அனந்தபுரி

எனது திருவனந்தபுரப் பயணங்கள் பெரும்பாலும் வானொலி நிலைய கதை சொல்லலுக்காகவே அண்மை வருடங்களாக நடைபெறுகின்றன.

ஆனால்  இந்நகரத்தின் மீதான ஈர்ப்பென்பது அதையும் தாண்டியது. சாலை பஜார்&பள்ளிவாயில், வேளி,கோவளம், சங்கு முகக்கடற்கரைகள், சூடான பராத்தாவுடன் வறுத்த மாட்டிறைச்சி வழங்கும் தட்டுக்கடைகள் (சில வருடங்களாக இக்கடைகளைக் காணக் கிடைப்பதில்லை),ஆ.மாதவன், நகுலன், கமகமக்கும் தேங்காய் நெய், மலர்வும் மொறுமொறுப்பும் கொண்ட நேந்திரங்காய் சீவல், பழம் பொரி, நாடன் உணவுக்கடைகள், றஹ்மானிய்யா கெத்தேல் சிக்கன் கடை, தமிழ் மட்டுமே தெரிந்தவருக்கு திருவனந்தபுரம் அன்னியமாகத் தோன்றாமை, நினைவில் கிராமத்தைக் கொண்டுள்ள நகரம்… என அதற்கான காரணங்கள் பழைமையானவையென்றாலும் புதிய காரணங்களும் தங்களது பழைய உறவினர்களைத் தேடி வரத்தான் செய்கின்றன.

பிப்ரவரி 13,14 (2026) தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்தேன்.  நாகர்கோவிலிருந்து பேருந்து வழியாக அனந்தபுரியில் நுழையும்போதுதான் அப்பெயர்ப் பலகையைக் கண்ணில்பட்டது. ‘பஸ் காத்திருப்பு கேந்திரம்.’

சில வருடங்களுக்கு முன்பு கோழிக்கோட்டின் இரு முதிய எழுத்தாளர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது தமிழ் தன் சொற்களில் பயன்படுத்தும் குறுக்கலைச் சொல்லி வியந்தனர்.

‘பிரதிரோதக் குத்தி வைப்பு’என மூச்சுப் போட்டு நாங்கள் சொல்லி முடிப்பதற்குள் நீங்கள் ‘தடுப்பூசி’எனக் கடந்து போய் விடுகிறீர்கள். கூடன்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற கேரளியப் போராளிகள் “ஆணவக் கேந்திரத்த அடச்சுப்பூட்டு” என முழங்கிக் கொண்டிருக்க ‘அணு உலையை மூடு’ என சிக்கனத்தைக் கடைப்பிடித்தது தமிழ். இடங்களுக்கேற்றவாறு மொழி தன்னை குறுக்கியும் விரித்தும் கொள்வதைக் காணக்கிடைப்பது ஓர் இனிமையே.

திருவனந்தபுரத்தின் வண்ணங்களிலும் இனிமைகளிலும் மனம் சொக்கினாலும் இரவு கண் மயங்குவதற்கு ரொம்ப நேரமெடுத்தது. திருநெல்வேலி எல்லையுடன் கூதலின் இன்பம் விடை பெற்று நாகர்கோவில் தொடங்கி திருவனந்தபுரம் வரைக்கும் வெக்கைதான். நான் தங்கியிருந்தது மொட்டை மாடிக்குக் கீழே உள்ள அறையென்பதால் சூட்டிற்கு வஞ்சனையில்லை.

சுபஹிற்கான பாங்கொலிக்கு முன்னரே விழிப்புத்தட்டியது. சாலை ஜுமுஆ பள்ளிவாயில் சில அடிகள் தொலைவில்தான். இப்பள்ளியில் ஒரு மனத்தின் விரிவை பெருங்கடலின் பரப்பை நீங்கள் எந்த வக்தில் சென்றாலும் கண்டுக் கொள்ளவியலும். அதிலும் சுபஹை ஜமாஅத்துடன் அங்கு தொழுது விட்டு வெளியே இறங்கும்போது மொத்த நாளும் நம் கையில் வாரிச் சுருட்டி வழங்கப்பட்டது போன்ற உணர்வு.

