புடன் உளுந்து வடையும் வந்து சேர்ந்தது.

பசியாறுக்காகக் காத்திருந்த வேளையில் உடன் அமர்ந்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த பரிசுச்சீட்டு விற்பனையாளரொருவர் தமிழக முதல்வர் விஜய் பற்றிய பேச்சைத் தொடங்கினார். கடைக்காரரும் அவ்வுரையாடலில் கலந்து கொண்டு மலையாளத்தில் “அடுத்த ஆட்சி அண்ணாமலைக்குத்தான்” என உறுதியடித்தார்

புத்தக நிலத்துக்கான பயணத்தின் திரையாக இப்படி ஒரு கருஞ்சொல் வந்து விழுகிறதே என யோசித்தேன். இங்கு எதுவும் தற்செயலில்லை. ஒன்று ஒன்றைத் தொட்டு நகர்த்தும் விசைகளால்தான் மொத்த அண்டமும் இயக்கம் பெறுகிறது. எந்தவொன்றும் அதன் நேரெதிர் பிம்பத்தினால்தான் தன் முழுப்பொருளை பெற்றுக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Latest Travel Blog
  • புத்தகக் கிராமம்

  • ரிஹ்லா துளுநாடு — மொழிகளின் நிலம் – 1

  • அருஞ்சுனை-கால் நாள் ரிஹ்லா #5

Close
© Copyright 2024. All rights reserved.
Website by Dynamisigns.
Close