சுபஹ் ஜமாஅத்தை நிறைவு செய்து விட்டு சபாபதி கோயில் தெரு நோக்கி நடந்தேன். நகைக்கடைகளின் தொடர் வரிசை முடிந்து பூக்கடைகளின் தொடக்கம். மலர் கூம்பாரங்களின் மேல்  நீர் தெளிக்கும் முயற்சியில் சாலை சகதியாகி விட்டிருந்தது. தெரு முனையிலுள்ள தேநீர்க் கடையில் பிளைன் ரீ. கட்டஞ்சாயா என்ற நாமகரணங்களைக்கொண்ட  வெறுந்தேயிலைக்குச் சொன்னேன். அதன் விலை ஆறு ரூபாய்கள்தான். காசை நீட்டுவதற்குள் “கித்னா டாக்கா?” பெங்காலிக் குரலின் குறுக்கீடு. பெங்கால் உள்ளிட்ட வட மாநிலத் தொழிலாளர்களின் விருப்ப தேநீர்/சிற்றுண்டிக் கடையாகி விட்டிருக்கிறது. உள்ளூர் பலகாரங்களுடன் வடக்கின் கச்சோடியும் காரமின்றிக் கிட்டும்.

இக்கடை வருவதற்கு முன்னர் வளையல் செட்டித்தெருவில் சென்னை வாசியொருவர் நெடுங்காலம் தட்டுக்கடை நடத்தி வந்தார். புதிய கடையின் வரவில் அவருக்கு வணிகம் குறையவும் கடையை விட்டு விட்டார். நானும் சில தடவைகள் அங்கு சாப்பிட்டிருக்கிறேன். குறைந்த விலையில் நல்லுணவு.

கச்சோடியுடனான வெறுந்தேயிலைக் கச்சேரியை முடித்து விட்டு கிழக்கேக் கோட்டை பேருந்து நிலையத்தில் ‘தமிழ் இந்து’நாளிதழைத் தேடினேன்.  தினமலரும்,தினகரனுமே இருந்தன. ஆங்கில ஹிந்துவுடன் அறைக்குத் திரும்பினேன். குளித்து முழுகி பங்களாதேசத்து தேர்தல் கதைகளை விரிவாக வாசித்து முடிக்கவும் வெளியே கிளம்புவதற்கான நேரமுமாக சரி.

காலைப் பசியாறுக்கு அதே சபாபதி கோயில் தெருவிலுள்ள ரோலக்ஸ் உணவகம். இக் கடைக்கும் சேவல் அட்டவணைதான் போல. சுபஹிலிருந்தே தேநீர் பலகாரத்துடன் காலையுணவு வகைகளும் கிடைக்கின்றன

நான் போன நேரம் காலை ஒன்பது மணிக்கு சற்று முன்னர். அதற்குள் ஆப்பம்,தோசை,இட்லி எல்லாம் தீர்ந்து விட்டிருந்தன. இடியாப்பம்,முட்டை ரோஸ்டுக்குச் சொன்னேன்.செழிப்பான தாரா முட்டை.தின்னத் தின்னக் குறையாத மஞ்சள் கரு. முடிவற்ற இரவைப்போல.

தமிழகத்தில் தாரா முட்டை உண்ணப்படுவதில்லை. என்ன காரணமோ? ஊரில் அபூர்வமாக தாரா முட்டை விற்றவரிடம் வாங்கியுமிருக்கிறேன். கேரளத்துக்கான தாரா முட்டைகள் தமிழகத்திலிருந்தும் குறிப்பாக திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து செல்கின்றன.

உண்ட பின்  தேநீருக்கு சொல்லும்போது அருகில் அமர்ந்திருந்த வாடிக்கையாளர் இரசவடைக் கேட்டார். சென்னையில் கூட இரச வடை அரும்பொருள்தான். குமரி மாவட்டம்,திருவனந்தபுரம் பகுதிகளில் இரசவடையென்பது இட்லி,தோசையின் உடன் பிறப்பு. நிலத்தின் அன்னப்படிமம்.  முடிவுரை இரசவடையைக் கொண்டுதான் என நிகழ்ச்சி நிரலில் கண்டிருக்கும்போது அதை விடுவது சரியில்லையே. அளவான கார உப்புடன் இரசத்திற்குள் மறை பொருளாய் விளங்கும் ஆமைக்கு ஆமை போலவும் வடைக்கு வடை போலவும் தோற்ற மயக்கமளிக்கும் ஆம வடையாய் பிறந்து இரச வடையாய் பரிணமித்திருக்கும் இரசவாதி.

எழுத்தின் இழுப்பில் இரவுணவின் கதை  தவறி விட்டது. எண்பது வருடங்களை நெருங்கும் றஹ்மானிய்யா கெத்தேல் கடையை நோக்கி வண்டித் திரும்பியது. இங்கு நுழைந்தவுடனேயே யெல்லாம் சாப்பிட முடியாது. சற்றுக்காத்திருக்க வேண்டும். எப்போதுமே வரிசைக் கட்டி வாடிக்கையாளர்கள் நிற்கிறார்கள். தேங்காய் நெய்யில்பொறித்த இளம் கோழித்துண்டங்கள், மென் ஃபுல்கா(ருமாலி ரோட்டீ) இவற்றுடன் குடிநீரின் இடத்தில் எலுமிச்சைச்சாறு…. அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.

றஹ்மானிய்யா கெத்தேல் கடைக்கும் எனக்கும் ஒரு மறவாக் கணக்குண்டு. நவம்பர் 08,2016. பண மதிப்பிழப்பின் இரவில் நானும் மகளும் திருவனந்தபுரத்தில்தான் இருந்தோம்.

மறுநாள் காலை ஊர் திரும்ப வேண்டும். கையில் ஒன்றிரண்டு நூறு ரூபாய் தாள்களும் பொடிச்சல்லிகளுமே இருந்தன. இருவருக்கான பயணச்செலவுடன் உணவிற்குமாக அவை போதாது. மற்றவை அய்ந்நூறு, ஆயிரம் மதிப்புடைய தாள்கள். மெதுவாக ஒரு உலர் பழக் கடைக்குச் சென்றோம். நாங்கள் பொருளைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே “மாற்றிய சல்லி இருந்தால் மட்டும் தாருங்கள்” எனக் கறுப்பு சட்டகக் கண்ணாடிக்குப்பின்னிருந்த உருண்டை முகத்துடன் கால் புன்னகையையும் கூடச் சேர்த்து கடை உரிமையாளர் சொன்னார்.

சாலை பஜாரில் ஓரிரண்டுக் கடைகளைத் தவிர கிட்டத்தட்ட எல்லாக் கடைகளும் மூடியிருந்தன. இறுதி முயற்சியாகக் கெத்தேல் கடைக்குள் நுழைந்தோம். கடையில் தொலைக்காட்சி இல்லையென்றதும் மூச்சு வந்தது . சாப்பிடுவதற்குள் நடப்பு தெரிந்து விடுமென்ற பதட்டமிருந்ததால் கடைக்காரரை துரிதப்படுத்தி பொறித்தக் கோழியுடன் ரொட்டியையும் பொட்டலமாக வாங்கிக்கொண்டோம். அய்ந்நூறு அல்லது ஆயிரம் ரூபாய்த்தாளுக்கு உரிமையாளர் மீதிக்காசையும் தந்து விட்டார். அறைக்குத் திரும்பும் வரைக்கும் நடையின் வேகத்தைக் குறைக்கவேயில்லை.

உள்ளாட்சித் தேர்தலில் கேரள தலைநகரத்தின்  நகராட்சியை பாஜக கைப்பற்றிய பிறகு திருவனந்தபுரத்திற்கான எனது முதல் பயணத்துடன் எட்டாண்டுகளுக்குப் பிறகு றஹ்மானிய்யா கெத்தேல் கடைக்கு உண்ண வந்திருப்பதுமான இரு வெவ்வேறு நிகழ்வுகள்.

இடருக்கு கெத்தேல் சாஹிபின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டேன். அவரும் பணத்தை இழந்திருக்க மாட்டார். என்ன! வங்கிக்கு ஒரு நடையைக் கூடுதலாக நடந்திருப்பார்தான். ஆனால் மாய மறுத்து மூலையில் உறைந்துக் கிடக்கும் அந்த இருள் கணங்களை என்ன செய்ய?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Latest Travel Blog
  • அனந்தபுரி

  • சாயாக்கடை விஜயனும் மொய்து கிழிச்சேரியும்

  • புத்தகக் கிராமம்

Close
© Copyright 2024. All rights reserved.
Website by Dynamisigns.
Close